நாயகி (தெலுங்கு)- திரை விமர்சனம்
நடிகர்கள் - த்ரிஷா, சத்யம் ராஜேஷ், சுஷ்மா ராஜ், கனேஷ் வெங்கட்ராம்
இயக்குனர் - கோவர்தன ரெட்டி
இசை - ரகு
த்ரிஷா நடித்துள்ள இரண்டாவது திகில் திரைப்படமான நாயகி தெலுங்கு மற்றும் தமிழில் உருவாகி முதலில் தெலுங்கில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. படத்தின் போஸ்டர்கள் ஏற்கனவே படத்திற்கு ஏக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்க இந்த வாரம் இப்படம் தெலுங்கில் வெளியாகி இருக்கிறது.
எல்லா பேய் படங்களுக்கும் உள்ள சடங்கு சம்பிரதாயங்கள் இதிலேயும் இருக்கின்றன, ஒரு பங்களா அதுவும் அடர்ந்த மரங்களுக்கு நடுவே இருக்கிறது. அதுவும் ஊருக்கு ஒதுக்கு புறமான ஒரு இடத்தில்.சஞ்சய்(சத்யம் ரஜேஷ்), சந்தியா(சுஷ்மா ராஜேஷ்) இருவரும் காதலர்கள், வார இறுதி நாட்களை மகிழ்ச்சியாக கழிக்க வெளியூருக்கு செல்லலாம் என முடிவு செய்து கிளம்புகிறார்கள்.
அந்த பயணத்தின் போது சில பல எதிர்பாராத நிகழ்வுகளால், அந்த திகில் பங்களாவில் இருவரும் தங்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அந்த இடத்தில் காயத்ரி(த்ரிஷா) எனும் ஆத்மா சுற்றி திரிவது அவர்களுக்கு தெரிய வருகின்றது. அப்புறம் என்ன , அந்த பேய் அவர்களை பாடாய் படுத்துகிறது. காயத்ரி யார்? இருவரும் எப்படி அங்கே இருந்து தப்பித்தார்கள் என்பது தான் படத்தின் மீத்திக்கதை.
காயத்ரியின் கதாபாத்திர வடிவமைப்பு தான் படத்தின் மிகப்பெரும் பலம், முதல் பாதி முழுக்கவே சுவாரஸ்யமாக காட்டப்பட்டிருக்கிறது. பல்வேறு காட்சிகளில் அந்த கதாபாத்திரம் மாறும் விதம் அழகாக காட்சிப்படுத்தப் பட்டிருக்கிறது. அரண்மனை 2 படத்தைப் போல் இல்லாமல் த்ரிஷா தான் பேய் என கண்டுபிடிக்கும் அளவிற்கு சற்று மிரட்டலாகவே த்ரிஷா நடித்திருக்கிறார் அவரது கதாபாத்திரத்திற்கு என்ன தேவையோ அதை சரியாக செய்திருக்கிறார். அதேபோல் சத்யம் ராஜேஷ் எதிர் மறை சாயல் கொண்ட கதாபாத்திரம் என்றாலும் அவ்வப்போது சிரிக்கவும் வைக்கிறார். த்ரிஷாவின் அறிமுக காட்சிகள் எதிர்பாராத வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது. படத்தின் தலைப்பிற்கான விளக்கமும் இறுதில் சொல்லப்படுகிறது.
படத்தின் பலவீனம் என்றால் அது கதையின் பின்னணி தான், ஏகப்பட படங்கள் இதே பின்புலத்துடன் வந்துவிட்டன. முதல் பாதியில் நிமிர்ந்து உட்கார வைத்தாலும் இரண்டாம் பாதி சற்றே தடுமாறுகிறது.இரண்டாம் பாதியில் அனேக காட்சிகளை ரசிகர்களால் அனுமானிக்க முடிகிறது. எப்போதும் போல் பேய்க்கு ஒரு முன்கதை சுறுக்கம். அதிலும் நம் பொறுமையை சோதிக்க ஒரு பாடல் வேறு. திகில் படங்களுக்கு வலு சேர்க்கும் பின்னணி இசையில் இசையமைப்பாளர் ரகு இன்னும் அதிக கவனம் செலுத்தியிருக்கலாம்.
இப்படத்திற்கு ஜெகதீஸ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஒரு திகில் படத்திற்கு என்ன தேவையோ அதை சரியாக செய்திருக்கிறார். படத்தின் இயக்குனர் கோவி, எடுத்துக்கொண்ட கதை பழையது என்றாலும் அதில் த்ரிஷாவை காட்டியவிதத்தில் கவனிக்க வைக்கிறார். வழக்கமன திகில் மற்றும் நகைச்சுவை கலந்து நாயகி-ஐ உருவாக்கியிருக்கிறார்கள்