தினமலர் விமர்சனம்
முனி -1, முனி -2 என்று பேய், பிசாசு , மந்திரம், தந்திரத்தை நம்பி ஜெயித்த ராகவா லாரன்ஸ்., முனி - 3வது பகுதியாக காஞ்சனா -2 ம்பகுதியை, ரசிகர்களை நம்பி இயக்கி நடித்திருக்கிறார். அதுவே "முனி-3 காஞ்சனா-2" திரைப்படமாகும்!.
கதைப்படி., கணவன் மனைவியான பானுசந்தரும், சுகாசினியும் இணைந்து நடத்தும் கிரீன் டிவியில், நிகழ்ச்சி தயாரிப்பாளர் கம் இயக்குநர் நாயகி டாப்ஸி, முன்னணி ஒளிப்பதிவாளர் நாயகர் ராகவா லாரன்ஸ்.
முதல் இடத்தில் இருந்த இவர்களது தொலைக்காட்சி, இன்னொரு தொலைக்காட்சியின் கடவுள் கப்சா கலாட்டா நிகழ்ச்சிகளால் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்படுகிறது. இதனால்ல, கோபத்தின் உச்சத்திற்கு போகும் பானுசந்தரை சாந்தப்பபடுத்திவிட்டு, நிர்வாக பொறுப்பேற்கும் சுகாசினி, கிரீன் டிவியை மறுபடியும் தான் முதல்நிலைக்கு கொண்டு வருகிறேன்...என சபதம் ஏற்கிறார். போர்டு மீட்டிங் போடப்படுகிறது. தங்களை பின்னுக்கு தள்ளிய டி.வி.யை பின்னுக்குத்தள்ளி முன்னுக்கு வர யோசனைகள், ஆலோசனைகள் விவாதிக்கப்படுகிறது.
அப்போது டாப்ஸி சொல்லும் ஆலோசனை ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அது., போட்டி டி.வி. கடவுள் கலாட்டா கப்சாக்களை அள்ளிவிட்டு முன்னணிக்கு வந்ததற்கு போட்டியாக, நாம் பேய், பிசாசுக்களை படம்பிடித்து முன்னணி இடத்தைப்பிடிப்போம்...எனும் ஆலோசனைதான்.
அதன்படி, ஈ.சி.ஆரில் இருக்கும் ஒரு கடற்கரையோர பாழடைந்த பங்களாவிற்குள் பேய் இருப்பதாக செய்தி கிளப்பி பீதியை கிளப்புவோம்...என டாப்ஸி தலைமையில் ஒரு குழு கிளம்புகிறது. அதில் பேய் என்ற வார்த்தையை கேட்டாலே, பெட்டிலேயே உச்சா போகும் ராகவா லாரன்ஸ் தான் கேமராமேன். ஸ்ரீமன், மயில்சாமி, சாம்ஸ், மதுமிதா, பூஜா உள்ளிட்டோர் சககுழுவினர். பொய்யாக பேய் இருப்பதாக பில்-டப் செய்து, தங்களது டி.வி.யின் நிலையையும், டி.ஆர்.பி. ரேட்டிங்கையும் ஏற்ற சென்ற இவர்களை அந்த பாழடைந்த பங்களாவிற்குள் இருக்கும் மெய்யான பேய்கள் பயமுறுத்துவதும், அதை இவர்கள் படம்பிடிப்பதும், மெய் பேய்களின் இந்த நிலைக்கு காரணம் என்ன? என அறிந்து பரிகாரங்கள் செய்து சாந்தப்படுத்துவதும், இழந்த தங்களது டி.வி.யின் நிலையை இறுதியில் தூக்கி நிறுத்துவதும் தான் முனி- 3 காஞ்சனா -2 திரைப்படத்தின் சிரிப்பும், சீரியசுமான மொத்த கதையும்!
ராகவா லாரன்ஸ், டி.வி, கேமராமேன் ராகவா ஆகவும், முற்பிறவியில் மொட்ட சிவாவாகவும் பிய்த்து பெடலெடுத்திருக்கிறார். பாத்ரூமுக்கு வாட்ச்மேன் வைப்பதில் தொடங்கி அம்மா கோவை சரளாவையும், டாப்ஸியின் அண்ணி ரேணுகாவையும் பேயிடம் மாட்டிவிட்டு பெண்டு நிமிரவைப்பது வரை ஒவ்வொரு காட்சியிலும் சிரிப்பு, சிரிப்பு என பார்த்து பார்த்து படத்தை செதுக்கி இருக்கும் ராகவா, டாப்ஸி, நித்யா மேனனுடனான காதல் காட்சிகளிலும் கலக்கி இருக்கிறார். மொட்ட சிவாவாக அதிரடி பண்ணும் ராகவாவிற்கும், பயந்தாங்கொள்ளி கேமராமேனாக பம்மி பதுங்கும் ராகாவாவிற்கும் நிறைய வித்தியாசம் காட்டி நடித்திருக்கும் லாரன்ஸ், வழக்கம்போல நடன காட்சிகளிலும் பேயாட்டம் போட்டு பேஷ்..பேஷ்..சொல்ல வைக்கிறார்....
நந்தினியாக டாப்ஸி., ராகவாவிற்கு தன்மீது இருக்கும் காதலை தன் தொழிலுக்கு பயன்படுத்திகொள்ளும் துணிச்சல்காரராக சூப்பராக நடித்திருப்பதுடன், நித்யாவின் ஆவி, தன்னுள் புகுந்ததும் மிரட்டலாக நடித்தும் கைதட்டல் பெறுகிறார். டாப்ஸியின் டாப் கிளாஸ் கிளாமருக்கும் குறைவில்லை, பலே பலே!. நித்யாமேனன், மொட்ட சிவாவின் கால்ஊன ஜோடியாக பட்டையை கிளப்பி பரிதாபமாக செத்தும் போவது உச் கொட்ட வைக்கிறது. அதேநேரம் டாப்ஸியின் உடம்பிற்குள் புகுந்துகொண்டு பழி தீர்ப்பதில் பலே சொல்ல வைக்கிறார். கோவை சரளா, ரேணுகா, ஸ்ரீமன், ஜெயபிரகாஷ், நான்கடவுள் ராஜேந்திரன், சுகாசினி, மயில்சாமி, சாம்ஸ், மதுமிதா, பூஜா உள்ளிட்டவர்களும் பாத்திரமறிந்து பயமுறுத்தி பயந்திருக்கிறார்கள்.
ராஜவேல் ஒளிவீரனின் ஒளிப்பதிவு, எஸ்.எஸ்.தமன், லியோன் ஜேம்ஸ், சி.சத்யா, அஸ்வமித்ரா...உள்ளிட்டவர்களின் இசை ஆகியவை மிரட்டல்.
ஃப்ளாஷ்பேக்கில், யாருமே கட்டிக்கொள்ள முன்வராத நித்யாமேனனை, அவரது காதலர் மொட்ட சிவாவிற்கு, அவரது தந்தை கட்டித்தர மறுப்பது ஏன்.?!, சுடுகாட்டில் இருந்து ஒரு பிணத்தை எடுத்துவந்து அதற்குள் சில பேய்களை இறக்கி, அந்த பிணத்தை உயிர்ப்பித்து அதனுடன் மொட்டசிவா, கங்கா நித்யாவின் ஆன்மாவை தாங்கிய ராகவா சண்டை போடுவது., டி.வி.நிகழ்ச்சி படம்பிடிக்க போன இடத்திற்கு ராகவாவின் அம்மா கோவை சரளா, டாப்ஸியின் உறவு ரேணுகாவும் திடீரென வந்து பிடிப்பது இவை எல்லாவற்றிற்கும் மேல் சர்ச்சில் பாதிரியார்கள் கோவை சரளாவும், ரேணுகாவும் ஓடி வந்து கதறி அழுவதை பார்த்து லாரன்ஸ் மீதும் டாப்ஸி மீதும் ஏறிய பேய்களை இறக்காமல் டாப்ஸி மீது ஏறிய கங்கா நித்யா பேயையும்,ராகவா மீது சேர்த்து ஏற்றிவிட்டு "உனக்கு இஷ்டமான சாமியை கும்பிட்டுவிட்டு உன்னை அழிக்கவரும் பிணப்பேயை கொன்று வென்று வா..." என்பதும்., உடனே ராகவா லாரன்ஸ் தன் இஷ்டக் கடவுளான முனி சாமிக்கு முன்பு ஒரு கும்பிடும் பெரும் குரூப் டான்சும் போட்டுவிட்டு பிணப்பேயை அழிக்க கிளம்புவதும் ரொம்ப சினிமாட்டிக்காகவும், சுத்த ஹம்பக் ஆகவும் இருக்கிறது. பாதிரியார்கள் இயேசுவை பிரார்த்தனை செய்துவிட்டு செல் என்பனரா? உனக்கு இஷ்டமான தெய்வத்தை வணங்கிச்செல் என்பார்களா.?! என்பது இயக்குநருக்கே வெளிச்சம்.
ஆயிரம் இருந்தும், வசதிகள் இருந்தும், இதுமாதிரி அபத்தங்களுடன் , ஒரேயடியாய் பேயை மட்டுமே நம்பியிருக்கும் ராகவா லாரன்சின் எழுத்தும், இயக்கமும் ஒருகட்டத்தில் ஓவர் டோஸாய் தெரிவதுதான் முனி-3 காஞ்சனா-2 படத்தின் பலவீனம்!.
மொத்தத்தில் முனி-3 காஞ்சனா-2 பேயாட்டம்! தியேட்டரில் பேய் ஓட்டமும் ஓடுமா? பார்ப்போம்!!