சில்லுக்கருப்பட்டி,Sillu karupatti

சில்லுக்கருப்பட்டி - பட காட்சிகள் ↓

Advertisement
3.5

விமர்சனம்

Advertisement

நடிப்பு - சமுத்திரக்கனி, சுனைனா, மணிகண்டன், நிவேதிதா சதீஷ்
தயாரிப்பு - டிவைன் புரொடக்ஷன்ஸ்
இயக்கம் - ஹலிதா ஷமீம்
இசை - பிரதீப் குமார்
வெளியான தேதி - 27 டிசம்பர் 2019
நேரம் - 2 மணிநேரம் 33 நிமிடம்
ரேட்டிங் - 3.5/5

ஒரே படத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட கதைகளைக் கொண்ட சில படங்கள் இதற்கு முன் வந்திருக்கின்றன. ஆனாலும், இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள நான்கு வெவ்வேறு கதைகளும் காதல் என்ற புள்ளியில் இணைந்தாலும் நான்கு விதமான உணர்வுகளை ஏற்படுத்துகின்றன.

வயது கூடக் கூட, காலம் மாற மாற நம் மனதில் உள்ள காதலும், பாசமும் மாறிக் கொண்டே இருக்கும். சூழ்நிலைக்குத் தகுந்தபடிதான் அனைத்தும் மாறும் என்பதும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றுதான். அவற்றை மிகவும் யதார்த்தமாக இந்தப் படத்தில் கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஹலிதா ஷமீம்.

தமிழ் சினிமாவில் பெண் இயக்குனர்கள் அதிகமாக சாதிப்பதில்லை என்ற ஒரு குறை இருக்கிறது. அது இந்த வித்தியாசமான படம் மூலம் மாறும் என்று நம்பலாம்.

10 + வயது காதல் (?), 20 + வயது காதல், 60 + வயது காதல், காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதியினரின் காதல் என வெவ்வேறு வயதுடையவர்களின் உணர்வுகளை நாமும் உணரும்படி கொடுத்திருப்பதுதான் இந்தப் படத்தின் சிறப்பு.

“பின்க் பேக், காக்கா கடி, டர்ட்டுல்ஸ், ஹே அம்மு என நான்கு தலைப்புகளில் இடம் பெற்றுள்ள சிறிய திரைப்படங்கள் சேர்ந்ததுதான் சில்லுக்கருப்பட்டி.

பின்க் பேக்

சென்னையில் உள்ள குடிசைப் பகுதியைச் சேர்ந்த குப்பை பொறுக்கும் சிறுவன் ராகுல். ஒவ்வொரு நாளும் ஒரு பின்க் பேக்கில் அவனுக்கு விதவிதமான குப்பை பொருட்கள் கிடைக்கின்றன. ஒரு நாள் அதில் ஒரு அழகான மோதிரம் கிடைக்கிறது. அதை யாரோ தவறாகப் போட்டிருப்பார்கள் என நினைத்து அதை உரியவர்களிடம் சேர்க்க, அந்த பின்க் பேக் எங்கிருந்து வந்தது எனத் தேடுகிறான். அதைக் கண்டுபிடித்தானா, உரியவர்களிடம் அவன் சேர்த்தானா என்பதுதான் மீதிக் கதை.

குப்பை பொறுக்கும் சிறுவனாக மாஞ்சா கதாபாத்திரத்தில் ராகுல். பணக்காரவீட்டு சிறுமியாக தெய்வத் திருமகள் சாரா. ராகுலுக்கு நண்பனாக நடித்திருக்கும் அந்த சிறுவன், ராகுல் மீது பாசமாக இருக்கும் அவர் பகுதியைச் சேர்ந்த அந்த சிறுமி என நால்வருமே அவரவர் கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

இந்தக் கதையை காதல் கதையாகப் பார்ப்பதா அல்லது இரண்டு இளம் பிஞ்சு உள்ளங்களின் நேசமாகப் பார்ப்பதா என்ற குழப்பம் இயக்குனருக்கும் இருந்திருக்கும் போலிருக்கிறது, நமக்கும் அப்படியேதான் தோன்றுகிறது.

காக்கா கடி

ஐடி நிறுவனத்தில் வேலை பார்ப்பவர் மணிகண்டன். அவருக்கு கேன்சர் ஆரம்பம் என டாக்டர் சொல்லிவிடுகிறார். வாழ்க்கை வெறுத்துப் போய்விடும் அளவிற்கு டல்லாகிவிடுகிறார் மணிகண்டன். தினமும் அவருடன் காரில் ஷேர் பயணமாக வருகிறார் நிவேதித்தா சதீஷ். இருவருக்குள்ளும் ஆரம்பமாகும் நட்பு, மெல்ல காதலாக மலர்கிறது. காதலை வெளிப்படுத்துவதற்குள் ஆபரேஷன் செய்து கொள்ள சென்று விடுகிறார் மணிகண்டன். ஒவ்வொரு நாளும் தன் காதலை விதவிதமாக வெளிப்படுத்துகிறார் நிவேதித்தா. அவரின் காதலை மணிகண்டன் புரிந்து கொள்கிறாரா என்பதுதான் மீதிக் கதை.

காலா படத்தில் ரஜினியின் மகனாக நடித்த மணிகண்டன்தான் இந்தக் கதையின் நாயகன். இயல்பான தோற்றத்துடன் இயல்பான நடிப்புடன் கதாபாத்திரத்துடன் ஒன்றி இருக்கிறார். இக்கதையின் நாயகியாக நிவேதித்தா சதீஷ். அந்த ஒற்றை மூக்குத்தியும், அவரது காதல் பார்வையும் அழகோ அழகு. ஒரு முழு நீளப் படத்தில் சீக்கிரம் கதாநாயகியாக ஜொலிக்க வாழ்த்துகள்.

டர்ட்டுள்ஸ்

காதலுக்குக் கண்ணில்லை என்பதை விட வயதுமில்லை என்பதைச் சொல்லும் கதை இது. காதல் தோல்வியால் திருமணமே செய்து கொள்ளாமல் தனிமையில் வாழ்கிறார் 60 பிளஸ் வயதான லீலா சாம்சன். அவரை யதேச்சையாய் பார்க்கும் அதே வயதுடைய க்ராவ்மகா ஸ்ரீராம் காதல் வயப்படுகிறார். கடற்கரையில் ஆமை முட்டைகளை சேகரிக்கும் ஒரு நாளில் லீலாவிடம் தன் காதலைச் சொல்கிறார். அதிர்ச்சியடையும் லீலா வீட்டில் சிறு விபத்தில் சிக்கி படுத்த படுக்கை ஆகிறார். லீலாவைத் தேடும் முயற்சியில் இறங்குகிறார் ஸ்ரீராம். இருவரும் சந்தித்தார்களா அவர்களது காதல் என்ன ஆனது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

தனிமை ஒரு மனிதனை என்ன பாடாய்படுத்தும் என்பதற்கு இந்தக் கதை ஒரு உதாரணம். கைவிட்ட நிலையில் ஆதரவாய் கை கொடுக்க வருபவர்கள் மீது வருவது கரிசனமா, காதலா என கேள்விகளை எழுப்பும் கதை இது. தனிமையிலேயே தன் வாழ்க்கையைக் கழிக்கும் லீலா சாம்சன், மனைவியை இழந்த ஸ்ரீராம் இருவருக்குள்ளும் வரும் காதலை எந்த நெருடலும் இல்லாமல் கொடுத்திருக்கிறார் இயக்குனர். இக்கதையில் நடித்திருக்கும் இருவருமே கதாபாத்திரங்களின் எல்லை என்ன என்பதை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

ஹே அம்மு

காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் சமுத்திரக்கனி, சுனைனா. மூன்று குழந்தைகள் இருந்தாலும் தினமும் மனைவியுடன் உறங்கும் பழக்கமுடையவர் சமுத்திரக்கனி. மனைவியை ஒரு வேலை செய்யும் மிஷினாகவே பாவிப்பவர். ஆனால், சுனைனாவுக்கோ அப்படி மிஷினாக இருப்பது பிடிக்கவில்லை. இதனால் இருவருக்குள்ளும் அடிக்கடி மோதல்கள் நடக்கிறது. இருவரது எதிர்பார்ப்புகளும் வேறு வேறாக உள்ளது. அதைப் புரிந்து கொண்டு இருவரும் தங்கள் குறைகளைக் களைந்து மாறுகிறார்களா இல்லையா என்பதுதான் மீதிக் கதை.

மற்ற மூன்று கதைகைளைவிட இந்தக் கதையில்தான் அதிக சுவாரசியத்தை சேர்த்திருக்கிறார் இயக்குனர். சமுத்திரக்கனி, சுனைனா இருவருமே அவரவர் கதாபாத்திரங்களில் மிக நிறைவாக நடித்திருக்கிறார்கள். சமுத்திரக்கனி எங்கே அட்வைஸ் மழை பொழிய ஆரம்பித்துவிடுவாரா என நினைத்தால் நல்ல வேளையாக யதார்த்த கணவனாக நடித்து ரசிக்க வைக்கிறார். சுனைனா போன்ற யதார்த்த நடிகைகளை தமிழ் சினிமா அதிகம் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பது வருத்தம்தான்.

2019ம் வருடக் கடைசியில் வெளிவந்துள்ள இந்த சில்லுக்கருப்பட்டி மீண்டும் யோசித்துப் பார்க்கும், ரசித்துப் பார்க்கும் ஒரு படமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

ஒவ்வொரு கதையுமே அரை மணி நேரத்திற்குள்ளாக முடிவதால் தேவையில்லாத காட்சிகள் என அதிகமில்லை.

பிரதீப் குமாரின் பின்னணி இசை ஒவ்வொரு கதையிலும் ஒரு கதாபாத்திரமாகவே அமைந்துள்ளது.

நல்ல முயற்சிதான், ஆனால், ஆங்காங்கே குறும்பட வாடை அடிப்பதை மட்டும் தவிர்த்திருக்கலாம்.

சில்லுக்கருப்பட்டி - Chillll.....

 

பட குழுவினர்

சில்லுக்கருப்பட்டி

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓