அப்புக்குட்டி, காமெடி சீனிவாசன், கராத்தே ராஜா, நிவேதிதா மதுசந்தா ஸ்ரேயாஸ்ரீ ஆகியோர் நடிக்க, இன்றைய சூழலில், பேஸ்புக், வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூகவலைதள மோகத்தினால் போலி நட்புகளை நம்பி வாழ்வைத் தொலைக்கும் வாலிபர்களின் நிலையை, சென்டிமென்ட், நகைச்சுவை, திரில்லர் கலந்த ஜனரஞ்சக கதையாக 'வாங்க வாங்க' திரைப்படமாக தர முயற்சித்திருக்கிறார் இயக்குனர் இஸ்மாயில்.என்.பி.
இயக்குனர் ஆக முயற்சி செய்யும் அப்புக்குட்டி, நடிகர் காமெடி சீனிவாசனிடம் கதை சொல்ல வருகிறார். அந்த கதைப்படி, தோழிகள் நிவேதிதா, மதுசந்தா ஆகிய இருவரும் பேஸ்புக் மூலம், தொடர்பில் இருக்கும் குறிப்பிட்ட சில ஆண் நண்பர்களை வலையில் வீழ்த்தி தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதை வாடிக்கையாக வைத்திருக்கின்றனர். இவர்கள் தங்கியிருக்கும் வீட்டிற்குள் இருக்கும் பேயானது, இவர்களை பார்க்க இரவு நேரங்களில் தனியாக வரும் ஆண் நண்பர்களை பயமுறுத்துகிறது. அந்த பேயிடம் முதலில் சிக்குகிறார் சட்டவிரோத பணப் பரிமாற்ற தொழில் செய்யும் கராத்தே ராஜா, மிகப்பெரிய தொகையுடன் வரும்போது, தனது பேஸ்புக் தோழி மது சந்தாவை பார்க்க வந்து, வந்த இடத்தில் அந்த வீட்டு பேய் தாக்கியதால் ஆள் அட்ரஸ் இல்லாமல் போகிறார். அவரை மாதிரியே அந்த வீட்டிற்கு பெண் சபலத்தில் வரும் பலரும் காணாமல் போகின்றனர்.
இந்நிலையில், கராத்தே ராஜாவிடம். பணத்தை கொடுத்து அனுப்பிய நபரோ, ராஜாவை தேடுவதற்கு விக்கி, ஹனிபா ஆகியோரை அனுப்புகிறார். அவர்களின் என்ட்ரிக்குப் பின் அந்த வீட்டில் பேய் என்று எதுவும் இல்லை என்பதும், இளம் பெண் தோழிகள் இருவரும் திட்டமிட்டே கொலை செய்து வருதும் தெரிகிறது. சபல புத்தி இளைஞர்களை மட்டும் தங்கள் வீட்டிற்கு வரவழைத்து இவர்கள் கொலை செய்வது ஏன்? அவர்களின் பிரச்சினை என்ன...? என்பது உள்ளிட்ட ஏகப்பட்ட வினாக்களுக்கு வித்தியாசமாக விடை சொல்கிறது "வாங்க வாங்க" படத்தின் மீதிக்கதை.
காமெடி சீனிவாசனிடம், இப்படக் கதைப்படி, இயக்குனராக வரும் அப்புக்குட்டி கதைசொல்லும் கதாபாத்திரம் என்பதால் இருவருக்கும் தங்கள் நடிப்பு திறமையை காட்டவாய்ப்புகள் கம்மியாக இருக்கிறது.
வலைதளத்தில் வாலிபர்களை வசியம் செய்யும் இளம்பெண் பாத்திரங்களான நிவேதிதா, மதுசந்தா இருவரும் வாசியக்காரிகளாக நடிப்பைக் காட்டிலும் இளமை துடிப்பில் ரசிகனை கவருகின்றனர். அதிலும் கிளைமாக்ஸில் பண வெறி பிடித்த பெண்ணாக தன்னை காட்டிக்கொள்ளும் நிவேதிதா, ஒரு படி தாண்டி கவருகிறார்.
இடைவேளைக்கு பின் என்ட்ரி கொடுத்தாலும் ஸ்ரேயாஸ்ரீ, மலைவாழ் பெண் பாத்திரமாக மனம் மயக்குகிறார். அம்மணி, காதல், சென்டிமென்ட் என அழுத்தமான நடிப்பை பதிவு செய்ய முயற்சித்துள்ளார்.
நாயகர்கள் என தனியாகயாரும் இப்படத்தில் இடம் பெறவில்லை. ஆனால், அதற்கு ஈக்குவலாக கராத்தே ராஜா மற்றும் புதுமுகங்கள், விக்கி, ஹனிபா, ராஜேஷ் மோகன், பாபு உள்ளிட்டோர் ஒரு மாதிரி செய்ய முயற்சித்துள்ளனர்.
விக்கியும், ஹனிபாவும் சட்டவிரோத பணப் பரிமற்றம் செய்யும் ஆசாமிகளாக, அசால்ட்டாக அசத்தியுள்ளனர். பெண்களை தந்திரமாக வலையில் வீழ்த்தும் கேரக்டரில் கராத்தே ராஜாவும் கச்சிதம்.
சி.பி.சிவன் மற்றும் பகவதி பாலாவின் ஒளிப்பதிவு ஒஹோ ஆஹா பதிவு இல்லை என்றாலும் ஓ.கே பதிவுக்கு மேல் என்பது ஆறுதல்.
ராஜேஷ் மோகனின் இசையும் படத்திற்கு வலு சேர்க்க பாடுபட்டிருக்கிறது.
கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கம்.. என இப்படத்தில் ஏகப்பட்ட வேலைகளை செய்துள்ள என்.பி.இஸ்மாயில், சமூக வலைத்தளங்களில் போலி நட்பினால் ஏற்படும் பின்விளைவுகள், மோசடி பெண்களை நம்பி வாழ்க்கையை தொலைக்கும் இளைஞர்கள்... என இன்றைய சமூகம் சார்ந்த பிரச்சனைகளை படம்பிடித்து காட்டியிருப்பது பாராட்டுதலுக்குரியது.
ஒரு சில லாஜிக் குறைகள், பட்ஜெட் பல் இளிப்புகள்... படத்தில் ஆங்காங்கே தென்பட்டாலும், இன்றைய காலகட்டத்தில், சமூக வலைதள மோகத்தில் போலி நட்புகளை நம்பி வாழ்வைத் தொலைக்கும் வாலிபர்களின் நிலையை, சென்டிமென்ட், நகைச்சுவை, திரில்லர் கலந்த ஜனரஞ்சக கதையாக 'வாங்க வாங்க' திரைக்கதையாக்கி இருப்பதற்காகவே இயக்குனருக்கு கை குலுக்கலாம்.
ஆகமொத்தத்தில், 'வாங்க வாங்க' - பார்க்கலாம் போங்க!"