தினமலர் விமர்சனம்
கரண் நடித்த 'காத்தவராயன்' படத்தை இயக்கிய சலங்கை துரையின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் இரண்டாவது படம்! மற்ற நாயகர்களைக்காட்டிலும் சற்றே உயரம் குறைவென்றாலும் உருண்டு திரண்ட கரணின் சாயலிலேயே தன் இரண்டாவது படத்திற்கும் ஹீரோ வேண்டுமென ஒற்றைக்காலில் நின்று ஹீரோ கதிரை பிடித்திருப்பார் போலும் இயக்குநர்! சில இடங்களில் கரணாகவும், சில இடங்களில் கரணின் 'போன்சாய்' போன்றும் மிரட்டி மிரள வைத்திருக்கிறார் புதுமுகம் கதிர்!
கல்லூரி மாணவி ஹனி ரோஸை, காந்தர்வனாய் கவருகிறார் தண்ணி லாரி டிரைவரான கதிர்! அதே கதிர், ஹனியின் அப்பாவுக்கு, அதே தண்ணி லாரியால் எமனாக தெரிகிறார். பின்பாதியில் எப்படி எமனாக வருகிறார்? என்பதும், இந்த 'காந்தர்வ' காதலர்கள் க்ளைமாக்ஸில் இணைந்தனரா? இறந்தனரா.? என்பதும் தான் 'காந்தவர்ன்' படத்தின் கதை, களம் எல்லாம்!
புதுமுகம் கதிர் முரட்டுதனமாக 'தண்ணி' லாரி டிரைவராக எதிர்படும் எல்லோரையும் அறைவதும், அப்படி அவர் அறைவதாலேயே கதாநாயகி ஹனி ரோஸூக்கு அவர் மீது காதல் வருவதையும் நம்பவும் முடியவில்லை, ரசிக்கவும் முடியவில்லை! கதிர், மிருகமாக நடித்திருக்கிறார். ஹனிரோஸ் அழகு பதுமையாக வாழ்ந்திருக்கிறார். கஞ்சா கருப்பு சரிப்பும், கடுப்பும் மூட்டுகிறார்.
அலெக்ஸபாலின் இசை, அனில் கே.சேகரின் ஒளிப்பதிவு எல்லாம் இருந்தும், இயக்குநர் சலங்கை துரை, வித்தியாசமும், விறுவிறுப்புமான க்ளைமாக்ஸை மட்டுமே நம்பியிருப்பதால் முன்பாதி, பின்பாதி எல்லாம் கண்டுகொள்ளப்படாமல் சற்றே இழுவையாக இழுக்கிறது. அவையும் கண்டுகொள்ளப்பட்டு கதை சொல்லப்பட்டிருந்தால் ''காந்தர்வன் - கவர்ந்திருப்பான் - கவர்ந்திழுப்பான்!''