1.5

விமர்சனம்

Advertisement

நடிகர்கள் - தமிழ், ஆனந்தி, யோகி பாபு மற்றும் பலர்
இயக்கம் - ஜெகன் நாத்
இசை - இஷான் தேவ்
தயாரிப்பு - டிரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ்

எத்தனையோ காதல் கதைகளைப் பார்த்த தமிழ் சினிமா, இன்னும் பல காதல் கதைகளைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது. இனியும் பார்க்கத்தான் போகிறது. விதவிதமான காதல் கதைகள் வந்தாலும் வித்தியாசமான காதல் கதைகள்தான் மனதில் பதிகின்றன.

விஜய் நடித்த 'புதிய கீதை' மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஜெகன்நாத். அடுத்து 'கோடம்பாக்கம், ராமன் தேடிய சீதை' ஆகிய படங்களை இயக்கினார். 9 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் படம் இயக்க கிடைத்த வாய்ப்பை இப்படத்தின் நாயகி 'செருப்பை' தவற விட்டது போல், இவரும் தவற விட்டிருக்க வேண்டாம்.

படத்தின் நாயகி அவர் அப்பா ஆசையாக வாங்கிக் கொடுத்த செருப்பை பஸ்ஸில் ஏறும் போது தவற விட்டுவிடுகிறார். அந்த சமயத்தில் சிரியாவில் இருக்கும் அவரது அப்பா ஜெயப்பிரகாஷ் தீவிரவாதிகளால் கடத்தப்படுகிறார். அவர்கள் குறி கேட்க வரும் சாமியாரான சுஜாதாவின் மகன் தமிழ், ஏற்கெனவே ஆனந்தி அழகில் மயங்கி அவரைக் காதலித்து வருகிறார். சாமியார் சுஜாதா, காணாமல் போன ஆனந்தியின் செருப்புகள் கிடைத்தால் அவரது அப்பா பத்திரமாக வந்துவிடுவார் எனக் குறி சொல்கிறார். காதலிக்காக காணாமல் போன அந்த செருப்புகளைத் தேடி அலைகிறார் தமிழ். அவற்றைக் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

ஒரு வரிக் கதையாகப் பார்த்தால் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், படத்திற்கான நல்ல நல்ல காட்சிகளை இயக்குனர் படத்தின் நாயகனைப் போல தேடிப் பிடித்திருக்கலாம்.

'பசங்க, மெரீனா, கோலி சோடா' படங்களில் 'பக்கோடா' பாண்டியாக நடித்த தமிழ் இந்தப் படத்தில் கதாநாயகனாக உயர்ந்திருக்கிறார். அவருடைய நடிப்பும் இந்தப் படத்தில் உயர்ந்திருக்கிறது. இந்தப் படம் யாருக்கு உபயோகமாக இருக்கிறதோ இல்லையோ நடிக்கத் தெரிந்த ஒரு இளம் நடிகரை தமிழ் சினிமாவுக்கு நாயகனாக அறிமுகப்படுத்தியிருக்கிறது. கிடைத்த வாய்ப்பை தமிழ், தொலைத்துவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

படத்தின் ஒளிப்பதிவாளர் சுக செல்வன் படத்தின் நாயகி ஆனந்தியின் அழகில் மயங்கியிருப்பார் போலிருக்கிறது. ஆனந்தி வரும் காட்சிகளில் மட்டும் ஒளிப்பதிவு தனி அழகுடன் இருக்கிறது. ஆனந்தியை எவ்வளவு அழகாகக் காட்ட வேண்டுமா அவ்வளவு அழகாகக் காட்ட முயற்சித்திருக்கிறார். காதல் கதையாக இருந்தாலும் நாயகனும், நாயகியும் கடைசியில் தான் சந்தித்துக் கொள்கிறார்கள். ஆனந்தி, இயக்குனர் என்ன சொன்னாரோ அதை அப்படியே செய்திருக்கிறார்.

படத்தின் மிகப் பெரிய மைனஸ் திரைக்கதை. ஒரு காணாமல் போன செருப்பு எப்படியெல்லாம் போகும் என்பதை யதார்த்தமாகக் கற்பனை செய்து காட்சிகளை அமைத்திருக்கலாம். ஆனால், ஒரு செருப்புக் கடையில் உட்கார்ந்து கொண்டு செருப்புக் கடைக்காரரான லிவிங்ஸ்டன் அந்த செருப்பை யாரிடம் விற்றார் என்பதையெல்லாம் அவ்வளவு பெரிய ஊரில் வைத்து கண்டுபிடிக்க முடியுமா. படத்தில் யோகி பாபு, கே.எஸ்.ரவிக்குமார், சிங்கம்புலி, பாலசரவணன் ஆகியோரும் இருக்கிறார்கள் என்று சொல்வதைத் தவிர வேறு சிறப்பு இல்லை. யதார்த்தமான கதையை, அமெச்சூரான திரைக்கதையால் சிதைத்துவிட்டார் இயக்குனர்.

இஷான் தேவ் இசையில் 'அபிமானியே...' என்ற மெலடி பாடல் தாலாட்டி ரசிக்க வைக்கிறது. ஒரு சரணம் முடிந்த உடனேயே அந்தப் பாடல் அப்படியே ஒரு சாவு குத்துப் பாடலாக மாறுகிறது. என்னங்கய்யா...உங்க ரசனை ?.

என் ஆளோட செருப்பக் காணோம் - படத்துல அது மட்டுமா காணோம்..?.

 

பட குழுவினர்

என் ஆளோட செருப்ப காணோம்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓