''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
சாமி...எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்...!
நடுத்தெருவில் மலைச்சாமியின் காலில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து செங்கோடன் கேட்ட கேள்வி, இப்போதும் செவிகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இப்போதும் அந்த மலைச்சாமியின் காலில் விழுந்து, 'சாமி ! எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும். எப்பிடி சாமி உங்களால மட்டும் இப்பிடி நடிக்க முடியுது?' என்று கேட்கத் தோன்றுகிறது. ஆனால் நடிப்புக்கே மலையான அவர், எப்போதோ சாமியாகி விட்டார். முதல் மரியாதையில் மலைச்சாமியாகவே மாறிப்போன நடிகர் திலகத்தை, 38 ஆண்டுகளுக்குப் பின், மீண்டும் கொண்டாடத் தயாராகியிருக்கிறது தமிழகம்.
கொஞ்சம் திரும்பி பார்ப்போம்!
முதல் மரியாதை வெளியான 1985ம் ஆண்டில், இளைஞர்களாகவும் நடுத்தர வயதினராகவும் இருந்தவர்களுக்கு, இப்போது நினைத்தாலும் அந்த படத்தின் பிரமாண்ட வெற்றியும், மக்களின் ஆர்ப்பரிப்பும் மனக்கண்களில் விரியத்துவங்கிவிடும். நடிகர் திலகம், இயக்குனர் இமயம், இசைஞானி, கவிப்பேரரசு என்று, இந்தப்படத்தில் அமைந்த கூட்டணி, இனி என்றைக்குமே நினைத்தும் கூடப் பார்க்க முடியாத அதிசயமான ஒரு ரசவாதம்.
சிவாஜி நடிப்பின் புதிய பரிணாமத்தைப் படமாக்கியிருந்தார் பாரதிராஜா. திரைக்கதை, வசனம், பாட்டு, நடிப்பு, பின்னணி இசை என்று எதிலுமே ஒரு குறையையும் காணாமல் மீண்டும் மீண்டும் தியேட்டருக்கு வந்து படம் பார்த்து, அந்த படத்தை காவியமாக ஆராதித்தார்கள் தமிழக ரசிகர்கள்.
காசெட்டுகள் தேய்ந்தன
வைரமுத்துவின் வசீகரமான குரலில், அவரின் கவிதை வரிகளுக்கிடையே, ஒவ்வொரு பாட்டும் ஒலிக்கும்போது, செவிகளுக்குள் உள் வாங்கிக் கொண்டு, புவியை விட்டு அந்தரத்தில் பறந்தார்கள் இசை ரசிகர்கள். டீக்கடைகளில், டேப் ரிக்கார்டர்களில் இருந்து ஒரு வருஷத்துக்கு எடுக்காமல் மாறிமாறிப் போட்டுத் தேய்ந்த ஒரே காசெட், முதல் மரியாதை காசெட்தான். படம் ரிலீசாகும்முன், இந்தப் படத்தைப் பார்த்த பிரபல தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலம், 'இந்தப் படம் அதிர்ஷ்டத்தால் கூட ஓடாது' என்று சொல்லியிருக்கிறார்.
இசை ராஜாங்கம் நடத்திய இளையராஜா!
படம் துவங்கியதுமே, சாகும் தருவாயில் இருக்கும் சிவாஜியைப் பார்த்து, 'என்னய்யா இது' என்று பாரதிராஜாவைப் பார்த்துக் கேட்டிருக்கிறார் இளையராஜா. படத்தின் Double positive பார்த்து விட்டு, அரைகுறை மனதோடுதான் பின்னணி இசையை கோர்த்துள்ளார். ஆனால் பாரதிராஜாவின் படங்களிலேயே, அதிக வசூல் சாதனை செய்தது முதல் மரியாதைதான். அதற்கு முக்கியக் காரணம், ராஜாவின் பாடல்களும், பின்னியெடுத்த பின்னணி இசையும்தான்.
இதைப் பற்றி 'அவனுக்கு படம் பிடிக்கவில்லை என்றாலும் தொழில் தர்மம் காப்பவன். அதனால்,அந்தப் படத்திற்கான பங்களிப்பை நூறு சதவீதம் செய்தான்' என்று, ராஜாவைப் பற்றிச் சொன்னார் பாரதிராஜா.
டிஜிட்டல் வடிவில் பாருங்க
காலம் காலமாக இளவயதுக் காதலையே பார்த்த தமிழ் ரசிகர்கள், நடுத்தர வயதைத் தாண்டிய ஒரு பெரியவருக்கும், ஓர் இளம் பெண்ணுக்குமான நேசத்தை எப்படி ஏற்பார்கள் என்று நினைத்தார்கள் திரையுலக ஜாம்பவான்கள். ஆனால் காரண காரியத்தோடு திரைக்கதையில் விளக்கினால், தமிழக மக்கள் தலையில் வைத்துக் கொண்டாடுவார்கள் என்று நம்பினார் பாரதிராஜா; அதுதான் நடந்தது. தமிழ்ச்சினிமாவின் தன்னிகரற்ற படைப்பான முதல் மரியாதை, 38 ஆண்டுகளுக்குப் பின், டிஜிட்டல் பொலிவுடன், பெருநகரங்களில், மல்டி பிளக்ஸ் தியேட்டர்களில் மறு ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
கோவையில் புரூக்பீல்ட்ஸ் மாலில் இந்தப் படம், வரும் வியாழன் வரை தினமும் ஒரு காட்சி நடக்கிறது. குடும்பத்தோடு சென்று, தங்களின் இளமைக்கால நினைவுகளைப் புதுப்பிக்கத் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள் பலர். இன்றைய தலைமுறையும் பார்த்து ரசிக்க வேண்டிய திரைக்கவிதை இது....! பார்த்தால் அவர்களும் சொல்வார்கள்... 'மலைச்சாமி... நடிப்புக்கே நீதான் மலை...சாமி' என்று!