தினமலர் விமர்சனம்
கார் டிரைவரும் கார் ஓட்ட கற்று தருபவருமான விக்ரம் சாகஸக்காரர். 10 எண்றதுக்குள்ள டிரைவிங்கில் மட்டுமல்ல சகலத்திலும் சளைக்காமல் சாகஸங்கள் செய்யக் கூடியவர். சின்ன, சின்ன கார் கடத்தல், சேஸிங் எல்லாம் செய்து அதிக பணம் சம்பாதிக்கும் அவரிடம், உத்தரகாண்ட் வரை ஒரு காரை கிளப்பிக் கொண்டு செல்ல அவரை நம்பி பொறுப்பு ஒப்படைக்கிறார் பசுபதி. காரில் விக்ரமிடம் டிரைவிங் கற்றுக் கொள்ள வந்த சமந்தா இருக்கிறார் என்பது தெரியாமலே காரை கிளப்பும் விக்ரம், தான் கடத்துவது காரை அல்ல, சமந்தாவை என்பது தெரிந்து கொள்ளும் போது படம் பரபரப்பாகிறது. அதன்பிறகு விக்ரமின் ஆக்ஷ்ன் அதிரடி தான் 10 எண்றதுக்குள்ள மொத்த படமும்!
ஓப்பனிங்கே சரியில்லை... என்று ஒப்பனிங்கில் பசுபதி பேசுவது, எதுவுமே சரியில்லை என... பின்பாதி தொடக்கத்தில் விக்ரம் பேசுவது .... உள்ளிட்ட இப்படத்தில் இடம் பெறும் டயலாக்குகள் மாதிரியே படமும் இருப்பது சற்றே பொறுமையை சோதிக்கிறது.
மற்றபடி, 1 1/2 லிட்டர் டீஸல் திருடியிருப்பானோ... இல்லையோன்னு... சந்தேகமா பாக்ற முதலாளிகிட்டே எத்தனை நாள் வேலை பர்க்குறது.? என கேஷுவலாக பேசியபடி ஆக்ஷனில் இறங்கும் விக்ரம், ஒண்ணும் ஒண்ணும் இரண்டு.... , பேரை கேட்டா பேஜாரு பண்ற... நான் பாஞ்சா புல்லட்டு தான்... ட்ரூம், ட்ரூம்... ஆனாலும் இந்த மயக்கம் கூடாது... உள்ளிட்ட பாடல்களில் சமந்தா, ஷார்மி? உள்ளிட்டவர்களுடன் நல்ல, கெட்ட ஆட்டம் போடும் போதும் அப்ளாஸ் அள்ளுகிறார்.
ஓவ்வொரு முறை விக்ரமின் பெயர் கேட்கப்படும் போதும் விக்ரமோ, வேறு யாருமோ அவர் பெயரை பின்லேடன், ஜேம்ஸ் பாண்ட் சுனில் கவாஸ்கர், ராபின் ஹூட், மணிரத்னம், ஏ.ஆர்.முருகதாஸ் என பில்டப் கொடுப்பது செம கலாய்ப்பு!
விக்ரம் மாதிரியே நாயகி சமந்தாவும், எங்க ஹாஸ்டலில் இருந்து, என் கூட வந்த 39 பேர் தொலைந்து விட்டனர் ....என பில்டப் கொடுத்து கலாய்ப்பது ... தன் பெயரை ஷகிலா என்னும் போது அம்மா பேரு பரங்கிமலை ஜோதி தான்...?.என முநீஸ்காந்தும், விக்ரமும் கலாய்ப்பதுக்கூட தெரியாமல் இருக்கும் சமந்தா, பின் ஒரு காட்சியில் எல்லாத்தையும் 10 எண்றதுக்குள்ள செஞ்சிடுவியா... ஐய்யய்யே ... என்பது ஓவராக தெரிகிறது.
பசுபதி, கோலி சோடா ஏடிஎம் அம்மணி, சாம் ஆண்டர்சன், முனிஸ்காந்த், இமான் அண்ணாச்சி, உள்ளிட்டவர்களுடன் அந்த முசோரி வில்லனும் அவரது ஆட்களும் கூட அசத்தலாக நடித்துள்ளனர்.
ஸ்ரீகர் பிரசாத்தின் பக்கா படத்தொகுப்பு, டி.இமானின் இனிய இசை உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகளுடன் உத்தரகாண்ட் உயர் ஜாதி, கீழ்ஜாதி பிரச்னையையும் உள்ளே வைத்து 10 எண்றதுக்குள்ள படத்தை ஒளிப்பதிவு செய்து இயக்கி இருக்கும் எஸ்.டி.விஜய் மில்டனின் எழுத்து இயக்கத்தில், 10 எண்றதுக்குள்ள பல விஷயங்களை பேசியிருக்கு ஆனால் ஆயிரம் எண்றதுக்குள்ளயாவது ரசிகனுக்கு இப்படம் புரிய வேண்டுமே என்பதே நம் கவலை!
10 எண்றதுக்குள்ள க்ளைமாக்ஸ்க்கு முந்தைய சமந்தா - விக்ரமின் லிஃப்-டூ-லிஃப் முத்தமும், சமந்தாவின் டபுள் ஆக்டிங்கும் போதும்... எனும் சமந்தா ரசிகனுக்கு போதும் யெஸ்! அதையும் தாண்டி எதிர் பார்ப்பவர்களுக்கு...?
----------------------------------------------------------------
குமுதம் சினி விமர்சனம்
டிரைவிங் பள்ளியில் பணிபுரியும் விக்ரம் எதையும் 10 எண்றத்துக்குள்ள செய்து முடித்துவிடுவார். அது காதலாக இருந்தாலும் சரி, கார் கடத்தலாக இருந்தாலும் சரி, காதலியைக் கடத்துவதாக இருந்தாலும்சரி. ஆனால் அதையே படம் முழுக்க ஜவ்வாக இழுத்தால் எப்படி?
உத்ரகண்டில் ஒரு கொலைகாரி சமந்தாவுக்குப் பதிலாக சென்னை சமந்தாவை மாட்டிவிடத்தான் அவரை கடத்துகிறார்கள் என்று தெரியும் வரை தலைவலியே வந்துவிடுகிறது.
விக்ரம் சுறுசுறுப்பு. அவர் செய்யும் ஒவ்வொரு விஷயமும் அசத்தல், ஆனால் சதா கார் ஓட்டிக் கொண்டும் சண்டை போட்டுக் கொண்டும் இருப்பதால் அவரது மொத்த நடிப்பும் பயனில்லாமல் போகிறது.
சமந்தா அழகு கொஞ்சம் நடிக்கவும் செய்கிறார். ஆனால் ஜெனிலியா டைப் கொஞ்சல் பேச்சு சகிக்க முடியவில்லை. வில்லி வேடம் வீண். பசுபதி என்றாலே காமெடி வில்லன் என்று முத்திரை குத்திவிட்டார்கள். ராமதாஸ், ராகுல்தேவ், அபிமன்யுசிங் என்று நிறையபேர் வில்லன்களாக நடித்திருக்கிறார்கள். ஆனால் வில்லத்தனம்தான் நஹி.
இமான் இசை சுமார் ரகம். 'ஆனாலும் இந்த மயக்கம்' மட்டும் ரசிக்க வைக்கிறது. படத்தில் எடிட்டர் நிறையவே கத்திரி போட்டிருக்கலாம். கார் சேஸிங் ஓகே. சண்டைக் காட்சிகளில் கிராஃபிக்ஸ் காட்டிக் கொடுக்கிறது. படத்தின் ஒரே ப்ளஸ் கேமராதான். வட இந்தியாவையும் சென்னையையும் அழகாகக் காட்டியிருக்கிறார்.
கோலிசோடாவில் மிரட்டிய இயக்குநர் விஜய்மில்டன் இதில் திரைக்கதையில் கோட்டை விட்டிருக்கிறார். கிளைமாக்ஸ் வரை 'கதை என்னங்க?' என்று கேட்கவைத்து பொறுமையைச் சோதிப்பதால் படம் தள்ளாடுகிறது.
பத்து எண்றத்துக்குள்ள - போதும்டா சாமி
குமுதம் ரேட்டிங் - சுமார்