தினமலர் விமர்சனம்
தமிழ் சினிமாவின் இன்றைய பேய் பட டிரண்ட்டில் நயன்தாராவும், பேயை நம்பி பேயாகி இருக்கும் படம் தான் மாயா. கதைப்படி, சினிமாவில் சின்னசின்னதாக வளர்ந்து வரும் அப்சரா எனும் நாயகி நயன்தாரா, வஸந்த் எனும் நாயகர் ஆரி, தோழி லட்சுமி பிரியா உள்ளிட்டவர்கள் வசிக்கும் நகரத்தை ஒட்டிய காட்டுப்பகுதி மாயாவனம்.
அந்த அடர்ந்த காட்டு பகுதியில் பல வருடங்களுக்கு முன் மனநலம் பாதித்த குற்றவாளிகளுக்கான கடும் கட்டுப்பாடுகள் நிரம்பிய ஜெயில் மாதிரியானதொரு காப்பகம் செயல்பட்டு வந்திருக்கிறது. அந்த காப்பக சிறைக்கு, கணவரை விஷம் வைத்து கொன்ற குற்றச்சாட்டிற்காக சில மாத கர்ப்பத்துடன் வந்து சேருகிறார் மாயா!
அந்த காப்பகத்தில் இருந்து யார் தப்பிக்க நினைத்தாலும் அவர்களுக்கு சாவு நிச்சயம் எனும் கொடூர நிலையில், சில மாதங்களில் அங்கேயே ஒரு அழகிய குழந்தையை பெற்றெடுக்கும் மாயாவிடமிருந்து, இவரது மனநலம் கருதி அக்குழந்தை பிரித்தெடுத்து செல்லப்படுகிறது.
குழந்தையின் பிரிவு தாங்காத மாயா, தற்கொலை செய்து கொள்கிறார். அதுசமயம் சிறையில் இருந்து தப்பிக்க நினைக்கும் இன்னும் சிலரும் கொல்லப்பட்டு மாயாவின் அருகருகே புதைக்கப்படுகின்றனர். மாயாவுடன் சேர்த்து அவர் மகளுக்காக வாங்கி வைத்த சின்னசிறு குழந்தை பொம்மை, அவர் அவ்வப்போது சுயநினைவில் எழுதிய டைரி மற்றும் அவர் அணிந்திருந்த விலை மதிப்பில்லா வைர மோதிரம் உள்ளிட்டவைகளும் புதைக்கப்பட்டிருக்கும் விஷயத்தை தெரிந்து கொண்டு ஒரு கும்பல் மாயாவின் கல்லறையை தோண்டி எடுக்க முடிவு செய்து களம் இறங்குகிறது. இது எல்லாம் ஒரு பிரபல எழுத்தாளரின் கை வண்ணத்தில் இருள் எனும் திரைப்படமாகவும் தயாராகிறது.
அத்திரைப்படத்தை தனி ஆளாக கண்டு உயிருடன் திரும்புவர்களுக்கு ஐந்து லட்சம் பரிசு அறிவிக்கிறார் அதன் தயாரிப்பாளர் மைம் கோபி! கணவரை பிரிந்து கை குழந்தையுடன், கடன் தொல்லையால் அவதிப்படும் வளரும் நடிகையான நயன்தாரா, ஒருவர் அப்படம் பார்த்து இறந்த செய்தி தெரிந்தும் அப்பட நிறுவனத்தில் பணிபுரியும் தன் தோழி லட்சுமிபிரியா வாயிலாக தைரியமாக தனி ஆளாக அப்படம் பார்க்க செல்கிறார். படம் பார்க்க சென்ற நயன்தாரா உயிருடன் திரும்பினாரா.? நாயகர் ஆரிக்கும், நயனுக்குமான உறவு என்ன.?, அப்பட நாயகர் ஆரி, நயனுக்கு உதவினாரா.? அல்லது ஆரிக்கு நயன் உதவினாரா.? மாயா யார்.? மாயாவுக்கும், நயனுக்குமான முடிச்சு மூச்சு பேச்சு... எல்லாம் என்ன.? என்ன.? எனும் கேள்விகளுக்கு வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் பதில் சொல்கிறது மாயா படத்தின் மீதிக்கதை! அது மிகவும் மிரட்டலாகவும் சொல்லப்பட்டிருப்பது தான் மாயா படத்தின் பலம், பலவீனம் எல்லாம்!
நயன்தாரா வளரும் நடிகை அப்சராவாகவும், மாயா பேயாகவும் மிரட்டலான நடிப்பை வழங்கி ரசிகனை மிரள செய்திருக்கிறார். அப்சராவாக கை குழந்தையுடன் அவர் கடன் தொல்லையில் கணவரை பிரிந்து கஷ்டப்படும் இடங்கள் கண்ணீர் வர வழைக்கும் சென்ட்டிமென்ட் ரகமென்றால், மாயாவாக முகம் காட்டாமல் பயமுறுத்தும் இடங்கள் செம மிரட்டல்!
வஸந்தாக, பயந்தும், பயமின்றியும் வீரதீர செயல்களில் ஈடுபடும் ஆரி, இருள் பட நாயகரா.? அப்சரா நயன்தாரா மாதிரி இடைச்செருகலா.? என்பது புரியாத புதிர் என்றாலும் நயனுக்கும், அவருக்குமான ரிலேஷன்ஷிப் செம ட்விஸ்ட்! ஆரியும் அசால்ட்டாக தன் பாத்திரத்தில் பளிச்சிட்டிருக்கிறார்! பலே, பலே!!
நயனின் தோழி ஸ்வாதியாக வரும் லஷ்மி பிரியா, தயாரிப்பாளர் ஆர்.கே.வாக வரும் மைம் கோபி, அம்ஜத்கான், ரேஷ்மி மேனன், ரோபோ ஷங்கர் உள்ளிட்டவர்களும் பயந்து பயமுறுத்தி இருக்கின்றனர். சத்யன் சூர்யனின் பயமுறுத்தி பளீரிடும் ஒளிப்பதிவு, ரோன்யத்தன் யோகனின் மிரட்டி மிரள செய்யும் இசை உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகள், அஸ்வின் சரவணனின் எழுத்து-இயக்கத்தில் மாயா மீது மையல் கொள்ள வைக்கின்றன!
ஆனாலும், இல்லாத ஒன்றை(பேய், பிசாசுகளை) இருப்பதாக நம்ப வைக்க முயலும் சினிமாக்காரர்கள், நயன்தாரா மாதிரி நடிகைகளிடம் நிரம்பி இருப்பவற்றை(பல்வித திறமையை தான் சொல்கிறோம்...) சரியாக படம் பிடித்து காண்பித்தாலே மாயா மாதிரி படங்கள் மேலும் மகுடம் சூடுமே என்பது நம் ஆதங்கம்.
ஆக மொத்தத்தில், மாயா - இன்றைய காலக்கட்டத்தில் பேய், பிசாசு, பீலாக்களை அதிகம் விரும்பும் தமிழ் சினிமா ரசிகனை வாயா வாயா என வரவேற்று விருந்து படைக்கும்.!!
----------------------------------------------------------
குமுதம் சினி விமர்சனம்
ஹாலிவுட்டுக்குச் சவால் விடும் ஒரு பேய்ப் படம்!
வழக்கமான இளமை, கொஞ்சம் குறும்பு, காதல், ரொமான்ஸ், டூயட், இமேஜ் அத்தனையையும் தூக்கிக் கடாசிவிட்டு, ஒரு வயதுக் குழந்தைக்குத் தாயாக, கணவனைப் பிரிந்தவராக, பணக்கஷ்டத்தில் தவிக்கும் பெண்ணாக அற்புதமாக வாழ்ந்து காட்டியிரு்கும் நயன்தாராவுக்கு அந்தப் பல கோடி மதிப்புள்ள வைர மோதிரத்தைப் பரிசாகத் தூக்கிக் கொடுக்கலாம்!
ஒரு பேய்ப்படத்தை எடுத்துவிட்டு வாங்க ஆள் இல்லாமல் அவதிப்படுகிறார் ஓர் இயக்குநர். அந்தப் படத்தை பயமே இல்லாமல் தனியாகப் பார்த்தால் 5 லட்சம் ரூபாய் பரிசு என பப்ளிசிட்டிக்காக அறிவிக்கிறார். பணக்கஷ்டத்தில் பரிதவிக்கும் நயன்தாரா துணிச்சலாய் அந்தப் படத்தைப் பார்க்க வர, அதில் இரு்கும் பேய் எழுந்து வருகிறது. நயன்தாராவுக்கும் பேய்க்கும் என்ன சம்பந்தம்? யார் அந்தப் பேய்? நயன்தாராவை அது என்ன செய்யப் போகிறது? என்பதுதான் மாயா! இயக்க அஸ்வின் சரவணன்.
படத்தின் பெரும்பகுதி கறுப்பு வௌ்ளையிலும் மற்ற பகுதி அடர்த்தியான வண்ணத்திலுமாய் அமைந்து (யார் அந்த கேமராமேன் சத்யன் சூர்யன்) மேலும் மேலும் மெருகூட்டுகிறது. ரான் யோகனின் ஆர் ஆர் திகிலுடன் கை குலுக்குகிறது.
ஆரி ஓகே. தோழி லட்சுமி ப்ரியா டபுள் ஓகே.
படம் கற்பனை என்றாலும் மன நோயாளிகளைக் கொன்று புதைக்கும் காட்சிகள் சமீபத்திய உண்மை நிகழ்ச்சியை(?) நினைவுப்படுத்துகிறது.
மாயா - மனதில் நிற்கிறாள்!
குமுதம் ரேட்டிங் - நன்று