Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

அதிபர்

அதிபர்,Athibar
16 செப், 2015 - 13:03 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » அதிபர்

தினமலர் விமர்சனம்


சில வருட இடைவெளிக்குப்பின் திருட்டுபயலே, நான் அவனில்லை படங்களின் நாயகர் ஜீவன் நடித்து ஜீவனுடன் வெளிவந்திருக்கும் திரைப்படம்!. மாயி, திவான் படங்களின் இயக்குநர் பாண்டியன் அலைஸ் சூர்யபிரகாஷ் இயக்கத்தில் வந்திருக்கும் திரைப்படம்...என இன்னும் பல எதிர்பார்ப்புகளுடன் இன்று திரைக்கும் வந்திருக்கும் படம் தான் அதிபர்!.


தனது மூன்று வயதிலேயே கனடா நாட்டில் குடும்பத்துடன் குடியேறிய யாழ்ப்பாணத் தமிழர் சிவா எனும் ஜீவன். இரண்டுகோடி பணத்துடன் கட்டுமானத்தொழில் செய்யும் உத்தேசத்துடன் இந்தியா வரும் அவர்., சந்திக்கும் நல் மனிதர்களும், நயவஞ்சகர்களும், நம்பிக்கை துரோகங்களும், நல்ல உள்ளங்களும், ஏமாற்றங்களும், ஏற்றங்களும் தான் அதிபர் படத்தின் கரு, கதை, களம், காட்சிபடுத்தல் எல்லாம்!.


இளம் தொழில்அதிபர் சிவாவாக ஜீவன் சீனுக்கு சீன், தன் ஜீவனை கொட்டி நடித்திருக்கிறார். பெருந்தன்மையாக ஆரம்பத்தில் நடந்துகொள்ளும் ஈஸ்வர் - ரஞ்சித்தை முழுதாய் நம்பி ஜீவன் இறுதியில் ஏமாறும் காட்சிகள்...எடுத்த எடுப்பிலேயே யூகிக்க முடிந்துவிடுகிறது என்றாலும் அவை படமாக்கப்பட்டிருக்கும் விதங்கள் பலே சொல்ல வைக்கின்றன. ஆக்ஷன் காட்சிகளிலும் சரி, கொஞ்சமே கொஞ்ம் வரும் நாயகி வித்யாவுடனான ரொமான்ஸ் காட்சிகளிலும் சரி, ஜீவனின் நடிப்பில் ஒரு துள்ளலும் அள்ளலும் இருப்பது அதிபர் படத்திற்கு பெரும் பிளஸ்!


சுகந்தியாக கதையின் நாயகியாக ஜீவனின் மனைவியாக வரும் வித்யாவிற்கு நடிக்க வாய்ப்பு ரொம்பவும் கம்மி என்றாலும் அம்மணி கிடைத்த கேப்பில் எல்லாம் தன் பங்கிற்கு கிடா வெட்டியிருக்கிறார், பேஷ் பேஷ்!


ஆரம்பத்தில் நல்லவராக, அதன்பின் கெட்டவராக ஜீவனின் லீகல் அட்வைசராக வந்து அவரது மொத்த சொத்தையும் ஏப்பம் விட பார்க்கும் பெரும்புள்ளி ஈஸ்வராக ரஞ்சித், பாபு - சமுத்திரக்கனி, டேவிட்- நந்தா, கருணா - ரிச்சர்ட், ராஜ் - டி.சிவகுமார், புலி்க்குட்டி - தம்பிராமைய்யா, தர்மராஜ் - சிங்கமுத்து, குமாரி- கோவைசரளா, பாவாலட்சுமணன், சரவண சுப்பையா, ரேணுகா, சங்கிலிமுருகன், வையாபுரி, ராஜ்கபூர், மதன்பாப், பாரதிகண்ணன், மோகன்ராம், சம்பத்ராம், சிவசங்கர், கதா.பா. திருமாவளவன், மாயி சுந்தர், தெனாலி ஸ்டில்குமார், கோவைசெந்தில், அழகு, கோவைபாபு, கவிதா பூஜாரி, அமீர், சித்ரா உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளத்தில், தம்பிராமைய்யா, சிங்கமுத்து, கோவைசரளா மூவரும் காமெடி எனும் பெயரில் வழக்கம்போலவே நடித்து, கடித்து கடுப்பேற்றி விடுகின்றனர்.


ரஞ்சித், நந்தா, சமுத்திரக்கனி, ரிச்சர்ட், மதன்பாப், மோகன்ராம், சரவண சுப்பையா, டி. சிவகுமார் உள்ளிட்டவர்கள் பாத்திரமறிந்து நடித்து படத்திற்கு பலம் சேர்த்திருக்கின்றனர். அதிலும், "நல்லவனுக்கு அக்ரிமெண்ட் தேவையில்லை, கெட்டவனுக்கு, எந்த அக்ரிமெண்ட்டாலும் பிரயோஜனம் இல்லை..." என பஞ்ச் டயலாக் பேசும் பங்கஜ்லால் சேட் - மதன்பாப் பிரமாதம்!


பிலிப்ஸ் விஜயகுமாரின் ஒளிப்பதிவில் இந்தியா, கனடா எல்லாம் அழகாக இருக்கிறது. நட்சத்திரங்களும் பளிச்சென்று மின்னியிருக்கின்றனர். விக்ரம் செல்வாவின் இசையில் கானாபாலாவின் குரலில் நா.முத்துக்குமாரின் பொய் பொய் பாடல் மெய்!...


சூர்யபிரகாஷின் எழுத்து, இயக்கத்தில் அதிபர் படத்திற்கு சம்பந்தமே இல்லாத மாதிரி எடுக்கப்பட்டிருக்கும் தம்பி ராமைய்யா சம்பந்தப்பட்ட, அதுவும்., அதிகப்படியாக பேசும் பொடியனை வைத்து எடுக்கப்பட்டிருக்கும் ஆரம்ப காட்சிகள், ஏனோ, தானோ என அவசர கதியில் முடிக்கப்பட்டிருக்கும் க்ளைமாக்ஸ் காட்சிகள்... இரண்டையும் ஒதுக்கிவிட்டு பார்த்தால், இன்டர்வெல்லுக்கு முன்னும் பின்னும், எக்ஸ்பிரஸ் வேகத்தில் செல்லும் அதிபர் ரசிகர்களை அதிரசெய்வார்!. அவ்வாறு முன்னும் பின்னும் சில காட்சிகளை ஒதுக்கித்தள்ள முடியாத பட்சத்தில், அதிபர் ரசிகனை "அதோகதிபார்" என சற்றே அலற வைக்கிறார்!!


மற்றபடி அதிபர் - முத்திரை பதிப்பார்!!!


-------------------------------------------------------------




குமுதம் விமர்சனம்




இலங்கையில் நடந்த உண்மைக் கதை இது.


வழக்கமாக ஏமாற்றுபவராக நடிக்கும் ஜீவன், இங்கே ஏமாறுபவராக நடித்திருக்கிறார். ரியல் எஸ்டேட், அடுக்குமாடி கட்டிட ஊழல்களை அப்பட்டமாக அம்பலப்படுத்துகிறார்கள்.

அடாவடி செய்து, ஏழைகளை மிரட்டி, பயமுறுத்தி இடத்தை எழுதி வாங்கும் கும்பல் என்பது தெரியாமல் ஜீவன் அவர்களுடன் கை கோர்க்க, அப்புறம் என்ன ஆச்சு என்பதுதான் அதிபர் இயக்கம் சூர்யபிரகாஷ்.


வழக்கம்போல் அதிரடி ஜீவன். சண்டைக் காட்சிகளில் சபாஷ். தான் ஏமாற்றப்பட்டது தெரிந்ததும் பொங்கிப் பெடலெடுக்கிறார்.


எந்த ஆரவாரமுமில்லாமல் வெகு இயல்பாக கதாநாயகி வித்யா.


நட்புக்கு நந்தா. நல்லவராக ரஞ்சித். அவர்தான் வில்லன் என்பது பச்சைப் பிள்ளைக்குக் கூடத் தெரிந்து விடுகிறது.


கொஞ்ச நேரம் வந்தாலும் சமுத்திரக்கனி பளிச். வழக்கமான யோக்கியர் வேடம்தான் என்றாலும் அதில் காமெடியைக் கலந்திருப்பது வித்தியாசம். ஆட்டோவைக் கூப்பிடுடா. அப்பதான் நான் சாலேன்னு ஆடியன்ஸ் நினைப்பாங்க!


அதிபர் - வீடு வாங்குபவர்கள், விற்பவர்களுக்கு எச்சரி்க்கை!




குமுதம் ரேட்டிங் - ஓகே


------------------------------------------------------------------




கல்கி சினி விமர்சனம்




இளம் பெண்ணைத் தப்பான வீடியோ எடுத்து பிளாக்மெயில் செய்யும் இளைஞனைக் கதாநாயகன் சவட்டி எடுக்கும் காட்சியுடன் படம் ஆரம்பம் ஆகிறது. அட! இதேமாதிரி கமல்ஹாசன் படத்தில் பார்த்திருக்கிறோமே என்று எண்ணத் தோன்றுகிறது. ஆனால், சம்பவம் நடப்பது கனடாவில், கதாநாயகனின் அம்மா அந்நிய நாட்டில் இது போலத் தப்பை எல்லாம் தட்டிக் கேட்க கூடாது என்று பொறுப்பாக உபதேசிக்கிறார். கதாநாயகன் ஜீவனும் அம்மா சொல்படி நல்ல பிள்ளையாக இந்தியா திரும்பி அங்கே கட்டுமானத் தொழில் செய்கிறார்.


அந்நிய முதலீடு கொண்டு தமிழ்நாட்டில் கட்டுமானத் தொழில் ஆரம்பிக்கும் அவருக்கு இங்கே பல சிக்கல்கள் உருவாகி அவரை நோகடிக்கின்றன. அவர்களை எதிர்த்துப் போராடுவதே முழுக் கதை.


சரி! மற்ற விஷயங்களை லேசாகப் பார்ப்போம். பெரிய இடைவெளிக்கு பிறகு ஜீவன் மறுபிரவேசம் செய்திருக்கிறார். களையான. கம்பீரமான தோற்றம். அலட்டல் இல்லாத நடிப்பு.

ஆனால் எவ்வளவு பெரிய துரோகங்கள் நேர்ந்தாலும் அதை அதிர்ச்சியில்லாமல் எதிர்கொள்ளும் அவர், ஏதோ செய்து எதிரிகளின் சதியை முறியடிக்கப் போகிறார் என்று நம்பிக்கையுடன் உட்கார்ந்திருந்தால் படம் முடியும் வரை உருப்படியாக எதையும் செய்யாமலேயே இருந்துவிடுகிறார்.


உதாரணத்துக்கு அவரை ஏன் சி.பி.ஐ. கைது செய்தது என்பதுகூடத் தெரிந்து கொள்ள முடியாத அப்பிராணியாக இருக்கிறார் ஜீவன். அவரை விடுவிப்பதுகூட அவரது குடும்பத்தினர்தான்.


சமுத்திரக்கனி அலட்டலாக வசனம் பேசிக் கவர்கிறார். அவருக்கு ஒரு ஷொட்டு! ஆனால் உடல் மொழியிலும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் இன்னும் நன்றாகயிருந்திருக்கும்.


தம்பி ராமையா திறமையான நடிகர்தான். ஆனாலும் சம்பந்தமில்லாமல் அதிகமான காட்சிகளை அவரே ஆக்கிரமித்துக் கொள்கிறார். கோவை சரளாவின் நகைச்சுவை சிரிப்புக்கு பதில் கடுப்பைத்தான் ஏற்படுத்துகிறது. கனல் கண்ணன் அமைத்திருக்கும் சண்டைக் காட்சிகளில் அனல் பறக்கிறது.


நிலம் மற்றும் வீடு வாங்குபவர்கள் எந்த அளவுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார்கள். அதற்காகப் படக்குழுவினரைப் பாராட்டியே தீரவேண்டும்.


அதிபர் - டக்கர்.



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

அதிபர் தொடர்புடைய செய்திகள் ↓
Advertisement
தொடர்புடைய படங்கள்

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in