Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

மரியான்

மரியான்,Mariyaan
 • மரியான்
 • தனுஷ்
 • பார்வதி
 • இயக்குனர்: பரத்பாலா
06 ஆக, 2013 - 16:52 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » மரியான்

    

தினமலர் விமர்சனம்ஒரு திரைப்படத்தை தனது ‘ஆஸ்கர்’ பிலிம்ஸ் தயாரிக்கிறதென்றால் அதில் நடிக்கும் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டில் தொடங்கி படத்தை இயக்கும் இயக்குநர் வரை சகலரது ஜாதகமும் தனது ஜாதகத்திற்கு சாதகமாக இருக்கிறதா? எனப் பார்த்து பார்த்து படம் பண்ணும் ஆஸ்கர் பிலிம்ஸ் வி.ரவிச்சந்திரனின் தயாரிப்பில் வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் ‘‘மரியான்!’’ அவரது புரொடக்ஷனில் திரைக்கு வந்திருக்கும் படம் தானா இது? எனக் கேட்கும் அளவில் ‘‘மரியான்’’ வெளிவந்திருப்பது தான் ‌கொடுமை!

ஒருவேளை இப்படத்தின் இயக்குநர் பரத்பாலா, தன் ஜாதகத்தை ஆஸ்கர் ரவியிடம் தனக்கு சாதகமாக மாற்றி கொடுத்து மாட்டி விட்டாரோ? என்னவோ?! அது நமக்கு தேவையில்லாத ஆராய்ச்சி! இப்பொழுது ‘‘மரியான்’’ கதைக்கு வருவோம்! அதாகப்பட்டது, கடலும் கடல் சார்ந்த பகுதியுமான நீரோடி எனும் மீனவ கிராமத்தை சார்ந்த இளைஞன் ஹீரோ ‘மரியான்’ எனும் தனுஷ்! மீன்பிடி படகுடனோ, படகில்லாமலோ(!) ஒரு முறை கடலுக்குள் சென்றார் என்றால், ஆழ் கடலுக்குள் அனாயாசமாக மூழ்சி, முங்கி, மூச்சடக்கி, கைவசமிருக்கும் ஈட்டியால் ‘கொம்பன்’ சுறா ‘வம்பன்’ திமிங்கிலத்(சும்மா ஒரு ரைமிங்கிற்கு...)தை எல்லாம் குத்தி ‌கொண்டு வந்து கரையில் காசாக்குகிறார். அந்த காசில் குடி, குடியென மொடாக்குடியனாக திரியும் ’மரியான்’ தனுஷை, பனிமலர் எனும் பார்வதி, ஒரு தலையாக உருகி உருகி காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் ‘பனி’ பார்வதி மீது மரியானுக்கும் காதல் உண்டாகிறது. அப்புறம்? அப்புறமென்ன...?! காதலுக்கு சுற்றமும் நடப்பும் தான் எதிர்ப்பு என்று நீங்கள் கருதினால் அதுதான் இல்லை... சூடான் தீவிரவாதிகள் தான் எதிர்ப்பு.

தமிழக மீனவ கிராமமான நீரோடிக்கு ஆப்ரிக்க நாடான சூடானில் இருந்து தீவிரவாதிகள் எப்படி வந்தனர்? என்று நீங்கள் குழப்பிக் கொள்ள வேண்டாம்! ‘‘மரியான்’’ கதையே சூடானில் தான் ஆ ‘ரம்பம்’ ஆகும்! ஒரே மூச்சில் கொம்பன் சுறாவையெல்லாம் கரைக்கு கொண்டு வந்து போட்டு காசு பார்க்கும் தனுஷ், காதலியின் உறவுபட்ட கடனுக்காக, நம் நாட்டை விட பல மடங்கு பின்தங்கிய சூடானுக்கு பஞ்சம் பிழைக்க போகிறார். (‌கைவசம் மீன்பிடி தொழில் இருக்கும் மீனவர்கள் பெரும்பாலும் பஞ்சம் பிழைக்க பக்கத்து மீனவ கிராமத்திற்கு கூட போகமாட்டார்கள்... என்பதும், அதுவும் சிங்கிள் ஆளாக ஒரே முக்கு மூழ்கில் சுறா, திமிங்கிலத்தையெல்லாம் வேட்டையாடும் ‘மரியான்’, கொஞ்சம் வஞ்சிரம், 4-சுறா, 2-திமிங்கிலங்களை பிடித்தாலே எப்பேற்பட்ட கடனையும் அடைக்கலாமே?! என்ற லாஜிக் எல்லாம் இயக்குனர் பரத்பாலா பார்க்கவில்லை.. எனவே ரசிக பெருமக்களே நீங்களும் பார்க்கக்கூடாது. ஹீ.ஹீ...)

இரண்டு வருட கான்ட்ராக்ட்டில் சூடானுக்கு போகும் அவர், அங்கு உள்ளூர் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு கசையடி, காயடியெல்லாம்பட்டு, கஷ்டப்பட்டு காதலிக்காக ஊர் திரும்பினாரா...?! இல்லையா என்பது மீதிக்கதை! யப்பாடி!!

மரியானாக தனுஷ், இஷ்டப்பட்டு கஷ்டப்பட்டிருக்கிறார். நஷ்டப்படாமலும் இருக்க வாழ்த்துவோம்! தனுஷ் கலைதாகம் எடுத்து இது மாதிரி படங்கள் செய்தாலும், அவ்வப்போது உங்களை வளர்த்துவிட்ட அண்ணன் செல்வராகவனின் படங்களிலும் தலை காட்டி தங்களுக்குரிய ரசிகர்களை தக்க வைத்து கொள்ள வேண்டுமென்பது நம் தாழ்மையான வேண்டுகோள்!

பனிமலராக ‘பூ’ பார்வதி மரியானை உருகி உருகி காதலிக்கிறார். நம்மையும் உருக வைக்கிறார் என்ன ஒரே குறை, சோக சீன்களிலும் கூட அன்றலர்ந்த மலராக பளிச்சென ‌வந்து தனுஷை பிடித்து இழுத்து வைத்து டூயட் பாடுவது கொஞ்சம் அல்ல...ரொம்பவே ஓவர்டா சாமி! இதற்கெல்லாம் காரணம், பார்வதி அல்ல, இயக்குநர் பரத்பாலா என்பதால் அம்மணியை மறப்போம், மன்னிப்போம்!!

இப்பொழுது இயக்குநர் பரத்பாலாவிடம் வருவோம்!! ‘‘சாதனை பண்றவனுக்கு பொம்பளை வாசனை பட்டுகிட்டே இருக்கணும்,‘கற’ டயலாக் சூப்பர்! அடிக்கடி ‌உம்மூலம் புள்ளை பெத்துக்கணும், புள்ளை பெத்துக்கணும்... என நாயகி, நாயகரை டார்ச்சர் செய்வது, தனுஷிடம் பார்வதி எதிர்பார்ப்பது காதலையா? காமத்தையா.?! எனும் குழப்பத்தை ஏற்படுத்துகிறது! அதேமாதிரி தனுஷ், ‘நான் கடல் ராஜா’  என கர்ஜிப்பது எல்லாம்கூட படத்‌தை கடலுக்குள் தியேட்டர்கள் அமைத்து அங்கு கடல்வாழ் ஜீவராசிகள் ரசிகர்களாக அமர்ந்து படம் பார்த்திருந்தால் அவைகள் ஒரு வேளை ரசித்திருக்கலாம்! நமக்கு சலிப்பே தட்டுகிறது!

முன்பெல்லாம் திரைப்படங்களில் ‌கதைக்கு தேவையில்லாத கேரக்டர்களை பாம்பு கடித்தது, பல்லி கடித்தது என்று தீர்த்துக்கட்டுவார்கள். பரத்பாலா ஒருபடி மேலே போய், ஒரு கட்டத்தில் தன் கதைக்கு தேவையில்லாமல் போன மீனவர்களான அப்புக்குட்டி உள்ளிட்ட இருவரை, இலங்கை கடற்படை சுட்டுவிட்டதென, சென்சிடிவ் மேட்டரை சென்டிமென்ட்டாக்கியிருப்பதும், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுடன் சேர்ந்துகொண்டு கிடைக்கும் கேப்பில் எல்லாம் தாங்கள் முன்பு போட்ட ‘வந்தே மாதரம்’ ட்யூனுக்கு புதிய வார்த்தைகளை போட்டு மீண்டும் ‘நெஞ்சே எழு...’ உள்ளிட்ட பாடல்களை எழுப்பியிருப்பதும், அந்தப் பாடல்கள் சோகசீனில் கூட ‘டூயட்’ ராகம் போடுவதும் ‘மரியானை‘ மறத்துப்போக வைக்கின்றன என்றால் மிகையல்ல.

முன்பு ஒருமுறை ‘மரியான்‘ பிரஸ்மீட்டில் இயக்குநர் பரத்பாலா, ‘நான் மயிலாப்பூர் பிராமின்... ஆனால் கிறிஸ்தவ மீனவ கிராமத்தையும் அந்த கிராமத்து யுவன் - யுவதியின் காதலையும் படமாக்கியி‌ருக்கிறேன்’ என்று... படம் முழுக்க எறா, சுறா உள்ளிட்ட மீன் இனத்தை கொன்று குவிப்பதையும், நெத்திலி முதல் வஞ்சிரம் மீன் வரை எப்படி வாயிலிட்டு சாப்பிடுவது என்பது வரை... செம கிளாஸ் எடுத்து இருக்கிறார் இப்படத்தில். ஒரு வேளை, அந்த மீன்களின் சாபம்கூட ஒளிப்பதிவு, பின்னணி, இசை உள்ளிட்ட களங்களில் படம்‌ பிரமாதமாக இருந்தும் ‘மரியானை’ சரியானவனாக நமக்கு காண்பிக்க தவறிவிட்டதோ?! என்னும் எண்ணத்தை ஏற்படுத்துகிறது!

பரத்பாலா சார்., பெரிசா யாருகிட்டேயும் அஸிஸ்டண்டா வேலை பார்க்காமல் நூறுக்கு நூறு சுவத்துக்குள்ளாற உலகப்படங்களை அதுவும் ஆர்ட் படங்களை எல்லாம் டிவிடியில போட்டு சிஸ்டத்துல உட்கார்ந்து பார்த்தா உங்களை மாதிரிதான் படம் எடுக்கமுடியும்... என்பதை நிரூபித்தமைக்காக ஒரு வோட் ஆப் தாங்க்ஸ்! தமிழ் சினிமா இளைஞர்‌களே., இயக்குநர்களே, இனி, இது மாதிரி ரிஸ்க் எடுக்காதீங்க ப்ளீஸ்!!

ஆக மொத்தத்தில் ‘மரியான்’ பார்க்கப்போனா கைவசம் தேவை ஒரு ‘சாரிடான்!’--------------------------------------------------------------------

குமுதம் விமர்சனம்


வழக்கம்போல ஜல்லியடித்தாலும்‌ கொஞ்சம் வித்தியாசமான படம் தந்திருக்கிறார் பரத்பாலா.

பிழைப்புக்காக சூடான் செல்லும் தனுஷ், காதலியைக் கரம் பிடிக்க ஊருக்குக் காதலாகத் திரும்பி வரும்போது, தீவிரவாதிகளின் கையில் சிக்கிக் கொள்கிறார். வாழ்வா சாவா போராட்டத்தில் அப்புறம் என்ன ஆச்சு என்பதுதான் மரியாயன்.

தனுஷின் உடம்பு ஏறுகிறதோ இல்லையோ நடிப்பு நாளுக்கு நாள் ஏறுகிறது. எதிரிகளிடம் சிக்கி சின்னாபின்னமாகி நடுங்கும்போதும், அத்தனை பேர் கண்ணிலும் மண் தூவி, காடு, பாலைவனம், கடல் என்று தவித்து, உதடு வெடித்து எப்படியும் தப்பிக்க வேண்டும் என்ற உணர்வோடு ‘நெஞ்சே எழு’வதாகட்டும் மனிதர் விருதுநடை போடுகிறார். சூடானில் உணவு கிடைக்காமல் மானசீகமாய் மீன் சாப்பிட்டு, தம் அடிக்கும் காட்சி கவிதைதான் என்றாலும் தியேட்டரில் சிரிக்கிறார்கள் பாஸ்! பூ படத்தில் மொட்டாக இருந்த பார்வதி, இதிலே மணம் வீசி மலர்ந்திருக்கிறார். சமயங்களில் தனுஷையும் தாண்டுகிறார்.

அப்புக்குட்டி, ஜகன் எல்லாம் இருந்தும் புன்னகை கிலோ என்ன விலை?

யார் அந்த தாடி வில்லன்? பொருத்தம்.

படத்‌தை இரண்டு முதுகுகள் அனாயாசமாகச் சுமக்கின்றன. ஏ.ஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவாளர் மார்க்கோனிக்ஸ். கடல்ராஜா, இன்னும் கொஞ்சம் நேரம் என்று ரஹ்மான் தாளம் போட வைக்கிறார் என்றால், கேமரா பாலைவனம் பக்கம் போகும்போது நமக்கு வியர்க்கிறது. கடல்புறத்துக்குச் சென்றால் குளிர்கிறது.

சூடான் தீவிரவாதிகள் சும்மா வெற்று வானத்தைச் சுட்டபடியே போவது வெறுப்படிக்கிறது.

மொத்தத்தில் ‘மரியான்’ - ‘மாற்றம்’

குமுதம் ரேட்டிங் - ஓகே.-----------------------------------------------------------------------


கல்கி விமர்சனம்


ஓர் இளைஞனை கடலும் பாலையும் மாறி மாறி அலைக்கழிக்கும் காதல் கதை மரியான். மீனவக் கிராமத்தில் கடல் அலைபோல கட்டுப்பாடில்லாமல் அலையும் மரியானை, காதல் ஒரு கட்டுக்குள் கொண்டு வருவது முதல் பாதி எனில், அவனை சூடானுக்குப் பிழைக்க அனுப்புவது இரண்டாம் பாதி. சூடான் தந்த சூடான அனுபவமும், காதல் தரும் வேதனையும்தான் கதையின் மையம்.

தனுஷ் நடிப்பில் அத்தனை நிதானம், பார்வதியின் காதல், நண்பனின் மரணம், பிரிவின் வலி, சூடான் பாலைவனத்தில் படும் கஷ்டம்... என தாம் வரும் ஒவ்வொரு பிரேமிலும் கனகச்சிதம். சூடானில் தீவிரவாதிகளிடம் மாட்டிக்கொண்டு, தன்னை வேலைக்கு வைத்திருந்த கம்பெனியிடம் பேசுவதுபோல ‘நீரோடி’யில் இருக்கும் பார்வதியிடம் அரைகுறை ஆங்கிலத்தில் பேசி அழும்போது ரசிகனுக்குள் ஏதோ ஒன்று உடைந்து நொறுங்குவது தனுஷின் நடிப்பால்தான்.

இன்னும் கொஞ்சம் நேரம் பார்க்க மாட்டோமா என்று நடிப்பில் ஏங்க வைக்கிறார் ஹீரோயின் பார்வதி. கால்முளைத்த கடல் தேவதை போல அத்தனை வனப்பு. அவரது பெரிய பெரிய கண்கள் அத்தனை காதலையும் பேசிவிடுகின்றன.

தனுஷுக்கும் பார்வதிக்கும் நிகராகப் படத்தை ஆக்கிரமிக்கிறது சூடான் பாலைவனம். அங்கே தனுஷ் மீது பாயவரும் புலி, தனுஷின் பயப்பிரமையாய... இல்‌லை உண்மையா? தீவிரவாதிகள் ஜெகனைக் கொல்வதும் தனுஷ் தப்பிப்பதும் முன்கூட்டியே தெரிந்துவிடுகிறதே? தனுஷ், ஜெகன் இருவரையும் கடத்தி வைதிருப்பதால் பணம் தேறாது என்று தெரிந்தபிறகும், வைத்திருப்பது ஏன்? இப்படி பல ஏன்கள் இருக்கின்றன ‘மரியான்’ படத்துக்குள்... இயக்குனர் பரத் பாலாவுக்குள் இல்லாமல் போனது ஏன்?

ஏ.ஆர்.ரஹ்மானின் இசை, படத்தோடு ரசிகனை மேலும் ஒன்ற வைக்கிறது. நெஞ்சே எழு, இன்னும் கொஞ்சம் நேரம், கடல் ராசா... பாடல்கள் படத்தின் கதையை நகர்த்துகின்றன. ஒன்றுமில்லாத காட்சிகளில் தன் இசையை இட்டு நிரப்பி இருக்கிறார் ரஹ்மான்.

மர்கஸ் கோனிக்ஸின் ஒளிப்பதிவில் கடலின் ஈரமும், பாலையின் வெக்கையும் சரிவிகித கலவை. சூடான் பாலைவனத்தில் அகோரப் பசியோடு சுழன்றிருக்கிறது கேமரா.

படத்தை இரண்டரை மணி நேரம் இழுக்காமல், கதை கோருகிற நேரத்தோடு முன் கூட்டியே முடித்திருக்கலாம். சமீபகாலமாக தமிழ்த் திரைக்கும் கடலுக்கும் ராசியில்லை என்பது ‘மரியான்’ மூலம் மீண்டும் ஒரு மு‌றை நிரூபணம் ஆகி இருக்கிறது.

மரியான் - மனசுக்குள் இறங்கவில்லை.

---------------------------------------------------------------------------நமது தினமலர் இணையதளத்தின் சினிமா பகு‌தியில், பல படங்களின் விமர்சனங்கள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. சில வாசகர்கள் தங்களது பிளாக்குகளில் திரைப்படங்களின் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர். அவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, வாசகர்களின் விமர்சனங்களும் தினமலர் இணையதள சினிமா பகுதியில் இடம்பெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்...

வாசகர் சி.பி.செந்தில் குமாரின் விமர்சனம்

அவரது பிளாக் முகவரி : www.adrasaka.comஹீரோ சரக்கு அடிக்கும் நல்ல (!?) மீனவர். இவர் அதே ஊரில் மீனவரொருவரின் மகளை லவ்வறார். அவருக்கு ஊருக்குள்ளே கடன். சொந்த அம்மா அப்பா கடன்  வாங்குனாக்கூட தமிழன் அதைப்பத்தி கவலைப்படமாட்டான். ஆனா காதலிக்கு கடன்னா? துடிச்சுடுவான்.

வில்லன் கொடுத்த பணத்தை கரெக்ட் பண்ண, ஹீரோயினை மேரேஜ் பண்ணிக்க ஆசைப்படறான். (மேரேஜ் பண்ணிட்டா அவன் என்ன வில்லன்? ) ஆனா ஹீரோ விடலை.  2 வருஷ காண்ட்ராக்ட்ல ஃபாரீன் போறார்.  திரும்பி வரும்போது 2ஜி-யை அடிச்ச ஆ.ராசா குரூப்பை விட பயங்கர கொள்ளைக்காரங்க கிட்டே மாட்டிக்கறார். அப்புறம் என்ன ஆச்சு? இதுதான் மரியான்.

சும்மா சொல்லக்கூடாது, கமல், விக்ரம்க்குப்பிறகு நடிப்புக்காக அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படும் ஹீரோக்கள் லிஸ்ட்ல் தனுஷ் சர்வசாதாரணமா சைன் பண்ணிட்டார். பிரமாதமான நடிப்பு. ஆங்காங்கே கமல் (நாயகன்), ரஜினி (தளபதி) சாயல் இருந்தாலும் சந்தேகமே இல்லாம தனுஷ்க்கு இது ஒரு மைல்கல் படம் தான். வெல்டன் சார்.

ஹீரோயின் பூ பட நாயகி பார்வதி. தமிழ் சினிமா உலகம் வெட்கப்படும் அளவுக்கு பிரமாதமான நடிப்பு இவருடையது.  திறமையை மட்டும் காட்டிட்டு இருந்தா தமிழன் ஒத்துக்க மாட்டான்னு பூ படம் கத்துக்குடுத்த பாடத்தை மறக்காம ஒளிப்பதிவாளர் உதவியுடன் தாவணி இல்லாம வெறும் ஜாக்கெட் மட்டும் போட்டு லோ ஆங்கிள் ஷாட்ஸ் மட்டும் 45 இடங்கள்ல வர்ற மாதிரி செம காட்டு காட்டி இருக்கார்.

கவிதாயினி குட்டி ரேவதி  படத்துக்கு சீனியர் அசோசியேட் டைரக்டர் ஜாப். டைட்டில்ல அவர் பேரைப்பார்த்ததும் பெண்ணிய காட்சிகள் வரும்னு எதிர்பார்த்தேன். ஆனா  ஹீரோ, ஹீரோயினை தேவையே இல்லாம இடுப்புல ஓங்கி உதைக்கும் பழம் பஞ்சாங்க காட்சி தான் வருது. காம்ப்ரமைஸ்?

முக்கியமான ஆள் ஏ.ஆர்.ரஹ்மான். 2 பாட்டு சூப்பர் ஹிட்டு.  பிஜிஎம்., ல உழைப்பு பத்தாது (இளையராஜா மாதிரி ஃபேமஸ் ஆகனும்னா பிஜிஎம்., ல சைன் பண்ணனும்-இது எல்லா இசை அமைப்பாளருக்கும் பொருந்தும்) படம் பாலைவனத்துல பயணம் செய்யும்போது, பின்னணி இசைல கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கார். ஒளிப்பதிவு பக்கா,. கடல் அடியில் காமரா வெச்சு எடுக்கப்பட்ட காட்சிகள் அழகு . 

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்...

1. ஏ.ஆர்.ரஹ்மானை புக் பண்ணி படத்துக்கு சர்வதேச மார்க்கெட்டை பிடிச்சது. ராஞ்சனா ஹிந்தில ஹிட் ஆன பின் சாமார்த்தியமா, இப்போ ரிலீஸ் பண்ணியது.

2. போஸ்டர் டிசைன்ல நல்ல லவ் ஸ்டோரி மாதிரி பில்டப் கொடுத்தது. பார்வதியை முழுக்க முழுக்க கிளாமராவும், கேரக்டர்வைஸும் நல்லாஆஆ யூஸ் பண்ணிக்கிட்டது

3. பின் பாதியில் படம் ரொம்ப ட்ரை(dry) தெரிந்தும் தைரியமாய் படத்தை ரியலிஸ்ட்டிக்காய் எடுத்தது.

4. பாலைவனத்தில் ஹீரோ புல் சாப்பிடும் காட்சி. 2 புலிகளிடம் மாட்டிக்கொள்ளும் லைஃப் ஆஃப் பை உல்டா காட்சி. தியேட்டரில்; செம ரெஸ்பான்ஸ். 

5. நமீபியா, சூடான் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடத்தியது.


இயக்குநரிடம் சில கேள்விகள்...? 

1. மீனவரா வரும் ஹீரோ படகில் கடல்ல போறார். இன்னொரு படகு அருகில் வந்ததும் கிட்டே போய் தீப்பெட்டி வாங்கிட்டா மேட்டர் ஓவர். அவர் உடனே கடல்ல டைவ் அடிச்சு நீந்தி அந்த படகு கிட்டே போய் தீப்பெட்டி வாங்கி வாய்க்குள்ளே அடக்கிட்டு கடப்பாறை நீச்சல் அடிச்சு இந்த படகு வந்து ஏறுவது தான் ஹீரோயிசமா? செம காமெடி பாஸ். சிரி சிரினு சிரிக்கறாங்க... படு கேவலமான ஹீரோயிச மேக்கிங்க்.

2. வில்லன் ஹீரோ கிட்டே ஃபோனை கொடுத்து கம்பெனில பேசி பணம் கேளு அப்டிங்கறார். ஹீரோ டக்னு ஹீரோயினுக்கு ஃபோனைப்போட்டு கடலை போட்டுட்டு இருக்கார், கட்டதுரை மாதிரி.  வில்லன் பே-னு பார்த்துட்டு இருக்கான். பெண் குரல் எதிர்முனைல இருந்து கேட்காம போகுமா?  (மொழி தான் புரியாது,  பாவனை கூட தெரியாதா அதைவிடக்காமெடி வில்லன் அவன் வீட்டு ஃபோனை எதுக்கு டமால்னு உடைக்கனும்?

3. பணயக்கைதியா 3 பேரை பிடிச்சு வெச்சவங்க எதுக்கு ஹீரோவைக் கொல்லாம இன்னொரு ஆளை டக்னு கொல்றாங்க? ஆளுங்க இருக்கற வரை அவங்களுக்கு லாபம் தானே?  (அதிக பணயத்தொகை கேட்கலாம்)

4. இடைவேளைக்குப்பின் அந்த நீக்ரோ பசங்க ஏன் லூசுங்க மாதிரி வானத்துல துப்பாக்கியால சுட்டுட்டே இருக்காங்க? விலைவாசி எப்படி ஏறிக்கிடக்கு? கொஞ்சம் கூட பொறுப்பே   இல்லாம வேஸ்ட் பண்ணுவாங்களா?

5. ஹீரோ, ஹீரோயினை லவ் பண்றார். ஆனா அதை வெளிக்காட்டிக்கலை. ஹீரோயின், ஹீரோவைப்பார்க்க வரும்போது ஹீரோவோட நண்பர் செத்திருக்கார். ஹீரோயின்   வானு கூப்பிட்டது ஒரு குத்தமாய்யா? வில்லனை விட கேவலமா ஹீரோ, தான்  உயிராய் காதலிக்கும் காதலியை இடுப்புல ஓங்கி உதைக்கிறார். படுகேவலமான ஆணாதிக்ககாட்சி மட்டுமல்ல. லாஜிக் மீறல். பொண்டாட்டியை புருஷன் அடிப்பான். ஆனா, காதலியை காதலன் அப்டி உதைக்க மாட்டான்

6. படத்தின் திரைக்கதைக்கு தேவையே இல்லாமல் ஹீரோ எதுக்கு தண்ணி அடிச்சுட்டே, தம் அடிச்சுட்டே இருக்காரு?  இதுதான் சாக்குன்னு தயாரிப்பாளர் செலவுல சரக்கா?

7. பாலை வனத்துல பசி உள்ள இரு புலிகளுக்கு நடுவில் ஒரு ஆள் மாட்டினா முதல்ல புலி ஆளை அடிச்சு கொன்னுடும். அதுக்குப்பின் தான் அந்த 2 புலிகளும் தங்களுக்குள்ளே அடிச்சுக்கும். ஆனா ஹீரோவை புலிங்க கண்டுக்காம அதுங்க 2ம் முறைச்சுக்கிட்டு இருக்கு.

8.  வில்லன், ஹீரோயின் கோயிலுக்குப்போய் இருக்கும்போது ஹீரோயின் செருப்பை தடவிப்பார்க்கறான். அட பரதேசி. நீ லட்சக்கணக்குல ஹீரோயின் அப்பாவுக்கு கடன் கொடுத்திருக்கே. கேவலம் அவ செருப்பை தடவி ஆம்பளைங்களையே அவமானப்படுத்திட்டியே?  மனசுக்குள்ளே ராவணன் -னு நினைப்பா? 

9. வில்லன், ஹீரோயின் செப்பலை காலால தடவிட்டு இருக்கும்போது 1 கிமீ தூரத்துல இருக்கும் ஹீரோவுக்கு, வில்லன் தன் காதலியோட செப்பலைத்தான் தடவறான்னு எப்படித்தெரியுது? பைனாகுலர் வெச்சிப்பார்த்தாரா?

10.  கதைப்படி, ஹீரோ உள்ளூரில் இருந்து வெளியூரில் வந்து வேலைக்காக அல்லது வேலையில் சேர்ந்து என்ன கஷ்டம் எல்லாம் அனுபவிக்கறார் என்பதை  டீடெய்லாக சொல்லனும். அப்போத்தான் பரிதாபம் வரும்.  ஆனா அந்த எப்பிசோடே இல்லை படத்துல. திரைக்கதையின் பெரிய பலவீனம் அதுதான்.

11 . ஹீரோவின் அம்மா, ஹீரோயின் பேசும் மாமியார் மருமக சண்டை வசனங்கள், மண்வாசனை - காந்திமதி டூ ரேவதி, சின்னக்கவுண்டர் - மனோரமா டூ சுகன்யா வசனங்களின் அப்பட்டக்காப்பி. ஏம்மா தேவிப்ரியா நோட் இட்

12. அப்புக்குட்டி, இமான் இருவரும் வீணடிக்கப்பட்டிருப்பது ஏனோ?

13. வில்லன் எப்பவும் பாலை வனத்திலேயே இருப்பவன். ஹீரோ கடல்வாசி. ஆனா ஹீரோ, வில்லனை சர்வசாதாரணமா அடிச்சு ஜெயிப்பது எப்படி?


மனம் கவர்ந்த வசனங்கள்...
 
1. ஆம்பளையோட வீராப்பெல்லாம் பொம்பளை மூச்சுக்காத்து படற வரைக்கும் தான். பட்டுட்டா அவன் கோலிசோடா தான்.

2. யாரையாவது பிடிச்சிருந்தா ஒண்ணா குத்தகைக்கு எடுக்கனும். இல்ல கொள்முதல் பண்ணிடனும். பம்மிட்டு இருக்கப்படாது

3. கடலும் பொண்ணும் ஒண்ணு. எத்தனை தடவை பார்த்தாலும் புதுசு தாம்லே

4.  ஹீரோயின் - உன் கண்ணுல என்னை நான் பார்த்துட்டேன்யா.மறைக்காத நீ தாம்மா மறைக்காம ஓப்பனா இருக்கே. அவர் சர்ட் போட்டிருக்காரு

5. யோவ். என்னை பிடிக்காதுன்னே. ஆனா என்னையவே பார்த்துட்டு இருந்தே? உன் கூட இருந்தவளையும் தான் பார்த்தேன். அதுக்கு ?

6. தீக்குச்சி தீப்பெட்டிலயே இருந்தா எப்டி பத்திக்கிம்? உரசனும், போ அவனை உரசு அடேங்கப்பா கண்டுபிடிப்பு! அடேய்

 7. ஹீரோ பஞ்ச் - மரியான் பிடிக்காத வேலையை செய்ய மாட்டான்.பிடிச்ச வேலையை செய்யாம விடமாட்டான். தியேட்டரை விட்டு வெளியே போக விடமாட்டான் (ஹீரோ ஃபிரண்ட் பேசும் வசனம்)

8. எங்காளுக்குப்போட்டியா ஷாருக்கான் ரா-ஒன் எடுத்தாரு. ஊத்திக்கிச்சுல்ல? மாப்ளை சப்போர்ட்டிங் டூ மாமா

9. எல்லாரும் நம்மை மாதிரி மனுஷங்க தானே?  புது ஊர்னாலும் பழகிடும்.

10 மரியான்னா சாவே இல்லாதவன்னு அர்த்தம். சாகடிக்கப்போறான்னு அர்த்தம் இல்லையா? ஹி..ஹி...


படம் பார்க்கும்போது ட்விட்டரில் போட்ட ட்வீட்ஸ்...

1. ஏ.ஆர்.ஆர்., க்கு பாடலில் வரும் ஹம்மிங்னா செம கொண்டாட்டம் போல.

 2. அய்யய்யோ தனுஷ்க்கு பார்வதி வலியனாப்போய் லிப் கிஸ் தருது. தடுக்க முடியல.

 3. ஆஹா. தனுஷ் கமல் மாதிரி, ரஜினி மாதிரி எல்லாம் ட்ரை பண்றாரே.

 4. இடைவேளை விட்டாச்சு. ஆனா வெளில விடமாட்டாங்களாம். மாட்டிக்கிட்டாங்க ஜனங்க. இதுவரை படம் சுமாரு தான் குமாரு.

 5.  பம்பாய் பி.ஜி.எம்., மை மரியான்-ல ஏ,ஆர்.ஆர் சுட்டுட்டாரு. தேவிப்ரியாவுக்கு போன் போடேய்.

சி.பி.கமெண்ட் :  ஹீரோ, ஹீரோயினுக்கு விருது நிச்சயம். ஸெம ஆக்டிங் - ஆனா படம் அட்டர் பிளாப் - தனுஷ்  ரசிகர்கள் பார்க்கலாம். பார்வதியை மேலோட்டமா ரசிக்க நினைப்பவர்கள் பார்க்கலாம். மற்றவர்கள் டி.வி.யில் போட்டபின் பார்க்க. ஈரோடு அபிராமியில் படம் பார்த்தேன்.வாசகர் கருத்து (44)

Mani Maran - Chennai,இந்தியா
21 ஆக, 2013 - 09:41 Report Abuse
Mani Maran good movie தனுஷ் and பார்வதி acting is too good ...
Rate this:
Jaya Raj - chennai,இந்தியா
17 ஆக, 2013 - 13:27 Report Abuse
Jaya Raj என்றும் நல்ல படைப்புகளுக்கு நம் மக்கள் மரியாதை கொடுப்பதில்லை , ஆதரிப்பதில்லை . மரியான் ஒரு அருமையான திரைப்படம் . நல்ல கதை அம்சமுள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதில் தனுஷ் சிறந்தவர் .மரத்தை கட்டி பிடித்து காதல் செய்வதையும் ,வன்முறை அடிதாடி போன்ற படங்களை ரசிபதையும் விட்டு விட்டு இது போன்ற நல்ல படங்களை ஆதரியுங்கள் அல்லது மோசமான விமர்சனங்களை கொடுக்காதிர்கள் .
Rate this:
G.ponnusamy - lagos,நைஜீரியா
03 ஆக, 2013 - 22:07 Report Abuse
G.ponnusamy 1947 டு 2013 ல் வந்த படங்களில் இது ஒரு மோசமான படம் . தயாரிப்பாளர் உயிரோடு இருந்தால் சரி .
Rate this:
Arumugam - Paris,பிரான்ஸ்
31 ஜூலை, 2013 - 01:20 Report Abuse
Arumugam கதை,வசனம்,பாடல்,இசை,இயக்கம்,நடிப்பு என்று எல்லாம் சேர்ந்து பொறுமையை மிகவும் சோதிக்கின்றன. ஒரு "சாரிடான்" போதாது.
Rate this:
Antoo Ootna - kerala,இந்தியா
21 ஆக, 2013 - 11:29Report Abuse
Antoo Ootnaஆறுமுகம் வேணும்னா ஒரு 100 தூக்க மாத்திரை தரட்டுமா...
Rate this:
bala - chennai,இந்தியா
29 ஜூலை, 2013 - 10:55 Report Abuse
bala ரியலி சூப்பர் லவ் story
Rate this:
மேலும் 38 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
தொடர்புடைய படங்கள்

மேலும் விமர்சனம்

 • டாப் 5 படங்கள்

 • Advertisement
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2023 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in