சவாலான கதாபாத்திரங்களில் மட்டுமே நடிப்பேன் : சமந்தா | மொத்தமாக ஆக்கிரமிக்கப் போகும் 'விடாமுயற்சி' | மீண்டும் தீபாவளிக்கு திரைக்கு வரும் சிவகார்த்திகேயன் படம்! | ராம்சரண் 16வது படத்தில் இருந்து ஏ.ஆர்.ரஹ்மான் வெளியேறினாரா? | பூஜா ஹெக்டேவின் நெருக்கமான காட்சிக்கு கத்தரி போட்ட சென்சார் போர்டு! | 'தி இந்தியா ஸ்டோரி' படப்பிடிப்பு துவங்கியது : சொல்லப்படாத கதை என்கிறார் காஜல் | ஹிந்தி ராமாயணா படத்தில் இணைந்த ஷோபனா! | ரஜினியை இயக்க வந்த வாய்ப்பு குறித்து பிரித்விராஜ் | பிளாஷ்பேக்: எம் ஜி ஆரை வெள்ளித்திரையில் ராஜகுமாரனாக்கிய “ராஜகுமாரி” | அக்ஷய்குமாரை மீட்டெடுக்கும் 'ஸ்கை போர்ஸ்' |
ராசய்யாவாக சினிமாவுக்குள் நுழையும்போது அது ஒரு சம்பவம். அவர் இளையராஜாவாக மலர்ந்தபோது சாதனை. 600 படங்களுக்கு மேல் இசையமைத்து, 'மேஸ்ட்ரோ' பட்டம் பெற்றபோது, சரித்திரம். ஹாலிவுட் வரை சென்றபின், இளையராஜா என்பது, இந்திய திரையுலகின் சகாப்தம். ஆக... சம்பவம், சாதனையாகி, சரித்திரமாகி, சகாப்தமாக மாறியிருப்பது தான் இளையராஜாவின் வளர்ச்சி.
கடந்த 1975க்குப் பின், இந்தியாவையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்து, இசைப்புரட்சி நடத்தியவர் இளையராஜா. அதற்குமுன் ஹிந்தி பாடல்கள் பற்றியே உயர்வாக பேசப்பட்ட நிலையில், தமிழ் திரைப்படப் பாடல்கள் இந்தியா முழுக்க பேசப்பட்டதற்கு காரணம் இளையராஜா தான். அதற்குமுன், தமிழ் சினிமாவை பொறுத்தவரை மிகப்பெரிய இசை ஜாம்பவான்கள் இருந்துள்ளனர். அவர்கள் எல்லாம் முறைப்படி, சாஸ்திரிய கர்நாடக சங்கீதம் கற்று வந்தவர்கள். ஆனால், முதன்முதலாக மேற்கத்திய இசையிலும், 'ஏ கிரேடு' கற்று, அதையும் திரையில் அழகான முறையில் பயன்படுத்தியவர் இளையராஜா.
இமாலய வளர்ச்சி
கிராமத்து இசையையும், மேற்கத்திய பாணியில் வழங்கியதும் இவரே. நடிகர் திலகத்திற்குப் பின் நடிக்க வந்தவர்கள் பலரின் நடிப்பில், சிவாஜியின் பாதிப்பு இருக்கும். அதுபோல, இளையராஜாவுக்குப் பின் வந்த பலரின் நல்ல இசையில், இளையராஜாவின் பாதிப்பு இருக்கிறது. இவரது வளர்ச்சி இமாலய வளர்ச்சி. பல தடைக்கற்களை தாண்டி வந்தார், கடினமான உழைப்பாளி.
முதன்முதலாக இளையராஜா ரெக்கார்டிங் செய்தபோது மின்தடை ஏற்பட்டது. இப்படி ஒரு துரதிர்ஷ்டமான சந்தர்ப்பத்தில் தான், அவரின் திரை இசைப்பயணம் தொடங்கியது. அவர் நினைத்தால் இன்னொரு, 'செந்தாழம் பூவே' போன்ற பல ஹிட் பாடல்களை வேறு வடிவத்தில் வழங்கியிருக்கலாம். அவர் தன் சொந்தப் பாடல்களையே மாற்றி வழங்கலாம். அவர் அப்படி வழங்கவில்லை.
'இளையராஜாவுக்கு உள்ள பெருமைக்கு, அவர் எவ்வளவோ பந்தா செய்யலாம். ஆனால், எளிமையின் வடிவமாக இளையராஜா உள்ளார். இளையராஜா என்பது தமிழகத்தின் பொக்கிஷம், பிற மாநிலங்களின் பொறாமை. ஆனால், இந்தியாவின் கவுரவம்' என, பாராட்டினார் மறைந்த நடிகர் விவேக்.
விமர்சனம்
இன்று இளையராஜா செய்து வரும் சில செயல்கள், விவேக் சொன்னதற்கு மாறாக இருப்பதாக விமர்சிக்கப்படுகிறது. அவரை பற்றி திரைத்துறையினரே பலவிதமாக கேலி, கிண்டல் பேசும் அளவுக்கு மாறியுள்ளது. இந்தியாவின் சகாப்தமாக பேசப்பட்டவர், பணத்திற்காக அலைகிறார் என்ற பேச்சுக்கும் இன்று ஆளாகியுள்ளார்.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும், 30,000க்கும் மேலான பாடல்கள் வெளியாகின்றன. உலகிலேயே இந்தியாவில் தான், பாடல் கேட்போர் எண்ணிக்கை அதிகம் என்றும், ஒரு புள்ளிவிபரம் தெரிவிக்கிறது.
இந்நிலையில், இசைக்கு பதிப்புரிமை கேட்டு, இளையராஜா தொடர்ந்த வழக்கு பெரும் விவாதப் பொருளாகியுள்ளது. 'தான் இசையமைத்துள்ள, 4,500 பாடல்களை எக்கோ நிறுவனம் உட்பட, சில நிறுவனங்கள் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்' என, இளையராஜா தரப்பில் 2019ல் வழக்கு தொடுக்கப்பட்டது.
அந்த வழக்கில், சம்பந்தப்பட்ட படத் தயாரிப்பாளரிடம் உரிமம் பெற்ற இசை நிறுவனங்கள், பாடல்களை பயன்படுத்த தடை இல்லை என்றும், அதேநேரம் பாடல்கள் மீது இளையராஜாவுக்கு தார்மீக உரிமை உள்ளது என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது.
இத்தீர்ப்பை எதிர்த்த இளையராஜா, மேல்முறையீடு செய்து, தன் இசையை பயன்படுத்த இடைக்கால தடை பெற்றார். இதையடுத்து, இசை நிறுவனங்கள் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டு, வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
எஸ்பிபிக்கும் நோட்டீஸ்
இசை நிறுவனங்களோடு மட்டும் நிற்கவில்லை. தன் நீண்டகால நண்பரும், பாடகரும், தன் பல பாடல்களுக்கு குரல் வளத்தால் உயிர் ஊட்டிய எஸ்.பி.பாலசுப்பிரமணியனுக்கும், தன் பாடல்களை பயன்படுத்தக் கூடாது என, வழக்கறிஞர் வாயிலாக இளையராஜா நோட்டீஸ் அனுப்பினார். எஸ்.பி.பி., மட்டுமின்றி, எஸ்.பி.பி.சரண், சித்ரா உள்ளிட்டோருக்கும் நோட்டீஸ் அனுப்பியதாக தகவல்கள் வெளியாகின. இவ்விவகாரத்தில் சமரசம் ஏற்பட்டு, எஸ்.பி.பி.,யும் இளையராஜாவும் மீண்டும் இணைந்தனர்.
ஒரு படத்திற்கு சம்பளம் வாங்கிவிட்டு, இயக்குனர் கூறியபடி கதைக்கு ஏற்ப அமைக்கும் மெட்டுகளில் தேவையானது மட்டும் பயன்படுத்தப்படுகிறது. இது தயாரிப்பாளர், இயக்குனர், பாடல் ஆசிரியர், பாடகர், இசை வாத்தியக் கலைஞர்கள் மற்றும் இசையமைப்பாளர் ஆகியோரின் கூட்டு முயற்சியாகவே பார்க்கப்படுகிறது. சொல்லப்போனால் இசை கோர்ப்பு, எடிட்டிங் என, சொல்லிக்கொண்டே போகலாம். இதில், இசையமைப்பாளர் மட்டும், தன் இசைக்கு சொந்தம் கொண்டாடுவது எப்படி நியாயமாகும் என, பலர் கேள்வி எழுப்புகின்றனர்.
பதிப்புரிமை சட்டம்
'தனிநபர் ஒருவரின் படைப்பு அல்லது கண்டுபிடிப்பு மீதான அவரது உரிமையை பாதுகாக்கும் நோக்கத்தில், 1957ல் உருவாக்கப்பட்டதே காப்புரிமை சட்டம். இதில், ஒரு புதிய விஷயத்திற்காகவோ, நிறுவனத்திற்காகவோ, யாருமே செய்யாத ஒன்றுக்கு மட்டுமே பதிப்புரிமை கோர முடியும்.
'அதுவே ஓவியம், கதை, இசை போன்றவை ஒருமுறை வெளிவந்து விட்டாலே, அது படைப்பாளிக்கு 'தான் சொந்தம்' என, சட்ட வல்லுனர்கள் கூறுகின்றனர்.
'சம்பளத்தை பெற்றுக்கொண்டு கேட்கிற இசையை தரும் இசையமைப்பாளரின் பாடல், தயாரிப்பாளருக்கே சொந்தம். அதுவே தனி ஆல்பமாக இசையமைத்து பாடல்களை வழங்குகிறார் என்றால், அதற்கு இசையமைப்பாளரே உரிமையாளர்' என்கிறது கோடம்பாக்கத்தில் ஒரு வட்டாரம்.
இதற்கிடையில், இளையராஜாவின் பழைய பாடல்களை, தற்போதைய படங்களில் பயன்படுத்துவதும், அவருக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்பும், 'ரீ-மிக்ஸ்' பாடல்கள் வெளிவந்தன. ஆனால், சம்பந்தப்பட்ட தயாரிப்பாளரிடமோ அல்லது இசையமைப்பாளரிடமோ தார்மீக உரிமை பெற்று, அப்பாடலை ரீ-மிக்ஸ் செய்து வந்தனர். தற்போது, பழைய பாடலின் தன்மை மாறாமல், அதை அப்படியே புதுப்படங்களின் திரைக்கதையின் ஓட்டத்திற்கு ஏற்ப பின்னணியில் ஒலிக்க வைக்கின்றனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கிய, விக்ரம், லியோ படங்களிலும், அவர் தயாரித்த, பைட் கிளப் படத்திலும் இளையராஜா பாடல்கள் பயன்படுத்தப்பட்டன. விரைவில் இவரது இயக்கத்தில் வெளிவர உள்ள, கூலி படத்தில் ரஜினி நடிக்க உள்ளார். சமீபத்தில் வெளியான, கூலி படத்தின் டீசரில், பின்னணி இசையில் எம்.எஸ்.விஸ்வநாதன் மற்றும் இளையராஜாவின் பழைய பாடல்களை, லோகேஷ் கனகராஜ் பயன்படுத்தியுள்ளார். இதற்கு இளையராஜா தரப்பில் இருந்து படக்குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
கிரியேட்டிவ்விற்கு பொருந்தாது
'தயாரிப்பாளருடன் ஒப்பந்தம் போட்ட படங்களுக்கு மட்டுமே, இளையராஜா பாடல்களை வழங்கினார். அந்த பாடலை வேறு ஒரு படத்திற்கு பயன்படுத்த, அந்த தயாரிப்பாளர் அனுமதிக்க முடியாது. சம்பந்தப்பட்ட இசையமைப்பாளரிடம் அனுமதி பெற்றோ, அதற்குரிய சம்பளத்தை வழங்கியோ மட்டுமே பயன்படுத்த வேண்டும். இசையமைப்பு என்பது கிரியேட்டிவ் சம்பந்தப்பட்டது. இதற்கு காப்புரிமை சட்டம் பொருந்தாது' என, இளையராஜா தரப்பு வழக்கறிஞர்கள் கூறுகின்றனர். ஆனால், இசையமைப்பாளர் தரும் பாடலை ஆடியோ, வீடியோ என எந்த வடிவத்திலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதை, தயாரிப்பாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
இதற்கிடையே, இவ்விவகாரம் தொடர்பாக இளையராஜாவை, பாடலாசிரியர் வைரமுத்து மறைமுகமாக விமர்சிக்க, பதிலுக்கு இளையராஜாவின் தம்பியும், இசையமைப்பாளருமான கங்கை அமரன் எச்சரிக்கும் விதமாக பேசியது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 'இனி இளையராஜாவை பற்றி பேசினால் நடப்பதே வேறு' என்று கங்கை அமரன் மிரட்டியுள்ளார்.
இப்பிரச்னை குறித்து தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு கூறுகையில், ''சினிமாவை பொறுத்தவரை அது ஒரு கூட்டு முயற்சி. அரண்மனை படத்தின் வெற்றிக்கு இயக்குனர் சுந்தர்.சி பெரியவரா; இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி பெரியவரா என்று கேட்க முடியுமா? இப்பிரச்னையில் சம்பந்தப்பட்டவர்கள் தான் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும்,'' என்றார்.
தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் அளித்த பேட்டி:
'ஹிட்' பாடல்கள் இடம்பெற்ற பல படங்கள் தோல்வி அடைந்து உள்ளன. பாடல்கள் மட்டுமே வெற்றி பெற்றன. படங்களின் தோல்விக்கு இளையராஜாவால் பொறுப்பு ஏற்க முடியுமா? வெற்றி பெற்ற படங்களின் பாடல்களை பற்றி மட்டுமே அவர் பேசுகிறார்.
உரிமைத்தொகை
ஐ.பி.ஆர்.எஸ்., எனப்படும், 'தி இந்தியன் பெர்பார்மிங் ரைட் சொசைட்டி லிமிடெட்' என்ற நிறுவனத்தில் இளையராஜா உறுப்பினர் இல்லை. ஆனால், எம்.எஸ்.விஸ்வநாதன், வித்யாசாகர், பரத்வாஜ் உள்ளிட்ட பலர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களின் பாடல்களுக்கான உரிமைத் தொகை பல லட்சம் இன்றும் வருகிறது.
ரஜினி நடிக்க உள்ள, கூலி படத்தில், தங்கமகன் படத்தில் இடம் பெற்ற, 'வா வா பக்கம் வா' பாடலை பயன்படுத்தியுள்ளனர். ஐ.பி.ஆர்.எஸ்.,சில் இளையராஜா உறுப்பினராக இருந்திருந்தால், இப்பிரச்னை பேச்சுவார்த்தையில் முடிவுக்கு வந்திருக்கும். இப்படித்தான் நுாற்றுக்கணக்கான படங்களின் பிரச்னைகள் வெளியே வராமல் சுமூகமாக முடிவுக்கு வருகின்றன.
ஒரு பெரிய நிறுவனம் இசை நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்றால், பாடலுக்கான உரிமை உள்ள நிறுவனம் மட்டுமின்றி, ஐ.பி.ஆர்.எஸ்., இளையராஜா உள்ளிட்டோரும் அனுமதியும், ஆட்சேபனை இல்லா சான்றிதழும் தர வேண்டும்.
இதில் சோனி மட்டுமே அனுமதி வழங்க முடியும். மற்ற இருவரும் குறிப்பிட்ட தொகையை பெற்றுக் கொண்டு ஆட்சேபனை இல்லை என்ற சான்றிதழ் மட்டுமே வழங்க முடியும். இவ்விஷயத்தில் இளையராஜா உறுப்பினராக இருந்திருந்தால், தற்போது நடக்கும் பிரச்னைக்கான சூழலே இருந்திருக்காது.
இளையராஜாவின் முதல் படமான, அன்னக்கிளி உரிமை என்னிடம்தான் உள்ளது. அவர் இன்று வரை என்னிடம் கேட்கவே இல்லை. இது ஒரு மாபியா போல் மாறியிருக்கிறது. சம்பந்தப்பட்ட படம், பாடல் யாரிடம் இருக்கிறது; அவர்களிடம் மோதலாமா, வேண்டாமா என தெரியாமலேயே பலர் உள்ளனர்.
என்னிடம் மோதினால் குழப்பம் வரும் என்று பலருக்கும் தெரியும். என் 'யு டியூப்' சேனலில், அன்னக்கிளி உள்ளது. இதுவரை என்னிடம் இளையராஜா கேட்கவே இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
தயாரிப்பாளர் கே.ராஜன் கூறுகையில், ''ஒரு கட்டடத்தை கட்ட பேசப்பட்ட கூலியை பெற்ற பின்னரே, கொத்தனார் கட்டடத்தை கட்டுகிறார். எல்லாம் முடிந்தபின், அந்த கட்டடத்திற்கு கொத்தனார் உரிமை கோர முடியுமா? அப்படித்தான் உள்ளது இளையராஜாவின் நடவடிக்கை. அவர் பெரிய இசைஞானி தான்; ஆனால், இதுபோன்ற நடவடிக்கை அவரை கீழ்மைப்படுத்துகிறது,'' என்றார்.
திரைத்துறை தயாரிப்பாளர்கள் வட்டாரத்தில் கூறியதாவது:
இளையராஜா எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்பதை எங்கேயும் சொல்லவில்லை. அந்த காலத்தில், தற்போது மாதிரி ஒப்பந்தம் எல்லாம் கிடையாது. பேச்சுவார்த்தையின் முடிவிலேயே படங்களுக்கு இசையமைப்பது வழக்கம். அந்த காலத்தில், 'எக்கோ' என்ற ஒரு நிறுவனத்துடன் இணைந்து, இளையராஜா பாடல்கள், 'ஆடியோ கேசட்' மற்றும் 'சிடி' வடிவில் வெளிவந்தன.
விற்று விட்டனர்
சில கால இடைவேளையில், எக்கோ பார்த்தசாரதிக்கும், இளையராஜாவுக்கும் பிரச்னை ஏற்பட்டு, பார்த்தசாரதி அமெரிக்கா சென்று செட்டில் ஆகிவிட்டார். அவர் மறைவுக்குப் பின், எக்கோ உரிமை அனைத்தையும், அவரது வாரிசுகள், 'சோனி' நிறுவனத்திற்கு விற்று விட்டனர். ஆயிரக்கணக்கான இளையராஜா பாடல்களை சோனி வாங்கி, 15 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. தற்போது சோனி மீது இளையராஜா வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதற்கெல்லாம் பின்னணியில், மற்றொரு பிரச்னை உள்ளது. இளையராஜாவுக்கு தெரியாமலேயே, அவரது மனைவி கையெழுத்து போட்டு, இளையராஜாவின் ஆயிரக்கணக்கான ஹிட் பாடல்கள், சிங்கப்பூர் பிரமிடுக்கு விற்கப்பட்டுள்ளன. இதில், எந்தளவு உண்மை என்பது தெரியாது. இதனாலேயே இளையராஜாவுக்கும், அவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகக் கூறுவர். தன் மனைவி இறந்த பின்னரே வழக்கை இளையராஜா எடுத்து நடத்துகிறார்.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன், லோக்சபாவில் மசோதா ஒன்று கொண்டு வரப்பட்டது. அதாவது, 'பாடல் ஆசிரியர்களுக்கு பணமே தருவதில்லை. அதனால், பாடல்களுக்கான உரிமையை பாடல் எழுதியவர்களுக்கும், பாடியவர்களுக்கும் தர வேண்டும்' என்ற மசோதா கொண்டு வரப்பட்டது. இதனால், இளையராஜா வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு சென்றாலும் ஏற்பரா என்று தெரியாது.
இவ்விஷயத்தில் பதிப்புரிமை சட்டத்திலேயே திருத்தம் செய்ய வேண்டும் என்கிறது ஒரு தரப்பு. ஆனாலும், இளையராஜா செய்வது சரியல்ல என்பதே, திரைத்துறையில் பலரது எண்ணமாக உள்ளது.
இவ்வாறு அந்த வட்டாரத்தில் கூறப்படுகிறது.
'எல்லா பாடல்களுக்கும் உரிமை கோர முடியாது!'
தயாரிப்பாளர் தனஞ்செயன் கூறியதாவது: இளையராஜா தரப்பில், 4,000 பாடல்களுக்கு மட்டுமே உரிமை கோருகிறார். எல்லா பாடல்களுக்கும் அல்ல. பணம் பெற்றுக் கொண்டு விற்ற படங்களுக்கு உரிமை கோரவில்லை. இளையராஜா உச்சத்தில் இருந்தபோது வெளிவந்த, 500 படங்களுக்கான உரிமை, எக்கோவிடம் உள்ளதாகக் கூறப்பட்டது. ஆனால், அவர்களுக்கு தான் எந்த ஒப்பந்தமும் வழங்கவில்லை என, இளையராஜா தரப்பில் கூறப்படுகிறது. இதில்தான் தற்போது சிக்கல் எழுந்துள்ளது.
'எக்கோ' பார்த்தசாரதி இறந்து விட்டார். அதனால், இனிமேல் இது என் பாடல் என, இளையராஜா நீதிமன்றத்தை நாடியுள்ளார். கோர்ட்டிலும் நீதிபதிகள், பதிப்புரிமை சட்டப்படி கூறாமல், தார்மீக உரிமை அடிப்படையில் இளையராஜாவுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கினர். இளையராஜா இசையமைத்த எல்லா பாடல்களுக்கும், அவர் உரிமை கோர முடியாது. எக்கோ வாங்கிய படங்களின் பாடல்களுக்கு மட்டுமே, அவர் உரிமை கோர முடியும். ஏற்கனவே வழங்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்பால், எல்லா பாடல்களும் தனக்கே சொந்தம் என, இளையராஜா தரப்பினர் உரிமை கோரி வருகின்றனர். இதுதான் தற்போது உள்ள குழப்பமே.
இளையராஜா பாடலை யார் பயன்படுத்தினாலும் வழக்கு பாய்கிறது. எக்கோவுக்கு வழங்கிய வினியோக ஒப்பந்தம் செல்லுபடியாகாமல் போனால், அந்த பாடல்கள் இளையராஜாவுக்கு சொந்தமாகலாம். ஆனால், இவ்விஷயத்தில் இளையராஜாவிடமும் எந்த ஒப்பந்தமும் இல்லை. இசை நிறுவனங்களும், தயாரிப்பாளர்களிடமிருந்து உரிய அனுமதி பெற்றே பாடல்களை பயன்படுத்துகின்றன. எக்கோ வாரிசுகள் சோனிக்கு பாடல்களை விற்றனர். இதற்கான தகுந்த ஆவணங்களை சோனி வைத்துள்ளது. இவ்விஷயத்தில் இளையராஜாவிடமும் எந்த ஒப்பந்தமும் இல்லாததால், அவராலும் எந்த ஒப்பந்தத்தையும் காட்ட முடியவில்லை. இதைக் கேட்டால், இளையராஜா தரப்பில் கோபமடைகின்றனர். இளையராஜாவே சொந்தமாக ஒரு ஐ.பி.ஆர்.எஸ்., நிறுவனத்தை தொடங்கி விட்டார். அவரது பாடல்களை பாட, அவரிடம் தான் அனுமதி பெற வேண்டும் என்கிறார். இவ்விவகாரத்தில் தீர்ப்பு, தயாரிப்பாளர்களின் தரப்புக்கே சாதகமாக அமையும். இவ்வாறு அவர் கூறினார்.
-- நமது நிருபர் --