நானா படேகர், விக்ரம் கோகலே, அசுதோஷ் ராணா, குல் பனாக்
டைரக்டர் : ஏஜாஜ் குலாப்
தயாரிப்பாளர் : ராஜூ சதா மற்றும் கோபால் தால்வி
2004ம் ஆண்டில் வெளிவந்த ஆப் தக் ஷப்பானின் அடுத்த பாகமே இந்த ஆப் தக் ஷப்பான் -2. நானே படேகர் நடித்துள்ள இந்த படத்தை பற்றி இனி பார்ப்போம்
மும்பையின் அண்டர்வேல்ட் தாதாக்களிடம் தனது குடும்பத்தை பறிகொடுத்த நிலையில், எஞ்சியிருந்த தனது மகனுடன், கோவா மாநிலத்தில் ஒரு சிறிய குக்கிராமத்தில் வசித்து வருகிறார் போலீஸ் ஆபிசர் சாது அகாசே (நானா படேகர்). மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல்வர் அன்னா மற்றும் உள்துறை அமைச்சர் ஜாகிர்தார் (விக்ரம் கோகலே) உள்ளிட்டோர், செயலாளர் பிரதானின் ( மோகன் அகாசே) அறிவுரையின்படி, அண்டர்வேல்ட் தாதாக்களின் கொட்டத்தை அடக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். அண்டர்வேல்ட் தாதாக்களின் அராஜகத்தை ஒடுக்கும் பொருட்டு, என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டான சாது அகாசேவை (நானா படேகர்) மீண்டும் பணியமர்த்தப்படுகிறார். சாது அகாசேவிற்கு பக்கபலமாக, நேர்மையான போலீஸ் கமிஷனராக கோவிந்த் நாம்தியோவும், போலீஸ் உயர் அதிகாரியாக அசுதோஸ் ராணாவும் படத்தில் வாழ்ந்துள்ளனர். சாது அகாசே, எவ்வாறு அண்டர்வேல்ட் தாதாக்களின் கொட்டத்தை அடக்கினார் என்பதே, படத்தின் மீதிக்கதை.....
பெரும்வெற்றி பெற்ற படத்தின் இரண்டாம் பாகத்தை, டைரக்டர் ஏஜாஜ் குலாப் குத்திக்குதறிவிட்டார் என்றே சொல்ல வேண்டும். படத்தின் பெரும்பாலான பகுதிகள், கற்பனைக்கு எட்டாதவகையில் உள்ளதால், படம் பார்ப்பவர்களுக்கு விரைவில் போரடித்து விடுகிறது. படத்தின் பின்னணி இசை சிறப்பாக இருக்கும்போதிலும், பாடல்கள், படத்தின் வேகத்திற்கு தடையாக உள்ளன. எடிட்டிங் சிறந்த வகையில் உள்ளது. ஒளிப்பதிவு சொல்லிக்கொள்ளும்படி இல்லை. கதை வலுவாக இருந்தபோதிலும், திரைக்கதை திறம்பட அமைக்காததால், கிளைமாக்சை நோக்கிய படத்தின் பின்பகுதி, படம் பார்ப்பவர்களுக்கு சலிப்பையே ஏற்படுத்துகிறது. படத்தின் வசனங்கள் குறிப்பிடத்தக்க வகையில் உள்ளன. கலை மற்றும் காஸ்டியூம் பரவாயில்லை....
நானா படேகருக்கு என்றே, இந்த கேரக்டர் உருவாக்கப்பட்டுள்ளது என்பதை ஆணித்தரமாக தெரிவிக்கும்வகையில், நானா படேகரின் நடிப்பு சிறப்பாக உள்ளது. டயலாக் டெலிவரிகளில் நானா படேகர் முத்திரை பதிக்கிறார். ஆனால், இதேபோன்ற கேரக்டர்களில் அவர் தொடர்ந்து நடித்து வருவதால், படம் பார்ப்பவர்களுக்கு சலிப்பே மிஞ்சுகி்றது. பத்திரிகையாளர் வேடத்திற்கு குல் பனாக் கனகச்சிதம். விக்ரம் கோகலே, அசுதோஷ் ராணா, கோவிந்த் நாம்தியோ உள்ளிட்டோரும், தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கின்றனர்.
நானா படேகரின் தீவிர ரசிகராக இருந்து, நேரம் கிடைத்தால் படத்தை ஒருமுறை பார்க்கலாம்....
ரேட்டிங் : 2.5/5