Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

சும்மாவே ஆடுவோம்

சும்மாவே ஆடுவோம்,Summave aaduvom
 • சும்மாவே ஆடுவோம்
 • அருண்
 • லீமா
‛காதல்’ சுகுமார் இயக்கியுள்ள படம் இது.
20 ஜூலை, 2016 - 10:28 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » சும்மாவே ஆடுவோம்

காமெடி நடிகர் காதல் சுகுமார் இயக்கி வெளிவந்திருக்கும் இரண்டாவது படம் தான் "சும்மாவே ஆடுவோம்.


கதைப்படி, மதுரை பக்கம் ஒரு கிராமத்தின் ஜமீன் ஆனந்தன் அந்த ஊரில் உள்ள கூத்துக்கலைஞர்களுக்கு நெருக்கமானவராக இருக்கிறார். அக்கலைஞர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வரும் ஜமீனை, கூத்து கலைஞர்கள் அனைவரும் கடவுள் போல வணங்கி, வாழ்ந்து வருகின்றனர். இருந்தாலும், ஜமீன் ஆனந்துக்கும், ஜமீன்தாரினி யுவராணிக்கும் திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் அத்தம்பதிக்கு

குழந்தையே இல்லை என்ற கவலைஇருக்கிறது.


இந்நிலையில், ஜமீனின் ஆஸ்தான ஜோதிடரான பாண்டு, ஜமீனுக்கு, ஜமீன்தாரினி யுவராணி மூலம முதல் குழந்தை பிறப்பதற்கு வாய்ப்பு இல்லை என்றும், வேறு பெண்ணுடன் ஜமீன் தொடர்பு கொண்டால் அவர் மூலம் ஒரு குழந்தை உருவானால், கருவானால் இரண்டாவதாக ஜமீன்தாரினிக்கும் ஒரு குழந்தை பிறக்கும் என்றும் கூறுகிறார். இதனால் குழப்பத்தில் இருக்கும் ஜமீனின் சூழ்நிலையை புரிந்து, இந்த விஷயம் அறிந்து அந்த ஊர்கூத்துக் கலைஞர்களின் தலைவர் பாலாசிங்கின் மகளான அம்மு, ஜமீன் மூலமாக முதல் குழந்தையை பெற்றுக்கொள்ள முடிவெடுக்கிறாள். பாதி மனநிலையுடன் அம்முவுடன் ஒன்று சேருகிறார் ஜமீன். நாட்கள் கடந்ததும் அம்மு கர்ப்பமடைகிறார் அதேநேரத்தில், ஜமீன்தாரினி யுவராணியும்

கர்ப்பமடைகிறார்.


இருவருக்கும் ஒருநேரத்தில் ஒரே மருத்துவமனையில் குழந்தை பிறக்கிறது. குழந்தை பிறந்ததும் அம்மு இறந்து போகிறார். ஜமீன் தான் செய்ததை

பெரிய குற்றமாக கருதி அந்தகுழந்தைக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணி யுவராணிக்கு பிறந்த குழந்தையையும், அம்முவின் குழந்தையையும் தொட்டில் மாற்றி வைத்து விடுகிறார். இரண்டு குழந்தைகளுக்கும் வளர்ந்து பெரியவர்களாகிறார்கள். ஜமீன் வீட்டில் வளரும் குழந்தையான அர்ஜுன், சினிமாவில் பெரிய ஹீரோவாகிறார். கூத்துக்கலைஞர்களுடன் வளரும் அருண், மெக்கானிக் கடை வைத்துக் கொண்டு,

அர்ஜுனின் தீவிர ரசிகராகவும் இருக்கிறார்.


அர்ஜுனின் தீவிர ரசிகராக இருக்கும் அருணுக்கு ஒரு சூழ்நிலையில், அர்ஜுனின் மாமாவால் அவமானம் நேரிடுகிறது. அர்ஜுனின் மாமா கூத்துக்கலைஞர்களுக்கு ஜமீன், தானமாக கொடுத்த நிலத்தையெல்லாம் பறித்து பணத்திற்காக ஒரு தொழில் சாலைக்கு கொடுக்க நினைக்கிறார். இதனால், சூழ்ச்சி செய்து அந்த நிலத்தை அபகரிக்க திட்டம் போடுகிறார். அதன்படி, ஜமீனின் வாரிசு நடிகர் அர்ஜுனை ஊர் மக்கள் எல்லோரும்சேர்ந்து அவமானப்படுத்தியதாகக் கூறி, அவர்களுக்கு ஒரு சவால்விடுகிறார். அதாவது,30 நாட்களுக்குள் ஊர் மக்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு திரைப்படத்தை எடுத்துக் காட்டினால் ஜமீன் நிலத்தை அவர்களுக்கே பட்டா போட்டு கொடுத்து விடுவதாகவும், அப்படி அவர்களால் முடியாவிட்டால் ஜமீன் கொடுத்த நிலத்தையெல்லாம் தன்னிடம் ஒப்படைத்துவிட்டு இந்த ஊரைவிட்டே வெளியேற வேண்டும் என்றும் கூறுகிறார். இறுதியில், ஊர் மக்கள்

எல்லோரும் சேர்ந்து, அருண் தலைமையில் ஒன்று சேர்ந்து, அந்த சவாலை எதிர்கொண்டு, தடை பல தாண்டி தங்களுக்கு ஜமீனால் தானமாக

தரப்பட்ட நிலத்தை மீட்டார்களா? இல்லையா..? என்பதுதான் சும்மாவே ஆடுவோம் படத்தின் கரு, கதை, களம், காட்சிப்படுத்தல்... எல்லாம்.


அறிமுகநாயகன் அருண், டூ-வீலர் மெக்கானிக் கடை வைத்திருப்பவராகவும், ஒரு பிரபல நடிகரின் ரசிகராகவும் க்ளைமாக்ஸில் நடிகராகவும் அழகாக

நடிக்க முயற்சித்து அதில் பாதி வெற்றியும் பெற்றிருக்கிறார்.


சினிமா நடிகராக., ஜமீனின் வாரிசாக திமிர் பிடித்தவராக வரும் அர்ஜுன் சில காட்சிகளே வந்தாலும் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்திருக்கிறார்.


ஜமீனாக வரும் இப்படத் தயாரிப்பாளர் ஆனந்தன் மென்மையான, தன்மையான ஜமீன் கதாபாத்திரத்தில்., முரட்டுத் தோற்றத்துடன் போராடி நடித்து ஜமீனாகவே வாழ முயற்ச்சித்திருக்கிறார். முக்கியமான காட்சிகளில் எல்லாம் இவரது வசன உச்சரிப்பும், வாய் அசைப்பும் சரியாக சிங்க் ஆகாது, ரசிகனை வெறுப்பேற்றுகிறது .


கதை நாயகி லீமா பாபு படம் முழுக்க வருகிறார் .ஆனாலும் ரசிகனின் நெஞ்சம் நிறைய மறுக்கிறது அவரது நடை , உடை , பாவனை கண்டு. படத்தில் பாடல் காட்சிகளில் மட்டுமே இவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ள தென்பது அய்யோ பாவம்!


கூத்து கலைஞராக வரும் பாலாசிங் வழக்கம் போலவே தனது உருக்கமான நடிப்பால் ரசிகனை உருக்குகிறார். இவரது மகளாக வந்து ஜமீனுக்கு ஒரு மகனை பெற்று போட்டு மரணத்தை தழுவும் அம்மு, ஒருசில காட்சிகளே வந்தாலும், கச்சிதமாக நடித்திருக்கிறார்.


சம்பத்ராம்., தாய் மாமனாக வில்லத்தனத்தில் கூத்துக் கலைஞர்களை மட்டுமல்ல ரசிகனையும் விரட்டுகிறார், மிரட்டுகிறார். இவரது, ஜோடியாக மாஜி நாயகி யுவராணியும் ஜமீன்தாரினியாக ரொம்ப நாளைக்கப்புறம் கலக்கியிருக்கிறார்.


இப்படத்தின் இயக்குனர் 'காதல்' சுகுமார் இப்படத்தில் நடிக்காமல் படத்தில் கிராமத்து போராளி இயக்குனராக வரும் நடிகர் மனோவுக்கு, சுகுமார் எனப் பெயர் சூட்டி., டைரக்டர் டச் கொடுக்க நினைத்திருக்கிறார்.


ஸ்ரீகாந்த் தேவா இசையில் பாடலாசிரியர் முருகன் மந்திரத்தின் மகராசி .... , விடியாத இரவிங்கு .... , ரெட்டசடக்காரி ... , தலைவா தலைவா... உள்ளிட்ட பாடல்கள் தாளம் போட வைக்கும் ராகம். ஆனால், பின்னணி இசை பின்னி பெடலெடுக்கவில்லை... என்பது பலவீனம். வில்லியம்ஸ்ஸின் ஒளிப்பதிவும் ரசிகனை பெரிதாக ஈர்க்கவில்லை... என்பது மேலும் பலவீனம் .


இயக்குனர் 'காதல்' சுகுமார், இன்றைய நிலையில் ., வாழ்வாதரத்திற்கு போராடும் கூத்துக் கலைஞர்களின் வலியையும், வேதனையையும் இந்தபடத்தில் பெரிதாக காட்ட நினைத்திருக்கிறார். ஆனால், சொல்ல வந்த விஷயத்தை விட்டு விட்டு, ரொம்பவும் விலகி, பிள்ளையில்லாத ஜமீன்தாரினி, ஜமீன் பிரிதொரு பெண்ணுடன் தொடர்பு கொண்டு கரு உண்டானால், ஜமீன்தாரினிக்கும் கரு உண்டாகும் ... எனும் முன் பாதி லாஜிக் இல்லாத கதையும், ஏழ்மை நிலையில் உள்ள ஊரே... ஒன்று சேர்ந்து திரைப் படத்தயாரிப்பில் ஈடுபடும் பின் பாதி பித்தலாட்டக் கதையும் ரசிகனை ரொம்பவே சோதிக்கின்றன.


ஆகமொத்தத்தில் 'சும்மாவே ஆடுவோம்' - தியேட்டரில் ரசிகனை சும்மாவே தூங்குவோம்" என கிண்டலாக சொல்ல மட்டுமல்ல செய்யவும் வைக்கிறது! பாவம்!வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)
Advertisement
தொடர்புடைய படங்கள்

மேலும் விமர்சனம்

 • டாப் 5 படங்கள்

 • Advertisement
  dinamalar-advertisement-tariff

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2023 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in