நடிகர்கள் : துல்கர் சல்மான், சாய்பல்லவி, செம்பான் வினோத், சௌபின் சாஹிர், விநாயகம்
இசை : கோபி சுந்தர்
கதை : ராஜேஷ் கோபிநந்தன்
டைரக்சன் : சமீர் தாஹிர்
மூன்று வருடங்களுக்கு முன் வெளியான 'நீலாகாசம் பச்சக்கடல் சுவண்ண பூமி' படத்தை தொடர்ந்து துல்கர் சல்மான் - சமீர் தாஹிர் இருவரும் மீண்டும் இணைந்துள்ள படம் இது. 'கலி' என்றால் மூக்கின் மேல் முணுக்கென எட்டிப்பார்க்கும் கோபம் என்று அர்த்தம்.
தனியார் வங்கியில் வேலைபார்க்கும் துல்கர் சல்மான், கல்லூரியில் உடன் படித்த சாய்பல்லவியை காதல் திருமணம் செய்கிறார். சிறுவயதில் இருந்தே சட் சட்டென கோபவசப்படும் துல்கருக்கு நண்பர்கள் யாரும் தன்னை தோளில் தட்டினால் கூட பிடிக்காது. திருமணத்திற்கு பிறகும் இந்த முன்கோபம் தொடரவே கணவன் மனைவி இருவருக்கும் இதனால் சிறு சிறு மனஸ்தாபங்களும் ஏற்பட தவறவில்லை.
தனது சகோதரன் திருமணத்திற்காக இருவரும் ஊருக்கு கிளம்ப முடிவுசெய்யும் வேளையில், முதல்நாள் இரவு வழக்கம்போல இருவருக்கும் சண்டை வரவே, கோபத்துடன் வீட்டை விட்டு கிளம்புகிறார் சாய் பல்லவி.. சிறிதுநேரத்தில் பின்தொடர்ந்து வரும் துல்கர் அவரை சமாதானப்படுத்தி காரில் ஏற்றி அப்படியே சாய் பல்லவியின் ஊருக்கு பயணப்படுகிறார்கள். ஆனால் அந்த நள்ளிரவு பயணம் அவர்களுக்கு பயங்கரமான அனுபவங்களை தரும் என அவர்கள் இருவரும் கனவிலும் நினைத்திருக்கமாட்டார்கள் தான்.
போகும் வழியில் இவர்களை உரசுவதுபோல் லாரி ஒட்டிச்செல்கிறார் லாரி ட்ரைவர் செம்பான் வினோத். துல்கருக்கு வழக்கம்போல கோபம் வந்தாலும் சாய் பல்லவி அவரை கட்டுப்படுத்த அமைதியாகிறார். வழியில் உள்ள ஹோட்டலில் சாப்பிட நிறுத்துகிறார்கள். அங்கேயும் செம்பான் வினோத் பார்வையாலேயே சாய் பல்லவியை சீண்டுவதுடன், துல்கரை கோபமூட்டுகிறார்
சாப்பிட்ட பின்னர்தான் பர்சில் பணம் இல்லை என்பதும் ரவுடி விநாயகம் நடத்தும் ஹோட்டல் அது என்பதும் துல்கருக்கு தெரியவருகிறது. பணத்தை வைத்துவிட்டு போ என ரவுடிகளுடன் என விநாயகம் கறார் காட்ட, தான் அங்கே பணயமாக இருந்துகொண்டு சாய்பல்லவியை அருகில் உள்ள நகரத்தில் உள்ள ஏ.டி.எம்மில் பணம் எடுத்துவர அனுப்புகிறார் துல்கர்.
அவர் போன சில நிமிடங்களில் செம்பான் வினோத்தும் தனது லாரியை எடுத்துக்கொண்டு சாய் பல்லவியை பின்தொடர்கிறார். இதைக்கண்டு சாய் பல்லவிக்கு ஏதும் ஆகிவிடக்கூடாது என துல்கர் அங்கிருந்து தப்பிக்க முயல, அவரை அடித்து ஒரு அறையில் தள்ளி அடைக்கிறார்கள். அதன்பின் என்ன நடந்தது என்பது விறுவிறு க்ளைமாக்ஸ்.
துல்கர் சல்மான் தான் மாபெரும் நடிகர் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார். இதற்கு முந்தைய படமான சார்லியில் எந்த ஒரு விஷயத்துக்கும் கோபப்படாமல் புன்னகை முகம் காட்டிய துல்கர், இதில் அப்படியே சேஞ்ச் ஓவர் எடுத்திருக்கிறார். படம் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை அவரின் முன்கோபம் குறையவில்லை என்பதுடன் அதன் தீவிரம் படம் பார்க்கும் நம்மையும் தொற்றிக்கொள்கிறது.
துல்கருக்கு ஏற்ற சரியான ஜோடியாக சாய் பல்லவி.. நடிப்பில் எந்த குறையும் இல்லையென்றாலும் 'பிரேமம்' படத்தில் பார்த்த அந்த மலரிடம் இருந்த ஏதோ ஒன்று இதில் மிஸ்ஸிங் ஆகியிருப்பதுபோல தெரிகிறது.
வில்லத்தனம் காட்டவேண்டுமானால் அடிதடி, கத்தி துப்பாக்கி இவையெல்லாம் தேவையில்லை, பார்வை ஒன்றே போதும் என மிரட்டியிருக்கிறார் லாரி ட்ரைவராக வரும் செம்பான் வினோத்.. அடர்ந்த மலைப்பகுதி சாலையில் நள்ளிரவு நேரத்தில் துல்கர் இவரது லாரியை துரத்தும்போதும், இவர் சாய் பல்லவி காரை துரத்தும்போதும் நமக்கு உண்மையிலேயே திக்திக் என்கிறது. விநாயகத்தின் அமைதியான வில்லத்தனம் பலே பலே.
முதல்பாதி பேமிலி, இரண்டாம் பாதி அதற்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத த்ரில்லர் என புது ரூட்டில் கதை பின்னியிருக்கிறார்கள்.. வரவேற்கத்தக்கதுதான் என்றாலும் முதல்பாதிக்கும் இரண்டாம் பாதிக்கும் தொடர்பே இல்லையே என்கிற மிகப்பெரிய கேள்வி தான் படம் முடிந்து வெளியே வரும்போது நமக்கு ஏற்படுகிறது.
போரடிக்காத விறுவிறுப்பான படம் என்றாலும் கூட நல்ல இரண்டு கதைகளை தனித்தனியாக பார்த்தது போன்ற உணர்வு ஏற்படுவது தான் படத்தின் மிகப்பெரிய மைனஸ்.. கதையில் கவனம் செலுத்தி இருக்கலாமே துல்கர்.