தினமலர் விமர்சனம்
நடிகர்கள் : ராம், நீரஜா, இளவரசு
இயக்குநர் : குபேர் ஜி
குபேர்.ஜி இயக்கத்தில், சாலை சகாதேவனின் ஒளிப்பதிவில், புதுமுகங்கள் ராம், நீரஜா ஜோடி நடித்து வெளிவந்திருக்கும் படம் தான் ''ஆரண்யம்''.
நண்பர்களுடன் சேர்ந்து ஜாலியாக திருடுவது நாயகர் ராமின் ஜோலி. ஒரு நாள் நாயகி நீரஜாவிடமே, ராம், தன் கைவரிசையைக் காட்ட., காதலுக்கு பரம விரோதியான போலீஸ் இன்ஸ்ஸின் மகளான நாயகி நீரஜா, ராம்மை அப்பாவிடம் பிடித்துக் கொடுக்க முயற்சிக்காமல் தன், அன்பு பிடியில் திருத்த முயற்சிக்கிறார்.
ராம், நீரஜாவின் நெஞ்சாங் கூட்டையும் களவாடுகிறார். அன்புபிடி காதல் பிடியாக இறுகுகிறது ., காதல் கசிந்துருகுகிறது . ஊரார் காதலையே சுட்டு பொசுக்கும் ., பொல்லாத போலீல் அப்பா , சும்மா இருப்பாரா ? மகளின் காதலனை போட்டுத் தள்ள ஆள் , அம்பு ... ஏற்பாடு செய்கிறார். அதிலிருந்து காதல் ஜோடி தப்பியதா ? பொல்லாத போலீஸ் அப்பாவுக்கு தாங்கள் ,போய் சேர்ந்த பின்னாவது பாடம் புகட்டியதா.. ? என்பது தான் ஆரண்யம் படத்தின் கரு , கதை , களம் , காட்சிப்படுத்தல் , ரசிகனைபடுத்தல் ... இத்யாதி , இத்யாதி ... எல்லாம் .
மூக்கும் , முழியுமாக வெள்ளை வெளேர்.... என்று அந்த காலத்து மண் வாசனை பாண்டியன் மாதிரி இருக்கிறார் ஹீரோ ராம். நடிப்பில் இன்னும் கவனம் செலுத்தி பயிற்சி பெற்றால் கிராமிய ஹீரோவாக வருங்காலத்தில் பிரகாசிக்கலாம் .
நாயகி நீரஜா., காசு கொடுத்து நடிக்க வந்த கதாநாயகியா? என கேட்க வைக்கிறார். அட்லீஸ்ட் அந்த சுருள் முடியையாவது இழுத்து கட்டி இரட்டை ஜடை போட்டு தன் பாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கலாம் அம்மணி.
உருக்கமான பாசக்கார அப்பாவாக இளவரசு, பொல்லாத போலீஸ் இன்ஸ்ஸாக ஷாஜியின் அளவுக்கு அதிகமான நடிப்பு, உருப்படி இல்லாத கடி, காமெடி, காமநெடியுடன் சிங்கமுத்து, கிரேன் மனோகர் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.
எஸ்.ஆர்.ராமின் இசையில் சுருதி... சில இடங்களில் தூக்கலாகவும், பாடல்கள் உள்ளிட்ட பல இடங்களில் துரத்தலாகவும் ( ரசிகனை அடிக்கடி வெளியே...) இருப்பது பலவீனம்.
சாலை சகாதேவனின் ஓவிய ஒளிப்பதிவுக்காக ஒரு முறை ஆரண்யத்தை அவசியம் பார்க்கலாம்... எனும் அளவிற்கு, ஒளிப்பதிவு ஒளிர்ந்திருப்பது ஆறுதல்!
குபேர்.ஜியின் எழுத்து, இயக்கத்தில், "போலிஸ்காரர் பொண்ணுக்கு திருடன் மீது லாஜிக்கே இல்லாது மேஜிக்காக வரும் காதல், சுவாரஸ்யமில்லாத பாரஸ்ட் சேஸிங்'', உள்ளிட்ட பலவீனங்களை ஒதுக்கிவிட்டு, சிலீரிட வைக்கும் க்ளைமாக்ஸ் திருப்புமுனையை மட்டும் பலமாக கவனத்தில் கொண்டால் ஆரண்யத்தை ஆராதிக்கலாம். அதுவரை ரசிகர்கள் தியேட்டரில் இருக்க வேண்டுமே!
ஆகமொத்தத்தில், ''ஆரண்யம் - ரசிகர்களுக்கு இன்னும் சற்றே, காருண்யம் காட்டியிருக்கலாம்!''