சிந்து சமவெளி நாகரிக பகுதியில் அமைந்த பெரிய நகரங்களில் மொகஞ்சதரோ முக்கியமானது. இந்தக்காலத்தில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து, ஒரு காதல் கதையை கொடுத்திருக்கிறார் இயக்குநர் அஷூதோஷ் கோவரிகர். இப்படம் ரசிகர்களை எந்தளவுக்கு கவர்ந்துள்ளது என்று இனி பார்ப்போம்.
மொகஞ்சதரோ காலக்கட்டத்தில் கதை நகருகிறது. கதைப்படி, ஆம்ரி நகரை சேர்ந்த விவசாயி சர்மான் எனும் ஹிருத்திக் ரோஷன், பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் மொகஞ்சதரோ நகருக்கு வருகிறார். வந்த இடத்தில் சானி எனும் பூஜா ஹெக்டே மீது காதல். ஆனால் சானியோ, இந்நகரத்து அரசன், மகம் எனும் கபீர் பேடியின் மகனான மூஞ்சா எனும் அருணோதய சிங்கிற்கு நிச்சயம் செய்து வைக்கப்படுகிறார். இந்தச்சூழலில் சர்மான், எப்படி தன் காதலில் வெற்றி பெறுகிறார்.?, என்பதுடன் தன்னுடைய உண்மையான அடையாளம் என்ன என்பதையும் எவ்வாறு கண்டறகிறார் என்பது மொகஞ்சதரோ படத்தின் மீதிக்கதை.
ஹிருத்திக் ரோஷன் வழக்கம் போல தன் நடிப்பால் ரசிகர்களை கவருகிறார், ஆனால் சில இடங்களில் அவரது நடிப்பு மீண்டும் மீண்டும் ஒரே மாதிரியாக தெரிவது ரசிகனை எரிச்சலடைய செய்கிறது.
பூஜா ஹெக்டே படம் முழுக்க அழகாக தோன்றுகிறார், ஆனால் நடிப்பு தான் சுத்தமாக வரவில்லை.
வில்லனாக வரும் கபீர் பேடி, தன் வில்லத்தனத்தால் ஓரளவுக்கு ரசிகர்களை கவருகிறார்.
நரேந்திர ஜா, சரத்கெல்கர், மனீஷ் சவுத்ரி போன்ற நடிகர்கள் எல்லாம் நாங்களும் படத்தில் இருக்கிறோம் என்று வருகிறார்கள், போகிறார்கள்.
ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் பாடல்கள் ரசிகர்களை பெரிதாக ஈர்க்கவில்லை. ஏற்கனவே கேட்ட சில ராகங்கள் போன்றே இருக்கிறது.
படத்தில் மொகஞ்சதரோ காலகட்டத்து கட்டடங்களை அப்படியே தத்ரூபமாக உருவாக்கியிருப்பது படத்திற்கு சிறப்பு.
சிகே முரளிதரனின் ஓவிய ஒளிப்பதிவும், சந்தீப்பின் பக்கா படத்தொகுப்பும் படத்திற்கு பெரிய பிளஸ்.
சிந்து சமவெளி நாகரிகம் காலக்கட்டது கதை, ‛லகான்', ‛ஜோதா அக்பர்' போன்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த அஷூதோஷ் கோவரிகரின் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் என்று ரசிகர்கள் ஆவலோடும், நம்பிக்கையோடும் போய் படம் பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. படத்தில் காதல் காட்சிகளுடன் உணர்வுபூர்வமான காட்சிகள் என்று பெரிதாக இல்லாததும், படத்தின் நீளம் அதிகமாக இருப்பதும், தொய்வான திரைக்கதையும் ரசிகனை சலிப்படைய செய்கிறது.