2.5

விமர்சனம்

Advertisement

நடிப்பு - ஹிப்ஹாப் தமிழா ஆதி, அனகா, கரு.பழனியப்பன் மற்றும் பலர்
தயாரிப்பு - அவ்னி மூவீஸ்
இயக்கம் - பார்த்திபன் தேசிங்கு
இசை - ஹிப்ஹாப் தமிழா ஆதி
வெளியான தேதி - 4 ஏப்ரல் 2019
நேரம் - 2 மணி நேரம் 34 நிமிடம்
ரேட்டிங் - 2.5/5

நட்பு, காதல் இவை இரண்டும் தான் சினிமாவில் எந்தக் காலத்திலும், எந்தத் தலைமுறைக்கும் கை கொடுக்கும் இரண்டு விஷயங்கள். அவற்றை சொல்ல வேண்டிய விதத்தில் சொன்னால் அப்போதைய இளம் தலைமுறை ரசிகர்களைக் கவர்ந்து வெற்றி பெற்றுவிடலாம்.

கதை வழியாக அதை இந்த 'நட்பே துணை' படத்தில் சரியாகவே செய்திருக்கிறார் இயக்குனர் பார்த்திபன் தேசிங்கு. கதாநாயகனாக தனது முதல் படமான 'மீசைய முறுக்கு' படத்தில் நட்பு, காதல் ஆகியவற்றுடன் இசையில் சாதிக்கத் துடிக்கும் ஒரு இளைஞனின் கதாபாத்திரத்தில் நடித்தார் ஆதி. அவரது இந்த இரண்டாவது படத்தில் விளையாட்டில் சாதிக்கத் துடித்த, துடிக்கும் இளைஞனாக நடித்திருக்கிறார்.

பாண்டிச்சேரியைச் சேர்ந்த ஆதிக்கு, பிரான்ஸ் நாட்டிற்குச் சென்று செட்டிலாக வேண்டும் என்று ஆசை. அதற்கான 'டாகுமென்ட்' வேலைகளுக்காக காரைக்கால் சென்று அத்தை வீட்டில் தங்குகிறார். அந்த ஊரில் உள்ள ஒரு விளையாட்டு மைதானத்தை, ஒரு கார்ப்பரேட் கம்பெனிக்கு முறைகேடு செய்து தாரை வார்த்து கொடுக்க நினைக்கிறார் விளையாட்டு அமைச்சர் கரு.பழனியப்பன். அந்த மைதானத்தில் ஹாக்கி கோச்சாக இருக்கும் ஹரிஷ் உத்தமன், அந்த மைதானத்தைக் காப்பாற்றத் துடிக்கிறார். அதற்காக அவர் அணி ஒரு ஹாக்கி போட்டியில் சாதிக்க வேண்டிய சூழல் உருவாகிறது. ஒரு சந்தர்ப்பத்தில் ஆதி, ஒரு சர்வதேச ஹாக்கி வீரர் எனத் தெரிய வர ஹரிஷ், ஆதியை தங்களது அணியில் விளையாடக் கேட்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு நேர்ந்த அரசியலால் இனி, வாழ்க்கையில் ஹாக்கியே விளையாட வேண்டாமென்ற முடிவில் இருக்கும் ஆதி என்ன செய்கிறார் என்பதுதான் படத்தின் கதை.

ஆதி, ஹாக்கி விளையாடும் காட்சிகளைப் பார்க்கும் போது அவரை நிஜமான ஹாக்கி வீரர் என்று சொல்லுமளவிற்குக் காட்சிகளைப் படமாக்கியிருக்கிறார்கள். ஆரம்பத்தில் சில காட்சிகளில் மட்டும் அனகாவைக் காதலிக்க வைப்பதற்காக அவர் பின்னால் ஜாலியாகச் சுற்றி வருகிறார். இடைவேளைக்குப் பின்னர்தான் கொஞ்சம் சீரியசாக நடிக்கிறார். நடிப்புத் திறமையைக் காட்டும் காட்சிகளைவிட, ஹாக்கித் திறமையைக் காட்டும் காட்சிகள் அதிகம் என்பதால் அதில் சிறப்பாகப் பயிற்சிகளை எடுத்திருக்கிறார் போலிருக்கிறது.

அனகா, அழகாக இருக்கிறார், சிரிக்கிறார், நடக்கிறார், சைக்கிள் ஓட்டுகிறார். ஆதியைப் பார்த்து உள்ளுக்குள் காதலுடன் இருந்தாலும் அதைச் சொல்லத் தயங்குகிறார். இருவருக்குமான சில காட்சிகளுக்குப் பிறகு அனகாவுக்கு அதிக வேலையில்லை.

'மீசைய முறுக்கு' படத்தில் ஆதியுடன் நடித்த மற்ற நண்பர்கள் கதாபாத்திரங்களுக்கு நிறையவே முக்கியத்துவம் கொடுத்திருந்தார்கள். இந்தப் படத்தில் சில புதுமுகங்களை அறிமுகப்படுத்தினாலும் அவர்களை 'ஸ்கோர்' செய்யவிடவில்லை. எல்லாருமே ஏதோ ஒரு சில காட்சிகளில் 'வந்து போகிறவர்கள்' ஆகவே இருக்கிறார்கள். பிளாஷ்பேக்கில் வரும் அவருடைய நெருங்கிய நண்பருக்கு மட்டும் சில சிறப்பான காட்சிகளை வைத்திருக்கிறார் இயக்குனர் பார்த்திபன் தேசிங்கு.

ஆதிக்கு அக்கா போல் இருக்கும் சவுசல்யா அவருக்கு அம்மாவாம். அதற்குள் அவரை அம்மா நடிகையாக்கி விட்டார்கள். பாண்டியராஜன், குமரவேல், விக்னேஷ்காந்த், ஷா ரா, விஜய்குமார், அரவிந்த், தங்கதுரை, பிஜிலி ரமேஷ் என வளர்ந்த, வளரும் நடிகர்கள் நிறையவே இருக்கிறார்கள். அந்த 'சர்பத் தாத்தா' அவர் நடித்த முந்தைய படங்களைப் போலவே இந்தப் படத்திலும் அவரைப் பற்றிப் பேச வைக்கிறார்.

விளையாட்டு அமைச்சராக கரு.பழனியப்பன். பொருத்தமான தேர்வு. இன்றைய அரசியல் நிலவரங்களை அவர் பேசும் வசனங்களாக வைத்து கைதட்ட வைக்கிறார்கள். 'போராட்டம் போராட்டம்னு போனால் அப்புறம் நாடே சுடுகாடாகிடும்' என்ற வசனத்திற்கு தியேட்டரில் அதிக கைத்தட்டல். 'காசு வாங்காம எவனாது ஓட்டு போடுவீங்களா' எனக் கேட்கும் போது எழுந்து சென்ற ரசிகர்கள் கூட நின்று வசனத்தைக் கேட்டுவிட்டுச் செல்கிறார்கள். அமைச்சரின் பி.ஏ. கதாபாத்திரம் அமெச்சூராக, நாடகத்தனமாக இருக்கிறது.

கோச்சாக நடிக்கும் ஹரிஷ் உத்தமன் உன்னதமான கோச்சாக இருக்கிறார். இம்மாதிரி ஊருக்கு ஒருவர் இருந்தார் ஒலிம்பிக்கில் கூட நாம் பதக்கங்களை அள்ளி வரலாம். 'மாறணும் மாறணும்னு சொன்னால் மட்டும் போதாது, மாத்தணும்,' என அவர் பேசும் வசனம் சமூக வலைத்தளங்களில் மட்டுமே தங்கள் ஆவேசத்தைக் காட்டுபவர்களுக்கு சரியான பதிலடி.

ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையில் 'சிங்கிள் பசங்க, ஆத்தாடி என்ன, முரட்டு சிங்கிள்..'இந்தக் கால இளம் ரசிகர்களுக்கான பாடல்கள்.

கிளைமாக்சில் நடக்கும் ஹாக்கி போட்டியில் காட்டியிருக்கும் அந்த பிரம்மாண்டமான மேக்கிங்கை படத்தின் ஆரம்பத்தில் இருந்தே காட்டியிருக்கலாம். கதையின் முக்கிய களமாக இருக்கும் அந்த அரங்கநாதன் விளையாட்டு மைதானம், ஏதோ ஒரு காலியான வீட்டுமனை போன்ற தோற்றத்தையே நமக்கு திரையில் தெரிகிறது. அதற்காக ஒரு பெரிய மைதானத்தைத் தேடிப்பிடித்து படமாக்கியிருக்கலாம்.

சில குறைகள் இருந்தாலும் விளையாட்டில் அரசியலையும், அரசியலில் விளையாட்டையும் சேர்த்து சொன்ன கருத்துக்காக ரசிக்க வைக்கிறார்கள்.

நட்பே துணை - ரசிக நண்பர்கள் துணையிருப்பார்கள்!

 

பட குழுவினர்

நட்பே துணை

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓