"மோகமுள்" ஜானகிராமனின் வாரிசு ஜா.நட்டிகுமார் இயக்கத்தில், அகில் - நயனா அறிமுக ஜோடியுடன், சோனியா அகர்வால், வின்சென்ட் அசோகன், டெல்லி கணேஷ், அனுமோகன், சந்தோஷ், முருகாற்றுப்படை சரண், சாக்ஷி, சிவா உள்ளிட்ட நட்சத்திரப்பட்டாளம் நடிக்க, தங்கமுத்து, பி.கே.சுந்தர், கருணா, நட்ராஜ் - நால்வர் கூட்டணியின் "டிரீம்ஸ் ஆன் பிரேம்ஸ்" தயாரிப்பில் வந்திருக்கும் சஸ்பென்ஸ், க்ரைம், த்ரில்லர்... படம் தான் "எவனவன்."
சின்ன தவறு தானே செய்கிறோம். அதனால் என்ன தவறு? எனும் எண்ணத்துடன் காதலி குளிப்பதை, தான் அடிக்கடி ஆசையுடன் பார்த்து ரசிப்பதற்காக, தனது செல்போனில் படமெடுத்து, படமெடுத்த அந்த செல்லை தவறவிடும் காதலன், சந்திக்கும் பிரச்சினைகளும் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த சவால்களும் தான் "எவனவன்" படத்தின் கருவும், கதையும். இந்தக் கருவையும், கதையையும், சஸ்பென்ஸ், க்ரைம் எல்லாம் கலந்து, இறுதியில் நாயகனும், நாயகியும் இணைந்தனரா? இல்லையா..? எனும் எதிர்பார்ப்பை கிளப்பி விட்டு, எதிர்பாராத த்ரிலிங் படமாக களப்படுத்தி, காட்சிப்படுத்த முயன்றிருக்கின்றனர்.
நாயகன் அகில் - முகிலாகவும், நாயகி நயனா - சுதாவாகவும் அறிமுகம் என்பது தெரியாத அளவிற்கு நல் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.
போலீஸ் அதிகாரி இக்பாலாக வரும் நடிகர் வின்சென்ட் அசோகன், இந்தப்படத்திற்காக நிறைய உடற்பயிற்சிகள் மேற்கொண்டு இருப்பார் போலும். அது இந்தப்படத்தை பார்க்கும் போதே பளிச்சென தெரிவது இப்படத்திற்கு பெரிய ப்ளஸ்.
அதே மாதிரி, "சாயா" படத்தைத் தொடர்ந்து, இதிலும், பெண் போலீஸ் வேடத்தில் ரோஸ் எனும் கேரக்டரில் வந்து, எதிர்பாராத நேரத்தில் வில்லியாகவும் மாறும்
சோனியா அகர்வால், சிறப்பாக நடித்திருக்கிறார்.
கிட்டத்தட்ட வில்லானிக் ஹீரோவாக வரும் முருகாற்றுப்படை சரண், தன், வித்தியாச நடிப்பில் படத்திற்கு விறுவிறுப்பு கூட்டியிருக்கிறார்.
டெல்லி கணேஷ், அனுமோகன், சந்தோஷ், சாக்ஷி, சிவா உள்ளிட்ட நட்சத்திரப்பட்டாளம் அடங்கிய மற்ற கதாபாத்திரங்களும், காட்சிக்கு ஏற்ப ஆங்காங்கே கச்சிதமாக வந்து செல்கிறது.
ராமாராவின் படத்தொகுப்பு கோர்வையாக காட்சிகளை இணைக்காதது பெரும் பலவீனம்.
அருண் பிரசாத்தின் ஒளிப்பதிவு, அவ்வளவு பிரமாதம் இல்லை. சுமார் தான்.
இசையாளர் பெடோ பீட்டின் "இது என்ன மாயமோ....", "தலை முதல் கால் வரை..." உள்ளிட்ட பாடல்களும், பின்னணி இசையும் இப்படத்திற்கு சற்று பலத்தை
கூட்டியிருக்கிறது... என்பது ஆறுதல்.
ஜா.நட்டி குமாரின் எழுத்து, இயக்கத்தில், "போன் வந்தா எடுத்து, ஹலோ சொல்ல இந்த திரி சாதாரண போன் போதும்.... காஸ்ட் லீ போன் இருந்தால் அந்த மாதிரி விடியோ எடுக்கத் தோணும்...", "தப்பு பண்ணி மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன், தப்பே பண்ணாது மன்னிப்பு கேட்கிறவன் புருஷன்...." என்பது உள்ளிட்ட வசீகர வசனங்கள் படத்திற்கு பலம் கூட்டியிருக்கிறது.
மேலும், நவீன செல்போன்களையும், அதில் இடம் பெற்றுள்ள எண்ணற்ற வசதிகளையும் விபரீதம் தெரியாது விளையாட்டாக பயன்படுத்தும் இன்றைய இளைஞர்களுக்கு பாடம் புகட்டும் விதமாக இப்படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஜா.நட்டி குமார். ஆனால், அதில் ஆங்காங்கே தெரியும் குறைகளும்., "காதலியின் தாயினுடைய பர்த் - டேவை இரவு 12 மணிக்கு திருடன் மாதிரி அவர்களது வீடு புகுந்து கொண்டாடும் காதலன்..." உள்ளிட்ட கொட்டிக் கிடக்கும் குப்பைக் காட்சிகளும் கொஞ்சமே கொஞ்சம் போரடிக்கும் பாடமாகவும், படமாகவும் ரசிகர்களை சற்றே, சோதிக்கிறது பாவம்!
மற்றபடி "எவனவன் - ரசிகன் விரும்பும் நல்லவன் ஆவான்!"