1.5

விமர்சனம்

Advertisement

நடிப்பு - சிரிஷ், சாந்தினி, ஜெயகுமார், விஜய் சத்யா மற்றும் பலர்
இயக்கம் - தரணிதரன்
இசை - யுவன்ஷங்கர் ராஜா
தயாரிப்பு - வாசன் புரொடக்சன், பர்மா டாக்கீஸ்


தமிழ் சினிமாவில் சமீப காலங்களில் த்ரில்லர் படங்கள் அதிகமாக வர ஆரம்பித்துள்ளது. பேய்ப் பட சீசன் கொஞ்சம் கொஞ்சமாக மாறி இப்போது த்ரில்லர் சீசன் எட்டிப் பார்க்கத் துவங்கி விட்டது.

ஒரு கொலை, அதற்கான காரணம் என்ன, அதைச் செய்தது யார் என்பதுதான் பெரும்பாலான த்ரில்லர் படங்களின் கதையாக இருக்கும். இந்தப் படமும் அப்படியே. இயக்குனர் தரணிதரன் படத்தின் சஸ்பென்சை கடைசி வரை காப்பாற்றியிருக்கிறார். யார் கொலை செய்திருப்பார்கள் என்பது சிறிதும் யூகிக்க முடியாத ஒன்றாகவே இருக்கிறது. அந்த சஸ்பென்ஸ் திரைக்கதைதான் படத்தின் பலமான அம்சம். மற்றபடி ஒரு முழு படமாக இரண்டு மணி நேரம் படத்தைப் பார்க்கக் கொஞ்சம் பொறுமை வேண்டும்.

சென்னை, செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் காவலராக இருப்பவர் சிரிஷ். ரோந்து செல்வதுதான் அவருடைய தினசரி வேலை. ஒரு கேட்டட் கம்யூனிட்டி வில்லா வளாகத்தில் இருக்கும் வீடுகளுக்கு அவர் செல்வது வழக்கம். அந்த வீடுகளில் ஒன்றில் இருக்கும் அனுபமா குமார் ஒரு நாள் கொலை செய்யப்படுகிறார். அந்த கொலைப்பழி காவலரான சிரிஷ் மீது விழுகிறது. செய்யாத ஒரு கொலையை தான் செய்யவில்லை என்பதை நிரூபிக்க சிரிஷ் போராடுகிறார். அதன் முடிவு என்ன என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

சிரிஷ்-ஐப் பார்க்கும் போது கல்லூரி மாணவராக, பணக்காரத் தோற்றத்துடன் ரிச் ஆக இருக்கிறார். அவருக்கும், சாதாரண காவலர் வேடத்திற்கும் துளி கூட பொருத்தமேயில்லை. அப்பாவியாக நடிக்க அவரும் எவ்வளவோ முயற்சி செய்கிறார். ஆனால், அது அவருடைய முகத்திற்கு செட் ஆகவேயில்லை. குரலில் மட்டும் முடிந்தவரை அப்பாவித்தனத்தைக் காட்டியிருக்கிறார். முதல் படமான மெட்ரோ படத்திலேயே ஓரளவிற்கு நடித்திருந்தார்.

படத்தின் நாயகியாக சாந்தினி. இவர்தான் ரங்குஸ்கி. ஒரு சீரியசான த்ரில்லர் கதையில் நாயகியின் பெயரை எதற்கு இப்படி காமெடியாக வைத்தார்கள் என்று தெரியவில்லை. சாதாரண காவலரான நாயகன் சிரிஷ் பெயரும் படத்தில் ராஜா. ஒரு படத்தின் கதாபாத்திரங்களுக்கு பெயர்களும் கொஞ்சம் முக்கியம்தான், அதுவும் கதையுடன் இணைந்து வைப்பது நல்லது. சாந்தினி கொஞ்சமாக நடித்தால் கூட அவருடைய பெரிய கண்கள் நடிப்பை எளிதில் வெளிப்படுத்துகின்றன. அதிலும் ஆரம்பத்தில் காதல் காட்சிகளில் கண்களில் கூட அந்தக் காதல் யதார்த்தமாக வெளிப்படுகிறது. போகப் போக படத்தின் நாயகனை விட இவருடைய கதாபாத்திரம் முக்கியத்துவம் பெற்றுவிடுகிறது.

நாயகன் சிரிஷுடன் உடன் பணியாற்றும் காவலராக கல்லூரி வினோத். அவ்வப்போது கமெண்ட்டுகளால் சிரிக்க வைக்கிறார். இன்ஸ்பெக்டராக விஜய் சத்யா, சிபிசிஐடி அதிகாரியாக ஜெயகுமார், ஆகியோரும் அவரவர் கதாபாத்திரங்களில் நிறைவாக நடித்திருக்கிறார்கள்.

யுவன்ஷங்கர் ராஜாவின் இசையில் டைட்டில் பாடலான பட்டுக்குட்டி ரசிக்க வைக்கிறது. சிம்பு பாடியிருக்கும் மிஸ்டர் எக்ஸ் வித்தியாசமான பாடலாக ஒலி, ஒளிக்கிறது. பின்னணி இசையில் காட்சிகளுடன் பரபரப்பை கூட்டியிருக்கிறார் யுவன்.

ஒரே ஒரு வில்லா, ஒரு காவல் நிலையம் ஆகிய இரண்டும் தான் படத்தை அதிகம் ஆக்கிரமித்துள்ளன. த்ரில்லர் கதை என்றாலே காட்சிக்குக் காட்சி பரபரப்பும், விறுவிறுப்பும் அடுத்தடுத்து வர வேண்டும். இந்தப் படத்தில் கடைசி 20 நிமிடங்கள்தான் அது இருக்கிறது.

ராஜா ரங்குஸ்கி - மிஸ்ஸிங் மிஸ்டரி

 

பட குழுவினர்

ராஜா ரங்குஸ்கி

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓