தினமலர் விமர்சனம்
விமல் - அஞ்சலி மீண்டும் ஜோடி சேர்ந்து நடிக்க, ராஜசேகர் இயக்கத்தில்,எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் பி.மதன் தயாரிப்பில் வெளிவந்திருக்கிறது... மாப்ளசிங்கம்.
அந்த ஊரில் காதல் பிடிக்காத காளையாக சேர்மன் பெரியப்பா ராதாரவியின் ஒப்புதலுடன் எல்லோரது காதலையும் பிரித்தபடி திரிகிறார் ஹீரோ விமல். ஆனால், அவர்களது வீட்டிலேயே அவரது பெரியப்பா பெண்ணுக்கு இவர்களது எதிர் கோஷ்டியினரின் வீட்டு வாரிசுடன் காதல். அந்த காதலை பிரித்து வைக்கவும் முடியாமல், சேர்த்து வைக்கவும் முடியாமல் தடுமாறுகிறார் விமல். காரணம், பஞ்சாயத்திற்கு போன இடத்தில் விமலுக்கும், தங்கையின் காதலரது சிஸ்டர் அஞ்சலியுடன் காதல் பூத்து காய்த்து கசிந்துருகுகிறது. இரண்டு காதலும், ஊர், உறவின் எதிர்ப்பை எப்படி கையாண்டு கைகூடுகிறது என்பது தான் மாப்ள சிங்கம் படத்தின் கரு, கதை, களம், காட்சிப்படுத்தல், காமெடிப்படுத்தல் எல்லாம்.
விமல் - அஞ்சலி ஜோடி மீண்டும் சேர்ந்திருக்கிறது. பெரிதாக ஓன்றுமில்லை. விமல் இங்கிலீஷ் பேசி கொல்லாமல் யதார்த்தமான பாத்திரத்தில் நடித்திருப்பது தான் பெரிய ஆறுதல்.
அஞ்சலி, அம்சமாக இருக்கிறார். அழகாக வந்து போகிறார். கொஞ்சம் பழையவசிய சக்தியுடன் நடித்தும் இருக்கிறார்.
ஆனால் நாயகன், நாயகியைக் காட்டிலும் சூரியும், காளி வெங்கட்டும் கிளப்பி இருக்கிறார்கள். இந்திய சினிமா வரலாற்றில் முதன்முதலாக காதலர்களை சேர்த்து வைத்த வில்லன் இவராகத்தான் இருக்கும்... என ராதாரவியைப் பார்த்து சூரி, பரிதாபமாக செய்யும் முணுமுணுப்பில் தொடங்கி, ஒடிப்போனவளை தேடித் தாங்க கண்டுபிடிக்க முடியும்... என ஹீரோவுக்கு பொருத்தமில்லாத பெண்களாக பார்த்து வரும் புரோக்கரை கலாய்ப்பது வரை சகலத்திலும் அலப்பரையை கூட்டுகிறார் சூரி! வாவ்!
சாப்பிட்டு சாப்பிடறது ஒரு ஸ்டைல்ப்பா... என சட்னிக்காக மீண்டும் டிபன் சாப்பிட செல்வது, பைனல் ரவுண்டுக்கு எதுக்கு கோயமுத்தூர் போகணும் சாய்ங்காலம் மொட்ட மாடிக்கு வந்தா பைனல் ரவுண்டுக்கு போலாமே என்பது என எல்லா இடத்திலும் சூரி சூப்பர்ரி.
பிரச்சனையை பண்றதுக்குன்னே பிள்ளையார் கோயில்ல அர்ச்சனையை பண்ணிட்டு வந்துருக்கோம்..., அதே மாதிரி, கவுன்சிலர் கூட்டத்தில் உங்களை மாதிரி அயோக்கியனுக்கா டெண்டர கொடுத்தாரா? உத்தமனுக்கு தானே கொடுத்தாரு..? என்பதில் தொடங்கி, "கட்டுன பொண்டாட்டிக்கு லவ் லெட்டர் கொடுத்தாலே.. பிடிக்காது இவன் எங்க வீட்டு பொண்ணுக்கு லெட்டர் குடுத்துருக்கான் என்பது வரை காளி வெங்கட்டும் தன் பங்குக்கு பட்டைய கிளப்பி இருக்கிறார்.
முனிஸ்காந்த் ராமதாஸ், சுவாமிநாதன், ராதாரவி, ஜெயப்பிரகாஷ், மீரா கிருஷ்ணன்... உள்ளிட்டவர்களும் இயக்குனர் எதிர்பார்த்தபடியே வந்து போயிருக்கிறார்கள்.
மாப்ள சிங்கம்.... , என்னடா காதல்....., எதுவுமே தோணலை எனக்கு என்ன ஆச்சி மாப்பிள்ளை... உள்ளிட்ட பாடல்கள்... ரகுநந்தனின் இசையில் முணுமுணுக்க வைக்கும் விசை.
விவேக் ஹர்சனின் படத்தொகுப்பு, தருண் பாலாஜியின் ஒளிப்பதிவு உள்ளிட்டவை பெரிய குறை இல்லா நிறை. பிரச்சனையை பண்றதுக்குன்னே பிள்ளையார் கோயில்ல அர்ச்சனையை பண்ணிட்டு வந்துருக்கோம்.. உள்ளிட்ட டான் அசோக்கின் காமெடி வசனங்கள் பெரும் பலம்!
144, வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட படங்களின் சாயலிலான ஒப்பனிங் பெருங்குறை. அது மாதிரி இன்னும் சில குறைகளையும் சேர்த்துப் பார்த்தால், ராஜசேகரின் எழுத்து, இயக்கத்தில் மாப்ள சிங்கம் எனும் டைட்டிலைப் பார்த்து விட்டு தியேட்டருக்கு போனால், சிங்கம் கர்ஜிக்கவில்லை காமெடி செய்திருக்கிறது.
மாப்ள சிங்கம் - காமெடி கிங்காகுமா? பார்ப்போம்!
-----------------------------------------------------------------
குமுதம் விமர்சனம்
சமீபத்தில் நிகழ்ந்த கௌரவக் கொலையை நினைவுப் படுத்தும் படம்!
ஊரில் யார் காதலித்தாலும் எதிர்க்கிறார் ஜாதி வெறி பிடித்த ஊர் பெரியவர் ராதாரவி. ஊரில் நடக்கும் காதலையெல்லாம் சிங்கம் மாதிரி ஆக்ரோஷமாய்த் தடுக்கும் அவரது தம்பிப் பையன் விமல், ஒரு காதலில் விழ, மாப்ள ஆனானா? இல்லையா? என்பதை ஜாலியாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் ராஜசேகர்.
விமல் படத்துக்குப் படம் நடிப்பில் முன்னேற்றம் டான்ஸிலும் மின்னுகிறார்.
மீண்டும் அஞ்சலி. அதே பழைய துடுக்கு, கோக்குமாக்கு என்று ஆளை வசியப்படுத்துகிறார்.
சூரி, ஆங்கிலக் கொலை செய்வதை இனியாவது நிறுத்துங்களேன்.
தாங்கள் தான் ஆண்ட பரம்பரை, தங்களுக்குத்தான் முன்னுரிமை என்ற இரண்டு ஜாதியினர் தகராறில் தேர்த் திருவிழாவே ஊரில் நடக்கவில்லை. கடைசியில் ஹீரோவின் நண்பனான வௌ்ளைக்காரன் தன்னுடைய நாட்டவர்கள் நிறையப் பேரை அழைத்து வந்து 'நாங்களும் இந்த நாட்டை ஆண்டவர்கள்தான். தேரை நாங்கள் இழுக்கிறோம்' என்று கலெக்டர் தயவால் அலப்பரை காட்டுவது அசத்தல்.
சிவகார்த்திகேயனும் அனிருத்தும் இணைந்து பாடிய 'எதுக்கு மச்சான் காதலு' பாடல் ஏற்கெனவே ஹிட். அதுமட்டுமல்ல, ரகுநந்தனின் எல்லாப் பாடல்களுமே ஸ்வீட்.
படங்களில் பார்த்துப் பார்த்து சலித்துப் போன காட்சிகள் வெறுப்படிக்கின்றன.
மா.சி. - மண்வாசனை!
குமுதம் ரேட்டிங் - ஓகே