Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு »

மாரி

மாரி,Maari
05 ஆக, 2015 - 15:24 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » மாரி

தினமலர் விமர்சனம்


அநேகனுக்கு அப்புறம் அநேகமான தமிழ் சினிமா ரசிகர்களை சிநேகமாக தன் பக்கம் திருப்பியிருக்கும் தனுஷ் நடித்து, பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே வௌிவந்திருக்கும் திரைப்படம் தான் மாரி! மாரி, ரசிகர்களை வாரி அணைத்து கொள்ள வைத்திருக்கிருக்கிறதா..?, சாரி சொல்ல வைத்திருக்கிறதா...? இதோ பார்ப்போம்...


கதைப்படி, சென்னை திருவல்லிக்கேணி ஏரியாவில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசிக்கும் தனுஷ், தனது நண்பர்களுடன் சென்று பந்தைய புறாக்களை வளர்த்து அதன்வாயிலாக துட்டு பார்த்து வரும் வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். அந்த ஏரியாவின் பெரிய தாதா சண்முகராஜனுக்கும், அதே ஏரியாவிலிருக்கும் இன்னொரு தாதாவுக்கும் மாமூல் உள்ளிட்ட விஷயங்களில் முட்டல் மோதல் பிரச்னை இருந்து வருகிறது. எதிர்பாராத ஒரு விவகாரத்தில், ஒருநாள் சண்முகராஜனுக்கு எதிரான தாதாவை தனுஷ் கொன்று விடுகிறார். அதுமுதல், தனுஷை தலையில் தூக்கி வைத்து கொண்டு ஆடும் சண்முகராஜன், திருவல்லிக்கேணி ஏரியாவையும் தனுஷ்கே தருகிறார்.


அந்த ஏரியாவில் பெரிய கில்லாடி கேப்-மாரியாகிவிட்ட தனுஷ், தனது சகாக்களுடன் சேர்ந்து கொண்டு ஏரியாவுக்குள் அனைவருக்கும் இடையூறாக அதகளம் பண்ணுகிறார். இதனால் அந்த ஏரியாவின் சிறுசு முதல் பெருசு வரை சகலரும் தனுஷை சபிக்கிறார்கள். இந்நிலையில், திருவல்லிக்கேணி காவல் நிலையத்திற்கு சப்-இன்ஸ்ஸாக பொறுப்பேற்கும் விஜய் யேசுதாஸ், அந்த ஏரியாவின் கில்லாடி, கேப் மாரி தனுஷை பற்றி கேள்விப்பட்டு ஆக்ஷனில் குதிக்கிறார். தனுஷ், பெரிய ரவுடி, தாதா, ஒரு கொலையை செய்த கொலையாளி என்பது விஜய் யேசுதாஸ்க்கு தெரிய வந்தாலும், தனுஷ் தான் கொலை செய்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லாததால் அவரை கைது செய்ய முடியாமல் தவிக்கிறார்.


அதேநேரம், தனுஷின் தாதா ஏரியாவான திருவல்லிகேணிக்கு, பேஷன் டிசைனரான காஜல் அகர்வால் தன் குடும்பத்தோடு குடி வருகிறார். அந்த ஏரியாவிலேயே ஒரு பொடிக்ஸ் ஷாப்-பையும் ஆரம்பித்து தன் பேஷன் டிசைன் தொழிலுக்கு பிள்ளையார் சுழி போடுகிறார். தனது ஏரியாவுக்குள் தன்னுடைய அனுமதி இல்லாமல் துணிக்கடை ஆரம்பித்த காஜலின் கடைக்கு சென்று தனுஷ் கலாட்டாவில் ஈடுபடுகிறார். இதனால் தனுஷ் மீது காஜல் கடுப்படைகிறார்.


காஜலின் கடுப்பை மேலும் வெறுப்பாக்கும் விதமாக காஜலின் கடைக்கு தானும் ஒரு பங்குதாரர் என்றும் சொல்லுகிறார் தனுஷ். இதனால் அதிர்ச்சிக்கு உள்ளாகும் காஜல், மேலும் தனுஷ் மீது காண்ட் ஆகிறார். இந்நிலையில், ஒருநாள் காஜல் கடை வைப்பதற்கு வட்டிக்கு பணம் கொடுத்த மைம் கோபி, தான் கொடுத்த கடனை வட்டியுடன் உடனடியாக திரும்பி கொடுக்கும்படி காஜலிடம் வம்பு செய்கிறார். இந்த பிரச்னையில் மூக்கை நுழைக்கும் தனுஷ், காஜலுக்கு உதவி செய்கிறார். அன்றிலிருந்து தனுஷ் மீது காஜலுக்கு தனி பிரியம் ஏற்படுகிறது. அதன்பின் தன்னுடன் நெருக்கமாகும் காஜலுடன், தனுஷ் ஒருநாள் செம மப்பில் தான் செய்த கொலை பற்றி உளறுகிறார். அதை காஜல் தனது மொபைலில் வீடியோ பதிவு செய்து காவல் துறையிடம் ஒப்படைக்கிறார். போலீஸ் தனுஷை கைது செய்து அவரை சிறையில் தள்ளுகிறது. அந்தப்பகுதியே தனுஷ் சிறை சென்றதை கொண்டாடுகிறது. இதன்பின் தனுஷின், காஜல் மீதான காதலும், தனுஷ்க்கு போடப்பட்ட காவலும் என்ன ஆகிறது.?, தனுஷ் நல்லவரா...? கெட்டவரா...? காஜலும், அந்த ஏரியா மக்களும் தனுஷை புரிந்து கொண்டார்களா...? என்பது மாரி படத்தின் வித்தியாசமும், விறுவிறுப்புமான மீதிக்கதை.


தனுஷ், மாரி எனும் ரவுடி கதாபாத்திரத்திற்கு ஏற்ற மாதிரி, கழுத்து நிறைய தங்க சங்கிலியும், பெரிய பார்டர் போட்ட வேஷ்டி, பளபள கலர் கலர் சட்டைகள்... இருட்டிலும் கூலிங் கிளாஸ்... என சென்னை ஏரியா தாதா மாதிரியே படம் முழுக்க பக்காவாக வலம் வந்திருக்கிறார். காதோரம் நீண்டு இருக்கும் பெரிய கிருதா, அதை உதட்டோரத்தில் இருந்து எட்டி பிடிக்க முயலும் முறுக்கு மீசை என இளம் ரவுடியாகவே வாழ்ந்திருக்கிறார் தனுஷ். அதிலும், சண்டைக்காட்சிகளிலும், பாடல் காட்சி நடனங்களிலும் பட்டைய கிளப்பி இருக்கும் மனிதர் முதல் பாடலில் போடும் குத்தாட்டத்தை பார்த்து தியேட்டரே ஆட்டம் போடுகிறது, அதிர்கிறது. அதேநேரம் சிறியவர்கள் முதல் இளஞர்கள் வரை ஏகப்பட்ட ரசிகர்களை கொண்டுள்ள தனஷ், படத்தில் அதிகப்படியாக புகைப்பிடிக்கும் காட்சிகளை தவிர்த்திருக்கலாம். சிகரெட் பிடித்தால் தான் தாதா என்று சொல்வார்களா...? தனுஷ்!


கதாநாயகி காஜல், இளம் பெண் பேஷன் டிசைனராக தன் ஸ்டைலுக்கு ஏற்ற மாதிரியே விதவிதமான உடைகளில் வந்து ரசிகர்களை கவருகிறார். நடிப்பிலும் இளமை துடிப்பிலும் கூட அம்மணி இனிப்பு கடைதான்!


பிரபல பின்னணி பாடகர் யேசுதாஸின் வாரிசும், இளம் பின்னணி பாடகரான விஜய் யேசுதாஸ், போலீஸ் சப்-இன்ஸாக பக்காவாக பாத்திரத்தில் பொருந்தி நடித்திருக்கிறார். விஜய் யேசுதாஸ்க்கு நடிப்பில் இதுதான் முதல்படமா...? என ஆச்சர்யமாக கேட்கும் அளவிற்கு நடிப்பு பிரமாதமாக இருக்கிறது.


படத்தில் தனுஷ், விஜய் யேசுதாஸ் உள்ளிட்ட சகலரையும் தூக்கி சாப்பிட்டு விடுகிறார் தனுஷின் நண்பராக வரும் ரோபா சங்கரும், கல்லூரி வினோத்தும் மாரி படத்தில் காமெடியில் கதகளி ஆட்டம் ஆடி அதகளம் பண்ணியிருக்கின்றனர். தனுஷ், செஞ்சுருவேன்.... உள்ளிட்ட ஒவ்வொரு டயலாக் பேசும்போது இவர்கள் கொடுக்கும் காமெடி பதிலடி வசனங்கள், தனுஷ் ரசிகர்கள் நிரம்பியிருக்கும் தியேட்டர்களிலேயே பெரும் சிரிப்பலையை ஏற்படுத்துவது ஆச்சர்யம்.


கான்ஸ்டபிளாக வரும் காமெடி காளி, பெரிய தாதா சண்முகராஜன், மைம் கோபி உள்ளிட்டோரும் தங்களது பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்.


காதலில் சொதப்புவது எப்படி, வாயை மூடி பேசவும் உள்ளிட்ட காதல் படங்களையே இயக்கி வந்த இளம் இயக்குநர் பாலாஜி மோகன், ஒரு தாதாயிசம் படத்தையும், காதல் ரசம் சொட்ட தர முயன்றிருக்கிறார். அது சில இடங்களில் அவரை காப்பாற்றினாலும், பல காட்சிகளில் அவரை காலை வாரிவிடுகிறது. ரவுடியிசம் கதை என்றாலும் படத்தில் கத்தி, அருவாள், ரத்தம், துப்பாக்கி சத்தம் என ரசிகர்களை பயமுறுத்தும் காட்சிகள் பெரிதாக இல்லாமல் இருப்பதற்காகவே பாலாஜி மோகனுக்கு ஹேட்ஸ் ஆப் சொல்லலாம்.


அனிரூத்தின் பின்னணி இசையும், பாடல்கள் இசையும் ஹாட் பீட் ஹிட். ஓம் பிரகாஷின் ஔிப்பதிவும் பாடல் காட்சிகளிலும் சரி, படக்காட்சிகளிலும் சரி பக்காவாக பளிச்சிட்டிருப்பது மாரி படத்திற்கு பெரும் ப்ளஸ். ஆனாலும் தனுஷ் ரசிகர்களுக்கு கில்லாடி கேப்-மாரியாக தெரியும் மாரி - அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஒரே மாதிரி தாதயிச கதையமைப்புகளால் கொஞ்சமே கொஞ்சம் சொல்ல வைக்கிறது சாரி!


மொத்தத்தில், தனுஷின் மாரி - ஒரே அடியாக சரியும் அல்ல சாரி சொல்வதற்கும் அல்ல!
கல்கி சினி விமர்சனம்


ரவுடியைக் கதாநாயகனாகக் காண்பிப்பது வழக்கம்தான் என்றாலும் அவன் கடைசியில் திருந்துகிற மாதிரியாகவாவது காட்சி வைப்பார்கள். ஆனால் இந்தப் படம் முடியும்போது முன்னைக் காட்டிலும் காத்திரமான ரவுடியாகக் கதாநாயகன் உருவெடுப்பதாய்க் காட்டியிருக்கிறார்கள். ஏற்கெனவே வெளியான தனுஷ் படத்தைப் பார்க்கும் ஒரு ஃபீல் படம் முழுக்கத் தொடர்கிறது.

வடகிழக்கு மாநிலங்கள் சிலவற்றில் "ப்ரொபெக்ஷன் மனி என்ற பெயரில் சமூகவிரோதிகள் மாமூல் வசூலிப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறோம். தமிழகத்தில் இதுவரை பரவாத அதுபோன்ற தீய வழக்கங்களை இந்தப் பட ரவுடி ஆரம்பித்துவைத்திருப்பது வேதனைக்குரியது.

கதாநாயகி காஜல் அகர்வால், தனுஷை மாட்டிவிடுவதற்காக நடிக்கிறார் என்பதை இடைவேளைக்கான பெரிய சஸ்பென்ஸ் என்று நினைத்து வைத்திருக்கிறார்கள். ஆனால் அதைப் பல வேளைகளுக்கு முன்னரே அனுமானித்துவிட முடிகிறது.

போலீஸ்காரரையே வில்லனாக்கி இருக்கிறார்கள். அவ்வளவு புத்திசாலியான போலீஸ்கார வில்லன், லோக்கல் ரவுடியை அடக்கப் பழங்காலக் கொலைக்கேஸைத் தருவுவது புறா தலையில் - சாரி - கொக்கு தலையில் வெண்ணை வைப்பதை நினைவூட்டுகிறது. நேரடியாக மார்க்கெட் மாமூலில் இறங்குவதாகக் காண்பித்திருப்பதும் சொதப்பல்.

ஒவ்வொரு காட்சியிலும் சிகரட்டை ஊதித் தள்ளியபடியோ, குடித்துக் கொண்டே, ஆடிக் கொண்டோ சண்டை போட்டுக் கொண்டோ இருக்கும் கதாநாயகன், எப்போது நடிப்பார் என்று எதிர்பார்ப்பவர்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது.

பல படங்களில் பார்த்துத் தேய்ந்த மார்க்கெட் சண்டைகள், ஒற்றை நாடிக்கும் குறைவான உடல்வாகுடைய ரவுடி பலரையும் ஒற்றையாளாய்ச் சவட்டி எடுப்பது, நல்ல குடும்பத்துக் கதாநாயகிக்கும் ரவுடியின்மேல் காதல் வருவது போன்ற காட்சி அமைப்புகள் சோர்வையே தருகின்றன.

ரவுடியின் அல்லக்கை வேடம் என்றிருக்கும் ரோபோ ஷங்கரின் டைமிங் காமெடி, காஜல் அகர்வாலின் அழகு இரண்டை மட்டுமே சிலாகிக்க முடியும்!

நுணுக்கமான காட்சி அமைப்புகள் நிரம்ப உண்டு. உதாரணமாகப் பிரதான ரவுடியிடம், துணை ரவுடிகள் காதலுக்கு ஐடியாக் கொடுக்கும் காட்சியைச் சொல்லலாம்.

"உன்னை மாதிரி ஒரு அழகான மாப்பிள்ளை என்று ரவுடியிடம் ஆரம்பிக்கும் அல்லக்கை, முழு போதையிலும் தன் தவறை உணர்ந்து, அழகான என்ற வார்த்தையை நீக்கவிட்டு, உன்னை மாதிரி மாப்பிள்ளை என்று திருத்திச் சொல்வது புன்முறுவலை வரவழைக்கிறது.

ரவுடித்தனத்தை மேன்மைப்படுத்தும் இவை போன்ற படங்கள், இளைய சமுதாயத்தின் மனத்தில் நேர்மறை எண்ணங்களைச் சிதைத்து, சமூக அமைப்பின்மீது ஓர் அவநம்பிக்கையை ஏற்படுத்தும் அபாயகரமான சாத்தியங்கள் நிரம்ப உண்டு.


மொத்தத்தில் மாரி... வெரி சாரி!


குமுதம் சினி விமர்சனம்
சுத்தமான கெட்டவனின் கதை!


காதலில் சொதப்பாத பாலாஜிமோகனின் ஆக்ஷன் படம். ஆடுகளம், புதுப்பேட்டை மாறியான களம் என்றால் தனுஷூக்கு சொல்லவா வேண்டும்? எக்ஸ்ட்ரா கெத்து! உதவிக்கு அனிருத்தின் குத்து!, அசால்ட்டாக பட்டாசை கொளுத்திப் போட்டுக் கொண்டே எதிரிகளை கல்லா கட்டுவதும், காதலி ஏமாற்றிவிட்டாள் என்பது தெரிந்ததும் பெண்களே இப்படித்தாண்டா என்று புலம்புவதுமாக செஞ்சுருக்கார் தனுஷ்! (படம் பூராவும் சிகரெட் குடிப்பது அக்கிரமம்)

காஜல் அகர்வால் க்யூட். ஆனால் எச்சரிக்கை - முத்த முகம் கொஞ்சம் முத்திக் கொண்டு வருகிறது.

போலீஸ் வேடத்துக்கு விஜய் யேசுதாஸ் பொருத்தம்.

இசை ஹனிருத்!

பெண்களைக் கலாய்த்து வரும் ஒவ்வொரு வசனத்துக்கும் கைதட்டல் மழை பொழிகிறது. பொம்பளைங்களும் தட்டறாங்க பாஸு!

ரோபோ சங்கர் களை கட்டுகிறார், இடி சாரி அடிதாங்கியும் ஓகே.

கலாட்டாவில் செலுத்திய கவனத்தை கதையிலும் செலுத்தியிருக்கலாம்


மாரி - சுள்ளான்களுக்காக
குமுதம் ரேட்டிங் - ஓகே
வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

மாரி தொடர்புடைய செய்திகள் ↓
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in