விமர்சனம்
உதயா முந்தைய படங்களை காட்டிலும் நன்றாகவே நடித்திருக்கிறார். மான்யாவும் ஏற்கனவே பார்த்த, பழகிய முகம்தான் என்பதால் நடிப்பில் பிடிப்பும், துடிப்பும் இருக்கிறது. உதயாவிற்கு உதவி செய்யும் தோழியாகவும் காதலியாகவும் சார்மிளா நீண்ட இடைவெளிக்குப்பின் கவர்ச்சியிலும், நடிப்பிலும் ஸ்கோர் செய்கிறார்.
வையாபுரி, பாலாஜி, சாப்ளின்பாலு, ராம்ஜி உள்ளிட்ட நண்பர்கள் வழக்கம் போலவே காமெடி எனும் போர்வையில் கடிக்கின்றனர். கலைராணி, டெல்லி கணேஷ், விணுசக்கரவர்த்தி உள்ளிட்டோர் பாத்திரத்திற்கேற்ற 'பளிச்' தேர்வு !
பெற்றோருக்கு கூட சொல்லாமல் போலீஸ் அதிகாரி விணுசக்கரவர்த்தி வலுகட்டாயமாக உதயா நண்பர் ராம்ஜிக்கும், மான்யாவுக்கும் திருமணம் செய்து வைப்பதும், கல்யாணம் ஆன பின் கணவனையே தன் காதலர் உதயாவுடன் சேர்த்து வைக்க சொல்லி மான்யா வற்புறுத்துவதும், கிளைமாக்ஸில் தற்கொலை செய்து கொள்ள விஷம் குடிக்கும் மான்யாவை இங்குள்ள டாக்டர்கள் அமெரிக்கா தூக்கி போக சொல்வதும், உதயா காதலிக்காக விமானங்களை எதிர்பார்த்து தினமும் விமான நிலையத்தில் காத்திருப்பதும் அக்மார்க் சினிமாத்தனங்கள். இவற்றை தவிர்த்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
நீண்ட நாட்களுக்கு பின் சிற்பியின் இசையும், பி.எஸ்.தரணின் ஒளிப்பதிவும், ரித்திஸ் ராமய்யாவின் இயக்கத்திற்கு பலம் சேர்த்திருக்கின்றன. செந்தில் மாத்தூரின் கதை, திரைக்கதை, வசனத்தில் இருக்கும் புதுமை கதையிலும், திரைக்கதையிலும் இருந்திருந்தால் 'உன்னை கண் தேடுதே' இன்னும் பலரின் கண்களை தேட வைத்திடும் படமாக அமைந்திருக்கம்!
'உன்னை கண் தேடுதே' படம் முழுக்க 'காதல் சோகமே வாட்டுதே!'
--














வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!