எல் 2 எம்புரான் - முதல் நாள் வசூல் எவ்வளவு? | 40 வயதைக் கடந்தும் திருமணத்தைத் தள்ளி வைக்கும் நடிகர்கள் | வீர தீர சூரன் முதல் நாள் வசூல் | பிளாஷ்பேக்: எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தை இசை அமைப்பாளராக்கிய ஸ்ரீதர் | திரையுலகில் 50 ஆண்டுகள்: முத்துலிங்கத்திற்கு பாராட்டு விழா நடத்தும் எழுத்தாளர் சங்கம் | ஆஸ்கர் விருதுக்கு சென்ற படத்திற்கு இந்தியாவில் தடை | சிவாஜியின் அன்னை இல்லம் எனக்கே சொந்தம்: நீதிமன்றத்தில் பிரபு மனு | பிளாஷ்பேக்: பாகவதர் நடிக்காததால் தோல்வி அடைந்த படம் | ஹார்டிஸ்க் ஒப்படைப்பு: தீர்ந்தது சோனா பிரச்னை | ஒவ்வொரு முறையும் உங்களை தேர்வு செய்வேன் : நயன்தாரா |
தமிழ்த் திரையுலகில் மட்டுமல்லாது, இந்தியத் திரையுலகிலும் தனக்கென தனிப் பெயரைப் பெற்றுள்ளவர் கமல்ஹாசன். இப்படிக் கூட ஒருவரால் அவ்வளவு ஈடுபாட்டுடன் உழைக்க முடியுமா என்பதற்கு அவரை தாராளமாக உதாரணமாகச் சொல்லலாம். செய்யும் தொழிலே தெய்வம் என்பார்கள். ஆனால், அதற்கு மேலும் அவர்கள் செய்யும் தொழிலை நேசிக்க முடியும் என்றால் அது கமல்ஹாசனால் மட்டுமே முடியும் என்று அவருடன் நெருங்கிப் பழகிய திரையுலகத்தினர் சொல்வார்கள்.
நடிப்பு மட்டும்தான் அவருக்கு பிடிக்கும் என்று சொன்னால் அது தவறு, நடிப்பையும் மீறி சினிமாவை ஒவ்வொரு நொடியும் இயக்கம், தொழில்நுட்பம், எழுத்து என பல விஷயங்களிலும் அவருக்கு பிடித்துள்ள விஷயங்களை பட்டியலிட முடியாது. தொழில்நுட்பத்தில் இன்றைய உலகத்தில் என்னென்ன புதுப் புது விஷயங்கள் வருகிறதோ அவற்றைப் பற்றி முழுமையாக உடனுக்குடன் தெரிந்து கொள்வார்.
'களத்தூர் கண்ணம்மா' செல்வம் முதல் இன்றைய 'பாபநாசம்' சுயம்புலிங்கம் வரை கமல்ஹாசன் அவரை சுயம்புவாகவே வளர்த்துக் கொண்டு வருகிறார். 1959 முதல் 2014 வரை தமிழ், தெலுங்க, மலையாளம், கன்னடம், ஹிந்தி, பெங்காலி என கடந்த 55 வருட கால அவருடைய திரையுலக வாழ்க்கையில் அவர் சாதித்த, சாதித்துக் கொண்டிருக்கிற கதாபாத்திரங்களை ஐந்து பக்கங்களில் அடக்கிவிட முடியாது.
இருந்தாலும் இன்றும் நினைவில் இருக்கும் சில படங்களைப் பற்றியும், சில கதாபாத்திரங்களைப் பற்றியும் எவ்வளவு வேண்டுமானாலும் சொல்லிக் கொண்டே போகலாம். 'பார்ன் ஜீனியஸ்' என்று சொல்வார்கள், பிறப்பிலேயும், வளர வளர ரத்தத்திலும் கலந்து போன விஷயத்தாலும்தான் ஒரு கலைஞன் இந்த அளவிற்கு உயரம் தொட்டு உச்சியில் நிற்க முடியும்.
'களத்தூர் கண்ணம்மா'வில் அறிமுகமாகி குழந்தை நட்சத்திரமாகவே 'ஆனந்த ஜோதி' படம் வரை 6 படங்களில் நடித்தவர் கமல்ஹாசன். அதில் 'கண்ணும் கரலும்' என்ற மலையாளப் படமும் அடக்கம். எம்ஜிஆர், சிவாஜிகணேசன், ஜெமினிகணேசன், சாவித்ரி, சத்யன், எஸ்எஸ்ஆர் என்று அந்தக் கால ஜாம்பவான்களுடன் சிறுவனாக நடிப்பதென்றால் சாதாரணமா. அந்தத் துணிச்சலும், தைரியமும்தான் இன்று வரை அவரை விதவிதமான கதாபாத்திரங்களை நோக்கி நடக்க வைக்கிறது போலும்.
63லிருந்து 70 வரை நடிப்பிற்கு இடைவெளிவிட்டவர் பின்னர் 70களில் அரும்பு மீசை குறும்புப் பார்வையாக திரையுலக வாழ்க்கையை மீண்டும் ஆரம்பித்தார். அந்தக் காலக்கட்டங்களில் அவரால் நாயகனின் நண்பனாகவும் சிறு சிறு கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்க முடிந்தது.
கே.பாலச்சந்தர் இயக்கிய 'அரங்கேற்றம்' படம் அவரை கொஞ்சம் அடையாளம் காட்டியது. அடுத்தடுத்து ஒரு சில படங்களில் கமல்ஹாசன் நடித்திருந்தாலும் மீண்டும் பாலச்சந்தரால் 'அவள் ஒரு தொடர் கதை' படத்தின் மூலம் ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் பேசப்பட்டார். இருந்தாலும் இந்தப் படங்களும் அவருக்கு நாயகன் அந்தஸ்தை வாங்கிக் கொடுத்துவிடவில்லை.
அதன் பின்னும் சிறியதும், பெரியதுமாக பல கதாபாத்திரங்கள் நாயகனின் தம்பியாக, நாயகியின் தம்பியாக, இரண்டாவது கதாநாயகனாக இப்படி எந்தக் கதாபாத்திரம் கிடைத்தாலும் அவர் ஏற்று நடிக்கத் தயங்கியதேயில்லை. அதற்கு அவருடைய டீன் ஏஜ் வயது முடிந்த முழு இளைஞனாகவும் இல்லாத ஒரு தோற்றம் தடையாக இருக்கிறது என்றும் பேச்சு எழுந்தது.
அதையும் மீறி 25 வயதை நெருங்கிக் கொண்டிருந்த போது பாலச்சந்தர் இயக்கிய 'அபூர்வ ராகங்கள்' படத்தில் ஒரு துணிச்சலான இளைஞன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்தக் காலக்கட்டத்தில் இப்படி ஒரு படம், கதாபாத்திரங்கள் என இன்று அந்தப் படத்தைப் பார்த்தால் கூட ஆச்சரியப்பட்டுப் போகலாம். அந்த சமயங்களில் கமல்ஹாசன் தமிழ்ப் படங்களில் நடிப்பதை விட மலையாளப் படங்களில் நடிக்க அவரைத் தேடி பல வாய்ப்புகள் வந்தன.அவற்றையும் அவர் நிறைவாகவே பயன்படுத்திக் கொண்டார். மலையாளத் திரையுலகின் முன்னணி இயக்குனர்கள், கதையாசிரியர்களின் படங்கள் என அவர் நடித்த கதாபாத்திரங்கள் மலையாளத் திரையுலகிலும் புதிதாக இருந்தது.
வயதான நடிகர்களையே இளைஞர்களாகப் பார்த்துப் பழகிப் போயிருந்த மலையாள ரசிகர்களுக்கு கமலின் இளமையான அழகான தோற்றம் அவருக்கு பெண் ரசிகைகளையும் அதிகம் பெற்றுத் தந்தது. 70களிலிருந்து 76 வரை தமிழ், தெலுங்கு, மலையாளம் என சுமார் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தார். அந்தக் கதாபாத்திரங்களைப் பார்த்தாலே பல வித்தியாசங்கள் இருக்கும். அந்தக் காலகட்டம் அவருக்கு நடிப்புப் பற்றிய திறமையையும், ஊக்கத்தையும் அதிகமாக்கிக் கொள்ள வெகுவாக பயன்பட்டது. “மன்மத லீலை, உணர்ச்சிகள், மூன்று முடிச்சு” ஆகிய படங்கள் அவரை மெதுவாக கதாநயாகன் என்ற அந்தஸ்தை நோக்கி அழைத்துச் சென்றன.
அடுத்து 77ல் மட்டுமே சுமார் 20 படங்கள் வரை நடித்திருந்தார். அதுவரை கமல்ஹாசனை அழகான இளைஞனாகவும், சுண்டி இழுக்கும் பார்வையாலும் ரசிகர்களை வசீகரித்தவராகவும் இருந்தவர் '16 வயதினிலே' படம் மூலம் ஒரு நடிகன் நடிப்புக்காக இப்படியெல்லாம் கூடச் செய்வானா...? என படம் பார்க்க வரும் ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்தார். 'சப்பாணி' கதாபாத்திரம் அவருக்கென ஒரு 'பாணி'யை உருவாக்கிக் கொள்ள அச்சாரமாக அமைந்தது. சிறு சிறு வேடங்களில் நடித்துக் கொண்டிருந்தவரை, சில படங்களில் பத்தோடு பதினொன்றாக இருந்தவரை '16 வயதினிலே' படம் அடுத்த பல ஆண்டுகளுக்கு தமிழ்த் திரையுலகை ஆளப்போகும் நடிகர் இவர்தான் என சொல்லாமல் சொல்லியது.
அதன் பின் நண்பன் ரஜினிகாந்துடன் “ஆடு புலி ஆட்டம், இளமை ஊஞ்சலாடுகிறது, அவள் அப்படித்தான், தப்புத் தாளங்கள்” என இன்றைய இளம் போட்டியாளர்களிடம் கூட பார்க்க முடியாத நட்பையும், பாசத்தையும் சுமார் 35 வருடங்களுக்கு முன்பே அவர்களிடம் வெளிப்படுத்தியது. இடையில் சில சிறிய படங்கள் வந்தாலும் கமல்ஹாசன் என்ற பன்முகக் கலைஞனுக்கு அடுத்து ஒரு சரியான வாய்ப்பு கிடைக்காமலே இருந்தது.
தனி நாயகனாக வளர்ந்து வரும் நேரத்தில் ஒரு இளம் நாயகன் இப்படி ஒரு நெகட்டிவ்வான கதாபாத்திரத்தில் கூட நடிப்பாரா என்ற ஆச்சரியத்தை 'சிகப்பு ரோஜாக்கள்' படம் ஏற்படுத்தியது. சிறு வயதிலேயே பெண்களால் பாதிக்கப்பட்ட ஒரு கதாபாத்திரம், தவறான வழியில் நடக்கும் பெண்களைத் தேடிப் போல் கொலை செய்யும் திலீப் என்ற நெகட்டிவ் கதாபாத்திரத்தில் கமல்ஹாசன் நடித்திருந்தாலும், அவருக்கு அந்தப் படம் பாசிட்டிவ்வான வெற்றியைத் தந்தது.
மீண்டும் நண்பர் ரஜினிகாந்துடன் இரட்டை குதிரை சவாரி போல அடுத்தடுத்து 'அலாவுதீனும் அற்புத விளக்கும், தாயில்லாமல் நானில்லை, நினைத்தாலே இனிக்கும்,' ஆகிய படங்கள் வெளிவந்தன. 70களின் இறுதியில் கமல்ஹாசன் என்ற நடிகர் கொஞ்சம் கொஞ்சமாக வெற்றிப் பாதையில் பயணிக்க ஆரம்பித்தார். அவருக்கென தனி ரசிகர் கூட்டம் உருவாக ஆரம்பித்தது.
பெண் ரசிகைகள் அதிகமாக ஆரம்பித்தார்கள். ஒரு நடிகன் என்றால் எப்படிப்பட்ட கதாபாத்திரத்திலும் நடிக்க வேண்டும் என்பார்கள். அது 79ல் வெளிவந்த 'கல்யாணராமன்' படத்திலும் தொடர்ந்தது ஒரு பக்கம் அழகான இளைஞன், மறுபக்கம் 'ஆவியான' இளைஞன் என அந்தப் படத்தில் இரு வேடங்களில் ஒன்றில் நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் நடித்து தனக்கு நகைச்சுவையும் வரும் என நிரூபித்தார்.
80களின் தொடக்கத்தில் ஒரு கமர்ஷியல் ஹீரோவாகவும் வலம் வர ஆரம்பித்தார். “உல்லாசப் பறவைகள், குரு” என காதல், கமர்ஷியல் படங்கள் வந்தாலும் 'வறுமையின் நிறம் சிவப்பு' படத்தில் அவருக்குள் இருக்கும் வேறு ஒரு 'கலரையும்' வெளிச்சம் போட்டுக் காட்டினார்.
அந்தக் காலக்கட்டங்களிலேயே ஒரு கமர்ஷியம் படம் பண்ணினால் அடுத்து ஒரு வித்தியாசமான கதாபாத்திரம், கதைக்களம் என தேர்ந்தெடுத்து படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அது 81ம் ஆண்டிலேயே வெளிவந்த 'ராம் லட்சுமண், ராஜ பார்வை' ஆகிய படங்களில் இருந்து தெளிவாகத் தெரியும். 100வது படம் கமர்ஷியல் ரீதியாக வெற்றியில்லை என்றாலும் 'ராஜ பார்வை' படம் இன்றைய பார்வையற்ற கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கும் நடிகர்களுக்கு ஒரு முன்மாதிரியான படமாக விளங்கி வருகிறது.
80களின் தொடக்கத்தில் வந்த எல்லாம் இன்ப மயம்' படத்தில் பல்வேறு 'கெட்-அப்'களில் நடித்திருந்தார். இன்றைய 'தசாவதரத்தை' அன்றே காட்டியவர் அவர். 82ல் பாலுமகேந்திரா இயக்கத்தில் வெளிவந்த 'மூன்றாம் பிறை' படம் அவருடைய திரையுலக வாழ்க்கையில் ஒரு மைல்கல். அந்தப் படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் அவருக்குக் கிடைத்தது. 81ல் வெளிவந்த 'ஏக் துஜே கேலியே' படத்திற்குப் பின் 'மூன்றாம் பிறை'யின் ஹிந்தி ரீமேக்கான 'சத்மா'அவருக்கு ஹிந்தித் திரையுலகத்தின் கதவுகளை மீண்டும் திறக்க வைத்தது.
ஹிந்தியோடு தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் முத்திரை பதிக்கும் நாயகனாக உயர்ந்தார். தெலுங்குப் படமான 'சாகர சங்கமம்' படம் அவருக்கு அங்கு மாபெரும் வெற்றியைத் தேடித்தந்தது.
80களில் நாயகர்கள் என்றால் இரு வேடங்களில் நடிக்க வேண்டும் என்ற எழுதப்படாத விதியிலும் வெற்றிக்கொடி நாட்டினார் கமல்ஹாசன். “தூங்காதே தம்பி தூங்காதே, எனக்குள் ஒருவன், ஒரு கைதியின் டைரி” ஆகிய படங்கள் அவருடைய இரு வேடப் படங்களுக்கு சரியான எடுத்துக்காட்டு. அடுத்த படங்களாக தமிழில் வெளிவந்து ஆறு கதாபாத்திரங்களுக்கு ஆறுக்கும் மேற்பட்ட வித்தியாசங்களைக் காட்டிய படங்களாக அவை அமைந்தன.
இன்றைய அறிவியலை அன்றே சொன்ன 'விக்ரம்', 'புன்னகை மன்னன்' சாப்ளின் செல்லப்பா, காதல் தோல்வியாளன் 'சேது', 'காதல் பரிசு' மோகன், 'பேர் சொல்லும் பிள்ளை' ராமு என ஒவ்வொன்றும் வெவ்வேறான கதாபாத்திரங்கள். இவற்றிற்கெல்லாம் முத்தாய்ப்பாக 'நாயகன்' வேலு நாயக்கர்...இன்றும் மறக்க முடியாத ஒரு கதாபாத்திரம். 30 வயதில் இளைஞன், நடுத்தர வயதினர், வயதானவர் என ஒரே படத்தில் இப்படி ஒரு வித்தியாசமா என வியக்க வைத்து மீண்டும் ஒரு தேசிய விருதை அவருக்குப் பெற்றுத் தந்தது.
'பேசும் படம்' மூலம் பேசாத படத்தையும் பேச வைத்தார். 'சத்யா' படத்தின் கோபக்கார இளைஞன் சத்தியமூர்த்தி, 'சூரசம்ஹாரம்' காவல் துறை அதிகாரி பாண்டியன், இன்று வரை அப்புவின் ரகசியம் என சொந்த மகளுக்குக் கூடத் தெரிவிக்காத 'அபூர்வ சகோதரர்கள்' சேதுபதி, ராஜா, அப்பு, 'வெற்றி விழா'வின் பழைய நினைவுகளை மறந்த வெற்றிவேல் இவை எல்லாவற்றையும் இன்று நடிக்க ஆசைப்படும் சிலர் திரும்பத் திரும்பப் பார்த்தாவது நடிக்காமல் நடிப்பது எப்படி என்பதைக் கற்றுக் கொள்ளலாம்.
'மைக்கேல் மதன காமராஜன்' என பெயரிலேயே நான்கு கதாபாத்திரங்கள், 'அபிராமி..அபிராமி...' என அறைக்குள்ளேயே சுற்றிக் கொண்டுப் பேசும் அந்த 'குணா', 'தேவர் மகன்' படத்தின் பொறுப்பான மகன் சக்திவேல், 'கலைஞன்' படத்தின் இந்திரஜித், இவற்றைப் பற்றி எழுத பக்கங்கள் போதாது. பெண்ணைப் பெற்ற தகப்பனின் வலி என்ன என்பதை திருமணம் புரியாதவர்கள் கூட உணர வைத்த 'மகாநதி' கிருஷ்ணசாமி, எந்த வட்டார மொழியாயிருந்தாலென்ன கோவைத் தமிழுக்கு இப்படி ஒரு இனிமையா என புரிய வைத்த 'சதி லீலாவதி' சக்திவேல் 90களில் சினிமாவை நேசிக்க ஆரம்பித்த இளைஞர்களுக்கும், தமிழ் சினிமாவை வேறு ஒரு தளத்திற்குக் கொண்டு செல்ல முயற்சித்த இளைஞர்களுக்குமான சரியான கலைஞனாக கமல்ஹாசன் தன்னை பரிமளிக்கச் செய்தார்.
'குருதிப்புனல்' படத்தின் கிளைமாக்சில் ரத்தம் சொட்டச் சொட்ட இருக்கும் அந்த 'ஆதிநாராயணன்' இன்னும் கண்களை விட்டு அகல மறுக்கிறார். ஷங்கர் என்ற இன்றைய தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரின் திறமையை முழுவதுமாக வெளிப்படுத்திய 'இந்தியன்' படம் கமல்ஹாசனின் மற்றுமொரு மைல் கல் படம். சுதந்திரப் போராட்ட வீரர் சேனாபதி, அவருடைய பொறுப்பற்ற மகன் சந்திரபோஸ் பெயருக்கேற்றாற் போல் இந்தியத் திரையுலகத்தையே படம் பற்றி பேச வைத்த படமாக அமைந்தது.
ஒரு ஆண் எப்படி அச்சு அசலாக ஒரு பெண்ணாக நடிக்க முடியும், அந்த பாவம், நடை, உடை, பாவனை, குரல் ஆகியவற்றை எப்படி வெளிப்படுத்த முடியும் என விமர்சிக்க வைத்தவர்களை வாயடைக்க வைத்த படமாக 'அவ்வை சண்முகி' வெளிவந்தது. உச்சத்தில் இருக்கும் வேறு எந்த நடிகருக்காவது அப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கும் தைரியம் இந்தியத் திரையுலகில் இருக்குமா என்பது சந்தேகமே.
2000ல் வெளிவந்த 'ஹே ராம்' படத்தை இன்று பார்த்தால் கூட அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது சிலருக்குப் புரியாமலே இருக்கிறது. இன்னும் சில காலம் கழித்தாவது அவர்களுக்குப் புரியலாம். இன்றைய சிக்ஸ்பேக், எய்ட்பேக் ஆகியவற்றுக்கு முன்னோடியாக 'ஆளவந்தான்', திரையுலகில் ஆளவில்லை என்றாலும் அசர வைத்த படம்.
கம்யூனிசப் பார்வை கொண்ட 'அன்பே சிவம்', கடவுள் யார் என்று ஒரு வசனத்தில் விளக்கம் கொடுத்து வியக்க வைத்த படம். ஒரு படம் வியாபார ரீதியில் வெற்றி பெற்றால்தான் கவனிக்கப்படும் என்பதை உடைத்தெறிந்த படம். இடையில் 'பம்மல் கே.சம்பந்தமும், பஞ்ச தந்திரம் - ராமச்சந்திரமூர்த்தி' ஆகியோரும் கமர்ஷியல் கதாபாத்திரங்களாக எட்டிப் பார்த்து சிரிக்க வைத்தார்கள். கிராமத்து வீர இளைஞனின் கோபத்தை வெளிப்படுத்திய 'விருமாண்டி', வைத்தியருக்கே வைத்தியம் சொன்ன 'வசூல் ராஜா எம்பிபிஎஸ்' ராஜாராமன், நேர்கொண்ட பார்வையும், நிமிர்ந்த நடையும், எதையும் தாங்கும் நெஞ்சுரத்தையும் வெளிப்படுத்திய 'வேட்டையாடு விளையாடு' ராகவன் அனைத்துமே தமிழ் சினிமா இதுவரை பார்த்திருக்காத வித்தியாசமான கதாபாத்திரங்கள்.
'தசாவதாரம்', ஒரு படத்திலேயே பத்து கதாபாத்திரங்களா, படம் முடிந்து வெளிவந்த பின்னும் படம் பார்த்தவர்களை பிரமிக்க வைத்த நடிப்பு. அந்தந்த கதாபாத்திரங்களுக்கான தோற்றம், ஈடுபாடு, வசன உச்சரிப்பு கமல்ஹாசன் என்னும் கலைஞனின் அவதாரத்தை இன்றைய தலைமுறையினருக்கும் உணர வைத்த படம்.
நடிப்பு என்பது வேறு ரூபத்தை, உருவத்தை நம்முள் கொண்டு வரும் ஒன்று. என்னவாக நடிக்க வேண்டுமோ அதுவாகவே மாற வேண்டிய விஸ்வரூபத்தைக் கொடுத்தால்தான் வெற்றியையும் கொடுக்க முடியும், ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் வெல்ல முடியும். நமக்கெல்லாம் ஒரு வேலையை சில வருடங்கள் தொடர்ந்து செய்தாலே அட, செய்த வேலையையே திரும்பத் திரும்ப செய்ய வேண்டியிருக்கிறதே என்ற சலிப்பு உருவாகும். ஆனால், கமல்ஹாசன் என்ற நடிகருக்கு நடிப்பு என்பது ஒரு 'விஸ்வரூபம்' மாதிரிதான்.
இனி, அடுத்தடுத்து ''உத்தம வில்லன், விஸ்வரூபம் 2, பாபநாசம்” என ஒன்றுக்கொன்று வித்தியாசமான படங்களுடன் ரசிகர்களை ரசிக்க வைக்கக் காத்துக் கொண்டிருக்கிறார் கமல்ஹாசன். 'உத்தம வில்லன்' படத்தில் 'உத்தமன், மனோரஞ்சன்' என இரண்டு கதாபாத்திரங்களிலும் 'பாபநாசம்' படத்தில் சுயம்புலிங்கம் கதாபாத்திரத்திலும் அடுத்தடுத்து நடித்து முடித்திருக்கிறார்.
இந்தத் திரையுலக உத்தமனின் நடிப்பு விஸ்வரூபம் இன்னும் தொடரத்தான் போகிறது. அடுத்து புதிதாக வருபவர்களுடன் தனித்து நின்று போட்டியிடத்தான் போகிறார். ஆனாலும், அமைதியான சத்தமில்லாத முத்தத்தால் அன்றே திரையுலகில் சத்தத்தை எழுப்பியவர், சத்தமில்லாமல் பல சாதனைகளுக்கு சொந்தக்காரராகவும் விளங்கி வருகிறார்.
தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில் தற்போது சாதித்துக் கொண்டிருப்பவர்களை அவருக்கு இவர்தான் வாரிசு என்று அடையாளப்படுத்திச் சொல்வார்கள். ஆனால், கமல்ஹாசன் என்ற திரைக் கலைஞனை அப்படி யாருடனும் ஒப்பிட முடியாது. திரையுலக சாதனைகளைப் பொறுத்தவரையில் இவர் யாருக்கும் வாரிசு இல்லை...வேறு யாரும் இவருக்கு வாரிசாக வரப் போவதுமில்லை...