கமல், கதை, திரைக்கதை எழுதிட அவரது நண்பரும், நடிகருமான ரமேஷ் அரவிந்த இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் உத்தம வில்லன். முன்னணி நட்சத்திரங்களின் சோகமும், சென்ட்டிமென்ட்டும் நிரம்பிய மற்றொரு பக்கத்ததை வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் சொல்ல முற்பட்டிருக்கும் உத்தம வில்லன், கமலின் சினிமா கேரியரில் அவருக்கு உத்தமனா.? வில்லனா...? இனி பார்ப்போம்...
கதைப்படி, தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர் மனோரஞ்சன் - கமல்ஹாசன், இருபது சொச்சம் வயதில் நடிக்க வந்தவர். எதிர்காலத்தில் முன்னணி ஹீரோவாக திகழ எதை விடுவது...? எதை வைத்து கொள்வது...? என தெரியாத புரியாத குழப்பத்தில், தன்னை வளர்த்து ஆளாக்கிய இயக்குநரையும், தன்னை உயிருக்கு உயிராக நேசிக்கும் காதலியையும் கழற்றிவிட்டு புகழுக்காகவும், திரையுலகில் நிலைத்து நிற்க வேண்டியும் மற்றொரு பெரும் இயக்குநரிடம் அடைக்கலமாகி, அவர் இயக்கத்தில் தொடர்ந்து நடித்து, அவரது மகளையும் மணம் முடித்து குடும்பம் நடத்துகிறார், திரையுலகிலும் கோலோச்சுகிறார்!
தன் வினை தன்னை சுடும் என்பதற்கு ஏற்ப கமல், வளர்ந்து ஆளாகி நிற்கும் போது, அவரது காதலிக்கு கமல் வாயிலாக உண்டான பெண் வாரிசும், அவரது தற்போதைய தந்தையும் வந்து நிற்கின்றனர். கூடவே கமலுக்கு நான்காவது ஸ்டேஜ் பிரைன் டியூமர் வியாதியும், அதாகப்பட்டது முற்றிய நிலையில் உள்ள மூளையில் கட்டியும் இருப்பது தெரிய வருகிறது. இனி வாழ்க்கை கொஞ்சம் காலம் தான்... எனும் நிலையில் தான் செய்த தவறுகளுக்கு பிராயசித்தம் செய்ய வேண்டி களமிறங்கும் மனோரஞ்சன் - கமல், தன்னை வளர்த்து ஆளாக்கிய இயக்குநரின் இயக்கத்தில், மீண்டும் ஒரு படம் நடிக்க முடிவு செய்கிறார். அதனூடே தன் காதலியின் மகளை தன் குடும்பத்துடன் சேர்க்க துடிக்கிறார். மனோரஞ்சன் - கமலின் ஆசைகள் இரண்டும் நிறைவேறியதா...? இல்லை அதன் முன்பே தனது இறுதி மூச்சை விட்டாரா...?, குடும்பமும், மகனும், காதலியின் மகளும், கமலை புரிந்து கொண்டார்களா...? என்பதை வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் சொல்ல முயன்றிருக்கிறது மீதிக்கதை!
கமல்ஹாசன், மனோரஞ்சனாகவும், சாகாவரம் பெற்ற மிருத்யஞ்சன் படத்தில் வரும் உத்தமனாகவும் வழக்கம் போலவே நடிக்கவில்லை, வாழ்ந்திருக்கிறார்... என்று தான் சொல்ல வேண்டும். இப்படத்தில் கமல் நடிப்பதாக வரும் வீரவிளையாட்டு படத்திற்காக இடம்பெற்றுள்ள சிங்கிள் கிஸ்க்கே லவ்வா எனும் பாடலில், நாயகி பூஜா குமாருடன் நெருக்கமும், கிறக்கமும் காட்டி பைக் சாகசம் எல்லாம் செய்து ஆடுவதில் தொடங்கி, மிருத்யஞ்சன் கதையில் நாசரிடம் அடிமைப்பட்டு கிடக்கும் பூஜா குமாரை காப்பாற்ற உத்தமனாக போராடுவது, டூயட் பாடுவது, புலி மீது பவனி வருவது வரை சகலத்திலும் சக்கை போடு போட்டிருக்கிறார் கமல்.
மனைவி ஊர்வசி, மாமனார் கே.விஸ்வநாத் உடனான குடும்ப சென்ட்டிமென்ட் காட்சிகளிலும் பருவ வயது எட்டிய மகனுக்கு தன் நிலையை பக்குவமாக எடுத்துரைப்பது..., தன்னை புரிந்து கொள்ளாது பேசும் காதலியின் மகள் பார்வதிக்கு தன் நிலையை விளங்க வைப்பது வரை ஒவ்வொரு இடத்திலும் ஒய்யாரம் காட்டியிருக்கும் மனோரஞ்சன் - கமல், உத்தமன் கமலாக, இவளரசி கற்பகவள்ளி - பூஜா குமாரை காப்பாற்ற போராடும் இடங்களில் காட்டும் இலக்கிய ரசம் சொட்டும் பேச்சும், வாள் வீச்சும் சாமானிய ரசிகர்களுக்கு சற்றே சலிப்பை தரலாம்!
ராஜா முத்தரசன் - நாசர், அவரது மந்திரி பிரதாணிகள் கு.ஞானசம்பந்தன், சண்முகராஜன், புலியை பூனையாக வளர்க்கும் வீர இளவரசி கற்பகவள்ளி - பூஜா குமார் உள்ளிட்டவர்களுடனான உத்தமன் - கமல் எபிசோட் கொஞ்சம் ஓவர் டோஸாகி ரசிகர்களை சீட்டில் நௌிய வைப்பதை கமலும், இயக்குநர் ரமேஷ் அரவிந்த்தும் நினைத்திருந்தால் இன்னும் கொஞ்சம் ட்ரிம் செய்திருக்கலாம்!
கமலை வளர்த்து ஆளாக்கிய இயக்குநர் மார்க்கதரசியாக இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் இறப்பதற்கு முன் தத்ரூபமாக நடித்து நம்முடன் இன்னமும் இருக்கும் உணர்வை ஏற்படுத்தியிருப்பது பாராட்டத்தக்கது. இப்பட கதையின்படியும், காட்சியமைப்புகளின்படியும் மூளையில் கட்டி உடைய கமல், இறப்பதற்கு முன் தன்னை ஆளாக்கிய இயக்குநருடன் கருத்து வேறுபாடுகளை மறந்து, துறந்து ஒரு படம் பண்ணிவிட வேண்டும் என்பது போல் உத்தம வில்லன் படத்தின் கதை வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் நிஜத்தில் தன் குருநாதர், சமீபமாக மறைந்த இயக்குநர் கே.பாலசந்தர் இறப்பதற்குள் அவருடன், அவர் இயக்கத்தில் நடிப்பது மாதிரி ஒரு படத்தில் இணைந்து நடித்தாவது விட வேண்டும் என்று கமல் இப்படத்தை அவசர அவசரமாக செய்திருப்பதாகவே எண்ண தோன்றுகிறது. பாலசந்தர், தன் பாத்திரத்தை கமல் எதிர்பார்த்த மாதிரி நன்றாகவே நிறைவு செய்திருக்கிறார்.
கே.பாலசந்தர் மாதிரியே கமலின் மாமனராகவும், மற்றொரு பெரிய இயக்குநர் பூர்ண சந்திரராவ்வாகவும் வரும் கே.விஸ்வநாத்தும் தன் பங்கை சரியாக செய்திருக்கிறார்.
கதாநாயகிகளாக பூஜா குமார், ஆண்ட்ரியா இருவரும் வருகின்றனர். கமலின், திரையில் காட்டப்படாத காதலியின் மகளாக பார்வதி மேனன் வருகிறார். மூவருமே கமலின் மனைவியாக வரும் ஊர்வசிக்கு சமமாக நடித்து நல்முத்திரை பதித்திருக்கின்றனர். அதிலும் பூஜா குமார், படத்தில் கமல் நடிக்கும் படங்களில் எல்லாம் கதாநாயகியாக களை கட்டுகிறார். கமலின் மருத்துவராகவும், இளம் காதலியாகவும் வரும் ஆண்ட்ரியா, கமலின் உதட்டோடு உதடு கொடுக்கும் காட்சிகளில் இளைஞர்களை உசுப்பேற்றுகிறார். ஒருபக்கம் தன் முன்னால் காதலி, அவரது மகள் உள்ளிட்டவர்களுக்கு துரோகம் செய்துவிட்டதாக கருதி மனப்போராட்டத்தில் இருக்கும் கமல், ஆண்ட்ரியாவுடன் அதுமாதிரி உறவிலும் இருப்பது லாஜிக்காக இடிக்கிறது. நல்லவேளை படத்தில் கமல் நடிக்கும் படங்களில் எல்லாம் கதாநாயகியாக வரும் பூஜா குமாரையாவது விட்டு வைத்தாரே மனிதர்.!
கமலின் மாஜி காதலியின் கணவராக வரும் ஜெயராம், நயவஞ்ச ராஜா முத்தரசனாக வரும் நாசர், கமலின் மனைவி வரலெட்சுமியாக வரும் ஊர்வசி, கமலின் காரியதரசி சொக்கலிங்கமாக வரும் எம்.எஸ்.பாஸ்கர், முனைவர் கு.ஞானசம்பந்தன், சண்முகராஜன், சித்ரா லட்சுமணன், வையாபுரி, அஜய் ரத்னம், பார்வதி வேணுகோபால் உள்ளிட்டவர்களும் பாத்திரமறிந்து, கமல் படம் என்பதையும் அறிந்து பக்குவமாக நடித்திருக்கின்றனர்.
கொஞ்சமே கொஞ்சம் இப்படத்தில் வரும் உத்தமன் - சாகா வரம் பெற்ற மிருத்யஞ்சன் பட பகுதிகள் இழுவையாக தெரிந்தாலும், இப்படத்தில் நடிகராகவே வரும் கமல், தனது இறுதி ஆசையாக தன் குருநார் கே.பாலசந்தரிடம் நாம் இருவரும் சேர்ந்து மீண்டும் ஒரு படம் பண்ண வேண்டும், அதுதான் என் கடைசிப்படமாக இருக்க வேண்டும் என்பார், அதன்வெளிப்பாடாகத்தான் இருவரும் சேர்ந்து மிருத்யஞ்சன் படத்தை படமாக்குவார்கள். ஆனால் இக்கதையை விட நடிகர் மனோரஞ்சன் - கமலின் கதையையே இறுதிப்படமாக எடுத்திருந்தார்கள் என்றால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். அப்படி எடுப்பது மாதிரி தான் கமலும்-பாலசந்தரும் முதலில் பேசிக்கொள்வார்கள். மூளையில் கட்டி என்பதை வைத்து நானும் சில படங்கள் எடுத்துவிட்டேன் நீயும் சில படங்கள் நடித்துவிட்டாய் என்று இந்த புராண கதைக்குள் போவார்கள், அதை ரசிகர்களும் புரிந்து கொள்வார்களா என்பது புரியாத புதிர்! இதுமாதிரி சில குறைகளும் இருந்தாலும், சுப்பு ஆறுமுகத்தின் வில்லுப்பாட்டு, ஜிப்ரானின் இசை, ஷாம் தத்தின் ஔிப்பதிவு, விஜய் சங்கரின் படத்தொகுப்பு, கமல்ஹாசனின் கதை, திரைக்கதை, பாடல்கள், ரமேஷ் அரவிந்த்தின் இயக்கம் உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகளுடன் உத்தம வில்லன், கமல் ரசிகர்களுக்கு நிச்சயம் வில்லனாக தெரியப்போவதில்லை. கண்டிப்பாக நாயகன் தான்! உத்தம வில்லன் - உத்தம நாயகன் தானா.? ரசிகர்கள் தான் சொல்ல வேண்டும்!!