2

விமர்சனம்

Advertisement

நடிப்பு - கமல்ஹாசன், ஆன்ட்ரியா, பூஜா குமார், சேகர் கபூர் மற்றும் பலர்
இயக்கம் - கமல்ஹாசன்
இசை - முகம்மது ஜிப்ரான்
தயாரிப்பு - ஆஸ்கர் பிலிம்ஸ்

தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களில் பல இரண்டாம் பாகத் திரைப்படங்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால், இப்படி ஒரு இரண்டாம் பாகத் திரைப்படத்தைப் பார்த்திருப்போமா என்பது சந்தேகம்தான்.

இரண்டாம் பாகம் படம் என்றாலே முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இருக்கும் இல்லாமலும் இருக்கும். ஆனால், நிச்சயம் ஒரு புதுக் கதையாகவாவது இருக்கும். இந்த இரண்டாம் பாகப் புதுக் கதையில் படத்தின் இயக்குனர் கமல்ஹாசன் புதுக் கதையைத்தான் எழுதவில்லை, குறைந்த பட்சம் புதிய காட்சிகள் சிலவற்றையாவது எடுத்திருப்பாரா என்பது சந்தேகம்தான்.

முதல் பாகத்தில் எடுத்து மீதமாகிப் போய், படத்தில் சேர்க்க முடியாமல் விடுபட்டுப் போன அல்லது நீக்கப்பட்ட காட்சிகளை வைத்து, ஒரு குலுக்குக் குலுக்கி இந்த விஸ்வரூபம் 2 படத்தை வெளியிட்டிருப்பது போலத் தோன்றுகிறது.

சினிமா மீது அதி தீவிரக் காதல் கொண்டுள்ள கமல்ஹாசன் இப்படி செய்திருக்க வாய்ப்பில்லை என்றாலும் சந்தேகப்படாமல் இருக்க முடியவில்லை. அதற்கு கமல்ஹாசன் மனசாட்சிதான் பதில் சொல்ல வேண்டும்.

முதல் பாகத்தில் தப்பித்துப் போன தீவிரவாதிகளான உமர், சலீம் ஆகியோரை இந்திய உளவுப் பிரிவான ரா அதிகாரி கமல்ஹாசன் கண்டுபிடித்து அவர்களைக் கொன்றாரா இல்லையா என்பதுதான் இந்தப் படத்தின் கதை.

கமல்ஹாசன் அவரது மனைவி பூஜா குமார், உடன் பணிபுரியும் ஆன்ட்ரியா, மேலகதிகாரி ஆகியோர் லண்டன் செல்கிறார்கள். அங்கு தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு ஆளாகிறார்கள். தீவிரவாதிகளுக்குத் துணையாக இருக்கும் அரசு அதிகாரியைப் பிடிக்கிறார்கள். இடையில் தீவிரவாதக் குழுவில் இருக்கும் கமல்ஹாசன் உளவுப் பணி செய்த காட்சிகள் வருகிறது. கமல்ஹாசனை மய்யமாக வைத்து பூஜாவை நன்றாக வெறுப்பேற்றுகிறார் ஆன்ட்ரியா. மூழ்கிப் போன ஒரு கப்பலிலிருந்து 1500 டன் வெடி பொருட்களை பூஜா குமார் உதவியால் கண்டுபிடிக்கிறார்கள். பின்னர் டில்லி வருகிறார்கள். ஆன்ட்ரியா, பூஜா கடத்தப்படுகிறார்கள். இப்படி எங்கெங்கோ செல்கிறது திரைக்கதை. கடைசியில் தீவிரவாதத்திற்கு எதிராக சில வசனங்களை கமல்ஹாசன் பேசுவதுடன் படம் இனிதே நிறைவடைகிறது. இன்னும் பயன்படுத்தாத சில காட்சிகள் இருக்கிறது என விஸ்வரூபம் மூன்றாம் பாகத்திற்குப் பிளான் செய்து விடாதீர்கள்.

கமல்ஹாசன் வழக்கம் போல நடிக்க வேண்டிய காட்சிகளில் நடித்துத் தள்ளியிருக்கிறார். ஆவேசமாகச் சண்டையிடுகிறார். சாதி மறுப்பு பேசுகிறார், அரசாங்கத்தைத் திட்டி நாலு வசனம் பேசுகிறார். ஆனால், முகத்தில் அடிபட்டு இரண்டு பிளாஸ்டர்கள் போடப்பட்டுள்ள நிலையில் எப்படி சுத்தமாக ஷேவ் செய்திருப்பார் என்ற சந்தேகம் வருகிறது. அந்த பிளாஸ்டர் பல நாட்கள் மாற்றப்படாமல் அப்படியே வேறு இருக்கிறது.

ஆன்ட்ரியா சில காட்சிகளில் நடிப்பில் கமல்ஹாசனையும் ஓவர்டேக் செய்கிறார். கூடவே ஒரு பெண் இருந்து அவரை வெறுப்பேற்ற வேண்டும் என்று சொன்னால் எந்தப் பெண்ணும் ஈஸியாகச் செய்து விடுவார்கள். அதிலும் சினிமா என்றால் சொல்லவா வேண்டும், ஆன்ட்ரியா நடிப்பிலும், சண்டையிலும் அசத்துகிறார். ஆக்ஷ்ன் ஹீரோயின் தேடுபவர்கள் இனி ஆன்ட்ரியாவைத் தாராளமாக ஒப்பந்தம் செய்யலாம்.

பூஜா குமார், பார்ப்பதற்கு ஐயோ பாவமாக இருக்கிறார். கமல்ஹாசன், ஆன்ட்ரியாக இருவருக்கும் இடையில் இருப்பது பணி நிமித்தமான உறவா அல்லது வேறு ஏதாவதா என்று குழம்பிப் போகிறார்.

வில்லனாக ராகுல் போஸ், அதே கரகர பின்னணிக் குரலில் அந்தப் பெரிய கண்களால் தீவிரவாதத்தின் தீவிரத்தைக் காட்டுகிறார். கமல்ஹாசனின் உயர் அதிகாரியாக சேகர் கபூர். கமல்ஹாசன், அம்மாவாக வகிதா ரகுமான், அவரை வயதான பாட்டியாகப் பார்க்கவும் ஒரு தைரியம் வேண்டும். கமல்ஹாசனைப் பிடிக்காத அரசு அதிகாரியாக அனந்த் மகாதேவன், அந்த வெறுப்பை இயல்பாக வெளிப்படுத்துகிறார்.

முகம்மது ஜிப்ரானின் பின்னணி இசை ஓகே. முதல் பாகத்தில் ஹிட்டான உன்னைக் காணாத... பாடல் போன்று ஒரு பாடலை வைத்திருக்கலாம்.

ஆக்ஷன் காட்சிகள், ஒளிப்பதிவு ஆகியவற்றின் பின்னணியில் உள்ளவர்கள் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். ஆனால், தடுமாற்றமான திரைக்கதையில் அவர்கள் உழைப்பும் வீண்.

இந்த இரண்டரை மணி நேரப் படம் கமல்ஹாசனுக்கு எந்த விதத்தில் கை கொடுக்குமோ தெரியாது. ஆனால், படம் ஆரம்பிப்பதற்கு முன் ஒரு 5 நிமிடம் அவருடைய மக்கள் நீதி மய்யம் பற்றி ஒரு டாகுமெண்டரியை சாமர்த்தியமாக சேர்த்துவிட்டார். அந்த டாகுமெண்டரியும் மக்களுக்குப் பயன்படுகிறதோ இல்லையோ கமல்ஹாசனுக்குப் பயன்படும்.

விஸ்வரூபம் 2 - விழலுக்கு இறைத்த நீர்!

 

பட குழுவினர்

விஸ்வரூபம் II

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

கமல்ஹாசன்

உலக நாயகன் என்று ரசிகர்களால் போற்றப்படும் நடிகர் கமல்ஹாசன் 1954ம் ஆண்டு நவம்பர் 7ம்தேதி பரமக்குடியில் பிறந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம், இந்தி என பல மொழி படங்களில் நடித்திருக்கும் கமல்ஹாசன் 1960ம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக களத்தூர் கண்ணம்மா படத்தில் அறிமுகமானார். 1962ல் மலையாள திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். 1977ல் தெலுங்கு, வங்காளம், கன்னட திரைப்படங்களில் நடித்தார். 1981ம் ஆண்டு இந்தி திரைப்படத்தில் நடிக்கத் தொடங்கினார்.

மிகச்சிறந்த நடிகராக விளங்கும் கமல்ஹாசன் பின்னணி பாடகர் அவதாரமும் எடுத்திருக்கிறார். ஹேராம், விருமாண்டி உள்ளிட்ட படங்களை இயக்கி டைரக்டர் அவதாரமும் எடுத்திருக்கிறார். ராஜ்கமல் பிலிம்ஸ் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் கமல், தனது நிறுவனம் சார்பில் ராஜ பார்வை, விக்ரம், அபூர்வ சகோதரர்கள், சத்யா, மைக்கேல் மதன காமராஜன், குணா, தேவர் மகன், உன்னைப் போல் ஒருவன் உள்ளிட்ட பல்வேறு படங்களை தயாரித்துள்ளார்.

களத்தூர் கண்ணம்மா, மூன்றாம்பிறை, நாயகன், இந்தியன் ஆகிய படங்களுக்காக இந்திய அரசின் தேசிய விருதுகளையும், 18 பிலிம்பேர் விருதுகள், பத்மஸ்ரீ விருது, சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகம் வழங்கிய கவுரவ டாக்டர் பட்டம் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.

மேலும் விமர்சனம் ↓