களத்தில் சந்திப்போம்
விமர்சனம்
நடிப்பு - ஜீவா, அருள்நிதி, மஞ்சிமா மோகன், பிரியா பவானி சங்கர்
தயாரிப்பு - சூப்பர் குட் பிலிம்ஸ்
இயக்கம் - ராஜசேகர்
இசை - யுவன்சங்கர் ராஜா
வெளியான தேதி - 5 பிப்ரவரி 2021
நேரம் - 2 மணி நேரம் 20 நிமிடம்
ரேட்டிங் - 3.25/5
தமிழ் சினிமாவில் எதிர்பார்த்த படங்கள் ஏமாற்றத்தைத் தர, எதிர்பார்க்காத சில படங்கள் ஆச்சரியத்தைத் தரும். அப்படி ஒரு ஆச்சரியத்தைத் தந்துள்ள படம் தான் இந்த களத்தில் சந்திப்போம்.
படத்தின் தலைப்பைக் கேட்டாலே ஒரு படத்திற்கான தலைப்பாக இல்லாதது போலத்தான் தோன்றியது. ஜீவா, அருள்நிதி என ஒரு புது கூட்டணி வேறு. களத்தில் அப்படி என்ன விளையாடி இருக்கப் போகிறார்கள் என்ற சந்தேகத்துடன் உள்ளே நுழைந்தால் இறங்கி ஆடி அடித்திருக்கிறார்கள்.
நட்பை வைத்து இதுவரை எத்தனையோ படங்கள் வந்திருக்கின்றன. ஆனால், அவை போல இல்லாமல் புது மாதிரியாக ஒரு யதார்த்தத்துடன் இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் ராஜசேகர்.
ஜீவா, அருள்நிதி இருவரும் சிறு வயது முதலே நண்பர்கள். ஒரு பைனான்ஸ் கம்பெனியில் வசூல் செய்யும் வேலையில் இருக்கிறார்கள். இருவருக்கும் அவர்களது பெற்றோர்கள் பெண் பார்க்கிறார்கள். அருள்நிதி காதல் தோல்வியால் கல்யாணமே வேண்டாமென இருக்கிறார். தன் மகன் அருள்நிதிக்கு அண்ணன் மகள் மஞ்சிமா மோகனை திருமணம் செய்து வைக்க நினைக்கிறார் ரேணுகா. ஆனால், அருள்நிதிக்கு தன் பெண்ணைத் தர மறுக்கிறார் அப்பா வேலராமமூர்த்தி. அதோடு வேறு இடத்திலும் மாப்பிள்ளை பார்த்து திருமண ஏற்பாடு செய்கிறார். திருமணத்தன்று மஞ்சிமா விருப்பப்படி அவரை மண்டபத்திலிருந்து தூக்கி வருகிறார் ஜீவா. அருள்நிதிக்கும், மஞ்சிமாவுக்கும் திருமணம் முடித்து வைக்க ஜீவா ஆசைப்பட, அதற்கு மறுக்கிறார் அருள்நிதி. இதனால், சில பல பிரச்சினைகள் ஏற்படுகிறது. நண்பர்களுக்குள் மோதல் உருவாகிறது. உரசிக் கொள்ளும் நண்பர்கள் ஒன்று சேர்ந்தார்களா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
ஒரு படத்தில் அனைத்து அம்சங்களையும் வைத்து கலகலப்பாகக் கொடுத்து ஆச்சரியப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் ராஜசேகர். அவருக்கு உறுதுணையாக படத்தின் வசனகர்த்தா அசோக் இருந்திருக்கிறார். பொருத்தமான கதாபாத்திரங்களுக்குப் பொருத்தமான நடிகர்கள், நடிகைகள். யாரையும் அதிகம் பேச வைக்காமல் அளவுடன் பேச வைத்து நடிக்க வைத்திருக்கிறார். குறிப்பாக ராதாரவி, ரோபோ சங்கர், பால சரவணன், ரேணுகா இவர்கள் எல்லாம் வழக்கமாக அதிகமாகப் பேசுபவர்கள். அவர்களையே அடக்கி பேசி வைத்திருக்கிறார் இயக்குனர்.
படத்தில் இரண்டு நாயகர்கள் ஜீவா, அருள்நிதி. ஆனால், மொத்தமாகப் பார்த்தால் படத்தில் வரும் கபடி போட்டிகளைப் போல அருள்நிதியை இறங்கி ஆடவிட்டு டிபன்ஸ் ஆடியிருக்கிறார் ஜீவா. படத்தின் ஆரம்பத்திலேயே அருள்நிதிக்குத்தான் ஒரு அதிரடியான பைட்டு. அதை ஓரமாக நின்று ரசிக்கிறார் ஜீவா. தங்களது தயாரிப்புப் படம் தான் என்பதற்காக தனக்காக அந்த பைட்டை வைத்துக் கொள்ளாமல் கதைப்படி அதை விட்டுக் கொடுக்கவெல்லாம் பெரிய மனது வேண்டும்.
அறிமுகமான வம்சம் படத்திற்குப் பிறகு அருள்நிதியை முழுமையாகப் பயன்படுத்தி எடுக்கப்பட்டுள்ள படம் இது. தனக்கான முக்கியத்துவம் படத்தில் சரியாக இருக்கிறது என்பதை உணர்ந்து அதற்கேற்றபடி களத்தில் இறங்கி நடித்திருக்கிறார் அருள்நிதி. பைட், நகைச்சுவை, சென்டிமென்ட், காதல் என அனைத்திலும் புகுந்து விளையாடி இருக்கிறார். தமிழ் சினிமா இவரை இன்னும் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாதது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. இந்தப் படத்திற்குப் பிறகு அது மாறலாம்.
சிவா மனசுல சக்தி படத்திற்குப் பிறகு ஜீவா இந்தப் படத்தில் நிறைவாக ரசிக்க வைக்கிறார். படத்தின் ஆரம்பத்தில் அருள்நிதிக்கு சரியான பைட் கொடுத்து ஒதுங்கி விட்டாரே, அதன்பிறகும் எங்கும் பைட்டே போடவில்லையே என்று பார்த்தால், அனைத்திற்கும் சேர்த்து கிளைமாக்சுக்கு முன்பாக சரியான சண்டைக் காட்சி ஒன்றை வைத்திருக்கிறார் இயக்குனர். ஒரு ஹீரோவுக்கு கதை என்பது ஒரு களம் போன்றது, அது சரியாக அமைந்துவிட்டால் அனைத்துமே சரியாக அமைந்துவிடும். அது ஜீவாவுக்கும் படத்தில் சரியாக அமைந்து அவரும் அதில் சரியாக களமாடியிருக்கிறார்.
படத்தில் இரண்டு கதாநாயகிகள். மஞ்சிமா மோகன், பிரியா பவானி சங்கர். மஞ்சிமா படத்தின் ஆரம்பத்திலிருந்தே வருகிறார். பிரியா இடைவேளைக்குப் பின்னர் தான் வருகிறார். இருவருக்கும் அதிகமான வேலை இல்லை என்றாலும் வரும் காட்சிகளில் யதார்த்தமாய் நம் பக்கத்து வீட்டு, எதிர் வீட்டுப் பெண் போலவே தெரிகிறார்கள்.
இத்தனை வருட சினிமா அனுபவத்தில் இந்தப் படத்தில் உள்ள அப்பச்சி போன்ற கதாபாத்திரத்தில் ராதாரவி நடித்திருக்க மாட்டார். அவ்வளவு யதார்த்தமாய் நடித்திருக்கிறார். ரோபோ சங்கர், பால சரணவன் அடிக்கும் ஒவ்வொரு கமெண்ட்டிற்கும் சிரிப்புக்கு உத்தரவாதம் நிச்சயம்.
யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் கேட்க வைக்கின்றன. அனைத்துப் பாடல்களிலும் பாடல்கள் மட்டும் வராமல் வசனங்களும் இடையிடையே வருகின்றன. வேண்டுமென்றே அப்படி சேர்த்திருப்பார்கள் போலிருக்கிறது. அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவில் காரைக்குடியையும், தென்காசியையும் இரண்டறக் கலந்து யதார்த்தப்படுத்தி இருக்கிறார்.
படத்தில் ஆங்காங்கே பின்னணியில் சில அரசியல் குறியீடுகள். அவற்றைத் தவிர்த்திருக்கலாம். அனைவருக்குமான படத்தில் ஒரு சார்பு அரசியல் நிலை தேவையில்லாதது.
இடைவேளை வரை கலகலப்பாக நகர்கிறது படம். அதற்குப் பின்னர் அருள்நிதி, பிரியா பவானிசங்கர் இடையிலான காதல் பிளாஷ்பேக் கொஞ்சம் வேகத் தடையாக உள்ளது. அதைச் சுருக்கமாகச் சொல்லியிருக்கலாம்.
களத்தில் சந்திப்போம் - கலகலப்பாய் சந்திக்கலாம்
களத்தில் சந்திப்போம் தொடர்புடைய செய்திகள் ↓
பட குழுவினர்
களத்தில் சந்திப்போம்
- நடிகர்
- நடிகை
- இயக்குனர்