சாட்டை, கீரிப்புள்ள படங்களின் மாணவ நாயகர் யுவனும், பசங்க, கோலி சோடா படங்களின் இளம் சிறார் நாயகர்களில் ஒருவரான ஸ்ரீராமும் இணைந்து கதையின் நாயகர்களாக நடித்து வௌிவந்திருக்கம் திரைப்படம் தான் கமர கட்டு. கலை இயக்குநர் ராம்கி ராமகிருஷ்ணனின் எழுத்து, இயக்கத்தில் வௌிவந்திருக்கும் கமர கட்டு திரைப்படம் கலை கட்டுதா.? கண்ணை கட்டுதா..? இங்கு பார்ப்போம்...!
யுவனும், ஸ்ரீராமும் நன்றாக படிக்கும் ஏழை குடும்பத்தை சார்ந்த பள்ளி மாணவர்கள். பள்ளி இறுதி ஆண்டு தேர்வில் தங்கள் காதலிகளும், சக மாணவிகளும், சகோதரிகளுமான நாயகியர் ரக்ஷ்ரா ராஜ், மனிஷா ஜித் இருவரும் பெரிய அளவில் வெற்றி பெற வேண்டி, தாங்கள் இரண்டு தேர்வுகளை எழுதாமலேயே விட்டுகொடுத்துவிட்டு பொதுத்தேர்வில் தோல்வியை தழுவி, தங்கள் காதலில் ஜெயிக்க நினைக்கின்றனர்.
அதன்படி ஒரே பள்ளியில் படித்து முடித்த நாயகர்கள் இருவரும் தேர்வில் தோல்வியை தழுவ , நாயகியர் இருவரும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று கல்லூரிக்கு செல்கின்றனர். நாயகர்கள் இருவரும் காதலிகள் இருவரையும் கல்லூரிக்குள் அனுப்பிவிட்டு காத்திருக்க, அந்த காதலிகள் காசு, பணம், சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு வசதியான சக கல்லூரி மாணவர்கள் இருவர் மீது மையல் கொள்கின்றனர். இது தெரிந்ததும் துடிதுடித்து போகும் நாயக இளைஞர்கள் இருவரும், காதல் சகோதரிகளின் தாய்குலத்திடம் முறையிட, அவர் சாமர்த்தியமாக தன் மகள்களின் காஸ்ட்லி கல்லூரி காதலர்களுக்கு பச்சைகொடி காட்டி பள்ளி காதலர்கள், நண்பர்கள் இருவரையும் நயவஞ்சகமாக தீர்த்து கட்டுகிறார்.
உயிரைவிட்ட பின்பும், தங்கள் காதலிகள் மீது உயிரை வைத்திருக்கும் நாயகர்கள் யுவனும், ஸ்ரீராமும் கடவுள் சிவனின் அருளால் எடுக்கும் ஆன்மா அவதாரமும், நாயகியர் ரக்ஷ்ரா ராஜ், மனிஷா ஜித் இருவரது உடம்பிற்குள்ளும் புகுந்து கொண்டு பண்ணும் களேபரமும் தான் கமர கட்டு மொத்தப்படமும்!
யுவன், ஸ்ரீராம், ரக்ஷ்ரா ராஜ், மனிஷா ஜித், பக்கோடா பாண்டி, கிரேன் மனோகர், வாசு விக்ரம், பாலா சிங், சேத்தன், அஙகாடித்தெரு சிந்து, தளபதி தினேஷ், மனதை திருடிவிட்டாய் நாராயணமூர்த்தி, சித்து, வம்சி உள்ளிட்டவர்களில் பள்ளி நாயகர்களாக, பட நாயகர்களாக வரும் யுவன், ஸ்ரீராமின் ஓவர் ஆக்டிங்கையும் தாண்டி கல்லூரி நாயகர்களாக வரும் சித்துவும், வம்சியும் கவருகின்றனர். அதேமாதிரி, நாயகியரின் அம்மாவாக வரும் அங்காடித்தெரு சிந்துவும், நாயகர்களது அப்பாவாக வரும் நாராயண மூர்த்தி, சேத்தன் உள்ளிட்டவர்களும் அம்சமாக நடித்து அப்ளாஸ் அள்ளுகின்றனர்.
ஆர்.ஸ்ரீதரின் ஔிப்பதிவு, எப்.எஸ்.பைசலின் இசை உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகள் இருந்தும், எடிட்டர் எஸ்.சதீஷ், ராம்கி ராமகிருஷ்ணனின் எழுத்து, இயக்கம் எல்லாவற்றையும் வாயை பிளந்து கொண்டு ரசித்து கத்திரி போட வேண்டிய இடங்களில் சரியாக கத்தரித்து போட மறந்ததால், மறுத்ததால் கமர கட்டு கண்ணை கட்டுகிறது!
ராம்கி ராமகிருஷ்ணனின் எழுத்து, இயக்கத்தில் பள்ளி நாயகர்களின் ஆன்மா, தாங்கள் சாக காரணமான பணத்தாசை பிடித்த நாயகியரின் அம்மாவையும், நாயகியரையும் பெரிதாக ஒன்றும் செய்யாது, கல்லூரி காதலர்கள், அவர்களது பெற்றோர்கள் மற்றும் சுற்றி இருப்பவர்களை... சுழற்றி அடிப்பது ஏன்.? என்பது புரியாத புதிர்!
சிவனின் ஆசி பெற்ற ஆண் ஆவிகள், ஆன்மாக்கள், ஆன்மிக தலமான திருவண்ணாமலை லொககேஷன்கள்... எனும் வித்தியாசத்திற்காக கமர கட்டு, கலை கட்டினாலும், ஒட்டுமொத்தமாக ஓவர் டோஸாக தெரியும் கமர கட்டு - கண்ணை கட்டுது சாமி!