நம்மூர் பஸ் ஸ்டாண்டுகளில் ஓடும் பேருந்துகளில் உயிரை துச்சமென மதித்து ஏறி, இறங்கி அவல நிலையில் பொருட்களை கூவி கூவி விற்கும் மனிதர்களின் வாழ்க்கையையும் அதே பஸ் ஸ்டாண்டில் அடாவடியில் ஈடுபடும் மனிதர்களின் வாழ்க்கையையும் அவர்களது பின்னணியையும் கத்தியும், இரத்தமுமாக கூறியிருக்கும் படம், நான் பொன்னொன்று கண்டேன் . நான் பொருளொன்று கண்டேன் என பெயர் சூட்டுதற்கு பதிலாக, நான் பொன்னொன்று கண்டேன் எனப்பெயர் சூட்டுவதற்கு ஏதுவாக நாயகன், நாயகியின் காதலையும் கலந்துகட்டி வெளிவந்திருக்கிறது இத்திரைப்படம்!
பஸ் ஸ்டாண்டு சைக்கிள் ஸ்டேண்டு காண்ட்ரக்ட், பேருந்தினுள் பொருட்களை விற்கும் சிறுவர் சிறுமியின் ஏஜெண்ட், கந்துவட்டி அடாவடி என சகலத்திலும் சக்கை போடு போடும் பேயக்கா மீனாவிடமும் அவரது பெரிய இடத்து செட்அப்பிடமும் கூலிக்கு அடியாளாக வேலை பார்க்கிறார் அறிமுக ஹீரோ அஸ்வின்ராஜ். அவருக்கு பெரிய கல்குவாரி அதிபரின் மகள் அனாமிகா மீது காதல். குவாரி அதிபரின் தம்பியும் பேயக்கா மீனாவின் செட்-அப்புமான யுக்திவேல் தான் கதாநாயகி அனாமிகாவின் சித்தப்பு ! அப்புறம்? அப்புறமென்ன? சித்தப்புக்கு நாயகன்-நாயகியின் காதல் விவகாரம் தெரிய, பேயக்காவை எதிர்க்கும் தன் சொந்த அண்ணனையே தீர்த்துகட்டும் யுக்திவேல்., அண்ணன் மகள் அனாமிகாவின் காதலை மட்டும் ஆதரிக்க போகிறாரா? என்ன?! ஆதரிப்பது போல் நடித்து காலை வாருகிறார். கழுத்தை நெரிக்கிறார்! வில்லன் யுக்திவேலிடமிருந்தும், பேயக்காவிடமிருந்தும் காதல் ஜோடி தப்பியதா? சிக்கியதா? என்பது மீதிக்கதை!
அறிமுக நாயகர் அஸ்வின்ராஜ், நாயகி அனாமிகா, வில்லன் யுக்திவேல், பேயக்கா மீனா, தேனி முருகன், காதல் காமாட்சி உள்ளிட்ட எல்லோரும் இயக்குநர் எதிர்பார்த்ததற்கும் மேல் நடித்திருப்பது படத்திற்கு பலமா? பலவீனமா தெரியவில்லை !
அழகர் பொன்ராஜின் இசையில் பாடல்கள் தாளம் போடும் ராகம்! சபீர் அலிகானின் ஒளிப்பதிவு, சஞ்சீவ் சீனிவாஸின் நடனம், எழுத்து, இயக்கம் உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்டுகளுடன் யதார்த்தமான பஸ் ஸ்டாண்டு கதை யதார்த்தம் மீறிய இரத்த வெறியுடன் சொல்லப்பட்டிருப்பது தான் பலவீனம்!
" ஆக மொத்தத்தில், நான் பொன்னொன்று கண்டேன் - போனால் இன்றைய அடாவடி சமூக சூழலை கண்டேன்என வரலாம் !"