Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்,Tamilukku En Ondrai Aluthavum
04 மார், 2015 - 14:19 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்

தினமலர் விமர்சனம்


டைட்டில் தான் தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும். ஆனால், நகுல், தினேஷ் உடன் படத்தில் கால் டாக்ஸி டிரைவராக வரும் காமெடி சதீஷையும் சேர்த்து 3 ஹீரோக்கள்! தலைப்பிலேயே இது ஏதோ கைப்பேசி சம்பந்தப்பட்ட கதை என்பது புரிந்தாலும் கூடவே கொஞ்சம் செண்டிமெண்ட், கொஞ்சம் காமெடி, நிறைய ரொமான்ஸ், அதையும் தாண்டி சயின்ஸ்... என பிய்த்து பெடலெடுக்க முயன்று அதில் பாதி வெற்றியும், பாதி தோல்வியும் பெற்றிருக்கிறார் அறிமுக இயக்குநர் ராம்பிரகாஷ் ராயப்பா! அது எப்படி? இதோ பார்ப்போம்...!


கதைப்படி, ஹீரோ நகுலுக்கு., கல்லூரி மாணவ மாணவிகளுக்கு அவர்கள் எழுதி சமர்பிக்க வேண்டிய புதிய கண்டுபிடிப்பு புராஜக்ட் நோட்டுகளை தான் எழுதி கொடுத்து துட்டு பார்க்கும் கேரக்டர்! அப்படி ஹீரோயின் ஐஸ்வர்யா தத்தா அண்ட் கோ மாணவர்களுக்கு, நகுல் எழுதி கொடுத்த இயற்கை சீற்ற சூழலிலும் சிக்கல் இல்லாத செல்போன் சிக்னல்... பற்றிய புராஜக்ட், பிரபல செல்போன் கம்பெனியால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, ஒரு இக்கட்டான சூழலில் அந்த புராஜக்ட்டை செயல் வடிவத்திற்கு கொண்டு வர அக்கல்லூரி மாணவர்கள் அழைத்து செல்லப்படுகின்றனர். உடன் நகுலின் உதவியை நாடும் அந்த மாணவர்களுக்கும், தன் காதலிக்கும், தமிழ்நாட்டுக்கும், நகுல் எவ்வாறு உதவுகிறார்.? எனும் கதையுடன், பில்டிங் கன்ஸ்ட்ரக்ஷ்ன் கம்பெனி விற்பனை பிரதிநிதியாக வரும் அட்டகத்தி தினேஷ் - பிந்து மாதவியின் காதலையும், கல்யாணத்திற்கு பெண் தேடி சலித்து போகும் கால்டாக்ஸி டிரைவர் சதீஷின் வாழ்க்கையையும் கலந்து கட்டி வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் வௌிவந்திருக்கும் படம் தான் தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்!


ஒரு ஹீரோ நகுல் - இளம் விஞ்ஞானி வஸந்தாக வாழ்ந்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். பின்நாளில் காதலியாகும் கல்லூரி மாணவி ஹரிணி எனும் ஐஸ்வர்யா தத்தாவுக்கு தரும் புராஜக்ட் பேப்பரில் எழுத்துக்கள் தெரியா வண்ணம் எழுதி தந்து, அதில் ஒரு கெமிக்கலை தௌித்ததும் எழுத்துக்கள் பளிச்சிட வைப்பதில் தொடங்கி, தனது சோலார் பவர் பைக் மூலம் சூரிய புயலில் செயல் இழக்கும் செல்போன் டவரை உயிர்பிக்க செய்வது வரை ஒவ்வொரு காட்சியிலும் அடுத்து என்ன.?, அடுத்து என்ன...? என ஆவலை தூண்டும்படி நடித்திருக்கிறார்.


புதிது புதிதாக பிளாட் புரமோட் செய்யும் பில்டிங் கன்ஸ்டரக்ஷ்ன் கம்பெனி ரெப்பாக வரும் தினேஷ், கழுத்துல டை, கையில் பை, வாயில் பொய்... எனும் ரீதியில் இஷ்டத்துக்கு அடித்துவிட்டு... புதிய பிளாட்டுகளை விற்பனை செய்யும் காட்சிகளில் தியேட்டரே சிரிப்பில் அதிர்கிறது. தற்கொலை செய்து கொள்ள முயன்றவர் இவர், என தவறாக இவருக்கு வகுப்பு எடுக்கும் பிந்து மாதவியை டாவடிக்கும் காட்சிகளில் முத்திரை பதித்திருக்கிறார் தினேஷ்! தினேஷ் மாதிரியே அவரது ஓட்டை ஸ்கூட்டரை உதைத்து கிளப்பி விடும் உதவியாளரும் கச்சிதம்.


வண்டியில் பாம் வைக்கப்பட்டிருப்பது கடைசி வரை தெரியாமலே காமெடி பண்ணியபடி கால்டாக்ஸி ஓட்டும் சதீஷ், படம் சயின்ஸ் பேசும் சீன்களில் எல்லாம் சலிப்பு தட்டாமல் பார்த்து கொள்கிறார்! அதுவும் அவருக்கு பார்த்து பேசப்பட்டு முடியாமல் போகும், அப்பாவுக்கு பயந்த சேல்ஸ் கேர்ள் பெண்ணின் காதல் கதைகள் செம ஹாஸ்யம்!


சிமியாக வங்கி பெண் அதிகாரியாக, தற்கொலை தடுப்பு பெண்ணாக பிந்து மாதவி, தினேஷூக்கு ஜோடியாக செமயாக நடித்திருக்கிறார். நகுலின் ஜோடியாக வரும் இன்னொரு நாயகி ஐஸ்வர்யா தத்தா, நகுலுக்கு அவர் பாணியில் சஸ்பென்ஸாக ஐ லவ் யூ சொல்லும் இடங்களிலும், சோலார் பவரில் ஓடும் பைக்கின் பெட்ரோல் டேங்கில் சர்க்கரையே அள்ளிபோடும் காட்சிகளிலும் கச்சிதம். மற்ற இடங்களில் சதிஷீன் டாவாக மகாவாக வரும் ஷாலு ஷம்மு அளவிற்கு கூட ஐஸ்வர்யா தத்தா நடிக்க ஸ்கோப் இல்லை பாவம்!


டெரரிஸ்ட்டாக வரும் ஆசிப், மொபைல் திருடன் ரமேஷாக வரும் அஜய், நகுலின் நாலும் தெரிந்த அம்மாவாக வரும் ஊர்வசி உள்ளிட்ட எல்லோரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர். அதிலும், ஊர்வசி சொல்லும் சயின்ஸ் வார்த்தைகளும், விளக்கமும் ருசி!


எஸ்.எஸ்.தமனின் இசை, தீபக்குமார் பதியின் ஔிப்பதிவு, சபு ஜோசப்பின் படத்தொகுப்பு உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகளுடன், ராம்பிரகாஷ் ராயப்பாவின் எழுத்து-இயக்கத்தில், புதுமையான கதையை தமிழ் சினிமாவில் சொல்ல முயன்றிருப்பதற்காகவே தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும் படத்தை பாராட்டலாம்.


அதேநேரம், சில இடங்களில் செல்போன் சம்பந்தப்பட்ட தொழில்நுட்பங்களை பேசும்போது, தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும் - ரசிகர்கள் தலையை பிடித்து அழுத்தி விடவும் எனும் ரீதியில் இருப்பதை மட்டும் இயக்குநர் தவிர்ந்திருந்தார் என்றால் இப்படம் இன்னும் மெச்சும்படியும் இருந்திருக்கும்.


கல்கி சினி விமர்சனம்


இயற்கைக் கோளாறு காரணமாகத் தற்காலிகமாக செல்ஃபோன்கள் அனைத்தும் செயல் இழக்கின்றன. மீண்டும் வேலை செய்தால் விபத்தில் சிக்கிய பெண் ஒருவர் உயிர்பிழைக்க வாய்ப்புண்டு; ஆனால் அதே சமயம் குண்டு வெடிப்பு நிகழ்ந்து பல உயிர்கள் பறிபோகும் ஆபத்தும் இருக்கிறது. இந்த இரண்டு விஷயமும் தெரியாமல் இளம் விஞ்ஞானியான கதாநாயகன் செல்ஃபோன்களை உயிர்பெறச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வெற்றியும் பெறுகிறான். அப்புறம் பரபரப்பான கிளைமாக்ஸ்! இதுதான் கதை.

செல்ஃபோனை மையப்படுத்தி இருக்கும் கதை என்பதால் வைக்கப்பட்ட தலைப்பு என்பதைத் தாண்டி, தலைப்புக்கும் படத்துக்கும் எந்த சம்பநதமும் இல்லை.

காற்றில் நடந்து போடும் சண்டைகள், ஒற்றை ஆளை கையை முறுக்கி, வில்லன்களைப் புவி ஈர்ப்பு விசைக்கு எதிராக பந்தாடும் காட்சிகள், வெற்றுச் சவால்கள், நமத்துப் போன பஞ்ச வசனங்கள், அம்மா மற்றும் தாலி சென்டிமென்டுகள், குத்தாட்டங்கள் என்று எதுவும் இல்லாமல், விறுவிறுப்பாகப் படம் தந்திருக்கும் குழுவினருக்கு ஒரு சபாஷ்.

பொதுவாக கதாநாயகனுடைய அம்மாவை அப்பிராணியாகவோ, மக்காவோதான் காண்பிப்பது தமிழ் திரைப்பட மரபு. இந்தப் படத்தில் ஊர்வசி மூலம் அதைத் தகர்த்தெறிந்திருக்கிறார்கள். சமையலறையில் சர்வ சாதாரணமாக உருளைக் கிழங்கு மூலம் கடிகாரத்தை இயக்கி ஆச்சரியப்பட வைக்கிறார். விஞ்ஞானியான கதாநாயகன் பெர்முடாஸுடன், குறுந்தாடி இல்லாமல் பக்கத்துவீட்டுப் பையன் தோற்றத்தில் இருப்பது வித்தியாசமாக இருக்கிறது.

நுணுக்கமான சில காட்சிகள் புன்முறுவலை வரவழைக்கின்றன. யதேச்சையாக தன் காதலன் மீது தனது தோழி கை வைக்கும்போது, அவளது கையை ஐஸ்வர்யா தத்தா விலக்கும் காட்சியைச் சொல்லலாம். சொம்புக்கும், ஸ்பெக்ட்ரம் அனலைசருக்கும் வித்தியாசம் தெரியாதவர்களாக இன்றைய பொறியியல் மாணவர்கள் இருக்கிறார்கள் என்று துணிச்சலாக நையாண்டி செய்யும் காட்சியும் உண்டு.

பிந்து மாதவி, திட்டுவதற்கு எடுக்கும் பயிற்சிகள் வாய்விட்டுச் சிரிக்க வைக்கின்றன. அதிலும் துப்புரவுப் பணிப்பெண் ஈடுபாட்டோடு பயிற்சி அளிக்கும் காட்சியில் தியேட்டரே கலகலக்கிறது.

இந்தப் படத்தில் பாராட்ட வேண்டிய அம்சம் இன்னொன்றும் உண்டு. சின்னச் சின்னக் கதாபாத்திரங்களும் செம்மையாக - சில சமயம் நகைச்சுவை ததும்ப - படைக்கப்பட்டிருக்கின்றன.

செல்ஃபோன் திருடன், மனநல ஆலோசகர், அங்கே கவுன்சிலிங் பெற வந்திருக்கும் காதலில் தோற்ற குண்டு பையன், டாக்ஸி டிரைவர், அவரது காதலி, காதலியின் அப்பா என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

பின்னணியில் இரைச்சல் அதிகம். பாடல்களின் அர்த்தம் புரிகிறது; ஆனால் மனதில் நிற்கவில்லை. திருஷ்டிப் பரிகாரமாக வரும் ஒன்றிரண்டு இரட்டை அர்த்த வசனங்களைத் தவிர்த்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். கல்லூரி முதல்வரை கோமாளியாக சித்தரிக்கும் காட்சிகள் தரமான நகைச்சுவை மிளிரும் இந்தப் படத்தில் ஏன் வைத்தார்களோ தெரியவில்லை? கடைசியில் குண்டு வெடித்து வில்லன்கள் சாகும் காட்சி வலியப் புகுத்தப்பட்ட நீதிபோதனையாக இருக்கிறது.


தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் - பொழுதுபோக்குக்கு கலாட்டா.வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2023 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in