விமர்சனம்
கதைப்படி வசதியான குடும்பத்தில் பிறந்து சின்ன வயதிலேயே பெற்றோரையும், அந்த வசதியையும் இழந்துவிடும் அக்கா ஜெஸி ஜாஸ்மீனுக்கும், தம்பி ரவி கணேஷுக்கும் இடையே அப்படி ஒரு பாசம். படிக்கும்போதே பெட்ரோல் பங்கில் எல்லாம் வேலை பார்த்து தம்பியை படிக்க வைக்கும் அக்கா ஜெஸி, கல்யாண நினைப்பே இல்லாமல் காலம் தள்ளுகி்றார். ஒரு கட்டத்தில் தேடி வருகிறது திருமண வாயப்பு, சுற்றமும் நட்பும் வலியுறுத்துவதால் திருமணத்துக்கு சம்மதிக்கிறார். புகுந்த வீட்டிலும் தம்பியை உடன் வைத்துக் கொள்வேன் என ஜெஸி அடம் பிடிக்க, புகுந்த வீட்டு சூழல் அதற்கு இடம் கொடுக்க மறுக்கிறது. இதனால் அக்காவை விட்டு பிரியும் தம்பி, அர்த்த ராத்திரியிலும், அதுவும் அன்று அக்காவின் முதல் ராத்திரி என்றும் பாராமல் போன் மூலம் அக்கா பாசத்திற்காக ஏங்குகிறார். அது கிடைக்காமல் போகவே.. மது, மருந்து என போதைக்கு அடிமையாகி பாதை மாறுகிறார். இத்தனைக்கும் கதாநாயகி பாரதி, சின்ன வயதிலேயே இவருக்கென இவரது அக்காவாலும், பாரதியின் அம்மாவாலும் முடிவு செய்யப்பட்டு இவரை துரத்தி, துரத்தி காதலித்தும் அவரது காதல் போதைக்கு கட்டுப்படாமல், போதை மருந்துக்கு அடிமையாகி போய் சேருவதே ஆடாத ஆட்டமெல்லாம்!
கதாநாயகர் ரவிகணேஷ், கதாபாத்திரத்திற்கு ஏற்ற தேர்வு. அக்கா - தம்பி பாசக் காட்சிகளிலும், காதல் காட்சிகளிலும், அம்மாஞ்சியாக சொம்மா (சும்மாதான்) இருக்கும் ரவி கணேஷ், போதை மருந்து காட்சிகளில் புகுந்து விளையாடி இருக்கிறார். கும்மாளம் உள்பட இன்னும் இரண்டொரு படங்களில் இரண்டு - மூன்று நாயகர்களில் ஒருவராக வந்து போன ரவிகணேஷ், இதில் ஸோலோ நாயகர். ஆனால் அந்த வாய்ப்பை இன்னும் சரியாக பயன்படுத்தி இருக்கலாம்!
கதாநாயகி பாரதிக்கு அம்முவாகிய நான், சற்றுமுன் கிடைத்த தகவல் மாதிரி அவிழ்த்து போட்டு ஆட்டம் போட வாய்ப்புகள் இருந்தும், அடக்கி வாசித்திருப்பது ஏமாற்றம். ஏன் இந்த ஏ -டூ- யூ மாற்றம்.
நாயகன் - நாயகி தவிர அக்கா பாத்ததிரத்தில் வலம் வரும் மீன் நடிகை, நடிகை மீரா ஜாஸ்மீனின் அக்கா எனும் ஒரே தகுதியுடன் நடிக்க வந்திருக்கிறார். அதனாலோ என்னவோ, ஓவர் ஆக்டிங் பண்ணி, ஒரேயடியாக அழுது புரண்டு, மீராவின் பெயரை கெடுத்திருக்கிறார். மன்சூர் அலிகான், டி.பி.கஜேந்திரன், ஸ்ரீநாத், சிசர் மனோகர் என ஒரு குரூப்பே சிரிக்க வைக்க முயன்றுள்ளது. அதில் ஸ்ரீநாத் மட்டுமே ஜெயித்திருக்கிறார்.
மஹிநடேஷின் ஒளிப்பதிவும், ஏ.ஆர்.ரைஷானாவின் இசையும், ஆடாத ஆட்டமெல்லாம் நாடகம் அல்ல.. படம் என்பதை பறை சாற்ற பாடுபட்டிருக்கின்றன. எடிட்டர் சுப்புவும் இவர்களுக்கு கை கொடுத்திருக்கலாம். புதியவர் அழகரின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கத்தில் கதையும், காட்சிகளும், பழைய கள்... பழைய மொந்தையிலேயே தரப்பட்டிருப்பது வருத்தம்!
ஆடாத ஆட்டமெல்லாம் தியேட்டரில் ஓடாத ஓட்டமெல்லாம் ஓட வேண்டும் என்பதே நம் ஆசை! ஆனால் கூடாதே கூட்டமெல்லாம்...!
ஆடாத ஆட்டமெல்லாம் - கூடாது கூட்டமெல்லாம்!














வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!