கலகலப்பு 2,Kalakalappu 2

கலகலப்பு 2 - பட காட்சிகள் ↓

Advertisement
2.5

விமர்சனம்

Advertisement

நடிப்பு - ஜீவா, ஜெய், சிவா, கேத்தரின் தெரேசா, நிக்கி கல்ரானி, யோகி பாபு
இயக்கம் - சுந்தர் .சி
இசை - ஹிப்ஹாப் தமிழா
தயாரிப்பு - அவ்னி மூவி மேக்கர்ஸ்

தமிழ் சினிமாவில் நகைச்சுவைப் படங்களில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் இயக்குனர் சுந்தர் .சி. அவருடைய படங்களில் கதை இருக்கிறதோ இல்லையோ, காமெடி நிச்சயம் இருக்கும். கவுண்டமணி, வடிவேலு, விவேக், சந்தானம் என பல நகைச்சுவை நடிகர்களுக்கும் தன் படங்கள் மூலம் மிகப் பெரும் திருப்புமுனையைத் தந்தவர்.

அவரது இயக்கத்தில் 2012ம் ஆண்டு வெளிவந்த கலகலப்பு படத்தின் முதல் பாகம் காமெடியாகவும் அமைந்து, கலெக்ஷ்னிலும் திருப்தியாக இருந்தது. அந்தப் படத்தில் சந்தானத்தின் நகைச்சுவை, அஞ்சலி, ஓவியா இருவரின் கிளாமரான நடிப்பு ஆகியவை படத்தை கலகலப்பாக நகர வைக்க உதவியது.

கலகலப்பு 2 இரண்டாம் பாகத்தில் பல நட்சத்திரங்கள் இருந்தும் முதல் பாகம் அளவிற்கு கலகலப்பாக இல்லை என்பதே கசப்பான உண்மை.

தங்களது பூர்வீக பரம்பரை சொத்து ஒன்று காசியில் இருக்கிறது என்பது ஜெய்க்குத் தெரிய வருகிறது. அதைத் தேடிக் கண்டுபிடிக்க காசி செல்கிறார். அவருக்கு சொந்தமான சொத்தில் தான் ஒரு மேன்ஷனை நடத்திக் கொண்டிருக்கிறார் ஜீவா. அதே மேன்ஷனில் சென்று தங்குகிறார் ஜெய். ஒரு கட்டத்தில் அதுதான் அவருடைய பூர்வீக சொத்து என கண்டுபிடிக்கிறார். காசிக்குச் சென்ற இடத்தில் அங்கு தாசில்தாராக இருக்கும் நிக்கி கல்ராணியைக் காதலிக்கிறார் ஜெய். இதற்கிடையில் திடீரென நிக்கி கல்ராணிக்கு ஊரில் திருமண ஏற்பாடுகள் நடைபெறுகிறது. ஜெய், ஜீவா இருவரையும் ஏமாற்றிய சிவா, தான் நிக்கி கல்ராணிக்கான மாப்பிள்ளை என அவர்களுக்குத் தெரிய வருகிறது. அதனால், ஜீவா, ஜெய் இருவரும் காரைக்குடி செல்கிறார்கள். அங்கு சிவா-வை கோடீஸ்வரரான சந்தானபாரதி தத்துப் பிள்ளையாக எடுக்க இருக்கிறார். அதன் பின்..... இன்னும் கதையைச் சொல்ல வேண்டும் என்றால் இரண்டு பக்கங்கள் கூட போதாது, மீதியை வெள்ளித் திரையில் காண்க என்றுதான் முடிக்க வேண்டும்.

பூர்வீக சொத்து பற்றிய கதை என்று வைத்தால் கொஞ்சம் போரடிக்கும் என்று, ஒரு மந்திரி, அவருடைய ரகசியம் அடங்கிய லேப்டாப், அதை எடுத்துக் கொண்டு காசிக்கு ஓடும் ஆடிட்டர், அவரைத் தேடி ஓடும் மந்திரி ஆட்கள் என இன்னொரு கிளைக் கதையும் படத்தில் உண்டு.

சுந்தர் .சி படத்திற்கு எதற்கு கதையைத் தேட வேண்டும், காமெடி இருந்தால் போதா என்று நினைப்பவர்களுக்கு படத்தில் ஆங்காங்கே நகைச்சுவைத் தோரணங்கள் இருக்கிறது.

படத்தில் எல்லாருமே வழக்கத்தை விட கொஞ்சம் குண்டாகத் தெரிகிறார்கள். படப்பிடிப்பு நடக்கும் போது, நமக்கு நகைச்சுவை விருந்து படைப்பதற்காக, அனைத்து நட்சத்திரங்களுக்கும் அறுசுவை விருந்து படைத்திருப்பார்கள் போலிருக்கிறது.

படத்தின் நாயகர்களாக ஜீவா, ஜெய், ஆடுகிறார்கள், ஓடுகிறார்கள், பாடுகிறார்கள், காதலிக்கிறார்கள், சண்டை போடுகிறார்கள். இடைவேளைக்குப் பின் வரும் சிவா நாயகனாகவும் தெரிகிறார், வில்லனாகவும் தெரிகிறார். கேத்தரின் தெரேசா, நிக்கி கல்ரானி இருவரும் கிளாமராக ஆடை அணிந்து வந்து அசத்துகிறார்கள். நடிப்பைப் பற்றியெல்லாம் கேட்கக் கூடாது.

மற்ற நடிகர்களில் யோகி பாபு, சிங்கமுத்து காம்பினேஷன் நகைச்சுவை தெறிக்க விடுகிறது. இரண்டாவது பாதியில் வரும் தொய்வை இவர்கள் கொஞ்சம் சரி செய்கிறார்கள். ரோபோ சங்கர் நகைச்சுவையை விட்டுவிட்டு குணச்சித்திர கதாபாத்திரங்களில் கவனம் செலுத்தலாம். மற்ற நடிகர்களில் குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்கு வேறு யாரும் இல்லை.

ஹிப் ஹாப் தமிழா இசையில் அனைத்துப் பாடல்களும் ஒரே மாதிரியாகவே இருக்கிறது. அவருடைய போன படத்திலும் கேட்ட மாதிரியாகவே இருக்கிறது. ஸ்டைலை மாத்துங்க ஹிப் ஹாப், சினிமா இசை என்பது வேறு, இல்லையென்றால் ஆப்புதான்.

காசியின் அழகை இதுவரை வேறு எந்த தமிழ் சினிமாவிலும் இப்படி பார்த்தது இல்லை என்று சொல்லுமளவிற்கு யுகே செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். பாடல்களில் நடனமும், கலை இயக்கமும் அசத்தலாக இருக்கிறது.

“நான் தியேட்டருக்கு போறது ஜஸ்ட் என்டர்டெயின்மென்ட்டுக்கு மட்டும்தான், எனக்கு வேறு எதுவும் தேவையில்லை,” என்று சொல்லும் ரசிகர்களுக்கான படம்தான் கலகலப்பு 2.

கலகலப்பு 2 - கலகல இல்லை கல மட்டுமே

 

பட குழுவினர்

கலகலப்பு 2

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓