நடிகர்கள் ; துல்கர் சல்மான், ஷான் ரோமி, வினாயகன், சௌபின் சாஹிர், டாம் சாக்கோ, அலான்சியர் லே மற்றும் பலர
டைரக்சன் ; ராஜீவ் ரவி
எண்பதுகளில் எர்ணாகுளம் டவுன் அருகில் இருந்த கம்மட்டி பாடம் என்கிற பகுதியை சேர்ந்த முரட்டு இளைஞர்களின் கதை தான் இந்தப்படம்.
வயிற்றில் கத்திக்குத்துப்பட்ட நிலையில் பேருந்து ஒன்றை மறித்து ஏறி ஜன்னலோர இருக்கையில் அமரும் துல்கர் சல்மானின் நினைவலைகள் தான் முழுப்படமும். கம்மட்டிப்பாடம் பகுதியில் சிறுவர்களாக இருந்த துல்கரும் வினாயகனும் நெருங்கிய நண்பர்கள்.. ஒடுக்கப்பட்ட மக்களான இவர்களுக்கு சிறுவயதில் இருந்தே யார் ரவுடியிசம் பண்ணுகிறார்களோ அவர்களை விட் ஒருபடி மேலே சென்று அவர்களை அடக்கவேண்டும் என்பதுதான் லட்சியம்.. விநாயகனின் அண்ணன் தான் இவர்களது குரு..
இளைஞர்களாக வளர ஆரம்பிக்கும்போதே சின்னச்சின்ன தவறுகளை செய்து, கிட்டத்தட்ட கூலிப்படை ஆட்கள் போலவே மாறிவிடுகிறார்கள். இதில் கள்ளச்சாராயம் கடத்துவதில் ஏற்பட்ட தகராறில் விநாயகனின் அண்ணனை கொல்கிறார் சாராய வியாபாரி டாம் சாக்கோ, பதிலுக்கு அவர்களை பழிதீர்க்க முயல்கிறார்கள் துல்கர் சல்மானும் வினாயகனும். இதில் குத்துயிராக சாக்கோ, தப்பிக்க, போலீஸ் இவர்கள் இருவரையும் தேடுகிறது.. இதனால் மும்பைக்கு சென்று செட்டிலாகிறார் துல்கர் சல்மான்.
பல வருடங்கள் கழித்து வினாயகத்திடம் இருந்து மும்பையில் இருக்கும் துல்கருக்கு போன்கால் ஒன்று வருகிறது. வினாயகத்திற்கு ஏதோ ஆபத்து என உணரும் துல்கர் நண்பனை தேடி எர்ணாகுளம் வருகிறார்.. அவர் நினைத்தது போலவே நண்பன் மிஸ்ஸிங்.. வினாயகத்தை தேடும் முயற்சியில் சில அதிர்ச்சி தகவல்கள் துல்கருக்கு கிடைக்கின்றன. ஆனால் இறுதியில் வினாயகன் கிடைத்தாரா..? துல்கரை கத்தியால் குத்தியது யார் என்பதற்கு விடை சொல்கிறது க்ளைமாக்ஸ்.
படிப்பறிவு இல்லாத, ஒடுக்கப்பட்ட மக்களின் குழந்தைகள் சரியான வளர்ப்பு இல்லாததாலும், தொடர்ந்து அடக்குமுறையை விரும்பாததாலும் எப்படி ரவுடிகளாக மாறுகின்றனர், அதனால் அவர்கள் வாழ்க்கையின் பொக்கே எப்படி மாறுகின்றது என்பதுதான் முழுப்படமுமே.. துல்கர், வினாயகன் இருவரின் பங்களிப்பை வார்த்தைகளால் அளவிடமுடியாது.. ஒவ்வொரு காலகட்டத்தையும் சரியாக தனது தோற்றத்தில் பிரதிபலிக்க பலவித கெட்டப் மாற்றங்களை கையாண்டு இருக்கிறார் துல்கர். என்றாலும், துல்கரை விட ஒருபடி விஞ்சி நிற்கிறார் வினாயகன்.
படத்தில் துல்கர், வினாயகன், விநாயகனின் அண்ணன், அவரது தந்தை என பாத்திரங்கள் அனைவருமே யதார்த்த மனிதர்களாகவே நமக்கு தெரிகின்றனர். இயக்குனர் ராஜீவ் ரவியின் நேர்த்தியான உழைப்புக்கு சான்றும் அதுதான். தெற்றுப்பல் தெரியும்படி, நரைத்த தாடி மீசையுடன் வலம் வரும் வினாயகனாகட்டும், அவரது பால்ய காலத்தை பிரதிபலிக்க சின்ன வயது சிறுவன் ஒருவனை சரியாக தேர்வு செய்து இருப்பதாகட்டும்.. கதாபாத்திர தேர்வில் ரொம்பவே மெனக்கெட்டு இருக்கிறார் ராஜீவ் ரவி.
விநாயகனின் அண்ணன் பாலாவாக நடித்திருப்பவர், விசுவாசம், ரோஷம், தன்மானம் எல்லாம் கலந்த கலவையாக நடிப்பில் மிரட்டுகிறார். கதாநாயகிய வரும் ஷான் ரொமியை சத்தியம் செய்தாலும் கதாநாயகி என ஒப்புக்கொள்ள மாட்டீர்கள்.. அந்த அளவுக்கு யதார்த்தமான அழகுட இயல்பான கிராமத்து சிறுமியாக நடித்துள்ளார். காமெடியாக பார்த்துவந்த சௌபின் சாஹிர் இதில் கராத்தே ஸ்டெப்ஸ் போட்டு அதிர வைக்கிறார்.. படம் முழுதும் அமைதியாக வரும் டாம் சாக்கோ க்ளைமாக்ஸில் காட்டும் வில்லத்தனம் சூப்பர்.
கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் ஓடும் படத்தில் பிளாஸ்பேக், அதற்குள் ஒரு பிளாஸ்பேக், மீண்டும் அதில் இருந்து நடப்பு நிகழ்வுக்கு திரும்பி வருவது என்கிற பிராசஸ் அடிக்கடி நடப்பதால் கவனமாக பார்த்தால் மட்டுமே அது எந்த காலகட்டம் என்பதை நம்மால் கண்டுபிடிக்க முடிகிறது. படத்திற்கு இது(வும்) ஒரு மைனஸ்.. வயலன்ஸ் அதிகம் கொண்ட, முழு நீள கேங்க்ஸ்டர் கதை என்பதால் தாய்மார்களின், குழந்தைகளின் ஆதரவும் இந்தப்படத்திற்கு கிடைப்பது அரிதுதான்..
கம்மட்டி பாடம் : துல்கரின் கேரியரில் இது முக்கியமான படம்.. ஆனால் துல்கரின் ரசிகர்களுக்கு அல்ல..!