ஐரா,Airaa

ஐரா - பட காட்சிகள் ↓

ஐரா - சினி விழா ↓

Advertisement
2

விமர்சனம்

Advertisement

நடிப்பு - நயன்தாரா, கலையரசன், யோகிபாபு மற்றும் பலர்
தயாரிப்பு - கேஜேஆர் ஸ்டுடியோஸ்
இயக்கம் - கேஎம் சர்ஜுன்
இசை - கேஎஸ் சுந்தரமூர்த்தி
வெளியான தேதி - 28 மார்ச் 2019
நேரம் - 2 மணி நேரம் 22 நிமிடம்
ரேட்டிங் - 2/5

ஒரு பாவப்பட்ட, அனைத்து விதத்திலும் புறந்தள்ளப்பட்ட பெண் பேயின் ஆசைக்காக, தன் வாழ்க்கையையே தியாகம் செய்யத் துணியும் ஒரு பெண்ணின் கதைதான் இந்த ஐரா.

தனி நாயகியாகவும் நடித்து தமிழ் சினிமாவில் தன்னை முதலிடத்தில் நிறுத்திக் கொண்டிருக்கும் நயன்தாரா, இந்தப் படத்தின் கதையில் அப்படி என்ன இருக்கிறது என நினைத்து நடிக்க சம்மதித்தார் என்பது ஆச்சரியமே.

அறம் போன்ற படங்களில் நடித்து சேர்த்த பெயரை இது போன்ற படங்களில் நடித்து கெடுத்துக் கொள்கிறாரே என அவரை நினைத்து வருத்தப்பட வேண்டியதாக இருக்கிறது.

பழி வாங்கத் துடிக்கும் ஒரு பேயின் கதை என காலம் காலமாக தமிழ் சினிமாவில் வந்து கொண்டிருக்கும் அதே பழைய பேய்க் கதைதான் இந்தப் படமும். தன் கருப்பு நிறத்தைக் காரணம் காட்டி தன்னைப் புறக்கணிக்கும் ஊரார், குடும்பத்தார் தரும் வலியால் தவிக்கும் அந்தப் பெண்ணின் வலி மட்டும் தான் படத்தில் நமக்கும் ஒரு வலியைத் தருகிறது. மற்ற காட்சிகள் அனைத்தும் எத்தனையோ பேய்ப் படங்களில் பார்த்த அதே பின்னாடி ஓடும் பேய், விட்டு விட்டு எரியும் விளக்குகள், கதவு சத்தம், என டெம்ப்ளேட் காட்சிகளால் நிறைந்திருக்கிறது படம்.

இயக்குனர் கேஎம் சர்ஜுன், பட்டர்பிளை எபெக்ட் என பார்முலாவை திரைக்கதையின் பிளாஷ்பேக்கில் மட்டும் காட்டிய ஈடுபாட்டை படம் முழுவதும் காட்டியிருந்தால் இந்த ஐராவை அடடா என சொல்ல வைத்திருக்கும்.

பத்திரிகையில் வேலை பார்ப்பவர் நயன்தாரா. அவருக்குப் பெற்றோர் பார்த்து முடிக்கும் வெளிநாட்டு மாப்பிள்ளை பிடிக்காமல் பாட்டி இருக்கும் ஊரான பொள்ளாச்சிக்குச் செல்கிறார். அங்கு அவரைச் சுற்றி பல மர்மமான விஷயங்கள் நடப்பதை உணர்கிறார். அது பேயாக இருக்கலாமோ என நினைத்து யு டியூபில் பேய் இருப்பது போன்ற சில பொய்யான வீடியோக்களைப் போட்டு பிரபலமாகிறார். ஆனால், நிஜமாகவே அவரை ஒரு பேய் துரத்த ஆரம்பிக்கிறது. அது ஏன் நயன்தாராவைத் துரத்துகிறது, அதிலிருந்து நயன்தாரா தப்பித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.

ஒரு படம் முழுவதும் பேயைப் பார்த்து பயந்து நடிக்க வேண்டும் என்றால் பயம் என்ற ஒரு உணர்வைத் தவிர வேறு விஷயம் நடிப்பில் வெளிப்படப் போவதில்லை. ஆரம்பத்தில் நயன்தாராவை ஒரு துணிச்சலான பத்திரிகையாளராகக் காட்டுகிறார்கள். அவருக்குப் பார்த்தவெளிநாட்டு மாப்பிள்ளையிடம், “உனக்கு ஆதி என பெயர் வைத்ததற்குப் பதிலாக.....” என இரட்டை அர்த்த வசனம் பேசுகிறார். அந்தத் துணிவு (?) கடைசியில் கிளைமாக்சில்தான் அவரிடம் வருகிறது. பேயுடன் நேருக்கு நேர் துணிச்சலாகப் பேசுகிறார்.

யமுனா என்ற பத்திரிகையாளராகவும், பவானி என்ற கருப்பழகியான கிராமத்துப் பெண்ணாகவும் இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார் நயன்தாரா. பவானி கதாபாத்திரத்தில் கிராமத்துப் பெண் உடல்மொழியை இயல்பாகக் காட்டியிருக்கிறார். நயன்தாராவை கருப்பாகக் காட்ட வேண்டும் என்பதற்காகவே அந்த பிளாஷ்பேக் காட்சிகளை கருப்பு-வெள்ளையில் படமாக்கியிருக்கிறார்கள். கலரில் வரும் போதும் கூட அந்த கருப்பிலும் நயன்தாரா கலையாகவே இருக்கிறார்.

கிராமத்துப் பெண் பவானியை உண்மையாகக் காதலிப்பவராக கலையரன். நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்த நடித்தாயிற்று என அவர் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். மிக மிக டீசன்டான ஒரு கதாபாத்திரம் அவருக்கு. அந்தக் கதாபாத்திரத்தின் தன்மையை அப்படியே தன் நடிப்பில் பிரதிபலித்திருக்கிறார்.

யோகிபாபு இடைவேளை வரைதான் அதிகம் வருகிறார். ஆனால், சிரிக்க வைக்காமல் ஏமாற்றுகிறார். பள்ளி வயது நயன்தாராவாக கேப்ரில்லா செல்லஸ். மற்றவர்களின் புறக்கணிப்பால் அழுது, குறுகி நடித்து கொஞ்ச நேரமே வந்தாலும் மனதில் இடம் பிடிக்கிறார். ஆனால், இந்த பள்ளி வயது தோற்றத்திற்கும், பின்னர் வரும் நயன்தாராவின் தோற்றத்திற்கும் உருவ ஒற்றுமையே இல்லையே ?. கருப்பு மட்டுமான ஒற்றுமை போதும் என இயக்குனர் நினைத்துவிட்டார் போலிருக்கிறது. பாட்டியாக குலப்புள்ளி லீலா, மலையாளத் தோற்றம் தமிழுக்குப் பொருந்தவில்லை.

கேஎஸ் சுந்தரமூர்த்தி இசையில் மேகதூதம்... பாடல் ரசிக்க வைக்கிறது. பின்னணி இசையிலும் பயமுறுத்தலை அதிகப்படுத்துகிறார். சுதர்ஷன் சீனிவாசன் ஒளிப்பதிவில் இரவுக் காட்சிகள் நிறைய இருந்தாலும் படத்தின் பய உணர்வை அதிகப்படுத்துகின்றன.

கண் தெரியாத நயன்தாரா பாட்டியை ஏன் பேய் துன்புறுத்த வேண்டும், கொல்ல வேண்டும், அப்போது மேலும் பல பேய்கள் அந்தரத்தில் பறக்க வேண்டும். பேய் ஓட்டும் போது வீட்டு வெளியில் மலையாள வாத்தியங்கள் ஏன் அதிகம் முழங்க வேண்டும். தனக்கு நேரடியாக பாதிப்பு ஏற்படுத்தாதவர்களை பேய் ஏன் கொல்ல வேண்டும் என சிலபல கேள்விகள் உள்ளன. அவர்களைக் கொல்வதற்குப் பதிலாக முதலிலேயே நயன்தாராவைக் கொன்றிருக்கலாமே....?.

ஐரா - ரொம்ப சுமாரா...!

 

பட குழுவினர்

ஐரா

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓