நடிகர்கள் : உன்னி முகுந்தன், அகன்ஷா பூரி
டைரக்சன் : பேரரசு
மம்முட்டி நடித்து 24 வருடங்களுக்கு முன் மலையாளத்தில் வெளிவந்த சூப்பர்ஹிட் படம் 'சாம்ராஜ்யம்'. இன்னும் சொல்லப்போனால் மலையாளத்தில் முதன்முதலில் நிழல் உலக தாதாக்களின் உண்மையான பக்கத்தை வெள்ளித்திரையில் காட்டிய படம் என்றுகூட சொல்லலாம். அதில் மம்முட்டி அலெக்ஸாண்டர் என்ற கேரக்டரில் நடித்திருந்தார். முதல் பாகத்தில் அலெக்ஸாண்டரான மம்முட்டி இறப்பது போலவும் அவரது மகன் ஜோர்தன் அவனது தாய்மாமாவுடன் செல்லும்போது அந்த காரில் குண்டு வெடிப்பதுபோலவும் முடிக்கப்பட்டிருந்தது.
தற்போது இருபத்தொரு வருடங்கள் கழித்து அதன் இரண்டாம் பாகமாக சாம்ராஜ்யம்-2 ; சன் ஆப் அலெக்ஸாண்டர் படம் வெளியாகி இருக்கிறது. தமிழில் ஆக்சன் படங்களுக்கு பெயர்போன பேரரசு தான் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். முதல் பாகத்தில் இருந்த விறுவிறுப்பை இதில் தக்கவைத்துள்ளாரா பேரரசு..?
சிட்டியில் கடத்தல் தொழிலை செய்து வருகிறார்கள் தேவனும், அவரது மகன் ரியாஸ்கானும்.. திடீரென அலெக்ஸாண்டரின் வாரிசு என என்ட்ரி ஆகும் ஜோர்தன் அவர்களது வியாபாரத்திற்கு இடைஞ்சல் பண்ணுகிறான். அவனை வரவழைத்து கதையை முடிப்பதற்காக, அவனது தாத்தா மதுவை கடத்திவந்து பணயமாக்கி அவனை வரவழைக்கிறார்கள்.
ஜோர்தனும் வருகிறான். ஆனால் அவனது தாத்தாவோ அவன் ஜோர்தன் இல்லை என்கிறார். அப்போது உண்மையான ஜோர்தனான உன்னி முகுந்தன் அங்கே வர, அப்போதுதான் முதலில் வந்தவன் போலீஸ் அதிகாரி என தெரியவருகிறது. கடத்தல்காரர்கள் தப்பித்தாலும் கூட, உன்னி முகுந்தனால் தங்களுக்கு ஆபத்து ஏற்படலாம் என அவரை கொல்ல முயற்சிக்கிறார்கள். அடுத்தடுத்த தாக்குதல் முயற்சிகளில் அவரது தாத்தாவும் மாமாவும் கொல்லப்பட, வெகுண்டு எழும் உன்னி முகுந்தன் எதிரிகளை எப்படி பழி தீர்க்கிறார் என்பதுதான் மீதிக்கதை.
சமீப நாட்களில் இப்படி ஒரு மோசமான ஆக்சன் படம் மலையாளத்தில் வந்ததில்லை என்கிற குறையை தமிழில் இருந்து மலையாளத்திற்கு சென்று நீக்கியுள்ளார் நம்ம ஊரரசுவாகிய பேரரசு. படத்தின் ஆரம்பத்தில் இருந்தே லாஜிக் மீறல்கள் ஆரம்பமாகி விடுகின்றன.. உன்னி முகுந்தனின் பாடிபில்டிங் உழைப்பு எல்லாம் பில்டப் சீன்களிலேயே செலவாகிவிடுகிறது. கதாநாயகி அகன்ஷா பூரி தன் பங்கிற்கு தானும் போலீஸ் ஆபீசர் என சீக்ரெட் சஸ்பென்ஸ் ஏற்றுகிறார்.
எதிரிகளும் ஹீரோ தரப்பினரும் ஒருவரை ஒருவர் கொல்ல வலைவீசி தேடுகிறார்கள்.. ஆனால் நேரில் பார்த்தால் பக்கம் பக்கமாக வசனம் பேசி சவால் விட்டுவிட்டு கிளம்புகிறார்கள். திரும்பவும் வில்லன்கள் அவர்கள் இடத்தில் உட்கார்ந்து கொண்டு ஹீரோவை கொல்ல திட்டம் போடுகிறார்கள்.. தேவையில்லாத நேரத்தில் சம்பந்தம் இல்லாத மனிதர்களை சுட்டுக்கொல்கிறார்கள்.. துப்பாக்கிக்கு வேலை வைக்கவேண்டிய நேரத்தில் தேமே என நிற்கிறார்கள். ஷ்..அப்பா.. தாங்க முடியலை சாமி.
ஆனால் சண்டைக்காட்சிகளில் உக்கிரம் காட்டி படமாக்கியுள்ளார் பேரரசு. போதாக்குறைக்கு வழக்கம்போல ஒரு கட்சியில் தோன்றி பஞ்ச் டயலாக்கும் பேசி திருப்திப்பட்டுக்கொள்கிறார். தவிர தனது பாணியில் பேரரசு சில டிவிஸ்ட்டுகள் வைத்தாலும் திரைக்கதையில் இருக்கும் ஓட்டைகளால் அந்த சுவாரஸ்யமும் குறைந்துவிடுகிறது. பேரரசுவின் முந்தைய திருப்பாசி, சிவகாசி படங்களை பார்த்து ரசித்த மலையாள ரசிகர்களுக்கும், மம்முட்டி நடித்த சாம்ராஜ்யம் படத்தை ஆசை தீர கண்டுகளித்த ரசிகர்களுக்கும் ஏமாற்றத்தையே பரிசாக தந்துள்ளார் பேரரசு.