2.25

விமர்சனம்

Advertisement

சத்யஜோதி பிலிம்ஸ் டி.ஜி.தியாகராஜன் தயாரிப்பில், விக்ரம் பிரபு - மாஞ்சிமா மோகன், ஜோடி நடிக்க "சுந்தரபாண்டியன்", "இது கதிர்வேலன் காதல்" படங்களின் இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் எழுத்து, இயக்கத்தில், "கத்தி எடுத்தவனுக்கு கத்தியால் தான் சாவு... ஆகவே, விழிச்சுக்கோ.... அதிலிருந்து மீண்டு வந்து பொழைச்சுக்கோ..." என்பதை, சாமான்ய ரசிகனின் கழுத்தறுக்கும் பொறுமையுடன், சற்றே காட்சிகளில் கூடுதல் வெறுமையுடன் சொல்லியிருக்கும் பா(ப)டமே "சத்ரியன்".

பெரிய தாதாவின் மறைவுக்குப் பின், அவரது மகளது பாதுகாப்புக்கு துணையாக போகும் குட்டி தாதா, அந்த பெரிய தாதாவின் மகளோடு காதலில் விழுந்து, புரண்டு, உருண்டு, அப்பாவின் ரவுடியிஸத்தால் அவரை அநியாயமாக இழந்த, மகளின் பேச்சைக் கேட்டு கத்தியால் எதிர்படும் வில்லன்களை எல்லாம் போட்டுத் தள்ளிக் கொண்டே கத்தியை எடுப்பது தவறு... என தன்னை சார்ந்தவர்களுக்கும் போதித்து, தானும் திருந்தி வாழ்ந்திட முயலும் காந்தி காலத்து கதை. இறுதியில், இடர் பல கடந்து, ஹீரோவும், அவரது சகாக்களும் திருந்தினரா? எதிராளிகள் திருந்த விட்டனரா..? நாயகர் - நாயகியை கரம் பிடித்தாரா..? என்பதற்கு வித்தியாசமாக விடை தரும் "சத்ரியன்" அதை ஆக்ஷ்ன் படங்களுக்கே வேண்டிய விறுவிறுப்போடு தர முயற்சிக்காததால் பெரிய அளவில் ரசிகனின் கவனம் ஈர்க்க மறுக்கிறது! பாவம்!

படிக்கப் போகும் கதாநாயகி மாஞ்சிமா மோகனின் பாதுகாப்புக்கு போய், அவரது வற்புறுத்தலால், காதலில் விழும் குட்டி தாதா குணாவாக விக்ரம் பிரபு, கத்தியும் கையுமாக படம் முழுக்க திரிந்தாலும், காதலியின் பேச்சைக் கேட்டு, புத்தராக போதிக்கும் இடங்களில் தன் நடிப்பு பரம்பரை பெயரை காப்பாற்ற முயற்சித்து கவனம் ஈர்க்கிறார். காதல் காட்சிகளில் மட்டுமின்றி, ஆக்ஷ்ன் காட்சிகளிலும், கத்தி எடுக்காதே... எனும் அட்வைஸ் காட்சிகளிலும் இயக்குனர் சொன்னதை செய்திருக்கும் விக்ரம் பிரபு,

"நானெல்லாம் அவ்வளவு சீக்கிரம் சாகக்கூடிய ஆளா? உயிர் நம்ம உடம்ப விட்டு போகிற கடைசி நொடி வரைக்கும் நாம செத்துடுவோம்னு நினன்க்கவே கூடாது..." என்றபடி தன்னை சுற்றி வளைத்து குத்தும், குத்தமுயலும் அத்தனை பேரிடமிருந்தும் தப்பிக்கும் சாதுர்யத்திலும், மன தைரியத்திலும் சாமான்யனாக தெரிந்தாலும், "நான் வெற்றிய சுழிச்சதுக்கு நீ கணக்கு பார்த்தா நீ சமுத்திரம் அண்ணனை சுழிச்சதுக்கு நான் கணக்கு பார்க்கணும்ல..." என்றபடி வில்லன் அருள்தாஸை வீழ்த்தும் இடத்தில் செமயாய் ஹீரோயிஸம் காட்டியிருக்கிறார்... என்பது அவரது ரசிகர்களுக்கு ஆறுதல்!

கதாநாயகியாக மப்பும் மந்தாரமுமாக தெரியும் மாஞ்சிமாமோகன், நிரஞ்சனா எனும் கதாபாத்திரத்தில் விக்ரம் பிரபுவை மட்டுமின்றி பெருவாரியான ரசிகனின் மனதிலும் தன் பாத்திரப் பெயருக்கு ஏற்ப நிறைஞ்சிடுகிறார்... என்பது இப்படத்திற்கு பெரும் பலம். ஆனால், தமிழ் சினிமாக்களில் கதாநாயகியருக்கெல்லாம் அதுவும் படித்த வசதியுள்ள பாத்திரமாக வரும் நாயகியருக்கெல்லாம், பெரிதாக படிக்காத ரவுடி தாதாக்களின் மீதே காதல் வருவது மட்டும் எப்புடி? என்பதற்கு இந்தப் படத்திலும் எந்த விளக்கமும் இல்லாதது கொடுமை.

மற்றபடி, சாவு பயம் இல்லாது சாகும் தாதா சமுத்திரமாக வரும் சரத் லோகித்ஸ்வா, நேர்மை போலீஸ் அதிகாரி ஆடுகளம் நரேன், பெரிய தாதாவின் மனைவியாக நாயகியின் தாயாக தாரா, நாயகியின் அண்ணனாக வரும் செளந்தர்ராஜா, ஹீரோவுக்கு தொழில் கற்று தந்து, அவருக்கு அண்ணனாக இருந்த சமுத்திரத்தின் மகளை மற்றும் தரத் தயாராக இல்லாத ரவி அண்ணனாக ஆர்.கே விஜய் முருகன், வில்லன் சங்கராக வரும் அருள்தாஸ், நாயகரை இரண்டொரு சீனில் இருசக்கர வாகனத்தில் வந்து இடித்து விட்டு சாரி கேட்கச் சொல்லி பின் புட்டேஜில் காணமல் போன காமெடியோகி பாபு, அயோக்கிய அமைச்சர் - போஸ்டர் நந்தகுமார், நாயகர் குணாவின் நண்பராக வரும் ரியோராஜ், கவின், தோழி - ஐஸ்வர்யா தத்தா, சுந்தரி திவ்யா... உள்ளிட்ட ஒவ்வொருவரும் தங்கள் கேரக்டருக்கு ஏற்றபடி பாந்தமாக நடித்திருக்கின்றனர்... என்றாலும் எக்கச்சக்கமாக பேசிக் கொண்டே இருக்கின்றனர்.

படத்தொகுப்பாளர் வெங்கட்ராம் மோகன் இப்படத்தில் அடிக்கடி வரும் கத்தி வேண்டாம் எனும் டயலாக்கை தவறாக புரிந்து கொண்டு தன கத்திரியை தூக்கி தூர வீசியிருப்பார் போலும். அதனால் காட்சிகள் ரொம்பவும் நீள நீளமாய் பயமுறுத்துகின்றன.

சிவக்குமார் விஜயனின் ஒளிப்பதிவு, ஆஹா ஓஹோ பதிவில்லை. அதேநேரம் இந்த ஆக்ஷன் கதைக்கேற்ற ஓ.கே பதிவு.

"மைனா ரெண்டு மைனா ரெண்டு...", " பாறை மேல தூறல் போல... ", "எனக்குள் வந்து விழுந்த வளே...", "சூடா ஒரு சூரியன செஞ்சி.." ஆகிய யுவன் சங்கர் ராஜாவின் பாடல்கள் இசையும், பின்னணி இசையும் படத்திற்கு கூடுதல் பலம்.

இயக்குனர் எஸ்.ஆர். பிரபாகரனின் எழுத்து, இயக்கத்தில், திருச்சிராப்பள்ளி கதைக்களமும், மலைக்கோட்டை மற்றும் ஸ்ரீரங்கம் கோயில் பின்னணி காட்சிப்படுத்தல்களும் ரம்மியம் என்றாலும், தாதாக்கள், பிடிக்காதவர்களை போட்டுத் தள்ள சொல்லும், செல்லும் சம்பவங்களுக்கு, "லைன் அடிச்சி விட்டுட்டான் என அடிக்கடி ஏதோ லைனிங் சென்டர் வைத்திருப்பது மாதிரி, படத்தில் இடம் பெற்றிருக்கும் பெரும்பாலானோர் டயாலாக் பிரயோகம் செய்வதும், படம் முழுக்க, கத்தியை சாணை பிடிப்பது எப்படி? என்பது பற்றி மட்டும் தான் கத்தி கத்தி சொல்லவில்லை... எனும் அளவில் கத்தியை பிடிப்பது எப்படி.?, நம்மை நோக்கி பாய்ந்து வரும் கத்தியை தடுப்பது எப்படி? என கத்தியை காட்டி, காட்டி, "கத்தி" பத்தி சுத்தி, சுத்தி கிளாஸ் எடுத்து விட்டு கத்தி பிடிக்காதே... என புத்தி சொல்லி, எதிர்படும் எல்லோரையும் படம் முழுக்க குத்திக் கிழித்திருக்கிறார்கள்..." என்பதும் பெரும் பலவீனம்.

"சத்ரியன் இது மாதிரி சவசவ காட்சிகளால், சத்ரியனாகவும் இல்லாது, சாணக்கியனாகவும் இல்லாது, சாதிப்பவனாகவும் இல்லாது, சும்மா போதிப்பவனாகவே போரடிக்கிறான்!."

மொத்தத்தில், ரசிகர்களை, ஒரு மாதிரி "சத்ரியன் - சோதிக்கிறான்!"

 

பட குழுவினர்

சத்ரியன்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்
  • இசை அமைப்பாளர்

மேலும் விமர்சனம் ↓