செங்களம் (வெப் தொடர்),Sengalam (webseries)
Advertisement
3

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - அபி அன்ட் அபி என்டர்டெயின்மென்ட்
இயக்கம் - எஸ்ஆர் பிரபாகரன்
இசை - தரண்குமார்
நடிப்பு - கலையரசன், வாணி போஜன், ஷாலி நிவேகாஸ்
வெளியான தேதி - 24 மார்ச் 2023
அத்தியாங்கள் - 9
ரேட்டிங் - 3/5

இணையத் தொடர் என்றாலே த்ரில்லர் தொடர்கள்தான் அதிகம் வந்திருக்கின்றன. ஆனால், இது ஒரு அரசியல் தொடர், கூடவே கொஞ்சம் த்ரில்லரும் கலந்திருக்கிறது. தமிழில் 'சுந்தரபாண்டியன், இது கதிர்வேலன் காதல், சத்ரியன், கொம்பு வச்ச சிங்கமடா' ஆகிய படங்களை இயக்கிய எஸ்ஆர் பிரபாகரன் இயக்கியுள்ள முதல் இணையத் தொடர் இது.

தொடரின் ஆரம்பத்திலேயே 'இன்று, அன்று ஒரு நாள்' என டைட்டிலுக்கு முன்பாக 'இன்று' என்றும், பின்பாக 'அன்று ஒரு நாள்' என்றும் காட்சிகள் நகர்கின்றன. கலையரசன், அவரது தம்பிகள் டேனியல் அனி போப், லகுபரன் ஆகியோர் ஏற்கெனவே மூன்று கொலைகளைச் செய்துவிட்டு, காட்டில் மறைந்து கொண்டு எம்எல்ஏ உதவியாளர், எம்எல்ஏ ஆகியோரைக் கொலை செய்கிறார்கள். அவர்களைப் பிடிக்க காவல் துறை திண்டாடி வருகிறது என்பது 'இன்று' காட்சிகளாக நகர்கிறது.

விருதுநகர் நகராட்சியில் 40 வருடங்களாக தொடர்ந்து சேர்மன் பதவியில் நீடிக்கும் சரத் லோகித்சவா குடும்பத்தினரின் அரசியல் 'அன்று ஒரு நாள்' காட்சிகளாக நகர்கிறது. சரத்தின் மகன் பவன் விருதுநகர் நகராட்சியின் சேர்மன் ஆக இருக்கிறார். அவர் வாணி போஜனை இரண்டாவது திருமணம் செய்து கொள்கிறார். இருவரும் வெளியூர் சென்ற போது விபத்தில் பவன் இறக்கிறார். அதற்குப் பின் வாணி போஜன் அரசியலில் இறங்க ஆசைப்படுகிறார். துணையாக நம்பிக்கையாக அரசியல் தெரிந்த ஒருவர் இருக்க வேண்டுமென தனது பள்ளிகாலத் தோழியான ஷாலி நிவேகாஸ்--ஐ தேடிச் சென்று அழைத்து வந்து தன்னுடன் தங்க வைத்துக் கொள்கிறார். ஷாலியின் அரசியல் ஆலோசனைப்படி வாணி போஜன் தேர்தலில் நின்று வெற்றி பெற்று விருதுநகர் சேர்மன் ஆகவும் பதவியேற்கிறார்.

'இன்று' சில பல கொலைகளைச் செய்து வரும் கலையரசனின் தங்கை தான் 'அன்று ஒரு நாள்' காட்சிகளில் இடம் பெறும் ஷாலி என்பது சில அத்தியாயங்களுக்குப் பிறகு தெரிய வருகிறது. 'இன்று, அன்று ஒரு நாள்' இரண்டிற்கும் என்ன தொடர்பு என்பதுதான் மீதி அத்தியாயங்கள்.

ஒரு பக்கம் வாரிசு அரசியல் மறுபக்கம் உடன் பிறவா சகோதரி அரசியல் என தமிழகத்தில் பரபரப்பாகப் பேசப்பட்ட இரண்டு விதமான அரசியலையும் இந்தப் படத்தில் களங்களாக வைத்து இந்த 'செங்களம்' தொடரை இயக்கியிருக்கிறார் எஸ்ஆர் பிரபாகரன். முதல் நான்கைந்து அத்தியாயங்கள் கொஞ்சம் மெதுவாக நகர்கிறது. கடைசி நான்கைந்து அத்தியாங்கள் அரசியல் பரபரப்புடன் நகர்ந்து இரண்டாவது சீசனுக்கான 'லீட்' உடன் முடிவடைகிறது. விருதுநகர் என்ற ஒரு நகராட்சிதான் கதையின் களம் என்பதால் உள்ளூர் அரசியலாகவும், மாவட்ட அரசியலாகவும் தெரிந்தாலும் நமக்கு பழக்கப்பட்ட மாநில அரசியலை தொடரின் பல காட்சிகளாக வைத்திருக்கிறார் இயக்குனர்.

படத்தில் நிறைய கதாபாத்திரங்கள் இருக்கின்றன. அனைவருக்குமே சரியான முக்கியத்துவத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர். 'இன்று' காட்சிகளில் தொடர் முழுவதையும் கலையரசன் தாங்குகிறார். இதற்கு முன்பு சில பல படங்களிலும், இரண்டு இணையத் தொடர்களிலும் நடித்த அனுபவம் அவருக்கு பெரிதாகக் கை கொடுத்திருக்கிறது.

'அன்று ஒரு நாள்' காட்சிகளில் 40 வருடங்களாக விருதுநகர் அரசியலை தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் குடும்பத் தலைவராக சரத் லோகித்சவா தாங்குகிறார். வீல் சேரில் அமர்ந்து கொண்டிருந்தாலும் அவர் செய்யும் அரசியல் கம்பீரமாக உள்ளது. அப்படிப்பட்டவரின் அரசியலையும் ஆட்டிப் படைக்கும் விதமாக வாணி போஜன் நிதானமாக உருவெடுக்கிறார். அவருக்கு உற்ற துணையாக தோழி ஷாலி நிவேகாஸ் வந்து நிற்கிறார். வாணி, ஷாலி இருவரும் சேர்ந்து 40 வருடக் குடும்பத்தின் பரம்பரை வாரிசு அரசியலை ஆட்டம் காண வைக்கிறார்கள். அதற்கு அவர்கள் பயன்படுத்தும் ஆயுதம் ஒன்றே ஒன்றுதான், அது 'பணம்'. வாணி, ஷாலி இருவருக்கும் கனமான கதாபாத்திரங்கள் என்றாலும் எப்படியோ தாங்கிக் கொள்கிறார்கள்.

சிறிது நேரமே வந்தாலும் அரசியல் என்றால் எப்படி இருக்க வேண்டும் என புரிய வைக்கிறார் பவன். தொகுதி எம்எல்ஏவாக வேலராமமூர்த்தி, மாவட்டச் செயலாளராக முத்துகுமார், எம்எல்ஏ உதவியாளராக பகவதி பெருமாள், இன்ஸ்பெக்டராக அர்ஜய், கலையரசனின் தம்பிகளாக டேனியல், லகுபரன், அம்மாவாக விஜி சந்திரசேகர் ஆகியோர் குறிப்பிடும்படி நடித்திருக்கிறார்கள். அடுத்த வாரிசு அரசியலுக்கு ஆசைப்பட்டு ஏமாந்து நிற்பவர்களாக பிரேம், பூஜா வைத்யநாத் நடித்திருக்கிறார்கள்.

'செங்களம்' எனப் பெயரை வைத்துவிட்டு கதைக்களத்தையும் யதார்த்தமான இடங்களில் தேர்வு செய்து இயல்பாக பதிவு செய்திருக்கிறார்கள். வெற்றிவேல் மகேந்திரன் ஒளிப்பதிவு, தரண்குமார் பின்னணி இசை தொடருக்கான நல்ல கூட்டணியாக அமைந்துள்ளது.

இந்த சீசனில் இரண்டு கொலைகளை யார் செய்தது என்ற முடிவு கடைசி வரை சொல்லப்படவில்லை. அதையெல்லாம் இரண்டாவது சீசனில் சொல்வார்கள் போலிருக்கிறது.

சினிமாவுக்காக எழுதி வைத்த கதையைத்தான் இணையத் தொடராக மாற்றினேன் என்று பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குனர் எஸ்ஆர் பிரபாகரன் பேசியிருந்தார். சினிமாவுக்கான திரைக்கதை வேறு, இணையத் தொடருக்கான திரைக்கதை வேறு, அந்த மாற்றத்தில் கொஞ்சம் தடுமாறியிருக்கிறார். பல காட்சிகள் மிகவும் மெதுவாக நகர்கிறது என்பதுதான் தொடரின் மைனஸ் பாயின்ட்.

செங்களம் - வாரிசு அரசியல் Vs உடன் பிறவா தோழி அரசியல்

 

பட குழுவினர்

செங்களம் (வெப் தொடர்)

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓