மலையாள திரையுலகில் வித்தியாசமான அதேசமயம் துணிச்சலான வேடங்களில் நடித்து ரசிகர்களை பிரமிக்க வைக்கும் நடிகைகளில் முக்கியமானவர் ஸ்வேதா மேனன்.. அவரது ரதி நிர்வேதம் படமாகட்டும், அல்லது தனது நிஜ பிரசவத்தையே படமாக்க அனுமதித்த 'களிமண்ணு' படமாகட்டும், நடிப்புக்காக வழக்கமான எல்லைக் கோடுகளை தாண்ட தயங்காதவர் ஸ்வேதா மேனன்.
அந்தவகையில் தற்போது மலையாளத்தில் உருவாகியுள்ள பள்ளிமணி என்கிற ஹாரர் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் ஸ்வேதா மேனன். இந்த படத்தில் இன்னொரு கதாநாயகியாக நித்யா தாஸ் நடித்துள்ளார். வரும் பிப்ரவரி 24ம் தேதி இந்த படம் வெளியாக உள்ள நிலையில் இந்த படம் குறித்த விளம்பர போஸ்டர்கள் கேரளாவில் பல நகரங்களில் ஒட்டப்பட்டு உள்ளன.
இந்த நிலையில் தற்போது கேரளாவில் சில இடங்களில் போஸ்டரில் ஸ்வேதா மேனன் இடம் பெற்றுள்ள பகுதியை மட்டும் சில விஷமிகள் கிழித்தெறிந்துள்ளனர். இந்த செயலால் கடும் கோபத்திற்கு ஆளான ஸ்வேதா மேனன் இது குறித்த புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டு இந்த செயலை செய்த நபர்கள் கோழைகள் என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, "என் மீது தனிப்பட்ட வெறுப்பு, கோபம் உள்ளவர்கள் தைரியம் இருந்தால் நேரில் வந்து அதை காட்டட்டும். இதுபோன்று சில்லரைத்தனமான விஷயங்களில் ஈடுபடுவது அவர்களது கோழைத்தனத்தை காட்டுகிறது. இந்த திரைப்படம் ஒரு அறிமுக இயக்குனரின், அறிமுக தயாரிப்பாளரின் கனவு. என்னை அவமானப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு படத்தில் பணியாற்றிய அத்தனை பேரின் உழைப்பையும் கொச்சைப்படுத்துவதை ஏற்க முடியாது" என்று கூறியுள்ளார்.