3

விமர்சனம்

Advertisement

நடிப்பு - ஆர்ஜே பாலாஜி, பிரியா ஆனந்த், ஜேகே ரித்தீஷ்
தயாரிப்பு - வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல்
இயக்கம் - கே.ஆர். பிரபு
இசை - லியோன் ஜேம்ஸ்
வெளியான தேதி - 22 பிப்ரவரி 2019
நேரம் - 2 மணி நேரம் 4 நிமிடம்
ரேட்டிங் - 3/5

தமிழ் சினிமாவில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு வெளிப்படையான அரசியல் படம். சமீபகால தமிழ்நாட்டு அரசியலில் நடந்த சில முக்கிய நிகழ்வுகளை வெளிப்படையாகவே விமர்சித்தும், கிண்டலடித்தும் இருக்கிறார்கள்.

ஆர்ஜே பாலாஜி அவருடைய பார்வையில், அவருக்குத் தெரிந்த அரசியலை வைத்து கதை, திரைக்கதை, வசனம் எழுதி நாயகனாக நடித்திருக்கிறார். தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளை, அரசியல் தலைவர்களைக் கிண்டலடிப்பவர் மிகக் கவனமாக தேசியக் கட்சிகளையும், தேசியத் தலைவர்களையும் கிண்டலடிப்பதைத் தவிர்த்திருக்கிறார்.

படத்தை கே.ஆர். பிரபு என்பவர் இயக்கியிருக்கிறார் என்று டைட்டிலில் வருகிறது. படத்தில் இணை இயக்குனர் என்று ஆர்ஜே பாலாஜி பெயரும் வருகிறது. படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பாலாஜிக்குத்தான் முக்கியத்துவம் இருந்தது. கூட்டிக் கழித்துப் பார்த்தால் கணக்கு சரியாக வரும். அதிலும் ஏதோ ஒரு அரசியல் இருக்கிறது போலிருக்கிறது.

லால்குடி கருப்பையா காந்தி, பிழைக்கத் தெரியாத அரசியல்வாதியான நாஞ்சில் சம்பத்தின் ஒரே மகன். அப்பாவைப் போல இல்லாமல் இளம் வயதிலேயே வார்டு கவுன்சிலர் ஆக இருக்கிறார். அவருக்கு அரசியலில் மேன்மேலும் வளர ஆசை. தமிழ்நாட்டின் முதல்வர் உடல்நிலை மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், அவருக்கு அடுத்த இடத்தில் உள்ள ராம்குமார் முதல்வராகப் பதவியேற்கிறார். முதல்வரின் மரணத்தை அடுத்து அவருடைய தொகுதியான லால்குடியில் இடைத் தேர்தல் வருகிறது. அதில் போட்டியிட சிலபல அரசியல் வேலைகள் செய்து எம்எல்ஏ சீட் வாங்குகிறார் பாலாஜி. அவரை எதிர்த்து அந்தத் தொகுதியில் பலம் வாய்ந்தவரும், ராம்குமாரின் எதிரியுமான அதே கட்சியைச் சேர்ந்த ஜேகே ரித்தீஷ் சுயேச்சையாகப் போட்டி போடுகிறார். இதில் யார் வெற்றி பெற்றார்கள் என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

ரேடியோ ஆர்ஜே ஆக இருந்து, நகைச்சுவை நடிகராகி, சீக்கிரத்திலேயே நாயகனாகவும் உயர்ந்திருக்கிறார். திரையுலகில் நகைச்சுவை நடிப்பில் நிறைய அனுபவம் வாய்ந்த வடிவேலு, சந்தானம் ஆகியோரே பொருத்தமான கதை கிடைக்காமல் நாயகனாக தங்கள் பெயரைத் தக்க வைக்கத் தடுமாறி வரும் நிலையில் பாலாஜி நாயகனாக நடிக்கும் முதல் படத்திலேயே முத்திரை பதித்துவிட்டார். தானே எழுதிய கதை, திரைக்கதை, வசனம் மூன்றுமே தேவையான விகிதத்தில் சரியான கூட்டணி அமைத்திருப்பதால் அது நாயகன் பாலாஜிக்கு மெஜாரிட்டி வெற்றியைப் பெற்றுக் கொடுத்துவிடுகிறது. தான் மட்டுமே கமெண்ட் அடித்து ரசிகர்களை சிரிக்க வைக்க வேண்டும் என்பதிலும் மிக கவனமாக இருந்திருக்கிறார். மற்றவர்களுக்கு எந்தக் காட்சியிலும் கைதட்டல் வந்துவிடாது. வில்லன் ஜேகே ரித்தீஷைக் கூட காமெடி வில்லனாகத்தான் உருவாக்கியிருக்கிறார். பாலாஜியின் எழுத்து அரசியலும், நடிப்பு அரசியலும் திரையில் தெளிவாகத் தெரிகிறது.

தேர்தலுக்காக கட்சிகளுக்கும், வேட்பாளர்களுக்கும் ஆலோசனை சொல்லி, சர்வே நடத்தி அவர்களுக்கு மார்க்கெட்டிங் செய்து தரும் கார்ப்பரேட் கம்பெனி ஒன்றின் டீம் லீடர் ஆக பிரியா ஆனந்த். உயர் பதவியில் இருக்கும் மேல்தட்டு கார்ப்பரேட் அதிகாரி எப்படி இருப்பாரோ அப்படியே இருக்கிறார் பிரியா. நடை, உடை, பேச்சு என அனைத்திலும் கார்ப்பரேட் ரத்தம் ஊறிப் போன மாதிரியே நடித்திருக்கிறார்.

காமெடி வில்லனாக ஜேகே ரித்தீஷ். தன் அன்பாலும், பணத்தாலும் தொகுதியையே தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பர் ரித்தீஷ். அவரை நேரடியாக வீழ்த்த முடியவில்லை என்பதால் சூழ்ச்சி செய்து வீழ்த்துகிறார். தொகுதி மக்கள் வீட்டு விசேஷங்களுக்குச் செல்வதையும், துக்க நிகழ்ச்சிகளுக்கு செல்வதையும் போகிற போக்கில் கிண்டலடிக்கிறார் பாலாஜி. அது எந்த விதத்தில் தவறான ஒன்று. ராமராஜனே நடித்திருந்தால் கூட இப்படிப் பெயர் வாங்கியிருக்க முடியாது. ராமராஜ் பாண்டியன் என்ற அரசியல்வாதி கதாபாத்திரத்தில் ரித்தீஷ், ஒரு ரிச்சீஷ்.

பாலாஜியின் மாமாவாக மயில்சாமி. நகைச்சுவையில் தெறிக்கவிடும் மயில்சாமியை இந்தப் படத்தில் குணச்சித்திர நடிகராக்கிவிட்டார்கள். ஒரு காட்சியில் கூட அவருடைய டைமிங் நகைச்சுவை வரவேயில்லை. நாஞ்சில் சம்பத் தமிழார்வலாக நடித்திருக்கிறார். அவர் திருக்குறளை உதாரணமாக எடுத்துப் பேசும் போதெல்லாம் வேண்டாம் வேண்டாம் என தடுக்கிறார் பாலாஜி. தமிழார்வலர்கள் மீது கோபமா அல்லது திருக்குறள் மீது கோபமான எனத் தெரியவில்லை. முதல்வராக ராம்குமார், அவருடைய குரலில் பிரபுவும், நடையில் அப்பா சிவாஜிகணேசனும் தெரிகிறார்கள்.

லியேன் ஜேம்ஸ் இசையில் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் ரீமிக்ஸ் பாடல் ரசிக்க வைக்கிறது.

தேர்தலில் வாக்களிக்கும் போது யாருக்கு வாக்களிக்கப் போகிறீர்கள் என்பதை யோசித்து, ஆராய்ந்து பார்த்து வாக்களியுங்கள் என்பதற்காக எடுக்கப்பட்ட படம். பணம் சம்பாதிப்பதை மட்டுமே குறிக்கோளாக வைத்திருக்கும் சில அரசியல்வாதிகளை மட்டுமே சாடுகிறது படம்.

ஒரு பக்கம் ஸ்பூப் படம் போலத் தோன்றுகிறது. திடீரென சீரியசான அரசியல் படமாகவும், பின்னர் காமெடி அரசியல் படமாகவும் மாறுகிறது. படத்தின் கருத்து பற்றி சில கேள்விகள் எழுந்தாலும் இரண்டு மணி நேரம் ஒரு திரைப்படமாக தியேட்டரில் ரசிகர்களுக்கு என்டெர்டெயின்மென்ட் கிடைத்துவிடுகிறது. கடைசியில் மட்டுமே ரசிகர்களுக்கு அட்வைஸ்.

எல்கேஜி - பாலாஜி பாஸ்

 

எல்கேஜி தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

எல்கேஜி

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓