நடிகர்கள் : அமீர்கான், சாக்ஷி தன்வார், பாத்திமா சனா சாகிப், சான்யா மல்கோத்ரா, ராஜ்குமார் ராவ்.
இயக்கம் : நிதேஷ் திவாரி
லகான், 3 இடியட்ஸ், பிகே., போன்ற வித்தியாசமான படங்களை கொடுத்த அமீர்கானின் சினிமா கேரீயரில் மற்றுமொரு முத்தாய்ப்பான படம் தான் டங்கல் என்றால் அது மிகையல்ல. ஆணாதிக்கம் நிறைந்த உலகில் பெண்களாலும் சாதிக்க முடியும் என்று தன் மகள்களை சாதனை நாயகிகளாக ஆளாக்க துடிக்கும் ஒரு தந்தையின் போராட்டம் தான் டங்கல் படத்தின் ஒன்-லைன் கதை. மல்யுத்த மாவீரர் மாவீர் சிங் போகத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து வெளிவந்துள்ள இப்படம் ரசிகர்களை எந்தளவுக்கு கவர்ந்தது என்று இனி பார்ப்போம்...
கதைப்படி, ஹரியானாவில் ஒரு கிராமத்தில் வசிக்கும் சாதாரண குடும்பஸ்தர் மாவீர் சிங் போகத் எனும் அமீர் கான், அவருக்கு மல்யுத்தத்தில் அதிக ஈடுபாடு உண்டு, மல்யுத்தத்தில் சாதித்து நாட்டுக்காக பல பதக்கங்களை பெற வேண்டும் என்பது அவரது ஆசை, ஆனால் அவரது அப்பா உள்ளிட்ட சொந்தபந்தங்களால் அது நிறைவேறாமல் போக திருமணத்திற்கு பிறகு தனக்கு பிறக்கப்போகும் ஆண் வாரிசையாவது மல்யுத்தத்தில் சாதிக்க வைக்க வேண்டும் என நினைக்கிறார். ஆனால் அவருக்கு அடுத்தடுத்து நான்கும் பெண் குழந்தைகளாகவே பிறக்கிறது, இதனால் தனது கனவு நிறைவேறாத வருத்தத்தில் இருக்கும் அமீர்கானுக்கு, ஒருநாள் அவரது பிள்ளைகளான கீதா மற்றும் பபிதா இருவரும் ஒரு சிறிய தகராறில் இரண்டு பசங்களை புரட்டி எடுக்க, அப்போது தான், பெண் பிள்ளைகளையும் கொண்டு சாதிக்க முடியும் என்ற எண்ணம் அமீர்கானுக்கு வருகிறது. அப்போது முதல் மகள்கள் கீதா மற்றும் பபிதா இருவரையும் மல்யுத்த பயிற்சியில் களமிறக்கி, இருவருக்கும் சிறுவயது முதலே பயிற்சி அளிக்கிறார், மல்யுத்தத்தில் தன்னால் சாதிக்க முடியாததை தனது பெண் பிள்ளைகள் மூலம் அமீர்கான் சாதித்தாரா...? எனும் கேள்விக்கு விடையுடன், மகள்களை மல்யுத்தத்திற்கு தயார்படுத்த அமீர் படும் துன்பங்கள், துயரங்கள், முயற்சிகள் உள்ளிட்ட அனைத்தையும் கலந்துகட்டி ஒரு ஜனரஞ்சகமான படமாக விடை சொல்கிறது இந்த டங்கல் அலைஸ் தங்கல் படம்.
மூன்றும் பெண் குழந்தையாய் பிறக்க, நான்காவதாக ஒரு ஆண் குழந்தை பிறக்காதா என எங்குவதிலாகட்டும், மகள்களின் தைரியத்தை கண்டு அவர்களை மல்யுத்தத்தில் களமிறக்கிவிட விளைநிலத்தின் ஒரு பகுதியை பயிற்சிக்காக சீர்ப்படுத்தும் இடத்திலாகட்டும், மகள்களை கட்டாயப்படுத்தி அவர்களுக்கு பயிற்சி தரும் இடத்திலாகட்டும், மகள்களின் ஊட்டசத்திற்காக கறிக்கடைக்காரரிடம் அவர் பேசும் இடங்களிலாகட்டும், உள்ளூர் போட்டி தொடங்கி சர்வதேச போட்டி வரை மகள்களை உற்சாகப்படுத்துவதிலாகட்டும்... அமீர்கான், மல்யுத்த மாவீரர் மாவீர் சிங் போகத்தாக நடிக்கவில்லை, வாழ்ந்திருக்கிறார். மல்யுத்த வீரராகவும், ஒரு அப்பாவாகவும், பயற்சியாளராகவும் அசத்தியிருக்கிறார் அமீர். அதிலும் 50 வயதை கடந்துவிட்ட அமீர், தன்னால் எதையும் சாதிக்க முடியும் என உடல் எடையை கூட்டி, குறைத்து அசத்தியிருக்கிறார்.
அமீரின் மனைவியாக வரும் சாக்ஷி தன்வார், ஒரு நல்ல மனைவியாக மட்டுமல்ல, நான்கு பெண் குழந்தைகளுக்கு அம்மாவாக தத்ரூபமாக நடித்திருக்கிறார்.
இளம் வயது கீதாவாக வரும் சிறுமி ஜைரா வாசிம், குமாரி கீதாவாக வரும் பாத்திமா சனா, இளம் வயது பபிதாவாக வரும் சுஹானி, குமாரி பபிதாவாக வரும் சான்யா மல்கோத்ரா ஆகியோரும் நடிப்பில் வெளுத்து வாங்கியிருக்கிறார்கள். அதிலும் குழந்தைகளாக வரும் ஜைரா, சுஹானி இருவரும் சூப்பர். இவர்களை போன்றே அமீரின் உறவு பையன், பயிற்சியாளர், கறிக்கடைக்காரர் உள்ளிட்ட அனைவரும் பாத்திரமறிந்து சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
பீரிதமின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் காதுகளுக்கு இதம் தருவதோடு, சேது ஸ்ரீராமின் ஔிப்பதிவும் கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது. அதற்கு பாலு சலூஜாவின் படத்தொகுப்பு பக்கா தொகுப்பாக இருக்கிறது.
நிதேஷ் திவாரியின் எழுத்து - இயக்கத்தோடு, படத்தின் திரைக்கதை மற்றும் வசனங்கள் பலம் சேர்த்திருக்கின்றன. அமீர்கானை மட்டும் மையப்படுத்தாமல் படத்தில் உள்ள அனைத்து கேரக்டர்களுக்கும் முக்கியமான ரோல் கொடுத்து அதை சிறப்பாக இயக்கி வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குநர். படத்தில் ஆங்காங்கே சில குறைகள் இருந்தாலும் அமீர் மற்றும் சக நடிகர்களின் நடிப்பு மற்றும் திரைக்கதையின் வேகத்திற்கு முன்னால் அவைகள் பெரிதாக தெரியவில்லை.
படம் முடிந்து வெளியே வரும் போது, இப்படி ஒரு தந்தையா என அமீர்கானை பெருமை கொள்ள வைக்கிறது, கூடவே கண்களில் கண்ணீர் துளியையும் வரவழைக்கிறது. என்னது உங்களுக்கு பெண் குழந்தையா என்று கேட்பவர்களிடத்தில் அவசியம் இந்தப்படத்தை பார்க்க சொல்ல வேண்டும். அவர்கள் மட்டுமல்ல எல்லோரும் பார்க்க வேண்டிய ஒரு அற்புதமான படம். அமீர்கானின் சினிமா பயணத்தில் இந்த டங்கல்(தங்கல்) படம் நிச்சயம் ஒரு மறக்கமுடியாத மாஸ்டர்பீஸ் படம் என்று தான் சொல்ல வேண்டும்.
மொத்தத்தில், ''டங்கல்(தங்கல்) - மகுடம் சூட்டும் வைரக்கல்!''