2.75

விமர்சனம்

Advertisement

நடிப்பு - தனுஷ், சாய்பல்லவி, வரலட்சுமி
இயக்கம் - பாலாஜி மோகன்
இசை - யுவன்ஷங்கர் ராஜா
தயாரிப்பு - உண்டர்பார் பிலிம்ஸ்
வெளியான தேதி - 21 டிசம்பர் 2018
நேரம் - 2 மணி நேரம் 30 நிமிடம்
ரேட்டிங் - 2.75/5

2018ம் ஆண்டு இரண்டாம் பாகப் படங்களின் ஆண்டோ என யோசிக்க வைக்கிறது. இந்த வருடத்தின் கடைசி இரண்டாம் பாகப் படம் 'மாரி 2'.

முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இல்லாமல் வேறு ஒரு கதையுடன் களமிறங்கியிருக்கிறார் இயக்குனர் பாலாஜி மோகன். 'மாரி 2' படத்தில் தனுஷுக்கு ஒரு 'புரோமோஷன்' கொடுத்து அடுத்த கட்டத்திற்குச் சென்றுள்ளார்கள். 'மாரி 3, மாரி 4' எனத் தொடர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

'மாரி' படத்திற்குக் கிடைத்த வரவேற்பை வைத்து இரண்டாம் பாகத்தை உருவாக்கியே ஆக வேண்டும் என முடிவு செய்தபின், கதைக்காக நிறையவே யோசித்திருப்பார்கள் போலிருக்கிறது. எதையெதையோ சொல்லி கொஞ்சம் குழப்பவும் செய்கிறார்கள். சில காட்சிகள் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் முடிகின்றன. திடீரென எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு திரைக்கதையை வேறு பக்கமும் திசை திருப்புகிறார்கள். எல்லாவற்றையும் மீறி தனுஷின் எனர்ஜி தான் படத்தைக் காப்பாற்றுகிறது.

தன் அண்ணன் கொலைக்குக் காரணமான தனுஷை பழி வாங்க சிறையிலிருந்து தப்பித்து வருகிறார் டொவினோ தாமஸ். அரசியல் செய்து தனுஷையும், அவருடைய நண்பன் கிருஷ்ணாவையும் பிரிக்கிறார். டொவினோ, தனுஷைக் கொல்ல முயற்சிக்கும் போது, சாய்பல்லவி குறுக்கே விழுந்து தனுஷைக் காப்பாற்றுகிறார். அதன்பின், தனுஷ் எங்கே சென்றார் என்று யாருக்கும் தெரியவில்லை. எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு எம்எல்ஏ தேர்தலில் நிற்கும் டொவினோவுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க நினைக்கிறார் அரசு அதிகாரியான வரலட்சுமி. அதற்காக தனுஷைத் தேட ஆரம்பிக்கிறார். தனுஷ் கிடைத்தாரா, டொவினோவுக்கு தண்டனை கிடைத்ததா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

'செஞ்சிருவேன்' டயலாக்குடன் கூடுதலாக 'உரிச்சிருவேன்' என இரண்டாம் பாகத்தில் புதிதாக சேர்த்திருக்கிறார் தனுஷ். 'மாரி' படத்தில் எப்படி இருந்தாரோ இதிலும் அப்படியே இருக்கிறார். அதே எனர்ஜி, அதே குறும்பு, அதே வேகம், அதே பணிவு. அவருடைய ரசிகர்களுக்கு என்ன பிடிக்குமோ அதை படம் முழுவதும் சேர்த்திருக்கிறார். கிளைமாக்சில் 'சிக்ஸ் பேக் (?)' காட்டி வேறு சண்டை போடுகிறார். பாசமான கணவனாக, அப்பாவாக சென்டிமென்ட் நடிப்பிலும் உருக வைக்கிறார். படம் முழுவதையும் தன் முதுகில் சுமந்திருக்கிறார். பல காட்சிகளில் அவர் திரும்பினால் கூட ரசிகர்கள் கைதட்டுகிறார்கள். 'பாட்ஷா' படத்தில் வந்தது போன்ற ஒரு காட்சி வேறு படத்தில் இருக்கிறது. தனுஷ், எந்த இடத்திற்கு ஆசைப்படுகிறார் என்பது அவருடைய ரசிகர்களுக்கும் புரிகிறது. ஆர்வக் கோளாறில் தியேட்டரில் அவருடைய ரசிகர்களே பல காட்சிகளை குட்டி குட்டி வீடியோவாக எடுக்கிறார்கள். அதைத் தடுத்தால் அவருக்கும் நல்லது, சினிமாவுக்கும் நல்லது.

தமிழ் சினிமாவில் ஜோதிகாவிற்குப் பிறகு ஒரு சுறுசுறுப்பான துறுதுறுப்பான நடிகையாக சாய் பல்லவி. அராத்து ஆனந்தி என்ற ஆட்டோ டிரைவர் கதாபாத்திரத்தில் அசால்ட் ஆனந்தியாக அசத்துகிறார். தனுஷுக்கும் இவருக்குமான கெமிஸ்ட்ரி நன்றாகவே இருக்கிறது. இன்னும் கூடுதலான காதல் காட்சிகளை இயக்குனர் சேர்த்திருக்கலாம். கிடைக்கும் வாய்ப்பில் தன் நடிப்பை வெளிப்படுத்துகிறார் சாய் பல்லவி. ரௌடி பேபி பாடலில் நடனத்தில் அட்டகாசமாய் ஆடுகிறார். நடனம் தெரியாத நாயகிகள் கொஞ்சம் உஷாராவது நல்லது. மேக்கப்பே இல்லாமல் ஆட்டோ டிரைவர் கதாபாத்திரத்தில் பளிச்சென இருக்கிறார். கொஞ்சம் 'டல்' மேக்கப்பாவது போட்டிருக்கலாம்.

படத்தின் வில்லனாக டொவினோ தாமஸ். மாரி மாதிரியான ஒரு ரௌடியை எதிர்க்கும் கதாபாத்திரத்தில் முகத்திலேயே வில்லத்தனத்தை தேக்கி வைத்திருக்கும் ஒருவரைத் தேர்வு செய்திருக்கலாம். கெட்அப்பை மாற்றினால் கூட டொவினோ முகத்தில் முரட்டுத்தனம் வரவேயில்லை. அவர் பேசும் மலையாளத் தமிழ் வேறு இடிக்கிறது. மாரியை மிரட்டும் போதெல்லாம் டொவினோ அமுல் பேபி மாதிரியே இருக்கிறார்.

முதலில் கலெக்டர், பின்னர் உள்துறை இணைச் செயலர் என கம்பீரமான கதாபாத்திரத்தில் வரலட்சுமி. அவருடைய தோற்றமே அவருக்கு பெரிய பிளஸ். வந்து நின்றாலே நம்பும்படி இருக்கிறது. நடிப்பின் மூலம் கூடுதலாய் அந்த கதாபாத்திரத்திற்கும் மெருகேற்றியிருக்கிறார்.

தனுஷின் இடது, வலது அல்லக்கைகளாக ரோபோ சங்கர், வினோத். இருவரும் வழக்கம் போலவே அடிக்கடி சிரிக்க வைக்கிறார்கள். அதிலும், வினோத், ரோபோ சங்கரைவிட அதிகம் ஸ்கோர் செய்கிறார். தனுஷின் நண்பராக கிருஷ்ணா, அதிகம் வேலையில்லை, இருந்தாலும் லோக்கல் பையன் கதாபாத்திரத்திற்குப் பொருத்தமாக இருக்கிறார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனுஷ் - யுவன்ஷங்கர் ராஜா கூட்டணி இணைந்திருக்கிறது. படத்தில் உள்ள மூன்று பாடல்களுமே ரசிக்க வைக்கிறது. 'மாரி' முதல் பாகத்தில் வந்த தீம் மியூசிக்கையே ஆரம்பத்தில் பயன்படுத்தியிருக்கிறார்கள். யுவன் அவருடைய ஸ்டைலில் ஒரு தீம் மியூசிக்கை சேர்த்திருக்கலாம்.

ஒரு படத்திற்குள்ளேயே பல விஷயங்களைச் சேர்த்திருக்கிறார்கள். காதல், நட்பு, குடும்பம், பாசம், துரோகம், பழி வாங்கல், உள் குத்து, அரசியல் என டோஸ் கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது. போலீசாரை சுட்டுக் கொன்று சிறையிலிருந்து தப்பிக்கும் டொவினோவை அதன் பின் போலீஸ் தேடுவது போல ஒரு காட்சி கூட இல்லை. அவரும் சில வருடங்கள் கழித்து எம்எல்ஏ தேர்தலில் நிற்கும் போதுதான் கைது செய்யத் துடிக்கிறார்கள். இப்படி சிலபல லாஜிக் ஓட்டைகள் படத்தில் உள்ளன. தனுஷை சாய் பல்லவி எதற்காகக் காப்பாற்றுகிறார் என்பது பின்னர் தெரிய வரும் போது, ஓ...அடுத்த பாகத்திற்காகத்தானா என ஆச்சரியப்பட வைக்கிறது.

தன் ரசிகர்களைத் திருப்திப்படுத்தும் ஒரு படத்தைக் கொடுக்க தனுஷ் முடிவு செய்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். 'மாரி 2' தனுஷ் ரசிகர்களுக்கான படம்.

மாரி 2 - தொடரும்...

 

மாரி 2 தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

மாரி 2

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

தனுஷ்

டைரக்டர் கஸ்தூரி ராஜாவின் 2வது மகன்தான் தனுஷ். 1983, ஜூலை 28ம் தேதி பிறந்த இவரது நிஜப்பெயர் வெங்கடேஷ் பிரபு. இவரது அண்ணன் செல்வராகவன் திரைக்கதையில் அப்பா கஸ்தூரி ராஜா இயக்கத்தில் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அந்த படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து செல்வராகவனின் இயக்கத்தில் நடித்த காதல் கொண்டேன் படமும் சூப்பர் ஹிட் ஆனது. இதனைத் தொடர்ந்து நடித்த திருடா திருடி, தேவதையை கண்டேன், சுள்ளான், திருவிளையாடல் ஆரம்பம், குட்டி, பொல்லாதவன், உள்ளிட்ட படங்களின் மூலம் முன்னணி நடிகர் அந்தஸ்துக்கு உயர்ந்தார். இரண்டு தேசிய விருது வென்றுள்ள தனுஷ் தமிழ் சினிமா மட்டுமல்லாது ஹிந்தி சினிமா, ஹாலிவுட் படத்திலும் முத்திரை பதித்துள்ளார்.

மேலும் விமர்சனம் ↓