Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

அரண்மனை 2

அரண்மனை 2,Aranmanai 2
அரண்மனை வெற்றியை தொடர்ந்து அரண்மனை-2 படத்தை இயக்கியுள்ளார் சுந்தர்.சி.
26 பிப், 2016 - 13:50 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » அரண்மனை 2

தினமலர் விமர்சனம்


பிள்ளைதாச்சி மகளையும், அவளது புருஷனையும் ஜாதி கௌரவத்திற்காக துடிக்க, துடிக்க கொல்லும் ஜமீனையும், அவரது வாரிசுகளையும்... பழி தீர்க்க களம் இறங்கும் ஜமீன் மகளின் ஆத்மா சாந்தி அடைந்ததா.?, இல்லையா..? என்பது தான் அரண்மனன - 2 திரைப்படம்.

கதாநாயகர்ளாக சுந்தர்.சி, சித்தார்த், சூரி(?), வைபவ் (கெஸ்ட் ரோல்) உள்ளிட்டோர் நடிக்க, கதாநாயகியர் த்ரிஷா, ஹன்சிகா, பூனம் பஜ்வா உள்ளிட்டோருடன் இப்படத் தயாரிப்பாளர் குஷ்புவும் ஒற்றைபாடலுக்கு ஆட பிரமாண்ட பேய் படமாக சுந்தர்.சி இயக்கத்தில் வெளிவந்திருக்கிறது அரண்மனை - 2.

கதைப்படி, ஜமீன்தார் ராதாரவி, அவரது மூத்த மகன் சுப்புபஞ்சு, இளைய மகன் சித்தார்த், சித்தார்த்துக்கும் முறைப்பெண் த்ரிஷாவுக்கும் திருமணம் பேசி முடித்து, அது நடக்க இருக்கும் சூழலில் ஜமீனுக்குள் கிராபிக்ஸ் புண்ணியத்தில் மிகவும் பிரமாண்டமான கெட்ட சக்தி ஒன்று புகுந்து, ஜமீன் ராதாரவியை படுத்த படுக்கையாக்கிறது. சித்தார்த்தை அவர், செய்யாத கொலைக்காக போலீஸ் லாக்-அப் பில் தள்ளுகிறது, சுப்பு பஞ்சுவின் மகனை தண்ணீருக்குள் தள்ளி மூழ்கடிக்கிறது, சுப்புவையும், ஜமீனின் டிரைவர் ராஜ் கபூரையும் தீர்த்து கட்டுகிறது.

இத்தனை பிரச்சனைகளுக்கும் காரணம் யார்.?, ஜமீன் குடும்பம் அத்தனை பிரச்சனையில் இருந்தும் தப்பி பிழைத்ததா.?, இப்பட இயக்குனரும், இப்பட கேரக்டர் படி த்ரிஷாவின் அண்ணனுமான சுந்தர்.சி., ஜமீன் குடும்பம் பிரச்சினைகளில் இருந்து மீள எவ்வாறு உதவுகிறார்?, இப்படத்தில் சூரியின் ரோல் என்ன?, ஹன்சிகா யார்..? என்பது உள்ளிட்ட இன்னும் பல கேள்விகளுக்கு மிரட்டலாக பதில் சொல்ல முயன்று, அதில் பாதி வெற்றியும், மீதி தோல்வியும் கண்டிருக்கிறது அரண்மனை-2 படத்தின் மீதிக்கதை!

சுந்தர்.சி இயக்கத்தில், அரண்மனை தந்த வெற்றி, அரண்மனை-2 விலும் அதே சாயலை? தரும்படி காட்சிப்படுத்தப்பட்டிருப்பது பலமா?, பலவீனமா..? இயக்குனருக்கே வெளிச்சம்!

கதாநாயகர்களாக சுந்தர்.சி, சித்தார்த் இருவரும் போட்டி போட்டு நடித்திருக்கின்றனர். இவர்கள் இருவரைக் காட்டிலும் காமெடி ஹீரோவாக சூரி ஜெயித்திருக்கிறார்.

செட்டப் பண்ணலாமுன்னு பார்த்தா இந்த கெட்அப் கெடுத்துடுச்சே.., தேனே கையில் தானா வந்து விழும் போது நக்கிடணும்....." எல்லோரும் பேய பார்த்தா ஒண்ணுக்கு போவாங்க, உன் தங்கச்சி பேய் கூடவே ஒண்ணுக்கு போறாளே... என்பது உள்ளிட்ட சூரியின் டைமிங் டயலாக்குகள் தியேட்டரை விட்டு வந்த பின்னும் கிச்சு கிச்சு சிரிப்பு கிளப்பும் ரகம். இதுவே இப்படத்தின் பெரும் பலம்!

சிறப்பு தோற்றத்தில் ஹன்சிகாவின் ஆத்துக்காரராக வைபவ் ஐயோ பாவம் (ஆமாம், பழி வாங்கும் பேய்கள் பெரும்பாலும் பெண் பேய்களாகவே இருக்கும் ரகசியம் என்ன? ஏன், வைபவின் ஆவி ஹன்சிகாவின் ஆத்மாவுடன் சேர்ந்து பழிவாங்கத் துடிக்கவில்லை.?)

பேய் கதாநாயகியாக ஹன்சிகா பின்பாதியில் பீதியூட்டுகிறார். த்ரிஷா, முன் பாதியில் ஆவி, பேய் மிரட்சியுடனும், பின் பாதியில் ஹன்சின் ஆவியை உடம்பில் தாங்கி மிரட்டலாகவும் நடித்திருக்கிறார். இவர்களைக்காட்டிலும் கவருகிறார் சேச்சி உதவியாளராக வரும் பூனம் பாஜ்வா.

குளோசப்பில் கோவைசரளா, சூரியிடம் மிதி வாங்கியும் எழுந்திருக்காது படுத்த படுக்கையாய் ராதாரவி, மாந்தரீகர் ஆடுகளம் ஜெயபாலன், அவர் உதவி தளபதி தினேஷ் உள்ளிட்டோர்... சித்ரா லட்சுமணன், ராஜ் கபூர், சுப்புபஞ்சு, கெளதம், இயக்குனர் சு.சியின் ஆஸ்தான விச்சு, வினோதினி உள்ளிட்ட எல்லோரும் பிரமாண்ட கிராபிக்ஸ் பேயைக் காட்டிலும் குளோசப்பில் அடிக்கடி வந்து பயமுறுத்துகின்றனர். அதிலும் குறிப்பாக கோவை சரளாவின் குளோஸப்பும், க்ளைமாக்ஸில் குஷ்புவின் சாமிபாட்டு பேயாட்டமும், ரொம்பவே பயமுறுத்துகின்றன.

ஹிப் ஆப் தமிழாவின் இசையில் குச்சிமிட்டாய் குருவிரொட்டி.... , போறாடா அவ போறாடா... என்னோட ஆசைய மண்ணுக்குள்ள வீசிப் புட்டு... பாடல்கள் படத்திற்கு பலம் சேர்த்தாலும், குஷ்பு ஆடும் பாடல் உள்ளிட்ட புரியாத வார்த்தை பாடல்கள் ரசிகனை கதற விடுவது கொடூரம்!

யு.கே.செந்தில்குமாரின் ஒளிப்பதிவு க்ராபிக்ஸ், சி.ஜி உதவியில் மேலும் ஜொலித்திருப்பதும், ஆவி பேய்களுக்கான புதுவித க்ராபிக்ஸும் குழந்தைகளைக் கவரும்... பாவம் . பெரியவர்கள். படத்தொகுப்பாளர், என்.பி.ஸ்ரீகாந்த் எங்கு போனார்.? என்ன செய்தார்..?என்பது கேள்விக்குறி.

அரண்மனையில் நடித்த ஹன்சிகா, சுந்தர்.சி, கோவை சரளா உள்ளிட்டோருடன் சித்தார்த் - த்ரிஷா, வைபவ், சூரி, பூனம் பஜ்வா உள்ளிட்டவர்களை புதிதாக இணைத்துக் கொண்டு பிரமாண்டமான பேய் படமாக மிரட்டலாக, கூடவே காமெடி படமாகவும் கலக்கலாக, கலர்புல்லாக சுந்தர்.சியின் இயக்கத்தில் இப்படம் வந்திருப்பது அரண்மனை - 2 வின் சிறப்பு.

ஆனால், சுந்தர்.சியின் எழுத்து, இயக்கத்தில் அரண்மனை-2 வை திரையில் பார்க்கும் போதும் அரண்மனையையே மீண்டும் பார்ப்பது போன்ற ப்ரம்மை (உண்மை...) இப்படம் பார்க்கும் போது அடிக்கடிவருவது குறை!

மற்றபடி., அரண்மனை-2 - கொஞ்சம், இளம் ரசிகர்களுக்கு அருவை ண்ணே..., குழந்தைகளுக்கு அருமைண்ணே... ஹீ... ஹீ..!

----------------------------------------------------


குமுதம் திரைவிமர்சனம்

இந்த பேய்ப்பட சீசனில் எல்லோரும் பேயைக் காட்டி பயமுறுத்திக் கொண்டிருக்க, இதோ குழந்தைகளும் பார்க்கும்படி ஜாலியான பேய்கள் என்று புகுந்து விளையாடியிருக்கிறார் சுந்தர்.சி. (அம்மன் பாட்டில் குஷ்பு தோன்றும் போது என்ன ஓர் அப்ளாஸ்!)

கதை?

அரண்மனையில் சிலரை ஒரு பேய் கொலை செய்கிறது. யார் அந்தப் பேய்? ஹன்ஸிகா! அந்த அழகுப் பேய் இன்னொரு அழகியான த்ரிஷா உடலிலும் புகுந்து கொள்ள ஏன்? என்ன காரணம்? யாராவது தப்பித்தார்களா? என்பதை கௌரவக் கொலை பினனணியில் காமெடி ப்ளஸ் கவர்ச்சி என்று சரிவிகிதத்தில் கலந்து ஆவி பறக்க சூடான ஃபில்டர் காஃபியாகத் தந்திருக்கிறார்கள்.

நயன்தாரா போல இன்றைக்கும் நச்சென்று இருக்கிறார் த்ரிஷா. ரொமான்ஸ் காட்சிகளாகட்டும் (காஸ்ட்யூமர் யாருப்பா!) பேயாக மாறும்போது காட்டும் அதிரடியாகட்டும்.. தெறிக்கவிட்டிருக்கிறார்.

கொஞ்ச நேரமே வந்தாலும் ஹன்ஸிகா க்யூட்டி! ஜாதி மாறிக் கல்யாணம் பண்ணிக் கொண்டதால் கொல்லப்படும் காட்சியில் மனதில் பதிகிறார்.
சித்தார்த் ஓ.கே.!

நர்ஸாக வரும் பூனம் புஸ்புஸ்வா!

ரொம்ப நாள் கழித்து ராதாரவி கெத்து காட்டியிருக்கிறார். பெற்ற மகளையே விஷம் கொடுத்து, கழுத்தை நெரிக்கும் காட்சியில் அவரது அனாயாசமான முகபாவம் கொல்லுகிறது!
இது சூரி சீசன் போல. அவர் எதைச் சொன்னாலும் சிரிக்கிறார்கள்.

கவுண்டமணியுடன் ஜோடி போட்டார் கோவை சரளா. அப்புறம் வடிவேலுவுடன். இப்போது சூரியுடன். அந்த முதிர் காதல் காட்சிகள் புன்னகை!

வசனம் கலகல. எல்லாரும் பேயைப் பார்த்தா ஒண்ணுக்குப் போய்டுவாங்க. ஆனா உன் தங்கச்சி பேயோடவே ஒண்ணுக்கு போறாளே!

வாகனத்தில் பேயுடன் எல்லோரும் பயணம் செய்வது காமெடி சரம். த்ரிஷாவுக்குத்தான் பேய் பிடித்திருக்கிறது என்பது தெரியாமல் சரளா அவருடனேயே ஜோடி போடுவது ஹாஹா!
ஹிப்ஹாப் ஒரே பாதையில் செல்கிறது. கவனம் தமிழா!

செந்தில்குமாரின் கேமராவும், பேய்களின் சி.ஜியும் செமை.

அரண்மனை 2 - சிரிப்புப் பேய்கள்!

குமுதம் ரேட்டிங் - ஓக


------------------------------------------------------




கல்கி சினி விமர்சனம்


'ஒரு கதாபாத்திரம் அநியாயமாகக் கொல்லப்படும்; பிறகு அது ஆவியாகிப் பழிவாங்கும்' என்ற தாமஸ் ஆல்வா எடிசன் காலத்துக்குக் கதையில் துளிகூட மாற்றமில்லாமல் வந்திருக்கும் இன்னொரு படம்தான் 'அரண்மனை 2'.


சந்திரமுகி படத்தின் சில காட்சிகளை மீண்டும் பார்க்கும் உணர்வு. அதில் ரஜினி. இதில் சுந்தர்.சி. அதில் ஜோதிகா. இதில் த்ரிஷா. அதிலும் ஒரு மாந்திரீகர். இதிலும் ஒரு மாந்திரீகர்.


அரண்மனைக் காட்சிகள், அம்மன் சிலை பெயர்ப்பு மற்றும் கும்பாபிஷேகக் காட்சிகள் பிரம்மாண்டம். சிக்கனத்தையும் கடைப்பிடித்திருக்கிறார்கள் - கதாநாயகி மற்றும் பெண்களின் உடை விஷயத்தில்.


கதாநாயகன் அணிந்திர்கும் கண்ணாடியைத் தனது கால் விரல்களால் கதாநாயகி கழற்றும் காட்சியில் இயக்குநரின் 'மாற்றி யோசிக்கும் திறன்' புரிகிறது.


பேய்ச் சேட்டைகள் தொடர்ந்து ராவடி செய்யும் காட்சிகள் அடிக்கடி உண்டு. ஆனாலும் ரசிகர்கள் மிகவும் பயந்துபோய் உட்கார்ந்திருப்பது, கோவை சரளாவின் குளோஸ்அப் காட்சிகளிலும், கட்டக் கடைசியில் குஷ்பு ஆடும் நடனத்தின்போதும்தான்! பேயின் உச்சந்தலையில் மை தடவச் சொல்வது ஏன் என்ற அந்த நம்பூதிரிதான் சொல்ல வேண்டும். அவர் செய்யும் பூஜைக் காட்சி பயத்தை உண்டாக்குவதற்குப் பதில் சிரிப்பைத்தான் வரவழைக்கிறது.


சூரியின் அபத்த நகைச்சுவைக் காட்சிகளில் ரசிகர்கள் பேயறைந்தது போல உட்கார்ந்திருக்கிறார்கள். கொல்ல வேண்டும் என்று தீர்மானித்த பேய், ராதா ரவியை ஒரே போடாகப் போடாமல் ஏன் முதலில் கோமா ஸ்டேஜூக்கு கொண்டு செல்கிறது என்பது அந்தப் பேய்க்கே வெளிச்சம்.


சித்தார்த்தின் இளமையான தோற்றம், அலட்டாத நடன அசைவுகள், துல்லியமான ஒலிப்பதிவு ஆகியவற்றுக்கு ஒரு ஜே! ராதாரவிக்கு சூரி மசாஜ் செய்யும் காட்சி ரசனையோ ரசனை!

மனோரமா, இளவயது சத்யராஜிடம் வழிவதைப் போன்ற நடிகன் படக் காட்சிகளை நினைவூட்டுகின்றன சரளா- சூரி நகைச்சுவை!


பாடல் காட்சி ஒன்றில் சில சமயம் சித்தார்த்தின் வாய் அசைகிறது. சில சமயம் பாடல் மட்டும் ஒலிக்கிறது. புதுமையாக இருக்குமோ?


படம் முடிந்து வெளியே வரும் தறுவாயில் பக்கத்தில் இருந்தவரிடம் கேட்டேன். எல்லாம் சரிதான் சார்! டிரைவரைக் கொலை செய்ததாக சித்தார்த் மேலிருக்கும் கேஸ் என்னாச்சுனு காண்பிக்கவே இல்லையே? அவர் கோரைப் பல்லைக் காட்டி கொடூரமாகச் சிரித்தார். ஓடியே வந்துவிட்டேன்.


அரண்மனை 2 - பேஸ்மெண்டும் பில்டிங்கும் வீக்!



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in