நடிகர்கள் : மோகன்லால், நிவின்பாலி, பிரியா ஆனந்த், எம்.எஸ்.பாஸ்கர், சன்னி வெய்ன், பாபு ஆண்டனி, சுதீர் காரமணா, ஷைன் டாம் சாக்கோ, மணிகண்ட ஆச்சாரி மற்றும் பலர்
இசை : கோபிசுந்தர்
ஒளிப்பதிவு : பினோத் பிரதான்
கதை : பாபி-சஞ்சய்
டைரக்சன் : ரோஷன் ஆண்ட்ரூஸ்
குறிப்பிட்ட ஒரு வரையறைக்குள் சிக்காமல், அனைத்துவிதமான களங்களிலும் படம் இயக்குவதில் வித்தகரான, தமிழில் 36 வயதிலே படத்தை இயக்கிய ரோஷன் ஆண்ட்ரூஸ், மோகன்லால்-நிவின்பாலி என மெகா கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் இது.
1800களில் நடைபெறும் கதை.. அப்போதைய காலகட்டத்தில் மிகப்பெரிய கொள்ளைக்காரனாக, மக்களுக்கு வாரி வழங்கும் ராபின்ஹூட்டாக கோலோச்சிய 'காயம்குளம் கொச்சுன்னி' என்பவனை பற்றிய கதை..
வறுமையின் பிடியில் சிக்கி சின்னவயதிலேயே வீட்டை பிரிந்து வேறு ஊருக்கு வந்து மளிகைக்கடைக்காரர் எம்.எஸ்.பாஸ்கரிடம் தஞ்சம் புகுந்து வளர்கிறார் நிவின்பாலி (கொச்சுன்னி). தனது ஊருக்கு களரி பயிற்சி தர வந்த பாபு ஆண்டனியிடம் நேரடியாக பயிற்சியில் சேரமுடியாமல் ஏகலைவனாக தூர இருந்தே கலையை கற்கிறார். ஒருகட்டத்தில் இதை கண்டுபிடித்த குரு, நிவின்பாலியிடம் இருந்த திறமையை கண்டு, அவரை தனது முதன்மை மாணவராக ஏற்கிறார். இது அவரிடம் ஒன்பது வருடமாக சீடனாக இருக்கும் சன்னி வெய்னிடம் பொறாமையை தூண்ட, குருவிடம் கோபித்துக்கொண்டு நிவின்பாலியிடம் சவால்விட்டு ஆத்திரத்துடன் வெளியேறுகிறார் சன்னி வெய்ன்.
இதற்கிடையே சிலரின் வேண்டுகோளின்படி, அரசாங்கத்துக்கு தெரியாமல் ஆற்றின் ஆழத்தில் புதைந்து கிடக்கும் தங்கத்தை எடுத்து அவர்களிடம் ஒப்படைக்கிறார் நிவின்பாலி. அவர்களோ அதற்கு பரிசாக சில பொற்காசுகளை வழங்கி, அதேசமயம் பிற்பாடு இந்த நகை விஷயம் வெளிப்பட்டு விடக்கூடாது என்பதற்காக அவர்மீது திருட்டுப்பட்டம் கட்டி தண்டனை கிடைக்க செய்கின்றனர். சவுக்கடி பட்டு, தலைகீழாக மரத்தில் தொங்கியபடி உயிருக்கு போராடும் அவரை காப்பாற்றி அழைத்து செல்கிறார் பிரபல கொள்ளையனான மோகன்லால் (இத்திக்கர பக்கி).
மேல்ஜாதிக்காரர்களிடம் அடிபணிந்து கிடக்கும் மக்களை காப்பாற்றவும், அவர்களுக்கு உதவும் கொள்ளையனாக மாறவேண்டிய அவசியத்தை நிவின்பாலிக்கு விளக்கும் மோகன்லால், நிவின்பாலிக்கு முறைப்படி பயிற்சி அளித்து, அவருக்கு துணையாக தனது மூன்று சீடர்களையும் விட்டுவிட்டு, வேறு ஊர் தேடி கிளம்பி செல்கிறார்.
தனக்கு திருட்டு பட்டம் கட்டிய ஊரில் உள்ள பெரிய மனிதர்களை மிரள வைக்கும் நிவின்பாலி, அடுத்தடுத்து கொள்ளைகளில் ஈடுபடுகிறார். முன்பு அவரிடம் விரோதமாகி வெளியேறிய சன்னி வெய்ன், ஆங்கிலேயரிடம் போலீஸ் அதிகாரியாக பணியில் சேர்கிறார். தனது தீவிர எதிரியான நிவின்பாலியை சிறைப்பிடித்து தூக்குத்தண்டனை வாங்கித்தர கங்கணம் கட்டி வியூகம் வகுக்கிறார். இருவருக்குமான இந்த ஆடுபுலி ஆட்டத்தில் ஜெயம் யாருக்கு என்பது க்ளைமாக்ஸ்.
ஒரு அப்பாவி இளைஞன், எப்படி அதிகார வர்க்கத்தின், ஆதிக்க சாதியின் அடக்குமுறைக்கு ஆளாகி கொள்ளையனாக உருவெடுக்கிறான் என்பதை தனது இயல்பான நடிப்பு மூலம் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை பிசிறில்லாமல் பிரதிபலித்திருகிறார் நிவின்பாலி. ஆக்சன் காட்சிகளில் குறிப்பாக, களரி பயிற்சி காட்சிகளில் அவரது கற்றலும், பயிற்சியும், அதை செயல்படுத்திய விதமும் பிரமிப்பூட்டுகிறது. அதேபோல சாதாரண ஆளாக இருந்து கொள்ளையனாக மாறுவது வரை உடல்மொழி, தோற்றம் என மிகச்சரியாக வித்தியாசம் காட்டியிருக்கிறார் நிவின்பாலி.
கெஸ்ட் ரோல் தான் என்றாலும் சுமார் இருபது நிமிடங்களுக்கு மேல் திரையில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி செல்லும் இத்திக்கர பக்கி என்கிற கொள்ளையனாக தூசி படிந்த உடலும் உடையுமாக வரும் மோகன்லால் ரொம்பவே ஆச்சர்யப்படுத்துகிறார். அவர் வரும் காட்சி மாஸ் என்ட்ரி. சண்டைக்காட்சி, குதிரை சவாரி போன்றவற்றில் இந்த வயதிலும் அவரது உடல் வஞ்சனை இல்லாமல் ஒத்துழைப்பதை பார்க்கும்போது பிரமிக்காமல் இருக்க முடியவில்லை.
இத்தனை வருட பயணத்தில் நடிகை பிரியா ஆனந்திற்கு இதில் ரொம்பவே அழுத்தமான கதாபாத்திரம் என்று சொல்லலாம். நிவின்பாலியுடன் காதலாகி, கால சூறாவளியில் சிக்கி, தனது குணத்தை தொலைத்து துரோகத்துக்கு துணைபோகும் கேரக்டரில் ரொம்பவே புதிதாக தெரிகிறார்.
தனக்கான அங்கீகாரம் இன்னொருவரிடம் பறிபோகும்போது ஏற்படும் குரோதம், வெறுப்பு என அக்மார்க் வில்லத்தனம் காட்டியிருக்கிறார் சன்னி வெய்ன். களரி பயிற்சி தரும் குருவாக பாபு ஆண்டனி கம்பீரம்.. கடைசியில் க்ளைமாக்ஸ் திருப்பத்திற்கு இவர் துணைபோவது எதிர்பாராதது.
இவர்கள் தவிர ஆதிக்க சாதிக்காரர் என்பதை அடிக்கடி பறைசாற்றி அதிகாரம் செய்யும் சுதீர் காரமணா, மேல்சாதிக்கரர் என்றாலும் ஒடுக்கப்பட்டவர்களுக்காக குரல்கொடுக்கும் ஷைன் டாம் சாக்கோ, நண்பனின் உயிரை காப்பாற்றுவதாக நினைத்து துரோகத்துக்கு விலைபோகும் மணிகண்ட ஆச்சாரி ஆகியோருடன் நம்ம எம்.எஸ்.பாஸ்கரும் படம் முழுதும் வரும் கேரக்டரில் அழகாக பொருந்தி ஆச்சர்யமூட்டுகிறார்.
18ஆம் நூற்றாண்டிற்கே அழைத்து சென்று கதை மாந்தர்களுடன் நம்மையும் உலாவர செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் பினோத் பிரதான். சமகாலத்திய தாக்கம் எதுவும் பின்னணியில் தென்பட்டு விடாதபடி வெகு ஜாக்கிரதையாக, அதேசமயம் அன்றைய காலகட்டத்தையும் அழகாக பிரதிபலிக்க உதவிய கலை இயக்குனரையும் பாராட்டியே ஆகவேண்டும். கோபிசுந்தரின் பின்னணி இசையில் காலத்திற்கேற்ற அழகான மாற்றம். படம் சற்றே நீளம் என்றாலும் இதற்கு மேல் இனி எதை வெட்டுவது என நமக்கே தோன்றும் விதமாக கச்சிதமாக படத்தொகுப்பு செய்துள்ளார் ஸ்ரீகர் பிரசாத்.
இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூசை ரசிகர்களுக்கு பிடிப்பதற்கு காரணம், அவர் எப்போதுமே அரைத்த மாவையே அரைக்க விரும்பாதவர்.. அதேபோல ஒரு வட்டத்திற்குள் சிக்காமல், புதுப்புது களங்களில் ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவம் தருபவர். இந்தப்படத்திலும் அதை மிக நேர்மையாக செய்துள்ளார். மிகப்பெரிய ஆய்வுகளை மேற்கொண்டு வரலாற்று படமான இதை ஒரு தவம் போல செய்து முடித்துள்ளார் என்பது காட்சிக்கு காட்சி நன்றாக புலப்படுகிறது. கொள்ளையர்களின் பக்கமும் ஒரு நியாயம் உண்டு என்பதை திரைக்கதை மூலம் சமன்படுத்தி சொல்லியிருக்கிறார்.
ஒரே வரியில் சொல்லவேண்டுமென்றால் காயம்குளம் கொச்சுன்னி மூலம் பதினெட்டாம் நூற்றாண்டுக்கு ஒரு சாகச பயணம் செய்துவிட்டு வந்த அனுபவத்தை உணர முடிகிறது.