Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு »

சைவம்

சைவம்,Saivam
  • சைவம்
  • பிற நடிகர்கள்: நாசர், லுத்பு‌தீன் பாஷா,
  • பிற நடிகைகள்: சாரா, கவுசல்யா, துவாரா
  • இயக்குனர்: விஜய்
10 ஜூலை, 2014 - 18:00 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » சைவம்

தினமலர் விமர்சனம்


அசைவம் சாப்பிடுவதை விட்டு விட்டு சைவம் சாப்பிட ஆரம்பிக்கும் ஒரு காரைக்குடி குடும்பத்தைப் பற்றியக் கதை. வழக்கமான நாயகன், நாயகி, இவர்கள் காதலித்தால் இவர்கள் காதலுக்குத் துணை போகும் ஒரு நகைச்சுவை நண்பன், காதலுக்கு ஒரு எதிரி, நாயகனுக்கு ஒரு எதிரி என வழக்கமான சினிமாவாக இந்தப் படம் இல்லாமல் இருப்பது ஒரு பெரிய ஆறுதல். இந்த படத்தின் நாயகன் ஒரு தாத்தா, நாயகி அவருடைய பேத்தி என்று சொல்லுமளவிற்கு வேறு ஒரு தளத்தில் படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் விஜய். அதே சமயம், என்ன சொல்ல வந்திருக்கிறார்களோ, அதைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்களா என்பதில் சறுக்கியிருக்கிறார் இயக்குனர்.


குறும் படம் எடுப்பவர்களெல்லாம் முட்டி மோதி 10 நிமிடப் படத்தை ஒரு இரண்டு மணி நேரத்திற்கு நீட்டி முழக்கி சொல்வது வழக்கம். ஆனால், இதற்கு முன் நான்கைந்து படங்களைக் கொடுத்த இயக்குனர் இரண்டு மணி நேரப்படத்தில் ஒரு குறும்படத்தைத்தான் காட்டியிருக்கிறார் என்று சொல்ல வேண்டும். இது வேண்டாம், அது வேண்டாம் என பல காட்சிகளை நீக்கிப் பார்த்தால் ஒரு 10 நிமிட குறும்படத்திலேயே இந்த படத்தின் கதையின் சாராம்சத்தை சொல்லிவிட முடியும். காட்சிப்படுத்துதலில் உள்ள தெளிவை, கதையிலும், திரைக்கதையிலும் கோட்டை விட்டிருக்கிறார்கள்.


சமீபத்தில்தான் சமையலின் சிறப்பை சொன்ன உன் சமையலறையில் படமும், தாத்தா - பேரன் உறவைச் சொன்ன மஞ்சப் பை படத்தையும் பார்த்தோம். இந்தப் படங்களின் கருவிலிருந்தே சற்றே ஒத்துப் போகக் கூடிய படம்தான் இதுவும். ஆனாலும், தாத்தா - பேத்தியின் பாசம் உறவுகளில் உள்ள ஒரு தனி சுகம். அந்த விதத்தில் இந்த பாசத்தின் மூலம் நம்மையும் கொஞ்சம் ஈர்க்கிறார்கள்.


காரைக்குடி பக்கத்தில் உள்ள கோட்டையூர் என்ற கிராமத்தின் பெரிய குடும்பம் நாசருடையது. மூன்றாவது மகன், மருமகள், பேத்தி மட்டும் அவருடன் இருக்க, மூத்த மகனும், இரண்டாவது மகனும், சென்னையில் இருக்க ஒரு மகள் துபாயில் இருக்கிறார். அனைவரும் அவரவரர் மகன்கள், மகளுடன் அப்பா நாசர் வீட்டிற்கு திருவிழாவிற்காக வருகிறார்கள். வந்த இடத்தில் ஒரு சிறு அசம்பாவிதம் நடக்க, கோயிலுக்காக நேர்ந்து விட்ட சேவலை இன்னும் கோயிலுக்கு கொடுக்காததுதான் காரணம் என அறிகிறார்கள். அதனால் வீட்டில் வளர்க்கும் சேவலை கோயிலுக்கு பலி கொடுக்க முடிவெடுக்கிறார்கள். அந்த சமயம் பார்த்து சேவல் காணாமல் போகிறது. அதன் பின்ன என்ன என்பதுதான் படத்தின் மீதி கதை.


அந்தக் காலத்தில் பக்திப் படங்களில் மட்டுமே பார்த்த சேவலை, நீண்ட வருடங்களுக்குப் பிறகு இம்மாதிரியான கதைகளில் பார்ப்பது வித்தியாசமாகவே இருக்கிறது. ஆனாலும், பக்திப் படங்களில் செய்யும் சாதனைகள் எதையும் இந்த சேவல் செய்யவில்லை. இருந்தாலும் சேவலை கோயிலுக்கு பலி கொடுக்க முடிவெடுப்பது நமக்குள் எந்த சோகத்தையும் கொடுக்கவில்லை. ஆரம்பத்தில் சில காட்சிகளிலாவது சினிமாத்தனமாக இருந்தாலும் சேவல் செய்யும் சில விஷயங்களை சேர்த்திருக்கலாம். அல்லது பேபி சாராவுக்கும், அந்த சேவலுக்கும் இடையிலான பாசத்தை நெகிழ்ச்சியாகக் காட்டியிருக்கலாம். இப்படி எதுவுமே செய்யாமல் அந்த சேவல் பலியாகப் போகிறது என்ற சோகம் நம்மை எந்த விதத்திலும் தாக்கவில்லை. பேபி சாராவுக்கு மட்டும்தான் அது கவலையை அளிக்கிறது. இந்த உறவை ஈர்ப்புடனும், நெகிழ்ச்சியுடனும் சொல்லியிருந்தாலே நமக்கும் அந்த சேவல் மீதான பாசம் தொற்றிக் கொண்டிருக்கும். நமக்கு என்னமோ நாளைக்கு அடிச்சி சாப்பிடப் போற சேவல்-ங்கற எண்ணம் மட்டும்தான் வருகிறது.


நாசர், தமிழ் சினிமாவில் தற்போதைய சிறந்த குணச்சித்திர நடிகர்களில் ஒருவராக பரிணமளிக்கிறார். இவருடைய நடிப்பைப் பற்றி சொல்ல என்ன இருக்கிறது. எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் அவருடைய ஈடுபாடு அதிகமாகவே இருக்கும். இந்த படத்திற்காக வழுக்கைத் தலை தோற்றத்தை உருவாக்கிக் கொண்டிருப்பதிலேயே நடிப்பின் மீது அவருக்கிருக்கும் மரியதையை தெரிந்து கொள்ளலாம். அதிகமான வசனங்கள் கூட அவருக்கு இல்லை. பார்வையிலும், முக பாவங்களிலும் அவருடைய தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.


அடுத்து பேபி சாரா. தெய்வத் திருமகள் படத்திலேயே அந்த அளவுக்கு யதார்த்தமாய் நடித்திருந்தவர் இந்த படத்தில் இன்னும் ஒருபடி மேலே நடித்திருக்கிறார். கிராமத்தில் வளரும் சிறுமியாக இருந்தாலும் ஒரு காட்சியில் ஆங்கிலந்தில் பொளந்து கட்டும் போது தியேட்டரில் கைதட்டல் அள்ளுகிறது. படிக்கும் திறமைசாலிகள் எங்கு படித்தால் என்ன என்ற வசனம் சரியான இடத்தில் வருகிறது. ஒரு வளர்ப்புப் பிராணி மீது அவர் வைத்திருக்கும் பாசம் நெகிழ்ச்சியானதுதான். ஆனால், முன்னமே சொன்ன மாதிரி சாராவுக்கும், சேவலுக்குமான பாசம், வெறும் சாரா படிக்கும் பள்ளிக்கு மட்டும் அந்த சேவல் சென்று விடுவது, போதுமானதாக இல்லை. கிளைமாக்ஸ் காட்சியில் எந்த வசனமும் இல்லாமல் முன்னாடி வந்து கலங்கிய கண்களுடன் தோப்புக் கரணம் போடுவது அடடா...என பாராட்ட வைக்கிறது. தேசிய விருதுக்கு இப்போதே விண்ணப்பித்து விடலாம்.


மற்றபடி படத்தில் சினிமா முகங்கள் இல்லாமல் நிஜ குடும்பத்து உறுப்பினர்கள் போலவே நாசரின் மகன்கள், மருமகள்கள், மகள்கள் தெரிகிறார்கள். குறிப்பாக நாசரின் பேரன்களில் ஒருவராக நடிக்கும் துத்புதீன் பாஷா, நாசரின் பேத்தியாக நடிக்கும் துவாரா இடையிலான காதல் காட்சிகள் பட்டாம்பூச்சியாய் பறக்க வைக்கின்றன. வருஷம் 16 கார்த்திக், குஷ்புவை இருவரும் ஞாபகப்படுத்துகிறார்கள். நாசரின் மனைவியாக நடித்திருக்கும் கௌசல்யா நடிக்காமல் அப்படியே ஆச்சியாகவே மாறியிருக்கிறார்.


ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் அழகு... பாடல் ஒன்ஸ்மோர் கேட்க வைக்கும். பின்னணி இசையிலும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கிறார். நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு செட்டிநாட்டு வீதிகளையும், வீடுகளையும் அழகு மிளிர காட்டியிருக்கிறது.


சைவம் - இன்னும் ருசியைக் கூட்டியிருக்கலாம்.










-------------------------------------------------------------------



குமுதம் விமர்சனம்




சிக்கன் பிரியாணி குடும்பம், குஸ்காவுக்கு மாறும் ஒரு சாதாரண கதையை இரண்டு மணி நேரத்துக்கு சுவாரஸ்யமாகச் சொன்னதற்காக அமலாபால் வீட்டுக்காரரை கைகுலுக்கிப் பாராட்டலாம்.


குலசாமிக்கு நேர்ந்து கொண்டு, பலி கொடுக்க ஒரு சேவலை வளர்க்கிறார் நாசர். அது கொல்லப்படுவதை விரும்பாத பேத்தி சாரா (தெய்வத் திருமகள்), சேவலை ஒளித்து வைக்க, அவளுக்கு ஆதரவாக வீட்டாரும் மாற, கடைசியில் அந்த சேவல் உயிர் பிழைக்கிறது.


சாரா செமை க்யூட். கண்கள் பேசுகின்றன. குழந்தைத் தனமும், புத்திசாலித்தனமும் கலந்த ஒரு கவிதை. உன்னியின் மகள் பாடும் பாடலில் ஒரு தெய்வீகம். உன் சின்னக் கை விருதின் பலத்தைத் தாங்க வேண்டும் சாரா குட்டி!


நாசர், வழக்கம்போல் வாழ்ந்திருக்கிறார்.


எப்போதும் முறைத்துக் கொண்டேயிருக்கும் அந்தத் தடிப் பொடியனும் பலே!


டீன்ஏஜ் கேர்ள் ட்வாரா ஓவியம் போல் இருக்கிறார். எல்லார் முன்னாடியும் பேச மாட்டேன் என்று கிசுகிசுக்கும் அவரும் அத்தை (பொண்ணுக்காக)யைத் தேடும் பாட்ஷாவும் பொருத்தம்.


ஜி.வி. பிரகாஷ் ஆரவாரமில்லாமல் மண் மணக்கச் செய்திருக்கிறார்.


எதற்கெடுத்தாலும் தோப்புக்கரணம் போடுவது கொஞ்சம் ஓவராக இருந்தாலும், குடும்பத்தினர் அனைவரும் கடைசியில் அதைச் செய்வது நைஸ்.


யார், யாருக்கு என்ன சொந்தம்? போன்ற உறவு குழப்பம் படம் முழுக்க நீடிப்பதும், ஒரு வீட்டுக்குள்ளேயே கதை சுற்றுவதும் குறை!


சைவம் - அவார்டு நிச்சயம்!


குமுதம் ரேட்டிங் - நன்று



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

சைவம் தொடர்புடைய செய்திகள் ↓
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in