Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

பிரம்மன்

பிரம்மன்,Bramman
03 மார், 2014 - 15:25 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » பிரம்மன்

தினமலர் விமர்சனம்


சசிக்குமார் அடிப்பவர், அழிப்பவர் (திரைப்படங்களில் தான்...) ஆயிற்றே அவர் கதாநாயகராக நடித்திருக்கும் திரைப்படத்திற்கு படைக்கும் கடவுள் "பிரம்மன் எனப்பெயர் சூட்டியிருக்கின்றனரே... எனும் யோசனையுடனேயே தியேட்டருக்குள் சென்று அமர்ந்தோமென்றால், தனது அருவாள், அடிதடி, லுங்கி, நடை, உடை, பாவனை எல்லாவற்றையும் அழித்துவிட்டு ஜீன்ஸ், டான்ஸ், உடான்ஸ்... என்று சிட்டி பாயாக செம "கெட்-அப் பில் பளிச்சிடுகிறார் சசிக்குமார்!

சரி, விஷயம் இருக்கும் போல... என நிமர்ந்து சாய்ந்து உட்கார்ந்து ஸ்கிரினை பார்த்தோமென்றால்... அதில் கோயமுத்தூரில் 4-ம் கிளாஸ் படிக்கும்போது சசிக்குமாருக்கு ஒரு நண்பராம்... ஸ்கூல் வாத்தியார் பசங்களான அவரும், இவரும் அப்பவே ஸ்கூலுக்கு கட் அடித்துவிட்டு ஒரு தியேட்டரில் சினிமா பாடம்(!) படிப்பார்களாம்! அதனால் இவர்களது நட்பை பிரித்து சசியின் 4-ம் கிளாஸ் நண்பரின் அப்பா அஜெய் ரத்தினம் நண்பனை சென்னைக்கு அழைத்துப்போய் உனக்கு சினிமாவில் சாதிக்க வேண்டுமென்பதுதானே ஆசை! அதற்கு இன்னும் நாட்கள் இருக்கிறது. அதுவரை நான் சொல்வதை கேட்டுபடி... நான் உன்னை சினிமா படிப்பை படிக்க வைக்கிறேன்... என்று தனியாக நண்பனை அழைத்துபோய் படிக்க வைக்கிறார்.

சசியின் தந்தை ஞானசம்பந்தனோ., சசிகுமாரை உருப்படாதவன், ஊதாரி, கவுதாரி என சொல்லி சொல்லியே அவரது எதிர்காலத்தை கேள்விக்குறி ஆக்கிவிட, சசிக்குமாரோ தத்திக்குத்தி தாங்கள் சின்ன வயதில் படம் பார்த்த தியேட்டரையே லீசுக்கு எடுத்து ஓடாத படங்களையும், வேறு யாரும் போடாத பழைய படங்களையும் தன் தியேட்டரில் ஓட்டி காட்டி கையை சுட்டுக்கொள்கிறார். அவருக்கு உதவியாக சந்தானமும், சசியின் தியேட்டரில் டிக்கெட் கிழித்தப்படியும், இப்படியும் ஒரு கதையா.?! என கடுப்பாக, நாம் தியேட்டர் சீட்டை கிழிக்காதபடியும் ஆறுதல் அளிக்கிறார்!

இந்நிலையில் தியேட்டருக்கு வரியாக சுமார் 5 லட்சம் வரி செலுத்த வேண்டும்... இல்லையேல் தியேட்டரை இழுத்து மூட வேண்டும்... எனும் இக்கட்டான சூழ்நிலையில் பலரிடம் உதவி கோருகிறார் சசி. எல்லோரும் கைவிரித்த நிலையில், 4ம் கிளாஸ் படித்தபோது தன்னுடன் திரைப்பாடம் பயின்று இன்று ஆந்திராவில் நம்பர்-1 இயக்குநராக இருக்கும் மதன்குமாரைத்தேடி சென்னை போகிறார். நமக்கு திரைப்பாடம் நடத்திய தியேட்டர் இழுத்து மூடப்பட்டு, இடிக்கப்பட இருக்கிறது. அதற்கு உதவிசெய்ய... அதை காப்பாற்று எனும் கோரிக்கையை நண்பனுக்கு வைக்க சென்னை போகும் சசி, சினிமாவில் போராடும் அஸிஸ்டண்ட் இயக்குநர்கள் "பரோட்டா சூரி, சாம்ஸ் ஆகியோர் உதவியுடன் ஒருவழியாக மதன்குமாரின் அட்ரஸை தெரிந்து கொள்கிறார். ஆனால் தவறுதலாக அட்ரஸ் மாறி ஒருபடக் கம்பெனிக்கு போகும் சசி, தான் மதன்குமாரை தேடி வந்த கதையை திரைக்கதை போன்று பிரபல படத்தயாரிப்பாளர் ஜெயபிரகாஷிடம் சொல்ல, இதுவே சிறந்த கதை என இவர் மதன்குமாரை தேடி வந்தவர்... என்பது தெரியாமல் மதன்குமாரின் உதவியாளர் என எண்ணி சசிகுமாருக்கு 5 லட்சம் அட்வான்ஸ் தருகிறார்.

ஐய்யய்யோ., அப்புறம்? அப்புறமென்ன அந்த 5 லட்சம் செக்கை ஊருக்கு அனுப்பி வைக்கும் சசி, தியேட்டர் வரியை கட்ட சொல்லிவிட்டு பரோட்டா சூரியுடன் சினிமாவை கற்கிறார்.! "பவுண்டட் ஸ்கிரிப்டை தயார் செய்கிறார். இதற்கிடையில் இயக்குநர் மதன்குமாரையும் சந்திக்கும் சசிக்குமார் தான் இன்னார் என்று காட்டிக் கொள்ளாமல் அவரது அதி தீவிர ரசிகன் அதன் மூலமாகவே இப்பட வாய்ப்பை பெற்றேன் என்கிறார். இந்நிலையில் ஜெ.பி.க்கு உண்மை தெரிய வருகிறது. வாங்கிய அட்வான்ஸ்க்கு கதையை மட்டும் கொடுத்துவிட்டு நடையை கட்டு என்கிறார். முதலில் மறுக்கும் சசிக்குமார், தன் 4-ம் கிளாஸ் நண்பன் மதன்குமார் தான் இப்படத்தை இயக்க போகிறார் என்பது தெரிந்ததும், அவருக்காக விட்டுக்கொடுக்கிறார். (அவருக்கு இவர் தன் சிறு பிராயாத்து நண்பர் என்பது அப்பொழுதும் தெரிய மறுக்கிறது!)

அதற்காக மேலும் பெரிய தொகையை தயாரிப்பாளர் ஜெ.பி. கொடுக்க முன் வந்தும் அதையும் வாங்க மறுத்து, சூரி, சாம்ஸ் உள்ளிட்ட நண்பர்களையும் அம்போ என விட்டுவிட்டு ஊர் திரும்புகிறார் சசி. அங்கு சந்தானம் இவர் அனுப்பிய 5 லட்சத்தை இவரது தந்தை ஞானசம்பந்தத்திற்கு மருத்துவசெலவு செய்துவிட்டு "பலான படங்களை ஓட்டி தியேட்டரில் கல்லா கட்டி வருவது கண்டு கடுப்பாகும் சசிக்குமார், மீண்டும் தனக்கு பாடம் எடுத்த தியேட்டரை நல்ல தியேட்டராக்க களம் இறங்குகிறார். இந்நிலையில் சசிக்குமாரின் தங்கை புருஷனின் தங்கையும், தன் காதலியுமான கதாநாயகி லாவண்யாவையும் இயக்குநர் மதன்குமாருக்கு நிச்சயம் செய்து விடுகின்றனர்! (என்ன ஒரு கோ இன்ஸிடண்ட்.?!) காதலியையும், நண்பனுக்காக விட்டுக் கொடுக்க துணியும் சசிக்குமார் விதியை நோகாதபடி (நாமாக இருந்தால் நொந்தபடி...) தியேட்டரில் நண்பனுடன் 4ம் கிளாசில் தான் பார்த்த ரீல்களை எல்லாம் ஓட்டி பார்க்கிறார்.

(தியேட்டரில் செம ரீல்... என்று கமெண்ட் தூள் பறக்கிறது...) அந்த நேரம் தியேட்டருக்குள் சசிக்குமாரின் காதலி தன் வருங்கால மனைவி எனும் உண்மை தெரிந்து உள்ளே நுழையும் மதன்குமார், ""நீ என்னை படைத்த பிரம்மன்(ஐ... படத்தோட டைட்டீல் என தியேட்டரில் மீண்டும் சவுண்டு...)னடா... நீ ஏன் சிவனேன்னு... இருந்துட்டே?! எனக்கேட்டபடி சசியின் காதலியை அவர் வசம் ஒப்படைக்கிறார் மதன்குமார். கதையையும், இயக்குநர் வாய்ப்பையும் கூட ஒப்படைப்பதாக, உறுதியளிப்பதாக ஞாபகம்! ஒருவழியாக படம் முடிகிறது!!

படம் முடிந்ததும் ஓடு ஓடு... என ஒரு பாட்டு இச்சமயத்தில் ரிப்பீட்டாகும் பாருங்க அது தியேட்டரை விட்டு ஓட சொல்வது மாதிரி என ரசனையோ.?! சாக்கரட்டீஸ்க்கும், சசிகுமாருக்குமே வெளிச்சம்!

சசிகுமார், மதன்குமார், கதாநாயகி லாவண்யா, ஜெயப்பிரகாஷ், ஞானசம்பந்தம், அஜெய் ரத்னம், வனிதா உள்ளிட்ட எல்லோரும் பிரமாதமாக நடித்திருக்கின்றனர். இவர்கள் எல்லோரையும் காட்டிலும் அந்த மார்டன் தியேட்டர் அமைதியாக ஆர்ப்பாட்டம் இல்லாமல் நடித்து ஸ்கோர் செய்திருப்பது படத்தின் பெரும்பலம்!

தேவிஸ்ரீ பிரசாத்தின் இனிய இசை, ஜோமோள் டி.ஜான் மற்றும் பைசல் அலியின் அழகிய ஒளிப்பதிவு உள்ளிட்டவைகளும் சிறப்பு!

புதியவர் சாக்ரடீஸின் இயக்கத்திலும், எழுத்திலும் இன்னும் கொஞ்சம் புதுமை இருந்திருக்கலாம்... எல்லாவற்றுக்கும் மேலாக சசிக்குமாருக்கும், சாக்ரடீஸ்க்கும் நட்பு ஓ.கே., 4--ம் வகுப்பு நட்பை ஞாபகம் வைத்துக் கொள்ள முடியுமா.?! எனும் எண்ணம் உதித்திருக்கலாம்! அவ்வாறு உதித்திருந்ததென்றால் நாமும், பிரம்மனும் தப்பித்திருக்கலாம்!

ஆகமொத்தத்தில், திரைக்கு வரும் முன் இன்னும் அழகாக படைக்கப்பட்டிருக்கலாம், செதுக்கப்பட்டிருக்கலாம் பிரம்மன்!


------------------------------------------------------------------



நமது தினமலர் இணையதளத்தின் சினிமா பகுதியில், பல படங்களின் விமர்சனங்கள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. சில வாசகர்கள் தங்களது பிளாக்குகளில் திரைப்படங்களின் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர். அவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, வாசகர்களின் விமர்சனங்களும் தினமலர் இணையதள சினிமா பகுதியில் இடம்பெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்...

வாசகர் சி.பி.செந்தில் குமாரின் விமர்சனம்

அவரது பிளாக் முகவரி : www.adrasaka.com



வெயில் பட ஹீரோ மாதிரி இந்தப்பட ஹீரோவும் சினிமா தியேட்டரில் தன் வாழ்க்கையை தேடுபவர் தான். அந்த சாயல் வராமல் இருக்க தாவணிக்கனவுகள் பின்பாதி சாயலை மிக்ஸ் பண்ணி எம்.சசிகுமாரின் பிராண்ட் நட்பு, காதல், தியாகம் எல்லாவற்றையும் சேர்த்தால் பிரம்மன் கதை ரெடி.

ஹீரோ பழைய சினிமா தியேட்டரை லீசுக்கு எடுத்து ஓட்டிட்டு இருக்கார். தியேட்டர்ல கூட்டமே வர மாட்டேங்குது. புதுப்படம் தர மாட்டேங்கறாங்க, பழைய படத்துக்கு மக்கள் வர மாட்டேங்கறாங்க. 5 லட்சம் ரூபாய் கடன் ஆகிடுச்சு. சின்ன வயசுல சினிமாக்கனவோட இருந்த சக நண்பன் இப்போ சினிமாவுல புகழ் பெற்ற இயக்குநர்.அவரை சந்திச்சா உதவி கிடைக்கும்னு சென்னை கிளம்புறார்.

சென்னையில எதிர்பாராத விதமா ஹீரோவுக்கு, இயக்குநர் ஆகும் வாய்ப்பே கிடைச்சுடுது. அவரோட கதையை நண்பனுக்காக விட்டுத்தர்றார். காதலியையும் விட்டுத்தர தயார் ஆகறார். கடைசி வரை தான் யார்னு நண்பன் கிட்டே சொல்லவே இல்லை. உண்மை தெரிஞ்ச நண்பன் என்ன முடிவெடுக்கிறான் என்பதே கதை.

இதுவரை கிராமிய மனம் கமழும் படங்களிலேயே நடிச்சு வந்த எம்.சசிகுமார் முதன் முறையாக தைரியமாக நகர கதைக்கு மாறி இருக்கார். பெருசா மாற்றம் தெரியல. தங்கச்சி செண்ட்டிமெண்ட், அம்மா, அப்பாவிடம் பாசம் காட்டுவது அக்மார்க் எம்.ஜி.ஆர் பார்முலாக்கள் வழக்கம் போல் உண்டு. நண்பன் சம்பந்தப்பட்ட வசனங்களுக்கு தியேட்டரில் கை தட்டல் அள்ளுது (இன்னும் எத்தனை நாளுக்கு இதை வெச்சே ஓட்டுவாரோ..?). டூயட் காட்சிகளில் ராஜூ சுந்தரத்தின் தயவில் யதார்த்தமான, கண்ணை உறுத்தாட நடன அசைவுகள். முதன் முறையா பாரீன் லொக்கேசன்ல ஆட்டம்.

ஹீரோயின் புதுமுகம் லாவண்யா த்ரிவேதி. இவர் 2006ல் மிஸ் உத்தர்காண்ட் ஆக தேர்வானவர். மாடலிங்க் துறையில் கொடி கட்டிப்பறந்தவர், சிக் ஷாம்புவின் மாடல். 2012 ல் தெலுங்குப்படத்தில் அறிமுகம் ஆனவர். இஷா கோபிகர் முக அழகு சாயல், தமன்னாவின் முக பாவனைகள் இரண்டையும் கலந்து கட்டி அடித்த நீள் வட்ட நிலா முகம் . பிரமாதமாக நடிக்கா விட்டாலும் இவர் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார் என பட்சி சொல்லுது (இந்த பட்சிக்கு வேலையே இருக்காதா? எப்போ பாரு எதையாவது சொல்லிட்டே இருக்குமா?) இவருக்கு கண்களும், உதடுகளும் சின்னதாக இருந்தாலும் ரசிக்க வைக்கும் நளினங்கள் தான்.

படத்துக்கு பலம் சேர்க்கும் சந்தானம் படத்தின் கதையோடு ஒன்றிய காமெடி செய்கிறார். மொத்தப்படத்திலும் 24 ஜோக்ஸ் தான் சொல்றார் என்றாலும் அப்ளாஸ் அள்ளுறார் .

சூரி, பின் பாதி கதையில் தான் வர்றார். வழக்கம் போல் ஓவராக மொக்கை போடாமல் சுமாராக மொக்கை போடுகிறார்.

எம் சசிகுமார்-ன் நண்பராக வரும் நான் ஈ புகழ் சுதீப் ஒரு கல்லூரியின் கதை ஆர்யா மாதிரி பாடி லேங்குவேஜில் அடக்கி வாசிக்கிறார்.

படத்தில் வசனம் செம ஷார்ப். பின் பாதி திரைக்கதையில் தான் தடுமாறி விட்டார்கள். செயற்கையான சம்பவங்கள், வலிந்து திணிக்கப்பட்ட நண்பன் செண்ட்டிமெண்ட், காதலியை விட்டுத்தரும் ஒட்டாத தியாகம் எடுபடவில்லை. ஆனாலும் சந்தானம் காமெடிக்காகவும், எம்.சசிகுமாருக்காகவும் ஒரு முறை பார்க்கலாம்.

சி.பி.கமெண்ட்: பிரம்மன் - நேர்த்தியான முன் பாதி, சந்தானம் காமெடி, செயற்கையான நம்ப முடியாத பின் பாதி, நச் வசனம்!


-----------------------------------------------------------------



குமுதம் சினி விமர்சனம்



சசிகுமார், சினிமா தியேட்டரை லீஸுக்கு வாங்கி நடத்த, போண்டி நிலையில் அது இருக்க, ஐந்து லட்சம் வரி கட்டச் சொல்லி அரசாங்கம் வேறு நோட்டீஸ் அனுப்ப, சின்ன வயதில் தன்னுடன் படித்த நண்பன், பெரிய இயக்குநராக இருப்பதால் அவனிடம் பணம் வாங்க சரி சென்னை செல்ல, இடம் மாறி இந்த சொந்தக் கதையை ஒரு தயாரிப்பாளரிடம் சொல்ல, அவர் "அடுத்த படம் இதுதான், நீதான் டைரக்டர் என்று ஐந்து லட்சம் அட்வான்ஸ் கொடுக்க, அந்த நண்பன் இந்தக் கதையை எழுதி வாங்க, ஊரில் ஹீரோ காதலித்த பெண்ணையே நண்பன் மணக்கும் நிலை உருவாக, பிட் படம் ஓடும் அந்த தியேட்டரின் வரியை அரசாங்கம் தள்ளுபடி செய்ய... என்னங்க படிக்கும்போதே தலை சுற்றுகிறதா? உங்களுக்கே அப்படிஎன்றால் 120 ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கிப் பார்த்த எங்களுக்கு எப்படி இருக்கும்?

நகரம், வெளிநாட்டு டூயட் என்று பாதை மாறியிருக்கிறார் சசிகுமார். "உனக்கெல்லாம் டான்ஸ் வராது என்று சந்தானம் கிண்டல் அடித்தாலும் நடனத்தில் மெருகு காட்டியிருக்கிறார். அப்புறம் எண்பத்தேழாவது தடவையாக, "நட்புதான் உலகத்தில் பெரியது என்று டயலாக் பேச, தியேட்டரில் நண்பர்கள் விஸில் அடிக்கிறார்கள்! இயக்கம் சாக்ரடீஸ்.

நாயகி லாவண்யாவுக்குக் கண்கள், வாய் என்று ஆரம்பித்து எல்லாமே சின்னச் சின்னதாக இருக்கின்றன!

"கிரிக்கெட்னா பால் போடறதும், தியேட்டர்னா கால் போடறதும் சகஜம்தான் பஞ்ச் டயலாக் அடிக்கிறார் சந்தானம்! பின் பாதியில் சூரி!

பாடல்கள் ஓகே! ஒரு பாட்டில் பத்மப்ரியா மனம் திறந்து செமை குத்து போடுகிறார்.

பிரம்மா - தலையெழுத்து!

குமுதம் ரேட்டிங் - ஓகே



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

பிரம்மன் தொடர்புடைய செய்திகள் ↓
Advertisement
தொடர்புடைய படங்கள்

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in