Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

உண்மை சம்பவத்தை ஊருக்கு சொல்ல தடையா? - 'தி கேரளா ஸ்டோரி' படம் தியேட்டர்களில் நிறுத்தம்

08 மே, 2023 - 11:33 IST
எழுத்தின் அளவு:
The-Kerala-Story-stopped-in-Tamilnadu

ஹிந்தி திரையுலக இயக்குனர் சுதிப்தோ சென் இயக்கத்தில், அதா சர்மா, சித்தி இட்னானி நடித்த, தி கேரளா ஸ்டோரி படம், மே 5ல், நாடு முழுதும் வெளியானது. 'லவ் ஜிகாத்' கதைக்களத்தின் அடிப்படையில், கேரளாவைச் சேர்ந்த 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களை, வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று, கட்டாய மதமாற்றம் செய்து, பயங்கரவாத அமைப்பில் இணைக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. 'இது ஒரு உண்மை சம்பவம்' என்றும் படத்தின் இயக்குனர் கூறியிருந்தார்.

படப்பிடிப்பு துவக்கும் முன், இயக்குனரும், நடிகை அதா சர்மாவும் உண்மையிலேயே பாதிக்கப்பட்ட பெண்களை நேரில் சந்தித்து, அவர்களுக்கு நேர்ந்த துயரங்களை கேட்டறிந்தனர். அதன் பின்னரே, படத்தில் நடிக்க அதா சர்மா தயாரானார்.



வரவேற்பு
இப்படத்திற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். ஆனால், படம் அறிவித்தபடி வெளியானது. மும்பை உள்ளிட்ட வடமாநிலங்களில், படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. மகாராஷ்டிராவில் அம்மாநில முதல்வர், படத்திற்கு வரிவிலக்கு அளித்துள்ளார். கேரளாவில் எதிர்ப்பு காரணமாக திரையிடப்படவில்லை. ஆனால், கேரள பெண்கள் பலர் படத்தை பாராட்டியுள்ளனர். 'பெற்றோர், இளம் தலைமுறையினர் அவசியம் படத்தை பார்க்க வேண்டும்' என்று கூறியுள்ளனர்.

திடீர் நிறுத்தம்
தமிழகத்தில் உளவுத் துறை எச்சரிக்கையை மீறி, 'மால்'களில் மட்டும் படம் வெளியானது. அங்குள்ள தியேட்டர்களுக்கு, போலீஸ் பாதுகாப்பு வழங்கி, டி.ஜி.பி., சைலேந்திரபாபு உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், தமிழகத்தில் 13 'மல்டி பிளக்ஸ்' தியேட்டர்களில் வெளியான, தி கேரளா ஸ்டோரிபடம், நேற்று முதல் திடீரென நிறுத்தப்பட்டது.

இதுகுறித்து, சென்னை ரோகிணி தியேட்டர் உரிமையாளரும், தியேட்டர் உரிமையாளர் சங்க பொதுச் செயலருமான பன்னீர்செல்வம் கூறுகையில், ''இப்படம், தமிழக மால்களில் உள்ள தியேட்டரில் மட்டும் வெளியானது. சர்ச்சை ஒரு பக்கம் இருந்தாலும், படத்திற்கு மட்டுமல்லாது, மால்களுக்கு வரும் மக்கள் கூட்டமும் குறைந்து விட்டது. அதனால் தான் படத்தை தியேட்டரிலிருந்து நீக்கி விட்டோம்,'' என்றார்.



ஆனாலும், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் மற்றும் மத அமைப்புகளின் போராட்டம் மற்றும் அரசின் அழுத்தத்தாலேயே படத்தை, தமிழக தியேட்டரில் இருந்து எடுத்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. வரவேற்புமிக்க ஒரு படத்தை, சிலரின் எதிர்ப்பு காரணமாக, தியேட்டரில் இருந்து நீக்கியிருப்பது, கருத்து சுதந்திரத்திற்கு எதிராகவே பார்க்கப்படுகிறது.

ஜெய்பீம் படம் வெளியானபோது ஆதரவு தெரிவித்த இயக்குனரும், நடிகமான அமீர், தி கேரளா ஸ்டோரிக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், சமூக வளைதளத்தில் கேலி கிண்டலுக்கு ஆளாகியுள்ளார்.

மதவாதம் பேசவில்லை
படத்தில் நாயகியாக நடித்த அதா சர்மா கூறுகையில், ''படத்தை பார்த்து கேரள பெண்கள் பலர், எனக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். இப்படம் அரசியல், மதவாதம் பேசவில்லை. மனிதநேயத்தையும், பயங்கரவாதத்தையும் மட்டுமே பேசுகிறது. கருத்து சுதந்திரம் உள்ள நாட்டில் விமர்சனங்களை வரவேற்போம்,'' என, கூறியுள்ளார்.

அரசுக்கு ஏற்பட்ட தோல்வி
'பயங்கரவாத செயலை வெளிச்சம் போட்டு காட்டும், தி கேரளா ஸ்டோரி படம், தமிழகத்தில் தொடர்ந்து வெளியிடப்படாமல் போனது, அரசின் தோல்வியை காட்டுகிறது என, குற்றச்சாட்டு எழுந்தது.

'கேரளாவைப் போலவே தமிழகத்திலும் இந்தப் படத்தை தடை விதிக்க வேண்டும்' என, படம் 'ரிலீஸ்' ஆவதற்கு முன்பே, முஸ்லிம் இயக்கங்களைச் சேர்ந்த பலரும் குரல் எழுப்பினர். ஆனால், அரசு தரப்பில் தியேட்டர்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்கப்படும் என அறிவித்து விட்டு, சில அமைப்புகளை திருப்திப்படுத்த, படத்தை ஓட விடாமல் செய்ய, போலீஸ் தரப்பில் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதாவது, தியேட்டர் உரிமையாளர்களே படத்தை திரையிடாமல் பார்த்துக் கொள்ளும் வேலையை செய்திருப்பதாக, குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது.

இது குறித்து, கடுமையான எதிர்ப்பை பதிவு செய்து, அரசுக்கு கடிதம் எழுதி இருக்கிறார், ஹிந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியம்.

அவர் கூறியதாவது: தமிழகம் மற்றும் கேரளாவில், 'லவ் ஜிகாத்' பெயரில் ஹிந்து பெண்களை காதலித்து திருமணம் செய்து, பின் மதம் மாற்றம் செய்கின்றனர். பின், அவர்களை ஐ.எஸ்., இயக்கத்தில் இணைய வைத்து, அவர்களை பயங்கரவாதிகளாக மாற்றுகின்றனர். இது தொடர்ச்சியாக நடக்கிறது.

சமீபத்தில், கேரளாவைச் சேர்ந்த நிமிஷா என்கிற பாத்திமா, மதம் மாறி 'லவ் ஜிகாத்'தில் சிக்கினார். முஸ்லிம் இளைஞரின் காதல் வலையில் வீழ்ந்தார். அவரை திருமணம் செய்து கொண்டார். பின், கணவரால் மூளை சலவை செய்யப்பட்டு, ஐ.எஸ்., பயங்கரவாத இயக்கத்தின்பால் ஈடுபாடு கொள்ளச் செய்யப்பட்டார். ஒரு கட்டத்தில், அவர் ஐ.எஸ்., பயங்கரவாதிகள் முகாம் இருக்கும் ஆப்கானிஸ்தானுக்கே அனுப்பி வைக்கப்பட்டார்.



பயங்கரவாதிகள் பிடிக்குள் சிக்கி, அங்கே தீவிரவாத பயிற்சி எடுத்துள்ளார். ஒரு கட்டத்தில், அவருக்கு இதெல்லாம் பிடிக்கவில்லை. இதை அறிந்த குடும்பத்தினர், மிகுந்த சிரத்தை எடுத்து, அவரை மீட்டுள்ளனர். நிமிஷாவும் அங்கிருந்து மீண்டு வந்து, தான் 'லவ் ஜிகாத்'தில் சிக்க வைக்கப்பட்டது; மதம் மாற்றப்பட்டது; பயங்கரவாத பாதைக்கு அழைத்துச் செல்லப்பட்டது என, எல்லாவற்றையும் வெளிப்படையாகச் சொல்லி இருக்கிறார். இப்படி 'லவ் ஜிகாத்'தில் சிக்க வைக்கப்பட்டு, மத மாற்றம் செய்யப்பட்டு, ஐ.எஸ்., பயங்கரவாத இயக்கத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட பெண்கள், 30 ஆயிரம் பேர் உள்ளனர் என்றும் சொல்லி இருக்கிறார்.

இவரைப் போலவே, சோனியா செபாஸ்டின் என்ற பெண்ணும், அபதுல்லா ரஷீத் என்பவரால் காதலிக்கப்பட்டு, மதம் மாறி, ஆயிஷா ஆக்கப்பட்டார். பின், திருமணம் செய்து கொண்டு, மூளைச் சலவை செய்யப்பட்டு, ஆப்கானிஸ்தான் ஐ.எஸ்., பயங்கரவாத முகாமுக்கு சென்றுள்ளார். சோனியாவும், நிமிஷாவைப் போல மீட்கப்பட்டுள்ளார். அவரும், தனக்கு நடந்த கொடூரங்கள் குறித்தெல்லாம் வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.



அதேபோல, தமிழகத்தைச் சேர்ந்த பிரபல பெண் பத்திரிகையாளர் ஒருவர், சிரியா உள்ளிட்ட முஸ்லிம் பயங்கரவாத இயக்கத்தவர்கள் முகாம் பகுதிகளுக்குச் சென்று, அங்கு நடப்பதை அறிந்து வந்து, அதை செய்தியாக்கி இருக்கிறார். அவரும், இந்திய பெண்கள் பயங்கரவாத பாதைக்கு அழைத்துச் செல்லப்படுவதை ஒப்புக் கொள்கிறார்; அதை விவரித்துள்ளார்.

'லவ் ஜிகாத்' வாயிலாக பயங்கரவாத பாதைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, எத்தனை குடும்பங்கள் நாசமாக்கப்படுகின்றன என்பதையும், செய்தியில் விளக்கமாக குறிப்பிட்டிருக்கிறார்.

தமிழகத்தில் நடந்த கொடூரங்கள்
தமிழகத்தில் நடந்த கொடூரங்கள் குறித்துச் சொல்கிறேன். திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தைச் சேர்ந்தவர் குமரப்பா; இன்ஸ்பெக்டராக இருந்தவர். அவருக்கு இரு பெண்கள். அதில் ஒருவர், 'லவ் ஜிகாத்'தில் சிக்கி கடத்தப்பட்டார். இந்த சங்கடத்தை எதிர்கொள்ள முடியாத குமரப்பா, தற்கொலை செய்து கொண்டார். பொள்ளாச்சியில் பெரிய குடும்பம். அந்த குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவரும் இப்படி 'லவ் ஜிகாத்' வலையில் சிக்கினார்; கடத்தப்பட்டார்.

இது தொடர்பாக, போலீசில் புகார் அளிக்கப்பட்டது; நடவடிக்கை இல்லை. கடத்தப்பட்ட பெண்ணை மீட்க, ஹிந்து முன்னணி தரப்பில், நானே பொள்ளாச்சிக்குச் சென்று போராடினேன். சாதகமான முடிவு எதுவும் எட்டப்படவில்லை. வெட்கிப் போன குடும்பம், மொத்தமாக தற்கொலை செய்து கொண்டது.

அதேபோல அவினாசியில் பூர்ணாதேவி என்ற பெண், காணாமல் போனார். புகார் அளிக்கப்பட்டும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் இந்திய வெளியுறவுத் துறை வரை புகார் கொடுக்கப்பட்டது. பின், அப்பெண் வங்க தேசத்திற்கு கடத்தப்பட்டது தெரிய வந்தது. அவரும் 'லவ் ஜிகாத்'தில் சிக்கி, மதம் மாற்றம் செய்யப்பட்டுத் தான் கடத்தப்பட்டுள்ளார். பெண்ணை மீட்க முயற்சித்தனர்; முடியவில்லை. அப்பெண் தற்கொலை செய்து கொண்டார்.



தமிழகத்தைப் பொறுத்தவரை, கோவை, தேனி, சென்னை, காரைக்கால், நாகப்பட்டினம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் இப்படி 'லவ் ஜிகாத்' வாயிலாக காதல் வலையில் வீழ்த்தப்பட்டு, பின் ஹிந்து பெண்கள் மதமாற்றம் செய்து, முஸ்லிம்களை திருமணம் செய்து கொள்ள வைப்பது நிறைய நடக்கிறது.

இப்படி சிக்கும் ஹிந்து பெண்கள், தமிழகம் முழுதிலும் இருந்து, மண்ணடியில் இருக்கும் முஸ்லிம் இயக்க அலுவலகங்கள் சிலவற்றுக்கு, தொடர்ச்சியாக அழைத்து வரப்படுகின்றனர். அங்கு, மத மாற்றம் செய்யப்படுகின்றனர். பின், திருமணம் செய்து வைக்கப்படுகின்றனர்.

கொஞ்ச காலம் கடந்ததும், அப்பெண் தீவிரவாத பாதைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார். இப்படி சிக்கலுக்கு உள்ளாக்கப்படும் ஹிந்து பெண்கள் குறித்து தகவல் அறிந்ததும், ஹிந்து முன்னணி களம் இறங்கி, இதுவரை 300க்கும் அதிகமான பெண்களை மீட்டுள்ளது.

'லவ் ஜிகாத்' பிரச்னை இன்று, நேற்று நடக்கவில்லை. 1998 பிப்., 14ல் கோவையில் குண்டு வெடித்து, பலர் இறந்து போயினர். அந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களில், ஆயிஷா என்ற பெண்ணும் ஒருவர். அவர் ஹிந்து பெண் சங்கீதாவாக இருந்து, இதே மாதிரி 'லவ் ஜிகாத்' வாயிலாக, முஸ்லிம் ஒருவரை திருமணம் செய்து, தீவிரவாதியாக மாறியவர்.



சமூகத்தில் அன்றாடம் நடக்கும் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்துத் தான், தி கேரளா ஸ்டோரி படம் எடுக்கப்பட்டு இருக்கிறது. அந்த படத்தின் ஹிந்தி மொழியாக்கம் தற்போது வெளியாகி இருக்கிறது. அடுத்தடுத்து, மாநில மொழியாக்கப் படமும் வெளியாக வேண்டும்.

அதற்கு முன்பாகவே, இதற்கு ஒரு தரப்பிடமிருந்து எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. எதிர்ப்பு தெரிவிப்பவர்கள், படத்துக்கு தடை கேட்டு, உச்ச நீதிமன்றம் சென்றனர்; ஆனால், தடை விதிக்கப்படவில்லை. படத்தின் எதிர்ப்பாளர்கள், போராட்டம் நடத்துவதோடு, அரசுகளை மிரட்டவும் செய்கின்றனர். இந்த இடத்தில் தான் தமிழக அரசு இரட்டை வேடம் போடுகிறது.

ஒரு பக்கம், உச்ச நீதிமன்ற உத்தரவைக் காட்டி, படத்தை தமிழக திரையரங்குகளில் திரையிட அனுமதித்து, உத்தரவு போடுகிறது. இன்னொரு பக்கம், திரையரங்கு உரிமையாளர்களை மிரட்டி, படத்தை தொடர்ந்து திரையிடாமல் செய்கிறது.

தி கேரளா ஸ்டோரி படத்தை, கோவை சரவணம்பட்டியில் இருக்கும் 'ப்ரோசன் மல்டி பிளக்ஸ் மாலில்' உள்ள தியேட்டரில் வெளியிட்டனர். இம்மாதம், 5ல் அங்கு சென்று படம் பார்த்தேன்; வெளியே வந்தேன். அடுத்தடுத்த காட்சிகள் ரத்து செய்வதாக, தியேட்டர் சார்பில் அறிவிக்கப்பட்டது.

'திரைப்படத்தை அடுத்தடுத்து திரையிடக் கூடாது' என போலீசார் மிரட்டுவதாகத் தெரிவித்தனர். சென்னையிலும், தி கேரளா ஸ்டோரி படத்தை வெளியிட்ட தியேட்டர்கள், படத்தை தொடர்ந்து திரையிட மறுக்கின்றன; காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மாநிலம் முழுதும் இதே நிலையை, தமிழக அரசு, போலீசார் வாயிலாக திட்டமிட்டு ஏற்படுத்தி உள்ளது. 'இது ஜனநாயகத்துக்கு எதிரானது. இந்த மாதிரியான அசிங்கங்களை அரசே செய்யக் கூடாது' என வலியுறுத்தி, தமிழக அரசுக்கு கடிதம் எழுதி இருக்கிறேன். காவல் துறை இயக்குனருக்கும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு காடேஸ்வர சுப்பிரமணியம் கூறினார்.

'குழந்தையை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டிய அரசு'
தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு பாதுகாப்பு அளிப்பதில், அரசு தோல்வியடைந்து விட்டது. இந்த படம் தமிழகத்தில் வெளியானால், பிரச்னைகள் வெடிக்கும். சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என, அரசுக்கு உளவுத் துறை அறிக்கை அளித்து இருந்தது. ஆனால், படத்தை வெளியிட எவ்வித தடையும் விதிக்கப்படவில்லை. மாறாக, டி.ஜி.பி., சைலேந்திரபாபு, மாவட்ட எஸ்.பி.,க்கள் மற்றும் மாநகர கமிஷனர்களுக்கு விரிவான சுற்றறிக்கை அனுப்பினார்.

அதில், 'படத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வன்முறையாளர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். படத்திற்கு எதிராக, சமூக வலைதளங்களில் எரிச்சலுாட்டும் கருத்துக்களை பரப்புவோரை கூர்ந்து கண்காணிக்க வேண்டும். தியேட்டர்களுக்கு போதிய போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும். தியேட்டர்களில் சோதனை செய்ய வேண்டும்' என, பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து இருந்தார்.

ஆனால், இந்த உத்தரவுகள் முழுவீச்சில் அமல்படுத்தப்படவில்லை. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மட்டுமே தடுத்து நிறுத்தினர். போலீசார் நினைத்திருந்தால், மாநிலம் முழுதும் பலத்த போலீஸ் பாதுப்பு அளித்து, பொது மக்கள் எவ்வித அச்சமும் இன்றி படத்தை பார்க்க ஏற்பாடு செய்து இருக்கலாம். ஆனால், அரசு மறைமுகமாக பிறப்பித்த உத்தரவை மட்டுமே அமல்படுத்தி உள்ளனர். படத்திற்கு பாதுகாப்பு அளிப்பதுபோல வெளியிட வைத்து, கலைகளுக்கு தமிழகத்தில் தடையில்லை என்ற மாய தோற்றத்தை உருவாக்கி உள்ளனர்.

அதேவேளையில், ஓட்டு வங்கியை குறி வைத்து, தியேட்டர் உரிமையாளர்களை தங்கள் வழிக்கு வரவைத்து, படத்தை தொடர்ந்து திரையிடாமல் செய்து விட்டனர். குழந்தையை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டிய கதையாக, அரசின் செயல்பாடு இருக்கிறது. ஒரு படத்தை வெளியிட்டு, அதற்கு பாதுகாப்பு அளிக்க முடியாத நிலையில் தான், தமிழக அரசு உள்ளது. இது அரசின் தோல்வியை அப்பப்பட்டமாக வெளிப்படுத்துகிறது என, சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

படம் ஓடவில்லை; அதனால் நிறுத்தம்
படத்துக்கு தமிழத்தில் பெரிய அளவில் வரவேற்பில்லை. மக்கள் படத்தை பார்க்க, தியேட்டர்களுக்கு வர மறுக்கின்றனர் என்றதும், தொடர்ந்து திரையிட விருப்பப்படவில்லை. அதனால், பல தியேட்டர்களில் திரையிடப்படுவது நிறுத்துப்பட்டுள்ளது. உடனே, போலீஸ் மிரட்டல் தான் காரணம் என சொல்வது நிஜமல்ல. ஹிந்து அமைப்புகள், இந்தப் படத்தை பெரிய அளவில் வெற்றி பெற வைக்க வேண்டும் என நினைக்கின்றன. அது நடக்கவில்லை என்றதும், போலீஸ் மீதும், அரசு மீதும் குற்றம்சாட்டுகின்றன. படத்தை எந்த திரையரங்கில் திரையிட்டாலும், போலீஸ் தரப்பில், முழு பாதுகாப்பு அளிக்கப்படும். சட்டம்- ஒழுங்கு முழுமையாக காப்பாற்றப்பட வேண்டும் என்பதில், போலீஸ் தரப்பு உறுதியாக உள்ளது.

விழிப்புணர்வு திரைப்படம்
டி.ஜி.பி., அலுவலகத்தில், ஹிந்து முன்னணி மாநில செய்தி தொடர்பாளர் இளங்கோவன் அளித்துள்ள மனு: தி கேரளா ஸ்டோரி படம், லவ் ஜிகாத் வாயிலாக மத மாற்றம் செய்யப்பட்டு, பயங்கரவாத செயலுக்கு மூளைச்சலவை செய்யப்படுகின்றனர் என்பதை, விழிப்புணர்வு செய்யும் விதமாக எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, நாம் தமிழர் கட்சி சீமான் போன்றோர், இந்த படம் வெளியாகும் தியேட்டர்கள் முன் போராடடம் நடத்தப் போவதாக, மிரட்டல் விடுக்கிறார்.

தமிழகத்தில் கருத்து சுதந்திரம் உள்ளது என, முதல்வர் ஸ்டாலின் தெரிவிக்கிறார். ஆனால், ஒரு விழிப்புணர்வு படத்தை கூட வெளியிட முடியவில்லை. முதல்வர், தியேட்டர் உரிமையாளர்களுடன் பேச்சு நடத்தி, தொடர்ந்து இந்த படத்தை மாநிலம் முழுதும் திரையிட நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு நீங்கள் தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும். மத கலவரத்தை துாண்ட முயற்சிக்கும் சீமான் போன்றோரை, கைது செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுஉள்ளது.

- நமது நிருபர் குழு -

Advertisement
கருத்துகள் (19) கருத்தைப் பதிவு செய்ய
முதல் மரியாதைக்கு...இது இரண்டாவது மரியாதை! 38 ஆண்டுகளுக்குப் பின்...திரும்புது பூங்காத்து!முதல் மரியாதைக்கு...இது இரண்டாவது ... தமிழுக்கு வரும் தெலுங்கு ஹீரோக்கள் - யாருக்கு வெற்றி ? யாருக்கு தோல்வி ? தமிழுக்கு வரும் தெலுங்கு ஹீரோக்கள் - ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (19)

Nellai tamilan - Tirunelveli,இந்தியா
09 மே, 2023 - 11:36 Report Abuse
Nellai tamilan கருத்துரிமை பேசும் திராவிடியா மாடல் இப்பொழுது மட்டும் முதுகெலும்பு இல்லாத அரசு. அதற்கு லாவணி பாடும் காவல்துறை.
Rate this:
Muralidharan raghavan - coimbatore,இந்தியா
09 மே, 2023 - 11:10 Report Abuse
Muralidharan raghavan முதுகெலும்பற்ற கோழை அரசு. மிரட்டலுக்கும், ஒட்டு வங்கிக்கும் பயந்து விட்டது. இனி இந்த படத்தை ஓ டீ டீ யில்தான் திரையிடவேண்டும். அப்போதும் சாதாரண மக்கள் பார்க்கமுடியாதே என்பதுதான் வேதனை
Rate this:
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
09 மே, 2023 - 08:43 Report Abuse
VENKATASUBRAMANIAN இதுதான் திராவிட மாடல். அடிக்கிற மாதிரி அடி அழுவது போல் நடிக்கும் அரசு. பாவம் காவல்துறை.
Rate this:
Saisenthil - Salem,இந்தியா
09 மே, 2023 - 07:13 Report Abuse
Saisenthil மக்கள் சனி பிடித்த பிரியாணி சாப்பிடாமல் இருந்தால் மட்டுமே தான், இந்த பிரச்சினை குறையும்..
Rate this:
S. Rajan - Auckland,நியூ சிலாந்து
09 மே, 2023 - 05:47 Report Abuse
S. Rajan மதுரை டு சிவகங்கை ரோடு ஏரியா. அங்கேயும் லவ் ஜிகாத் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மதரசா பள்ளிகள் மும்மரமாக அங்கே நடக்கின்றன.
Rate this:
மேலும் 14 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in