3.5

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்
இயக்கம் - லோகேஷ் கனகராஜ்
இசை - அனிருத்
நடிப்பு - கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில்
வெளியான தேதி - 3 ஜுன் 2022
நேரம் - 2 மணி நேரம் 53 நிமிடம்
ரேட்டிங் - 3.5/5

1986ல் வெளிவந்த 'விக்ரம்' படத்தையும், 2019ல் வெளிவந்த 'கைதி' படத்தையும் வைத்து, அந்த இரண்டு படங்களின் தொடர்ச்சியாக 2022ல் 'விக்ரம்' என்ற ஒரு படத்தை இயக்க முடியுமா என வியக்க வைத்திருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். தமிழ் சினிமாவில் இதுவரையிலும் கிளைமாக்சில் தான் ஹீரோவை அல்லது வில்லனை சாகடிப்பார்கள். ஆனால், இந்தப் படத்தில் படத்தின் நாயகன் கமல்ஹாசனை பட ஆரம்பத்திலேயே கொடூரமாகக் கொன்றுவிட்டு அதன் பிறகு படத்தை ஆரம்பிக்கிறார்கள். இந்த உண்மையான வித்தியாசத்தை கமல்ஹாசனால் மட்டுமே கொடுக்க முடியும்.

'மாநகரம், கைதி, மாஸ்டர்' என த்ரில்லர் கலந்த ஆக்ஷன் கதைகளைக் கொடுத்து தனக்கென தனி பாணியை உருவாக்கியவர் லோகேஷ் கனகராஜ் இந்த 'விக்ரம்' படத்தில் தமிழ் சினிமாவில் தனது இடத்தை, தடத்தை மிக மிக அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார். இந்தப் படத்தை கமல்ஹாசன் படம் என்று சொல்வதை விட இயக்குனர் லோகேஷ் கனகராஜின் படம் என்று தாராளமாகச் சொல்லலாம். அதை கமல்ஹாசனும் ஏற்றுக் கொள்வார்.

போலீஸ் அதிகாரிகளான ஹரிஷ் பெரடி, காளிதாஸ் ஜெயராம் ஆகிய இருவரையும், கமல்ஹாசனையும் முகமூடி அணிந்த கும்பல் ஒன்று கொலை செய்கிறது. போலீஸ் அதிகாரிகள் கொலைகளைப் பற்றி விசாரிக்க அன்டர்கவர் வேலை செய்யும் பகத் பாசிலை அழைக்கிறார் போலீஸ் அதிகாரி செம்பன் வினோத் ஜோஸ். அந்தக் கொலைகளுக்குப் பின்னணியில் 2 லட்சம் கோடி மதிப்புள்ள போதைப் பொருளின் மூலப் பொருள் இருக்கிறது என்பதையும், அதன் பின்னணியில் விஜய் சேதுபதி இருக்கிறார் என்பதையும் தொடர்ந்து மேலும் சிலர் கொல்லப்படலாம் என்பதையும் கண்டுபிடிக்கிறார் பகத் பாசில். முகமூடி அணிந்து கொலை செய்பவர்களை அவர் நெருங்கிய போது அவருக்கு அதிர்ச்சி ஒன்று காத்திருக்கிறது. அது என்ன ?, அடுத்து என்ன ?, என்பதுதான் படத்தின் பரபரப்பான மீதிக் கதை.

தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களில் இப்படி ஒரு திரைக்கதையைப் பார்த்திருப்போமா என்பது சந்தேகம்தான். அதிலும் படத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் என திறமையான மூன்று நடிகர்கள். மூவருக்கும் முக்கியத்துவம், அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்பு என மூன்று மணி நேரம் ஓடுவதே தெரியவில்லை. தமிழ் சினிமாவில் ஆக்ஷன் படங்களுக்கான ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் லோகேஷ்.

கமல்ஹாசனுக்கு 60 வயதைக் கடந்துவிட்டது எந்த ஒரு இடத்திலும் சொல்ல முடியாது. தன் வயதுக்குரிய கதாபாத்திரத்தைத் தேர்வு செய்திருந்தாலும் அவரு எனர்ஜி வேற லெவல். ஆரம்பத்தில் 'பத்தல பத்தல' என்ற ஆட்டமென்ன, அடுத்தடுத்து அதிரடி செய்யும் ஆக்ஷன் என்ன, எந்தெந்த காட்சிகளில் எப்படியெப்படி நடிக்க வேண்டும் என மிகப் பெரிய ரெபரன்ஸையே இந்தப் படத்தில் மீண்டும் கொடுத்துவிட்டார். சக நடிகர்களுக்கும் தன் படத்தில் சரியான இடத்தைக் கொடுத்து அவர்களையும் மிஞ்சும் விதத்தில் நடிப்பது கமல்ஹாசன் ஸ்டைல், அது இப்படத்திலும் தொடர்கிறது.

'மாஸ்டர்' படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்திலும் வில்லனாக விஜய் சேதுபதி. அந்தப் படத்தின் நடிப்புச் சாயல் சற்றே இந்தப் படத்தில் தெரிந்தாலும், பேச்சிலும், உடல் மொழியிலும் வித்தியாசப்படுத்தி இருக்கிறார்.

படத்தின் முதல் பாதி வரை பகத் பாசில் தான் ஹீரோ. அவரை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் இயக்குனர். வழக்கை அவர் விசாரிக்கும் விதம், தனது குழுவினருக்கு இடும் கட்டளை, காதலி காயத்ரியுடனான கொஞ்சல் என இடைவேளை வரை கேரளாவில், ஒரு மலையாளப் படத்தைப் பார்த்து கொண்டிருக்கிறோமோ என்று யோசிக்க வைத்துவிட்டது.

மற்ற கதாபாத்திரங்களில் நரேனுக்கு மட்டுமே கொஞ்சம் அதிகமான காட்சிகள். போலீஸ் அதிகாரியாக செம்பன் வினோத் ஜோஸ், காவல் துறையில் ஒரு கருப்பு ஆடு கதாபாத்திரம்.

கிளைமாக்ஸ் சர்ப்ரைஸாக சூர்யா. கொஞ்சமே வந்தாலும் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் தெறிக்க விடுகிறார். அவரது கதாபாத்திரத்துடன் 'கைதி 2' ஆக வருமா, 'விக்ரம் 3' ஆக வருமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

படத்தில் விஜய் சேதுபதிக்கு 3 மனைவியர்கள். ஒரு மனைவியான மகேஸ்வரி ஒரிரு வார்த்தை வசனமும், மற்றொரு மனைவியான மைனா நந்தினி இரண்டு, மூன்று வசனமும், இன்னொரு மனைவியான ஷிவானி நாராயணன் வசனமே பேசாமலும் வந்து போகிறார்கள். எதற்காக இப்படி ஒரு 3 மனைவி காமெடி எனத் தெரியவில்லை. படத்தில் எது திருஷ்டி என்று கேட்டால் இந்த கான்செப்ட் தான். இது முழுக்க முழுக்க கமர்ஷியல் மசாலா ஆக் ஷன் படம்.

பின்னணி இசைக்காக அனிருத் நிறையவே உழைத்திருக்கிறார் போலிருக்கிறது. கமல்ஹாசன் அவரை விட்டிருக்க மாட்டார். என்னதான் அனிருத் பின்னணி இசையமைத்தாலும் இடைவேளையில் இளையராஜாவின் இசையில் 36 வருடங்களுக்கு முன்பு ஒலித்த 'விக்ரம்…விக்ரம்'...இசையைக் கேட்கும் போது புல்லரிக்கிறது.

ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன். படத்தில் நிறைய இரவுக் காட்சிகள், பகல் காட்சிகளைப் பார்ப்பதே அரிது. அதிலும் நிறைய இரவு நேர வெளிப்புறக் காட்சிகள். லைட்டிங்கிற்கே அத்தனை மணி நேரம் தேவைப்பட்டிருக்கும். கடுமையாக உழைத்து கிரிஷ், கிரேட் என சொல்ல வைத்திருக்கிறார். அவருக்கடுத்து சண்டைப் பயிற்சி இயக்குனர்கள் அன்பறிவ். ஒவ்வொரு சண்டைக் காட்சியும் அலற வைக்கிறது. படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ். எந்தக் குழப்பமும் இல்லாமல் திரைக்கதையோட்டம் கெடாதபடி பரபரப்பாக தொகுத்திருக்கிறார்.

போதைப் பொருள் பற்றிய மற்றுமொரு ஆக்ஷன் படம் என்று சாதாரணமாக சொல்லிவிட்டுப் போக முடியாதபடி மொத்த குழுவும் உழைத்திருக்கிறது. சமீபத்தில் 1000 கோடி வசூலித்த டப்பிங் படங்களைக் காட்டிலும் இந்தப் படம் எந்த விதத்திலும் குறைந்ததில்லை.

விக்ரம் - வியக்குறோம்…

 

விக்ரம் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

விக்ரம்

  • நடிகர்
  • இயக்குனர்
  • இசை அமைப்பாளர்

கமல்ஹாசன்

உலக நாயகன் என்று ரசிகர்களால் போற்றப்படும் நடிகர் கமல்ஹாசன் 1954ம் ஆண்டு நவம்பர் 7ம்தேதி பரமக்குடியில் பிறந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம், இந்தி என பல மொழி படங்களில் நடித்திருக்கும் கமல்ஹாசன் 1960ம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக களத்தூர் கண்ணம்மா படத்தில் அறிமுகமானார். 1962ல் மலையாள திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். 1977ல் தெலுங்கு, வங்காளம், கன்னட திரைப்படங்களில் நடித்தார். 1981ம் ஆண்டு இந்தி திரைப்படத்தில் நடிக்கத் தொடங்கினார்.

மிகச்சிறந்த நடிகராக விளங்கும் கமல்ஹாசன் பின்னணி பாடகர் அவதாரமும் எடுத்திருக்கிறார். ஹேராம், விருமாண்டி உள்ளிட்ட படங்களை இயக்கி டைரக்டர் அவதாரமும் எடுத்திருக்கிறார். ராஜ்கமல் பிலிம்ஸ் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் கமல், தனது நிறுவனம் சார்பில் ராஜ பார்வை, விக்ரம், அபூர்வ சகோதரர்கள், சத்யா, மைக்கேல் மதன காமராஜன், குணா, தேவர் மகன், உன்னைப் போல் ஒருவன் உள்ளிட்ட பல்வேறு படங்களை தயாரித்துள்ளார்.

களத்தூர் கண்ணம்மா, மூன்றாம்பிறை, நாயகன், இந்தியன் ஆகிய படங்களுக்காக இந்திய அரசின் தேசிய விருதுகளையும், 18 பிலிம்பேர் விருதுகள், பத்மஸ்ரீ விருது, சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகம் வழங்கிய கவுரவ டாக்டர் பட்டம் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.

மேலும் விமர்சனம் ↓