தலைக்கூத்தல்
விமர்சனம்
தயாரிப்பு - ஒய்நாட் ஸ்டுடியோஸ்
இயக்கம் - ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன்
இசை - கண்ணன் நாராயணன்
நடிப்பு - சமுத்திரக்கனி, வசுந்தரா, கதிர், கதநந்தி
வெளியான தேதி - 3 பிப்ரவரி 2023
நேரம் - 2 மணி நேரம் 22 நிமிடம்
ரேட்டிங் - 2.75/5
வயது முதிர்ந்து, படுத்த படுக்கையாக இருக்கும் முதியவர்களுக்கு 'தலைக்கூத்தல்' என்ற பெயரில் அவர்களைக் கொல்லும் ஒரு வழக்கம் ஒரு காலத்தில் இருந்தது. அதைப் பற்றிய படம்தான் இது. இதற்கு முன்பு 'கேடி என்கிற கருப்புதுரை, பாரம்' என இரண்டு படங்கள் இந்த 'தலைக்கூத்தல்' கருவை வைத்தே தமிழில் வெளிவந்துள்ளன.
'லென்ஸ்' என்ற படத்தை இயக்கிய ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் இப்படத்தை இயக்கியிருக்கிறார். தென் மாவட்ட கதைக்களத்தையும், கதாபாத்திரங்களையும் இயல்பாகக் காட்டியிருக்கிறார்.
கட்டிட வேலை செய்து வந்த மேஸ்திரி ஆன சமுத்திரக்கனி, தனது அப்பாவிற்கு விபத்து ஏற்பட்டு படுத்த படுக்கை ஆகிவிட்டதால் அந்த வேலையை விட்டுவிட்டு இரவு நேர செக்யூரிட்டி வேலைக்குச் செல்கிறார். அவரது மனைவி வசுந்தரா தீப்பெட்டி தொழிற்சாலை வேலைக்குப் போகிறார். ஒரே மகள் பள்ளியில் படிக்கிறார். பகல் நேரங்களில் தனது அப்பாவைப் பக்கத்தில் இருந்து பார்த்துக் கொள்கிறார் சமுத்திரக்கனி. அப்பாவின் சிகிச்சைக்காக பெற்ற கடன் அவரை அழுத்துகிறது. இந்நிலையில் அவரது அப்பாவுக்கு 'தலைக்கூத்தல்' நடத்தி அவரை மரணத்தைத் தழுவ வைக்கச் சொல்கிறார்கள் உறவினர்களும், ஊராரும். அதற்கு மறுக்கிறார் சமுத்திரக்கனி. இதனால், குடும்பத்தில் பிரச்சினை வருகிறது இதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
வயதான, படுத்த படுக்கையாக இருக்கும் வயதான அப்பாவை கவனமாகப் பார்த்துக் கொள்ளும் கிராமத்து ஏழை மகனை கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் சமுத்திரக்கனி. இந்தக் காலத்தில் இப்படியெல்லாம் அப்பாவைப் பார்த்துக் கொள்பவர்கள் இருக்கிறார்கள் என்பதே பெரும் நெகிழ்ச்சி தான். ஒரு கட்டத்தில் மனைவி வசுந்தரா கணவன் சமுத்திரக்கனியிடம் “உனக்கு அப்பா மீது பாசம் அதிகமா அல்லது பெற்ற மகள் மீது பாசம் அதிகமா ?,” எனக் கேட்க அதற்கு கனி, 'அப்பா' என பதிலளிக்கிறார். அதிலிருந்தே அவரது கதாபாத்திரத்தின் தன்மையைப் புரிந்து கொள்ளலாம்.
தமிழ் சினிமா அதிகம் பயன்படுத்திக் கொள்ளாத ஒரு யதார்த்த நடிகையாக இருக்கிறார் வசுந்தரா. ஒரு பக்கம் மாமனார், மறுபக்கம் கணவர், இன்னொரு பக்கம் மகள் என குடும்பத்தில் தவித்துக் கொண்டிருக்கிறார். வேலைக்குச் சென்ற இடத்திலும் சபலபுத்தி கொண்ட ஒருவரை சமாளிக்க வேண்டியிருக்கிறது. கடனால் கணவன் தடுமாறக் கூடாதென அப்பாவிடமிருந்து உதவி பெற்று சமாளிக்கிறார். கிராமத்து அம்மாக்கள் எப்படியிருப்பாரோ அப்படியே கதாபாத்திரத்திற்கேற்றபடி தன்னை மாற்றிக் கொண்டிருக்கிறார்.
மெயின் கதையுடன் சேர்ந்து படுத்த படுக்கையாக இருக்கும் சமுத்திரக்கனி அப்பாவின் நினைவாக பிளாஷ்பேக் காட்சிகள் அவ்வப்போது வந்து போகிறது. அதில் கதிர், கதநந்தி சம்பந்தப்பட்ட காதல் காட்சிகள் மட்டுமே இடம் பிடித்துள்ளது. அவற்றில் 'முதல் மரியாதை' வாசம் நிறையவே வீசுகிறது.
மற்ற கதாபாத்திரங்களை அந்த கிராமத்திலேயே தேடிப் பிடித்து நடிக்க வைத்திருப்பார்கள் போலிருக்கிறது. கனி, வசுந்தராவின் மகள், வசுந்தராவின் அப்பா, தம்பி ஆகியோர் இயல்பாக நடித்திருக்கிறார்கள். கனியின் எதிர்வீட்டு நண்பராக ஆடுகளம் முருகதாஸ்.
கண்ணன் நாராயணன் பின்னணி இசை, மார்ட்டின் டான்ராஜ் ஒளிப்பதிவு, டேனி சார்லஸ் படத்தொகுப்பு, மைக்கேல் அரங்க அமைப்பு படத்துடன் ஒன்றிப் பயணித்துள்ளது.
ஒரு வீட்டிற்குள்ளேயே படத்தின் அதிக நேரக் காட்சிகள் நகர்வது சற்றே அயர்ச்சியாக உள்ளது. சில காட்சிகள் திரும்பத் திரும்ப வருவது போல இருக்கிறது.
தலைக்கூத்தல் - தந்தைப்பாசம்
தலைக்கூத்தல் தொடர்புடைய செய்திகள் ↓
பட குழுவினர்
தலைக்கூத்தல்
- நடிகர்
- நடிகை
- இயக்குனர்