தினமலர் விமர்சனம்
சென்னை, அபிராமி மெகாமால் திரையரங்க உரிமையாளர் அபிராமி ராமநாதனின் கதை மற்றும் தயாரிப்பில் புதியவர் ஆர்.கே.யின் எழுத்து, இயக்கத்தில், ஆரி - மாயா ஜோடியுடன் பாலசரவணன், பிரபு, ஊர்வசி, மன்சூரலிகான், கை தென்னவன், எம்.எஸ்.பாஸ்கர், சாம்ஸ் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளம் நடித்து வந்துள்ள திரைப்படம் உன்னோடு கா .
கதைப்படி, சிவா எனும் நாயகர் ஆரியின் குடும்பமும் அபிராமி எனும் நாயகி மாயாவின் குடும்பமும் சென்னை சிட்டியில் மாமன், மச்சான் உறவு சொல்லி அழைத்துக் கொள்ளும் அளவிற்கு நட்புடன் ஒரே தெருவில் எதிர், எதிரே வசித்தாலும் ஆரியும், மாயாவும் எலியும், பூனையுமாக அடிக்கடி பிராண்டி கொள்கிறார்கள் (அவ்வப்போது படம் பார்க்கும் நம்மையும்... ). இவர்கள் எலியும், பூனையுமென்றாலும் இவர்களது பெற்றோரான பிரபு - ஊர்வசியும், கை தென்னவன் - ஸ்ரீரஞ்சனி ஜோடியினர் மேற்படி, இருவருக்கும் இவருக்கு அவர், அவருக்கு இவர் என ஆரி- மாயா இருவரும் கருவில் இருந்த போதே பேசி முடிவு செய்து இவர்களை வளர்த்து, வாழ்ந்து வருகின்றனர். ஆனால், மெய்யாலுமே பிரபுவும், கை தென்னவனும் தான் எதிரும், புதிருமாக இருக்க வேண்டியவர்கள். பரம்பரை பகையுடைய அவர்களால் அவர்களது பூர்விகமான ஒரு கிராமமே இரண்டு பட்டு கிடக்கிறது. ஆனால், அந்த பகைக்கு பயந்து ஊரை விட்டு ஓடி வந்து நட்பு பாராட்டிக் கொண்டு சம்பந்தியாகவும் துடிக்கும், பிரபு, தென்னவனின் எண்ணம் ஊர், உறவின் எதிர்ப்பையும் மீறி ஈடேறியதா? ஆரி - மாயா ஜோடி சேர்ந்தனரா..? பரம்பரை பகைக்கான காரணம் என்ன? என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு காமெடியாக பதில் அளிக்கிறேன்... பேர்வழி... என பின்பாதி காமெடியாகவும், முன்பாதி கடித்து மிருக்கிறது உன்னோடு கா .
சிவாவாக கதையின் நாயகராக வலம் வரும், வளரும் நடிகர் ஆரி, இப்படி ஒரு கதையை தேர்ந்தெடுத்து கோட்டை விட்டிருந்தாலும், வழக்கம் போல தன் கதாபாத்திரமாக வாழ்ந்திருக்கிறார்.
அபிராமியாக மாயா அறிமுகமாய்யா? புதுமுகமாய்யா ..? என ஆச்சர்யப்பட வைக்கிறார். டிராமா என்ற பெயரில் தன் காதலியுடன் குளோஸாக சுற்றும் நண்பன் ஆரி மீது ஆத்திரப்படவும் முடியாமல், அவரை விட்டு விலகவும், தன் காதலியை விலக்கவும் முடியாது மைண்ட் வாய்ஸில் பேசியபடி, நெஞ்சம் மறப்பதில்லை... பாடலை நெஞ்சத்தில் ஓடவிட்டபடி தவிக்கும் பாலசரவணன் தான், படத்தில் ஒரே ஆறுதல்.
அவரது காதலி சுந்தராம்பாளாக வரும் மிஷா கோஷல் மப்பு, மந்தாத்தில் நாயகி மாயாவையே தூக்கி சாப்பிட்டு விடுகிறார் பேஷ், பேஷ்!
பிரபு, ஊர்வசி, கை தென்னவன் ஸ்ரீரஞ்சனி.... தம்பதியினரும் அவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளும் டிராமாடிக்.
பின்பாதியில் பெரிதாக வரும் மன்சூர், சாம்ஸ், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோரும், அவர்களது பாத்திரமும் இந்த கதைக்கு ஏன்? என கேட்கத் தோன்றினாலும் அவர்கள் தான் பாலசரவணனுக்கு அடுத்து படத்திற்கு பெரும்பவம்! மாப்பிள்ளை புருஸ்லீ - நாரயணனும் அப்படியே. ஆமாம், சீனியர் நடிகர் சண்முகசுந்தரம் அந்த ஒரு பாடலுக்கு தலையாட்டி விட்டு போவதோடு சரி.
சி.சத்யா இசையில் கிறுக்கா என்று தான் உன்னை அழைத்தேன்...., ஊரே உதட்டி., ஊரே உதட்டி... உள்ளிட்ட பாடல்களும், பின்னணி இசையும் பிரமாதம்!
சக்தி சரவணனின் ஒளிப்பதிவும், என்.செந்தில்குமாரின் கலை இயக்கமும் படத்திற்கு பலம். சேவியர் திலக்கின் படத்தொகுப்பு பலவீனம்.
ப்ளாஷ்பேக்கில் சிவலிங்கபுரம் கிராமத்தை தெற்கத்திபுரம், வடக்கத்திபுரம்... என்றெல்லாம் கிரியேடீவ்வாக பிரித்து வேலியெல்லாம் போட்ட கதாசிரியர் அபிராமி ராமநாதனும் , இயக்குனர் ஆர்.கே யும் ., 5 தலைமுறை பரம்பரை பகைக்குமூல காரணம் தேடி அடிக்கடி பிரபுவையும் "கை தென்னவனையும் மூல காரணம் என்ன, என்ன ? எனக்கேட்க வைத்து படம் பார்க்கும் ரசிகனின் முகம் சுழிக்க வைப்பது சகிக்கலை! ஒரு முறை, மூல காரணம் என உச்சரித்து விட்டு அடுத்தடுத்த சீன்களில் காரணம் என்ன? எனக் கேட்பது மாதிரி சீன்கள் வைக்கப்பட்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.
அருவா எடுத்துட்டு சானை பிடிக்க வா.. போறீங்க... என கோபமாக பரம்பரை பகை மூல காரணம் தேடி கிளம்பும் பிரபு, தென்னவனனப் பார்த்து நக்கலாக பாட்டி கேட்பது, ஆம்புலன்ஸில் பெண் பார்க்க வரும் மாப்பிள்ளை புருஸ்லீ & பேமிலி, ஓரு சின்ன பென்சில்மேட்டருன்னே.... நாங்க பார்த்து சீவிக்கிறோம் ... என்றபடி , புருஸ்லீயை மன்சூரின் ஆட்கள் நைய புடைக்கும் சீனை சிம்பாலிக்காக பென்சில் ஷார்ப் னரில் செதுக்கியிருப்பது உள்ளிட்ட கிரியேடீவ்காட்சிகள் ஹாஸ்யம் என்றாலும், ஒரு கோழி முட்டை பிரச்சினைக்காக ஊரில் கோழிகளுக்கே தடை என்பதும், பரம்பரை, பரம்பரையாக பகையோடு வெட்டிக் கொண்டு சாவதையும் கதையாக கேட்பதில் வேண்டமானால் சுவாரஸ்யமாக இருந்திருக்கலாம்... திரைப்படமாக அதை காட்சிபடுத்தியிருப்பதில் கோட்டை விட்டிருக்கிறது உன்னோடு கா மொத்த டீமும்.
ஆகவே, உன்னோடு கா - எதிர் பார்த்த அளவிற்கு ரசிகனோடு பழம் விடுவது சற்றே கடினம்!
---------------------------------------------------------------
குமுதம் சினி விமர்சனம்
கிராமத்து வீச்சரிவாளும், நகரத்து செல்ஃபியும் இணையும் காதல் மோதல் கலாட்டா.
கொலை வெறியோடு அலையும் பங்காளிகளுக்குள் எலியும் பூனையுமாய் இருக்கும் ஒருவர் வீட்டுப் பெண், இன்னொரு வீட்டுப் பையனைக் காதலிக்க, அவர்களைப் பெற்றவர்களை வெட்டித் தள்ள ஒரு கும்பல் அலைய, அபபுறம் என்ன ஆச்சு? நகைச்சுவை கலந்து தந்திருக்கிறார்கள் இயக்கம் ஆர்.கே.
பரம்பரை பரம்பரையாய்த் தொடரும் கிராமத்து சண்டை சச்சரவுகளை ஆராய்ந்து பார்த்தால் ஒரு கோழி முட்டை அளவுக்குத்தான் பிரச்னை இருக்கும் என்ற கதையை அழகாகத் தந்து, தயாரித்திருக்கிறார் அபிராமி ராமநாதன்.
பிரபு, ஊர்வசி தம்பதிக்குள் இருக்கும் அன்னியோன்யமும், கொஞ்சலும், வெட்கமும் கொள்ளை கொள்கிறது. தென்னவன், ஸ்ரீரஞ்சனி ஜோடியும் போட்டி போடுகிறது.
டாம் அண்ட் ஜெர்ரி மாதிரி இருந்தாலும் ஆரியும், மாயாவும் செமை க்யூட் கெமிஸ்ட்ரி.
காமெடிக்கு பால சரவணன், மிஷா கூட்டணி. அவரது காதலியை ஹீரோ கொஞ்ச, 'ஆமாம், நல்லாத்தான் இருந்திச்சு' என்று சரவணன் சொல்லும்போது சிரிப்பு மழை.
சத்யாவின் இசையில் இரண்டு பாடல்கள் இனிமை. எதிர்பார்த்த காட்சிகள்தான் என்றாலும் டீசண்டாக படம் எடுத்திருப்பதைப் பாராட்டியே ஆக வேண்டும். க்ளைமாக்ஸ் காட்சிகள், சுந்தர் சி பட விறுவிறு!
உன்னோடு கா - பழம்!
குமுதம் ரேட்டிங் - ஓகே