தினமலர் விமர்சனம் » வாயை மூடி பேசவும்
தினமலர் விமர்சனம்
காதலில் சொதப்புவது எப்படி முதல் படம் தந்த வெற்றி களிப்பில், கொஞ்சம் மப்பில் இரண்டாவதாக வாயை மூடி பேசவும் படத்தை எழுதி-இயக்கி இருப்பார் போலும் இயக்குநர் பாலாஜி மோகன்.
பனிமலை எனும் மலை பிரதேச ஊரில் மக்கள் வாய்திறந்தது பேசினால்பிரச்னையாகி வியாதி வருகிறது. அதுவும் எப்படி? மனிதர்களை ஊமையாக்கும் வியாதி வெகுவேகமாக பரவுகிறது. அதை தடுக்க அரசே யாரும் பேசக்கூடாது..? என தடை உத்தரவு பிறப்பிக்கிறது. தடையை மீறி பேசுபவர்கள் இறந்து போகிறார்கள். அதே ஊரில் வாழும் நாயகர் துல்கர் சல்மானும், நாயகி நஸ்ரியா நசீமும் எப்படி பேசாமல் காதல் வளர்த்தார்கள், காதலை குடும்பத்திற்கு எப்படி புரிய வைத்தார்கள் எனும் கதையுடன், ஆதரவற்ற ஆசிரம சிறுவர்களுக்கு உதவி, ஸ்டார் நடிகரின் படத்தில் குடிகாரர்கள் பற்றிய கருத்தால் அவரது ரசிகர்களுக்கும், குடிகார சங்கத்தினருக்கும் இடையேயான மோதல், சுகாதாரத்துறை அமைச்சர் பாண்டியராஜன், வாயை திறந்தாலே வம்பாகிப்போகும் காமெடி, இயக்குநர் பாலாஜி மோகனின் பிரைம் டி.வி.யின் செய்தி வாசிப்பு., நாயகர், நாயகியின் ஜவ்வுமிட்டாய் பிரியம் உள்ளிட்ட இன்னும் சில சுவாரஸ்யங்களை (மேலும் சுவாரஸ்யம் என கருதியவைகளையும்) சேர்த்து வாயை மூடி பேசவும் என வித்தியாசமாக முயற்சித்திருக்கிறார் இயக்குநர். அதில் பெரும்பாதி படம் ஊமை படமாக தெரிவதால் வாய் பேச முடியாதவர்களுக்கு கூட இப்படம் பிடிக்குமா? புரியுமா.? என்பது புரியாத புதிர்!
அது புரிந்தோ, புரியாமலோ துல்கர் சல்மான், நஸ்ரியா நசீம், பாண்டியராஜன், மதுபாலா, மோகமுள் அபிஷேக், ரோபோ ஷங்கர் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் பளீச் நடிப்பால் பலே சொல்ல வைத்திருக்கின்றனர். அதிலும், “வாழைப்பழத்தை உரித்து கொடுக்கதான் முடியும், வாயில் வைத்து ஊட்டவா முடியும்?” என சாதாரணமாக அமைச்சர் பாண்டியராஜன் கேட்பது, “வாயில் வைக்கட்டுமா...?” என அமைச்சர் கேட்பதாக பிரைம் டிவியில் திரித்து கூறப்படுவதும், நடிகருக்கு எதிரான போராட்டத்தில் குடிகார சங்கதலைவர் ரோபோ சங்கர், போராட்டத்தின் இடையிடையே “கை நடுங்க ஆரம்பிச்சுடுச்சு ஒரு குவார்ட்டர் போட்டு வந்து பார்த்துக்கலாம்...” என்பது உள்ளிட்ட சுவாரஸ்யங்கள், ஒரு கட்டம் வரை ஓ.கே., ஒரு கட்டத்திற்கு மேல் அதுவே ஓவர் டோஸாகிவிடுகிறது. இது இப்படத்திற்கு பலமா, பலவீனமா...? இயக்குநருக்கே வெளிச்சம்!
ஓப்பனிங்கில் வாய் பேச முடியாத வியாதியால் பாதிக்கப்பட்டு இருப்பதாக ரேடியோ ஜாக்கி பாலாஜியின் குரல்வளையை ஊமை நோய் பரவியதாக சொல்லி நெறித்துவிட்டு, கிட்டத்தட்ட அவரது தொண தொணப்பு வேலையை, பாலாஜியின் பாணியிலேயே பிரைம் டிவியில் இயக்குநர் பாலாஜி மோகனே செய்திவாசிப்பாளராக அடிக்கடி தோன்றி வாசிப்பது, செம காமெடி அல்ல, கடியாக தெரிகிறது.
சான் ரோல்டனி(இவர் மறைந்த பிரபல எழுத்தாளர் சாண்டில்யனின் பேரனாம்...)ன் இசை, சௌந்தராஜனின் ஒளிப்பதிவு உள்ளிட்ட பிளஸ் பாயிண்ட்டுகள் இருந்தும், பாலாஜி மோகனின் இயக்கத்தில், பாதி படத்திற்கு மேல் ஊமை படமாக இருப்பது வாய்மூடி பேசவும் படத்தின் பலம் அல்ல, பலவீனம். எனவே வாயை மூடி பேசவும் படத்தை பாலாஜி மோகன், அவர் பாணியில் குறும்படமாக எடுத்திருந்தார் என்றால் ஜெயித்திருக்கலாம், இவ்வாறு பெரும்படமாக எடுத்திருப்பது எவ்விதத்தில் நியாயம்.?!
“வாய்மூடி பேசவும் - கண்மூடி பார்க்கவும் முடியாது, காதுகளை மூடாமலும் கேட்கவும் முடியாது எனும் நிலையில், அதுப்பற்றி வாய்மூடி இருப்பதே மேல் எனும் எண்ணத்தை எற்படுத்தி விடுகிறது.”
--------------------------------------------------------------------
கல்கி திரை விமர்சனம்
பனிமலை என்ற சிறு கிராமத்தில் ஏற்படும் ஊமைக்காய்ச்சல் என்ற கற்பனைத் தொற்றுநோயின் உண்மையான அர்த்தத்தை காமெடியாகச் சொல்லும் படம்தான், "வாயை மூடி பேசவும்.
நாயகன் மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான். அவருக்கு ஊமைக்காய்ச்சல் ஏற்பட்டு பேச்சிழக்கும் அபாயம். டாக்டரான நஸ்ரியாவைச் சந்தித்து டிரீட்மென்ட் எடுத்துக் கொள்ளும்போது நஸ்ரியாவின் அமைதியான சோகத்துக்குப் பின்னணி என்ன என்பதைக் கண்டுபிடிக்கிறார். நஸ்ரியாவின் தந்தை, மனைவியை ஓரம் கட்டிவிட்டு, மதுபாலாவோடு குடும்பம் நடத்துகிறார். அதை ஜீரணிக்க முடியாமல் அதே வீட்டுக்கள் மனம் வெதும்புகிறார் நஸ்ரியா. கூடவே நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையின் டார்ச்சர் வேறு. அதனால் நஸ்ரியா வாழ்வில் வெறுமை, அமைதி. துல்கர் சல்மான் நட்பு ஏற்பட்ட பின்பு, நஸ்ரியாவை அவர் எப்படி கலகலப்பானவராக ஆக்குகிறார் என்பது சுவாரசியமான பகுதி. வேறொருவருக்கு நிச்சயிக்கப்பட்ட நஸ்ரியா, படிப்படியாக துல்கர் சல்மான் மீது காதல் கொள்ளும் காட்சிகள் அருமை.
பனிமலையில் ஏற்பட்ட ஊமைக்காய்ச்சலின் காரணத்தைக் கண்டுபிடிக்க அங்கு வரும் அமைச்சர் பாண்டியராஜன், நிருபர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் விழிக்கிறார். ஒரு கட்டத்தில் அவரே பேச்சிழந்து விட்டதாக நம்ப வைத்து நாடகமாடுகிறார். பின்னர் ஊமைக்காய்ச்சலுக்கு மருந்து கண்டுபிடித்து, இப்போது எல்லோரும் பேசலாம் என்று அரசு அறிவிக்கிறது. அப்போது நிஜமாகவே பாண்டியராஜனால் பேச முடியாமல் போவது ரசிக்கவைக்கிற காமெடி.
"ரோஜா நாயகி மதுபாலாவுக்கு ரீ-என்ட்ரி. நஸ்ரியாவுக்குச் சித்தியாக வந்து, நஸ்ரியா தம்மோடு பேச மாட்டாளா என்று ஏங்கும் காட்சிகள் நெகிழ்ச்சி. காமெடிக்கு குடிகாரர்கள் சங்கம் வைத்துள்ள ரோபோ சங்கரும், குடிகாரர்களைத் தவறாகச் சித்தரிக்கும் ஜானும் மோதிக்கொள்ளும் இடங்கள் கலகலப்பானவை.
"என் மூலதனமே என் பேச்சுதான் என்று துல்கர் சொல்லும் பாணியும் துருதுரு நடிப்பும் ரசிக்க வைக்கிறது. மம்மூட்டியின் மகனுக்கு நடிக்கச் சொல்லித்தரவா வேண்டும்? இளமைத் துள்ளலான நஸ்ரியா இப்படத்தில் அமைதியான டாக்டர்.
பனிமலை என்று காட்டப்படும் சின்னச்சிறு கிராமம் அவ்வளவு அழகாகப் படமாக்கப்பட்டுள்ளது. ஒளிப்பதிவுக்கு சபாஷ்! பாலாஜி மோகன் ஒரு சேனலில் செய்தி வாசிப்பவராக வந்து பனிமலை பற்றிய செய்திகளை கிண்டலடித்துக் கொண்டே சொல்வதும் ரசிக்க வைக்கிறது.
வழக்கமான குத்துப்பாட்டு, இரட்டை அர்த்த வசனம், நாயகனின் ஓவர் பில்ட்-அப் என எதுவும் இல்லாமல் ஒரு புதுமையான படத்தைத் தந்துள்ளார் இயக்குநர். பின்பாதியில் அரைமணி நேரம் படத்தில் பேச்சே இல்லை. எல்லாம் சைகைகள்தான், ரசிகர்கள் இந்தப் புதுமையை வரவேற்பார்களா?
வாயை மூடிப் பேசவும் - புதுமை பாதி, காமெடி மீதி!